Friday, April 27, 2012

சாதிக்க வேண்டியதும் பிறருக்காய் வாழ வேண்டியதும் நிறைய உள்ளன


29.04.2012
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

நானே நல்ல ஆயன் என்று இயேசு கூறும் பகுதியை இன்று நற்செய்தியில் பார்க்கின்றோம். பலதரப்பட்ட மக்களையும் வேறுபாடுகளைக் கடந்து அனைவரையும் கவர்ந்த ஓவியம் இயேசு நல்லாயனாக சித்தரிக்கப்பட்ட ஓவியமேயாகும். இயேசு தமக்குத் தாமே வைத்துக்கொண்ட பெயர்களில் ஒன்றுதான் ஆயன். மண்ணகத்தோருக்காக மரித்து, உயிர்த்த இயேசுவின் மகிழ்ச்சியை கொண்டாடும் இந்நாட்களில் நல்லாயனாம் இயேசுவைப் பற்றி தியானிப்பது சாலச்சிறந்ததாகும்.

நானே நல்ல ஆயன் என்று இயேசு கூறும்போது யார் இங்கு ஆடுகள்? என்ற கேள்விக்கு பதில்காணவேண்டியது கட்டயமாகிறது. நாம் தான் அந்த ஆடுகள். எனவே ஆடுகளின் குணநலன்களைப்பற்றியும் அறிவது இங்கு அவசியமாகிறது: ஆடுகள் ஒன்றை ஒன்று சார்ந்து கூட்டமாக வாழும். சுயமாக செயல்படாது. வழி தவறி விடும். ஓன்றை ஒன்று எப்போதும் பின் தொடரும். மிகவும் பலவீனமானவை. எளிதல் பிற விலங்குகளுக்கு இரையாகும். இங்கு இயேசு தம்மை ஒரு நல்ல ஆயராக எவ்வாறு முன்னிலைப்படுத்துகிறார். இயேசு எவ்வாறு நல்ல ஆயனாக செயல்படுகிறார் என்பது பற்றி சிந்தித்தால்: இயேசு தம் மந்தையை நன்கு அறிந்து, பாதுகாத்து, முன்னின்று வழிநடத்தி தம் ஆடுகளாகிய எமக்காக உயிரைக் கொடுக்கும் நல்லாயனாக  செயல்படுகிறார் என்பது தெளிவாகும்.

இன்றைய நாள் திருச்சபையில் நல்லாயன் ஞாயிறு என்றும், உலகளாவிய இறை அழைத்தல் ஞாயிறு என்றும் அழைக்கப்படுகிறது. நல்லாயனின் ஒரு முக்கியமான குணம் ஆடுகளுக்காகத் தன் உயிரையே கொடுப்பது. இந்த இடத்தில் நல்லாயன், இறையழைத்தல் என்ற இரு எண்ணங்களையும் இணைத்து சொல்லப்பட்டுள்ள ஒரு உண்மைச் சம்பவத்தை நான் சொல்லித்தான் ஆகவேண்டும். “கொரியாவில் நடந்து வந்த போரின் உச்சகட்டம். போரில் காயப்பட்டு, உயிருக்குப் போராடி வந்த ஒரு வீரன், தான் இறப்பதற்கு முன், ஒரு குருவைச் சந்திக்க வேண்டுமென்ற தன் ஆவலை வெளியிட்டான். அவனுக்கு மருத்துவ உதவிகள் செய்தவர் திகைத்தார். இந்தப் போர்க்களத்தில் குருவுக்கு எங்கே போவது? என்று அவர் தடுமாறிக் கொண்டிருந்தபோது, அந்த வீரனுக்கு அருகில் மரணத்துடன் போராடிக் கொண்டிருந்த மற்றொருவர் “நான் ஒரு குரு" என்று தன்னையே அறிமுகப்படுத்தினார். அவரது நிலையைக் கண்ட மருத்துவர், “நீங்கள் அசையாதீர்கள். அசைந்தால், உங்கள் உயிருக்குப் பெரும் ஆபத்து." என்று அந்த குருவிடம் எச்சரித்தார். அதற்கு அந்த குரு, “நான் வாழப்போகும் இந்த ஒரு சில மணித்துளிகளை விட, என் நண்பரின் ஆன்மா மிகவும் முக்கியம்.” என்று சொன்னபடி, தன்னிடம் எஞ்சியிருந்த சக்தியை எல்லாம் திரட்டி, தரையோடு தரையாக ஊர்ந்து வந்தார் அந்த குரு. சாகும் நிலையில் இருந்த அந்த வீரனின் இறுதி நேரத்தில் அவனுக்கு ஒப்புரவு அருட்சாதனத்தை வழங்கினார். அந்த வீரனும், குருவும் அமைதியாக இறந்தனர்.

நமது ஆயராகிய இன்றைய குருக்கள் இயேசு கொண்டிருந்த தலைமைப் பண்புகளைக் கொண்டிராமல், உலகியல் பண்புகளை கொண்டிருக்கின்றனரோ என இயேசுவும், இறைமக்களும்  எண்ணத்தோண்றும் காலம் விரைவில் வந்தவிடுமோ என நினைப்பவர்களும் எம்மிடையே உண்டு. இறையழைத்தல், குருமாணவர் உருவாக்கம், குருக்களின் பணியும் வாழ்வும்... போன்றவை பற்றி திருத்தந்தையர் பல அறிவுரைகளை வழங்கியுள்ளனர். மறைந்த திருத்தந்தை இரண்டாம் ஜோன் பவுல். “குருவினுடைய வாழ்வும் இறை மக்களுக்காக அவருடைய திருச்சபைக்கும் ஆற்றும் சாட்சியத்துடன் கூடிய அன்புப் பணியும், சகோதர ஒன்றிப்பும், நற்செய்தி அறிவிப்பின் மீதுள்ள வாஞ்சையுமே தேவ அழைத்தலை வளர்க்கும் முதன்மைக் காரணியாக திகழ்கின்றது என்றார்.

சாதிக்க வேண்டியதும் பிறருக்காய் வாழ வேண்டியதும் நிறைய உள்ளன. சொற்கள் கடந்த சிந்தனை, தன்னலம் தாண்டிய வாழ்வு, சான்று பகரும் உண்மை இவையே பிறர் நம்மை நோக்கி வரச் செய்யும் காரணிகள் எனலாம். இன்று நன்னெறி கோட்பாடுகளின் நெருக்கடியால் வழிநடத்தும் குருக்களின் விழுமியங்கள் சரிவிற்கு தள்ளப்படுகிறது. சமுதாயத்தின் கீழ் மட்டத்தில் உள்ள மக்களை முன்னேற்றும் வழிகளைத் குருக்கள் தீர ஆய்வுசெய்து நன்னெறிகளின் அடிப்படையில் திட்டமிடப்படு பணிபுரிவதன் மூலம், நிலையான நீடித்த முன்னேற்றத்தை மனித சமுதாயத்தில் கட்டி எழுப்பமுடியும். இவையெல்லாம் செயலாக்கம் பெற்றால், நல்ல குருக்கள் நம்மை வழிநடத்துவர். இதற்கு நாம் அனைவரும் செய்யக்கூடிய மிக எளிதான உதவி செப உதவிதான். எனவே இயேசுவைப் போல, திருச்சபையை வழிநடத்த நல்ல ஆயர்கள் உருவாகி உழைக்க உயிர்த்த மாட்சி மிகு இயேசுவிடம் உம்மைப் போன்ற நல்ல மேய்ப்பர்களை எங்களுக்குத் தாரும் என்று பணியாற்றும் குருக்களுக்காகவும், வருங்கால குருக்களுக்காகவும் தவறாமல் செபிக்போம். நல்லாயனாம் இயேசுவைப் போல் மக்கள் பணிக்குத் தங்களையே அளித்த பணியாளரை இறைவன் வழிநடத்த வேண்டுமென்று இவ்இறையழைத்தல் ஞாயிறன்று மன்றாடுவோம்.

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff