Thursday, October 16, 2014

சமயத்திற்கும் அரசியலுக்கும் மதம்பிடிக்காது பாத்துக்கொள்வோம்

19.10.2014 ' " 
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர் 

'சீசருக்கு உரியவற்றை சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்" என்ற இயேசு கூறிய புகழ் பெற்ற வரிகள் பைபிளில் மத்தேயு 22:15-21 இல் எழுதப்பட்டுள்ளது. இது இன்று நமக்கு பைபிள்பகுதியில் இறுதியில் உள்ளடக்கப்படுகின்றது.  பைபிளைத் தாண்டி, கத்தோலிக்க மறையைத் தாண்டி, பொருளாதாரம், அரசியல் என்ற பலச் சூழல்களில் மேற்கோளாகப் பயன்படுத்தப்படும் ஒரு புகழ்பெற்ற வரிகள் இது. இயேசு கூறிய அந்தப் புகழ் மிக்கக் கூற்றை இன்று  சிந்திப்போம் 

சமயத்தையும் கடவுளையும் தங்கள் தனிச் சொத்தாகப் பாவித்த பரிசேயர்களும், மதத் தலைவர்களும் இயேசு சொன்ன இந்த உண்மையால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். உண்மைகளை ஏற்றுக் கொள்வதற்குப் பதிலாக, பரிசேயர்கள் இயேசுவை எப்படியாவது வென்றுவிடும் வெறியில், மற்றொரு குழுவினரையும் தங்களுடன் சேர்த்துக் கொள்கின்றனர். அவர்கள் ஏரோதியர்கள். பரிசேயர்களும், ஏரோதியர்களும் கொள்கை அளவில் எதிரிகள். யூத குலத்தில் கடவுளுக்கு மிகவும் பிரமாணிக்கமாய் இருப்பவர்கள் தாங்கள் மட்டுமே என்று எண்ணி வந்தவர்கள் பரிசேயர்கள். எனவே, கடவுளின் அதிகாரத்திற்கு சவால் விடும் வகையில் அமைந்திருந்த உரோமைய ஆட்சியையும், பேரரசரான சீசரையும் முற்றிலும் வெறுத்தவர்கள் இந்தப் பரிசேயர்கள்.

ஏரோதியர்கள் இதற்கு முற்றிலும் மாறுபட்டவர்கள். யூத சமுதாயத்தின் பச்சோந்திகள் என்று அழைக்கப்பட்டவர்கள் இவர்கள். சீசருக்குச் விலாங்குமீன் போல நடக்கும் ஏரோதுடன் இணைந்து, உரோமைய அரசுக்குச் சாதகமாகப் பணிகள் செய்தவர்கள் இவர்கள்.  கொள்கை அளவில் இரு வேறு துருவங்களாக, ஜென்ம பகைவர்களாக இருந்த பரிசேயர்களும், ஏரோதியரும் சேர்ந்து விட்டனர். ஏனெனில் இவர்கள் இருவருக்கும் தமக்கு ஒரு பொதுவான எதிரி இருக்கிறார் என கருதினர். அவர்தான் இயேசு.  அரசியல் உலகில் நண்பர்கள், எதிரிகள் என்பவர்கள் ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் மாறுபவர்கள் என்பதை நாம் இன்று கண்டுவருகின்றோம். இப்படி ஒரு காட்சியை மீண்டும் நமக்கு நினைவுறுத்துகிறது இன்றைய பைபிளின் முதல் வரிகள். ஏரோதியர்கள் முழுமையான அரசியல் வாதிகள். பரிசேயர்கள் தங்களை மதத்தலைவர்கள் என்று கருதுபவர்கள். அரசியலும், மதமும் இணைந்து இயேசுவை ஒழிக்க திட்டமிடுகின்றன. 

கொள்கைகளைப் புறந்தள்ளிவிட்டு, கூட்டணி சேர்ந்து வரும் பரிசேயர்கள் மற்றும் ஏரோதியர்களுடன் இயேசு மேற்கொண்ட உரையாடல் நமக்கு அடுத்த பாடம். நேர்மையுடன் செயல்பட முடியாத பரிசேயர்களும் ஏரோதியர்களும் தேனொழுகப் பேசி, தேள் போலக் கொட்டும் வார்த்தைகளை, உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் வார்த்தைகளைப் பயன்படுத்தினர். இதற்கு முற்றிலும் மாறாக, இயேசு நேரடியாகவே பேசினார். பணிவு என்ற ஆட்டுத் தோலைப் போர்த்தி, இயேசுவை வேட்டையாட வந்திருந்த அந்த ஓநாய்களின் வெளிவேடத்தை கலைத்து, இயேசு நேரடியாகவே பேசினார்: 'சீசருக்கு உரியவற்றை சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்" என்று அவர்களிடம் கூறினார். இயேசு கூறிய இந்த வார்த்தைகள் அரசியலையும் மதத்தையும் இணைத்து சிந்திக்க வாய்ப்பாக உள்ளது. மனித வரலாற்றில் சமயமும் அரசியலும் மோதிக்கொண்ட காலங்களும், கைகோர்த்து நடந்த காலங்களும் உண்டு. சமயங்களில்; அரசியல் புகுந்துள்ளதையும், அரசியலுக்கு மதச்சாயங்கள் பூசப்படுவதையும் நாம் இப்போது அதிக அளவில் கண்டு வருகிறோம். இன்று அரசியல் தலைவர்கள் இறைவனையும், இறைவனின் அடையாளங்களையும் அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்துவதை நாம் பார்க்கிறோம். தன்னையே கடவுளாக்கிக் கொண்ட சீசரின் காலம் முதல், அரசியல்வாதிகளைப் பீடித்துள்ள இந்த வியாதி இன்னும் நீங்கவில்லை. இவ்விதம் அரசியலுக்கு மதச்சாயம் பூசப்படுவது வரலாற்றின் ஒருபக்கம் என்றால், சமயங்களில், அரசியலைக் கலப்பது வரலாற்றின் மறுபக்கம். மதத்தில் அரசியலைக் கலந்த பரிசேயர்களும், யூத மதத்தலைவர்களும் தங்கள் அதிகாரத்திற்குச் சவாலாக வந்த உரோமைய அரசையாகிலும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருந்தனர். ஆனால், இயேசுவைத் தங்கள் பரம எதிரியாகக் கருதினர். அவரைப் பழிதீர்க்கும் வெறியில் இருந்தனர். இயேசுவை ஒழித்து விட அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் அரசியல் வாதிகளின் நாடகங்களையும் மிஞ்சின. இதற்காக, ஏரோதியர்கள் போன்ற தங்கள் எதிரிகளுடனும் சமரசம் செய்துகொண்டனர். 

மதமும் அரசியலும் கலந்த இந்த வரலாறு இன்றும் தொடர்கிறது. இந்தச் சூழலில், நமக்கு இன்று இயேசு கூறும் இந்த வார்த்தைகள் மிகவும் தெளிவாக ஒலிக்கின்றன. சீசருக்குரியதை, இந்த உலகிற்குரியதை நாம் வழங்கித் தான் ஆக வேண்டும். ஆனால், அத்துடன் நம் வாழ்வு, கடமை எல்லாம் முடிந்து விடுவதில்லை. சீசரையும், இவ்வுலகையும் தாண்டிய இறைவன் இருக்கிறார், அவருக்கு உரியதையும் நாம் வழங்க வேண்டும் என்று இயேசு நம்மிடம் இன்று கேட்கிறார். நம் பதில் என்ன? அதிகாரத்தை, சுயநலத்தை காத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் எழும்போது, கொள்கைகளை மூட்டை கட்டி வைத்துவிடும் அரசியல் பச்சோந்திகளைப் போல், நாமும் வாழ்வில் அவ்வப்போது நிறம் மாறுகிறோமா?  ஒரு குறிப்பிட்ட ஆதாயத்திற்காக நம் உயர்ந்த கொள்கைகளை விட்டுக் கொடுத்த நேரங்கள், அல்லது உண்மையை மறுத்த நேரங்கள் எத்தனை, எத்தனை? குறிப்பிட்ட ஒருவரைப் பழிவாங்குவதற்காக, அல்லது அவரை வெல்வதற்காக எம்மை எத்தனை தடவை அடமானம் வைத்தோம்? இந்தக் கேள்விகளுக்கு விடைதேட நம் மனங்களைக் கொஞ்சம் இன்று அலசிப்பார்ப்போமா?. 

Thursday, October 9, 2014

இறையரசுக்குத் தயர்படுத்த தெருக்களுக்கும் சாலையோரங்களுக்கும் செல்வோம்


12.10.2014 ' " 
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர் 

மன்னர் மகனின் திருமணம் இயேசு விண்ணரசை விளக்குவதற்கு பயண்படுத்திய ஒர் உவமையாகும். இது பைபிளில் மத்தேயு 22:1-14 இல் எழுதப்பட்டுள்ளது. இது இன்று நமக்கு பைபிள்பகுதியாக தரப்படுகிறது. இயேசு இதில் விண்ணரசைப் இளவரசனின் திருமணத்துக்கு ஒப்பிட்டுகிறார். இத்த உவமை மேலும் பல படிப்பிணைகளையும் கொண்டுள்ளது. இதன் மூலகருத்தாக 'அழைப்புப் பெற்றவர்கள் பலர், ஆனால் தெரிந்தெடுக்கப் பட்டவர்களோ சிலர்" என குறிப்பிடலாம். இங்கு கடவுளை அரசராகவும், இயேசு தன்னை இளவரசனாகவும் விண்ணரசை திருமண வீடாகவும் ஒப்பிட்டு இந்த உவமையை கூறினார். விண்ணரசிற்கு வருமாறு கடவுளின் மக்களுக்கு ஆதவாது யூதர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனாலும் அவர்கள அவ்வழைப்பை புறக்கனிக்கவே கடவுள் அவ்வரசை யூதரல்லாதோருக்கு கொடுத்தார். இருப்பினும் யூதரல்லதவரும் ஆயத்தமற்றிருந்தால் ஆதவாது திருமண ஆடையின்றி திருமணத்தில் பங்கேற்க முடியாது.

அன்றைய காலத்தில் யூதர்களின் வழக்கப்படி தம் விழாக்களுக்கு உறவினர்களுக்கு அழைப்பு கொடுக்கின்றபோது, விழா நடைபெறும் நாள் சொல்லப்படுவதில்லை. முதலில் உறவினர்களுக்கு விழா பற்றிய அழைப்பு மட்டும்தான் கொடுக்கப்படுகின்றது. விழாவுக்கான விருந்து, நிகழ்ச்சிகள் அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்ட பின்னர் இரண்டாவது கொடுக்கின்ற அழைப்புதான் விருந்திலே கலந்துகொள்வதற்கான அழைப்பு.

இன்றைய நற்செய்தியிலே அரசர் விழா பற்றிய அழைப்பை ஏற்கெனவே தெரிவித்திருந்தார். இரண்டாவதாக, விருந்து நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டபின், அவர்களை அழைத்துவர, பணியாளர்களை அனுப்புகிறார். இந்த உவமையை இயேசு யூதர்களை மனதில் வைத்து சொல்லியிருக்க வேண்டும். யூதர்களுக்கு அழைப்பு இருந்தும், அவர்கள் அதை உதாசினப்படுத்தினார்கள். எனவே, அழைப்பு மற்றவர்களுக்கு- புறவினத்தார்க்கு செல்கிறது. அழைப்பு வந்துவிட்டது என்பதற்காக தகுதியற்ற நிலையில் நாம் பங்கேற்க முடியாது.

இயேசு கூறும் இந்த உவமையைக் கொஞ்சம் கூர்ந்து கவனிப்போம் அரசனுடைய மகனுக்குத் திருமணம். எம்மைப் பொறுத்தவரை அந்தத் திருமணத்தில் பங்கேற்பது மிகவும் பெருமை வாய்ந்த ஒரு செயல். ஆனால், அழைக்கப்பெற்றவர்கள் வர விரும்பவில்லை என்று உவமை கூறுகிறது. இருந்தும் மீண்டும் அரசர் தன் பணியாளர்களை அனுப்பி விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன். வாருங்கள் என்று அழைக்கிறார். அவர்களோ அதைப் பொருட்படுத்தவில்லை. இறையாட்சியின் பார்வையில் இத்தகைய மனிதர்களாக நம்மில் பலர் இருக்கிறோம் என்பதையே இந்த உவமை வழியாக இயேசு சுட்டிக்காட்டுகிறார்.

இறைவன் தருகிற நிறைவான மகிழ்ச்சி, ஆறுதல், நிறைவு இவற்றை வேறு யாரும், எதுவும் தரப்போவதில்லை. ஆனால், நாம் இறைவனின் அழைப்பை பொருட்படுத்தாமல் இருக்கிறோம். அவர் தரும் விருந்துக்கு வர விரும்பாமல் இருக்கிறோம். காரணம், இந்த உலகம் காட்டும் ஈர்ப்புகள். அன்றாட வாழ்வின் கடமைகள், பணிகள். இந்த உவமையில் வரும் மனிதர்களைப் பார்த்து வியக்கும் நாம், இப்போது நம்மைப் பார்த்தே கொஞ்சம் வியப்போம்.

இன்றைய உவமையில் வரும் சம்பவத்தில் 'நீங்கள் சாலையோரம் செல்லுங்கள். காணும் எல்லாரையும் திருமண விருந்துக்கு அழைத்து வாருங்கள்" என்னும் பகுதியை எடுத்துக்கொண்டு  நாம் தெருக்களில் நடந்துசெல் நல்ல நட்பு கிடைக்கும்;. தெருக்களுக்கு, வீதிகளுக்கு, சாலையோரத்துக்கு செல்லுவோம், அன்பை இழந்து, நட்பை சுவாசிக்காத, முன்பின்தெரியாத, முகவரியில்லா மனிதர்;கள் இருக்கும் இடம் இது. இவர்களோடு இணைவது, முழு சமூக, சகோதர, மகிழ்ச்சிநிறை விருந்து கொண்டாட்டம் தினம் செய்வோம். இதைத்தான் அன்னை தெரேசா அவர்கள் செய்தார், வெளியே தெருக்களுக்கும்  சாலையோரத்திற்கும் சென்று அங்குள்ள நோயாளிகள், பாவிகள், ஏழைகள் மற்றும் அன்பு கொடுக்கப்படாதவர்களுக்கு வாழ்வு கொடுத்தார். ஆசிர்வதிக்கப்பட்டவர் ஆனார்.  எனவே இயேசு இன்று எமக்குத் தரும் அழைப்பை நான் பொருட்படுத்தி தெருக்களுக்கும் சாலையோரத்திற்கும் சொல்வோம். இறையரசுக்கு தயாராக நாமும் மற்றவர்களும் வாழ வழி அமைப்போம். 

Friday, October 3, 2014

இறைவன் எதிர்பார்க்கும் கனிகளை எம் வாழ்வில் வழங்குவோம்.

05.10.2014 ' "
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர் 

இன்று தமக்குத்தரப்படும் பைபிள் பகுதியில் இயேசு, ஓர் உவமைக்கதை கூறுகின்றார்.  திராட்சைத் தோட்டம் போட்டு, அதைக் குத்தகைக்கு விட்ட நிலக்கிழார் தமக்குச் சேரவேண்டிய பழங்களைப் பெற்றுவர பணியாளர்களை அனுப்பியபோது, தோட்டத் தொழிலாளர்கள் பழங்களைக் கொடுக்காததோடு, பணியாளர்களைத் தாக்கினார்கள், இறுதியில் நிலக்கிழாரின் மகனையும் கொன்றுபோட்டார்கள். இஸ்ரயேல் மக்கள் திராட்சைத்தோட்டத்தோடு தங்களை ஒப்பிடுவதை பழையஏற்பாட்டில் நாம் பார்க்கலாம். 'படைகளின் ஆண்டவரது திராட்சைத்தோட்டம் இஸ்ரயேல் குடும்பத்தாரே". பொதுவாக திராட்சைத்தோட்டங்கள் முள்வேலிகளால் பாதுகாப்பாக அமைக்கப்பட்டிருந்தது. கரடிபோன்ற கொடூரமான காட்டு விலங்குகளிடமிருந்தும், திருடர்களி டமிருந்து பாதுகாக்கவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திராட்சைத்தோட்டத்தில் உயர்ந்த கோபுரம் ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. இந்த கோபுரத்தினால் இரண்டு பயன்பாடுகள் இருந்தன. திருடர்கள் வருவதை முன்கூட்டியே பார்த்து எச்சரிக்கையாக தோட்டத்தைப் பாதுகாப்பதற்கும், திராட்சைத்தோட்டத்தில் வேலை செய்கிறவர்கள் தங்குவதற்கும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாலஸ்தீனம் ஆடம்பர வாழ்வுக்கு ஏற்ற இடமில்லை என்பதால், பொதுவாக திராட்சைத்தோட்ட உரிமையாளர்கள் தங்களின் திராட்சைத்தோட்டங்களை குத்தகைக்கு கொடுத்துவிட்டு, குத்தகைப்பணத்தைப் பெறுவதில் மட்டும்தான் கவனமாக இருந்தார்கள். இதுதான் இயேசு வாழ்ந்த காலத்தில் இருந்த சூழ்நிலை

இந்த இடத்தில் அரசன் தாவீதுவின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை கூறித்தான் ஆகவேண்டும்: இறைவாக்கினர் நாத்தான் அரசன் தாவீதிடம் ஊரியவின் மனைவியுடன் தகாத உறவு வைத்த நிகழ்வை ஓர் உவமையாக சொன்னபோது தாவீதுக்கு பெருகோபப்பட்டு. முதலில் தாமே அம்மனிதன் என்பதை உணராமல் அதனைச் செய்தவன் சாகவேண்டும் என்று கூறினார்;. பின் மனதுருகி இறைவனிம் மன்னிப்புகேட்டான். ஆனால், இங்கு இயேசுவின் உவமையைக் கேட்ட தலைமைக் குருக்களும், பரிசேயரும் தங்களைப் பற்றியே அந்த உவமையை இயேசு கூறினார் என்று 'உணர்ந்துகொண்டனர்." ஆனால், மனம் மாறவில்லை, மாறாக அவரைப் பிடிக்க வழிதேடினார்கள். இந்த உவமையை இன்று கேட்கும் எமது பதில் என்ன? தாவீதைப் போல நாமே அம்மக்கள் என்பதை உணராமல் கோபம் கொள்கிறோமா? அல்லது பரிசேயர்கள் போல உணர்ந்துகொண்டும் மனம் மாறாமல் இருக்கின்றோமா? விடைதேடவேண்டிய காலமிது. தாவீதைப் போல, மனதுருகி இறைவனிம் மன்னிப்பு கேட்போம். இறைவன் எதிர்பார்க்கும் கனிகளை எம் வாழ்வில் வழங்குவோம்.

தனக்குச் சேரவேண்டிய பங்கைக் கேட்பதற்கு, தோட்ட உரிமையாளர் தன் பணியாளரை, தனித் தனியாக அனுப்புகிறார். மோசே துவங்கி, திருமுழுக்கு யோவான் முடிய இறைவன் அனுப்பிய பணியாளர்கள் அனைவருமே தனி மனிதர்களாக வந்தவர்கள். இவர்களை நினைவுறுத்தவே, பணியாளர்கள் தனியே வந்தனர் என்றும், அவர்கள் அனைவருமே குத்தகைக்காரர்களின் வன்முறைக்கு உள்ளாயினர் என்றும் இயேசு குறிப்பிடுகிறார். குத்தகைக்காரர்களான மதத் தலைவர்கள் வெளிப்படுத்திய இந்த வன்முறையை நாம் இன்று வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் இயேசு இந்தஉவமையை இன்று எமக்குக் கூறி நாம் கடவுள் எமக்கு தந்த பொறுப்பை மறந்து, கணக்கு கொடுக்க தவறிவிடுகின்றோம். கடவுள் இன்றுகுருக்களை துறவிகளை இறைவாக்கினராக அனுப்பிஎங்களின்; பொறுப்புக்களை நினைவூட்டுகிறார். நாம் கண்டுகொள்ளாமல் அவர்கள் மீது குற்றம் கண்டு கூண்டில் நிறுத்த முனைகின்றோம். ஆனால், அவர்களோ இறைவனின் மனிதர்கள். கடவுள் அவர்களை கண்காணிப்பார் என்பதை மறந்து மரணதண்டனை வழங்கத்துடிக்கும் கூட்டத்திற்கு வலுச்சேர்க்கின்றோம். ஆனாலும், கட்டுவோர் விலக்கிய கல்லே கட்டிடத்தின் மூலைக்கல் ஆனதுபோல, அவர்கள் கடவுளின் மகன் வழியாக, இந்த உலகத்திற்கு வாழ்வுகொடுக்கிறாரகள்;. ஆனால், நம்முடைய கர்வம், ஆணவம், அகந்தை நமது பொறுப்பை தவறாகப்பயன்படுத்த நம்மைத்தூண்டுகிறது. இந்த வாழ்வு கடவுள் கொடுத்தது. ஆனால், இந்த வாழ்வை எப்படி வாழ்வது? என்பது நம்மைப்பொறுத்தது. கடவுள் நமக்கு முழுமையான சுதந்திரத்தைக் கொடுக்கிறார். அந்த சுதந்திரத்தை பொறுப்போடு பயன்படுத்த நாம் அழைக்கப்படுகிறோம். இன்றைய உலகில் கொடுக்கப்பட்டிருக்கிற சுதந்திரத்தை நாம் பலவழிகளில் தவறாக, முறைகேடாகப் பயன்படுத்துகிறோம். அதை நல்லமுறையில் பயன்படுத்தி பயன்பெற முயற்சி எடுப்போம்.

Friday, September 19, 2014

கடவுளின்; பார்வையில் நீதியை, மனிதர்களைக் காணக் கற்றுக்கொள்வோம்.

21.09.2014'"
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர் 

இன்று இயேசு ஒரு உவமை கூறுகின்றார்: நிலக்கிழார் ஒருவர் தம் வேலையாள்களை வேலைக்கு அமர்த்த விடியற்காலையில் வெளியே சென்றார். அவர் நாளொன்றுக்கு ஒரு தெனாரியம் கூலி என வேலையாள்களுடன் ஒத்துக்கொண்டு அவர்களைத் தம் திராட்சைத் தோட்டத்துக்கு அனுப்பினார். ஏறக்குறைய காலை ஒன்பது மணிக்கு அவர் வெளியே சென்றபொழுது சந்தை வெளியில் வேறு சிலர் வேலையின்றி நிற்பதைக் கண்டார். அவர்களிடம், நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்; நேர்மையான கூலியை உங்களுக்குக் கொடுப்பேன் என்றார். அவர்களும் சென்றார்கள். மீண்டும் ஏறக்குறைய பன்னிரண்டு மணிக்கும் பிற்பகல் மூன்று மணிக்கும் வெளியே சென்று அப்படியே செய்தார். ஏறக்குறைய ஐந்து மணிக்கும் வெளியே சென்று வேறு சிலர் நிற்பதைக் கண்டார். அவர்களிடம், நாள் முழுவதும் வேலை செய்யாமல் ஏன் இங்கே நின்றுகொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டார். அவர்கள் அவரைப் பார்த்து, எங்களை எவரும் வேலைக்கு அமர்த்தவில்லை என்றார்கள். அவர் அவர்களிடம், நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள் என்றார். பின்பு அனைவருக்கும் சமமாக சம்பளம் கொடுக்கின்றார். அந்நிலக்கிழாரின் செயலுக்கு எதிராக முணுமுணுத்தவர்களை பார்த்து எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உங்களுக்கு பொறாமையா? என கேட்கின்றார். 

இன்று இயேசு கூறும் உவமைக்கதையில் வரும் வேலையாட்கள், வேலைக்காகக் காத்துக் கொண்டிருந்தவர்கள்,  சோம்பேறிகள் அல்ல. காலையிலிருந்து அவர்கள் யாராவது தங்களை வேலைக்கு அழைத்துச்செல்வார்களா? என்று காத்திருக்கிறார்கள். இவர்கள் அன்றாடக்கூலிகள். சமுதாயத்தின் அடிவிளிம்பில் இருக்கக்கூடிய மக்கள். அடிமைகளைவிட இவர்களின் நிலைமை மிக மோசமாக இருந்தது. . உழைத்தால் தான் உண்ண முடியும் என்ற நிலைமை. கடுமையாக நாள் முழுவதும் உழைத்தாலும், அரைவயிற்று உணவு தான் அவர்களுக்கு கிடைக்கும். ஒருநாள் வேலையில்லை என்றாலும், அவர்களின் குடும்பமே பட்டினி கிடக்க வேண்டியிருக்கும். இப்படிப்பட்ட தொழிலாளர்களைத்தான் இன்று நாம் பார்க்கிறோம். 

நீதி என்பது என்ன? என்று இன்றைய உவமைக்கதையின் பின்னணியில் பார்த்தால். ஒருவருக்குரியதை அவருக்கு வழங்குவதுதான் நீதி. இந்த நீதியும் மனிதரின் பார்வையில் ஒன்றாகவும், இறைவனின் பார்வையில் வேறொன்றாகவும் இருப்பதை இன்றைய உவமைக்கதை  சுட்டிக்காட்டுகிறது. அத்துடன், மனித நீதியை விட்டு விலகி, இறைநீதியின் பக்கம் நம் நடைபோடவும் அறைகூவல் விடுக்கிறது. மனித நீதியின்படி முதலில் பணியில் சேர்ந்து, அதிக நேரம் உழைத்தவர்களுக்கு அதிக ஊதியம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். தாமதமாக வந்து, குறைந்த நேரம் உழைத்தவர்கள் குறைவாகப் வழங்கப்பட்டிருக்க வேண்டும். இதுதான் சரி. அப்போதுதான் அனைவரும் நேர்மையாக உழைப்பர்.
ஆனால், இறைவனின் பார்வை அப்படி இல்லை. அது பரிவின் பார்வையாக, பாசத்தின் பார்வையாக இருக்கிறது. ஏதோ ஒரு காரணத்தால், சில வேளைகளில் மனித, சமூக காரணங்களால் எல்லா மனிதர்களுக்கும் சமமான வாய்ப்புகளும், திறமைகளும் அமைந்துவிடுவதில்லை. ஒரு சிலர் பிறரைவிட பிற்பட்டவர்களாக, அல்லது பிற்படுத்தப்பட்டவர்களாக இருந்துவிடுகின்றனர். அவர்கள்மீது சிறப்பான ஒரு பரிவைப் பொழிந்து அவர்களுக்கும் அதிக ஆற்றலும், வாய்ப்புகளும் கிடைத்தவர்களுக்கு இணையான ஊதியத்தை நிலக்கிழார் வழங்குகிறார். இதுதான் இறை நீதி. கடவுளின் நீதி மனித நீதியைப் போன்றதல்ல. மனிதர் வழங்கும் நீதி வரையறைக்கு உட்பட்டது. ஆனால் கடவுள் வழங்கும் நீதி தாராள அன்பின் அடிப்படையில் அமைந்தது. கடவுளின் அன்புதான் அவருடைய நீதிக்கு அடிப்படை. எனவே, கடவுள் அநீதியாகச் செயல்படுகிறார் என்பதைவிட, தாராள உள்ளத்தோடு நடந்துகொள்கிறார் என்பதே உண்மை. கடவுளின் நீதி மனித கணிப்புகளுக்கு அப்பாற்பட்டது என நாம் உணர வேண்டும். கடவுள் மக்களை வேறுபடுத்திப் பார்ப்பதில்லை;. அதே நேரத்தில் அவருடைய கொடை எப்போதுமே தாராளமாக நமக்கு வழங்கப்படுகிறது. எனவே, கடவுளின் தாராளத்தைக் கண்டு நாம் பொறாமைப்படுதல் பொருத்தமாகாது. கடவுளின் நீதி இரக்கமும் பரிவும் தோய்ந்த அன்பு இதயத்திலிருந்து பிறக்கும் ஒன்று. கடவுளின் இரக்கத்திற்கு எல்லை கிடையாது. கடவுளின் இரக்கத்திற்கு நாம் மனித கணிப்புப்படி வேலி கட்ட முடியாது. முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்னும் தத்துவம் கடவுளைப் பொறுத்தமட்டில் உண்மை ஆகாது. முதலில் வந்தாலும் சரி, கடைசியில் வந்தாலும் சரி எல்லாருக்கும் சம உரிமையே என்பதே கடவுளின் நீதி. கடவுள் தாராள உள்ளத்தோடு பிறருக்கு நன்மை செய்கிறாரே என நினைத்து நாம் பொறாமைப்படுவதும் முறையாகாது மாறாக, எல்லா மக்களையும் சமமாக நடத்துகின்ற நம் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல நாமும் நிறைவுள்ளவர்களாய் இருக்க வேண்டும். நமது மனித பார்வையில் நீதியைப் பாராமல், இறைவனின் பார்வையில் நீதியை, மனிதர்களைக் காணக் கற்றுக்கொள்வோம்

Friday, September 12, 2014

தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாகாமல் மீட்பின் கொடையைப் பெறுவோம்

14.09.2014 '" 
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர் 

இன்று நம் திருச்சபை திருச்சிலுவை மகிமைப் பெருவிழாவைக் கொண்டாடுகிறது. சிலுவையின் முன் அடையாளமாக பழைய ஏற்பாட்டில் நாம் காண்பது வெண்கலத்தால் ஆன பாம்பின் சிலை. அதைப் பற்றியே இன்றைய முதல் வாசகம் பேசுகிறது. சிலை வழிபாடு என்னும் பாவத்தின் காரணமாக கொள்ளிவாய்ப் பாம்புகளை கடவுள் அனுப்பி, பலரும் கடியுண்டு இறந்தபோது, மோசே அவர்களுக்காகப் பரிந்து பேசி மன்றாடியபோது, கடவுளே மோசேயிடம்;, கொள்ளிவாய்ப் பாம்பொன்றைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்து.  கடிக்கப்பட்டோரில் இதைப் பார்க்கிற ஒவ்வொருவனும் பிழைப்பான் என்று கூறுகிறார். அவ்வாறே மோசேயும் வெண்கலப் பாம்பு ஒன்றைச் செய்து வைக்க, அதைப் பார்த்த அனைவரும் பிழைத்துக்கொண்ட செய்தியை நாம் எண்ணிக்கை நூலில் வாசிக்கிறோம். இந்த நிகழ்ச்சியையே ஆண்டவர் இயேசுவும் மேற்கோள் காட்டி, அந்த வெண்கலப் பாம்பை தனது சிலுவைச் சாவின் முன் அடையாளமாக யோவான் நற்செய்தியில் எடுத்துக்காட்டுகிறார். பாம்பால் இறந்தவர்களைப் பாம்பினாலே உயிர்பெற்றெழச் செய்த இறைவன், மரத்தால் வந்த சாபத்தை ஒரு மரத்தாலேயே நீக்கினார். இன்று அந்தச் சிலுவை மரத்தை வணங்குகிறோம். அந்தச் சிலுவைக்கு மகிமையைத் தந்த இயேசுவைப் போற்றுவோம். அந்த மகிமைக்குக் காரணமான அவரது கீழ்ப்படிதலைப் பின்பற்றுவோம்.

சிலுவை என்பது அவமானத்தின் சின்னமாக, தோல்வியின் அடையாளமாக இருந்தது. இயேசு அதனை வெற்றியின் சின்னமாக, மாட்சியின் அடையாளமாக மாற்றினார். அந்த சிலுவை குறித்துக்காட்டுகிற இறையியல் செய்திகளையும் நம் வாழ்வில் நாம் கடைப்பிடிக்க வேண்டும். சிலுவை இயேசுவின் கீழ்ப்படிதலைக் குறிக்கிறது. சாவை ஏற்குமளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவை ஏற்கும் அளவுக்கு இயேசு கீழ்ப்படிந்தார் என்று பவுலடியார் கூறுகிறார். நாமும் இறைவனுக்கு, திருச்சபைக்கு, அதிகாரிகளுக்கு, பெரியவர்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும்.

சிலுவை துன்பங்களை மனமுவந்து ஏற்றுக்கொள்வதையும் குறிக்கிறது. இயேசு அந்தச் சிலுவைத் துன்பத்தை அகற்ற மன்றாடினார். ஆனால், அதுதான் இறைவனின் விருப்பம் என்று உணர்ந்ததும் மனம் விரும்பி ஏற்றுக்கொண்டார். ஆகவே, இறைவன் அவருக்கு வெற்றியும், மாட்சியும் தந்தார். நமது வாழ்வில் தவிர்க்க முடியாமல் வரும் சிக்கல்கள், நோய்கள், துன்பங்கள், அவமானங்கள் இவற்றை ஏற்றே தீர வேண்டும் என்னும் நிலை வரும்போது இயேசுவைப் போல நாமும் மனம் உவந்து அவைகளை ஏற்போம். அப்போது தந்தை இறைவன் இயேசுவுக்குச் செய்ததுபோல, நமக்கும் அவரது வெற்றியிலும். மாட்சியிலும் பங்கு தருவார். பாவங்களால் சிறைப்பட்ட உலகை மீட்பது எப்படி என்று கேள்வியும், பரிதவிப்பும் எழுந்தபோது, இறைவன் அதற்கு விடை பகர்ந்தார். மனிதரின் மீட்பு மனிதரிடமிருந்தே வர வேண்டும் என்று தீர்மானித்தார். தன் மகனை மனிதரில் ஒருவராக அனுப்பி வைத்தார். இந்த எண்ணத்தை வெளிப்படுத்தும் ஒரு பைபிள் பகுதி இன்று நமக்குத்தரப்படும் நற்செய்தியில் உள்ளது. 'தம் ஒரே மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார்." 

கடவுள் இந்த உலகத்தை அழிப்பதற்கோ, அதற்குத் தண்டனைத் தீர்ப்பு அளிக்கவோ தம் மகனை அனுப்பவில்லை. மாறாக, அவர் வழியாக இவ்வுலகிற்கு மீட்பு வழங்கவே அவர் இயேசுவை அனுப்பினார். இங்கே கடவுளின் எல்லையற்ற அன்பு துலங்குவதை நாம் தெளிவாகக் காண்கின்றோம். மனிதர்கள் அவரை விட்டு அகன்ற போதிலும் அவருடைய அன்பு ஒருநாளும் குறைவுபடவில்லை. மாறாக, தம்மைவிட்டுப் பிரிந்தவர்களையும் அவர் தாராள உள்ளத்தோடு அன்புசெய்கிறார். அவர்கள் தம் தவற்றினை உணர்ந்து மீண்டும் தம்மிடம் திரும்புவார்கள் என்னும் நம்பிக்கை நம் அன்புக் கடவுளுக்கு என்றுமே உண்டு. இயேசு வழியாக விடுதலை அனுபவத்தைப் பெற்ற நாம் கடவுளையும் கடவுள் அன்புசெய்கின்ற உலகத்தையும் அதில் வாழ்கின்ற மனிதர்களையும் நன்மனத்தோடு ஏற்று அன்புசெய்திட அழைக்கப்படுகிறோம். இயேசுவே நமக்கு அன்பின் வழியைக் கற்றுத் தந்துள்ளார். குறிப்பாக, தன்னலம் மறந்து, பிறர் நலம் நாடுகின்ற பண்பை அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்கிறோம். உலகம் கேவலமாகக் கருதிய சிலுவை இயேசுவின் மரணத்தால் அன்பின் அடையாளமாக மாறிற்றி நமக்கு வாழ்வளிக்கும் ஊற்றாக விளங்குகிறது. சிலுவையில் உயர்த்தப்பட்ட இயேசு உண்மையிலேயே கடவுளுக்கு நிகராக உயர்த்தப்பட்டார். நிலைவாழ்வு பெற விரும்புவோர் சிலுவையில் உயர்த்தப்பட்ட இயேசுவை உற்று நோக்க வேண்டும். அவரையே தங்கள் வாழ்க்கை நெறியாகக் கொள்ள வேண்டும். அப்போது தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாகாமல் மீட்பின் கொடையைப் பெற்று மகிழ்வார்கள்.

Friday, September 5, 2014

நம் நடுவில் இயேசு இருக்க நாம் உழைப்போம்

07.09.2014 '"  
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர் 
புகழ்பெற்ற கொக்கோ கோலா நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி டீசயைn பு.னுலளழn என்பவர் குடும்ப உறவுகள் பற்றி எழுதிய சிறு கட்டுரையின் வரிகளை இங்கு இன்று குறிப்பிடுவது நன்று: 'பல பந்துகளை ஒரே நேரத்தில் தூக்கிப் போட்டுப் பிடிக்கும் வித்தையைப் போல, வாழ்க்கையைக் கற்பனை செய்து பாருங்கள். உங்கள் கையில் ஐந்து பந்துகள் உள்ளன. அவை நீங்கள் செய்யும் ஷதொழில், உங்கள் குடும்பம், உடல் நலம், நண்பர்கள் மற்றும் உங்கள் மனம்|. இந்த ஐந்து பந்துகளில் உங்கள் தொழில் என்பது மட்டும் ஒரு இரப்பர் பந்து. அது கைதவறி கீழே விழுந்தாலும், மறுபடி எகிறி குதித்து உங்கள் கைகளுக்கு வந்துவிடும். ஆனால், மற்ற நான்கு பந்துகள் - அதாவது குடும்பம், உடல்நலம், நண்பர்கள், மனம் ஆகிய நான்கும் கண்ணாடியால் ஆனவை. அவை கீழே விழுந்தால், சிதறி விடும். அவற்றை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வருவது இயலாத காரியம்." வாழ்வின் மிக முக்கிய அம்சங்களில் ஒன்றான நமது குடும்ப உறவுகள் கண்ணாடி பந்துகள். தவறினால் சிதறிவிடும். குடும்ப உறவுகளைப் பற்றிய சில எளிய, தெளிவான பாடங்களை நாம் புரிந்து கொள்ள தவறுகிறோம், அல்லது, புரிந்து கொண்டாலும் பின்பற்றத் தவறுகிறோம் என்பதைச் ஆழமாக அலசிப்பார்க்க இன்றைய ஞாயிறு சிந்தனை நம்மை அழைக்கிறது.

இன்று தொலைக்காட்சிகளில் மெகாத் தொடர்களின் குடும்பத்திற்குள் நிகழும் பிரச்சனைகள் ஒவ்வொரு நாளும் காட்டப்படுகின்றன. பிரச்சனைகள் ஒன்றா, இரண்டா? அவை ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கிக்கொண்டே போகலாம்  இந்த பிரச்சனைகளுக்குள் நசுக்கப்பட்டு அந்த கதாபாத்திரங்கள் படும் வேதனைகள் ஒவ்வொரு நாளும் வெகு நேரம் காட்டப்படுகின்றன.இந்த பிரச்சினைகள் இன்று எம் குடும்பத்தில் நிஜமாகின்றன. இதற்கு இத்தொடர்களில் வரும் நிகழ்ச்சிகள் பின்புலத்தில் இந்தக் குடும்பங்களைப் பாதிக்கின்றன என்று ஆணித்தரமாக கூறலாம் 

குடும்பப் பிரச்சனைகளைப் பற்றி நம் தொலைக்காட்சித் தொடர்கள் சொல்வதைப் பரவலாக ஏற்றுக்கொள்ளும் நம்மிடம், பிரச்சனைகளைத் தீர்க்கும் மாற்று வழியொன்றை இன்றைய நற்செய்தியில் இயேசு கூறுகிறார். இந்த நற்செய்தியைக் கேட்கும்போது நம் மனங்களில் நம்பிக்கை பிறக்கின்றதா? அல்லது, இயேசு கூறும் வார்த்தைகள் நடைமுறை வாழ்வுக்கு ஒத்து வராது என்று நமது மனம் சொல்கிறதா? உண்மையாகவே நம் உள்ளத்தில் என்னதான் நிகழ்கிறதென்று அலசிப் தேடுவோம். இன்றைய நற்செய்தியின் துவக்கமே ஒரு சாட்டையடிபோல, நம்மை விழித்தெழச் செய்கிறது. 'உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால..." என்பவை இயேசு கூறும் ஆரம்ப வார்த்தைகள். இந்த முதல் வரியில் இயேசு கூறியிருப்பதே ஒரு சவால் ஆகும் 'நீ உன் சகோதரன் அல்லது சகோதரிக்கு எதிராகப் பாவம் செய்திருந்தால்…" என்று இயேசு ஆரம்பித்திருந்தால், அது இயல்பாக இருந்திருக்கும். ஆனால், அவர் அப்படி ஆரம்பிக்கவில்லை. 'உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால்…" என்று ஆரம்பத்திலேயே நம் சிந்தனைகளைப் புரட்டிப் போடுகிறார். 

பிரச்சனையைத் தீர்க்க, குற்றத்தைக் களைய நாம் மேற்கொள்ளும் முதல் முயற்சிகள் எவ்விதம் இருக்கவேண்டும் என்பதை இயேசு இன்றைய நற்செய்தியில் தொடர்ந்து தெளிவாக்குகிறார். அவர் கூறும் முதல் படி என்ன? நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள். அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது உங்கள் உறவு தொடரும்.
ஆனால் நாம் தவறிழைத்தவரைத் தனியே அழைத்து, மனம் விட்டுப் பேசுவதற்குப் பதில் பல மாறுபட்ட, சிக்கலான வழிகளைக் கடைபிடிக்கிறோம். பிரச்சனைகளைப் பெரிதாக்குகிறோம். நாம் பார்க்கும் மெகாத் தொடர்கள் கூறும் வழி இது. பிரச்சனை பெரிதானால்தான் மெகாத் தொடர்கள் பல வாரங்கள் ஓடும். குற்றவாளி ஒழிய வேண்டும், பழிக்குப் பழி தீர்க்கப்பட வேண்டும். அப்போதுதான் நாடகம் விறுவிறுப்பாக இருக்கும். நடைமுறை வாழ்வில் நம் குடும்பங்களில் விறுவிறுப்பு வேண்டுமா, நமது குடும்பங்களிலும் இதுபோல் நிகழ வேண்டுமா? பிரச்சனை பெரிதாக வேண்டுமா அல்லது, விடைகள், தீர்வுகள் வேண்டுமா என்று நாம் தீர்மானிக்க வேண்டும்.

இயேசு கூறும் இலக்கணப்படி அமையும் குடும்பங்களில் குற்றம் புரிந்தவர் திருந்தி வரவேண்டும் என்று காத்திருக்காமல், முதல் முயற்சிகளை நாம் மேற்கொண்டால், அங்கு பிரச்சனைகள் தீர வழியுண்டு. உறவுகள் வலுப்பட வழியுண்டு. அவர்கள் கூடிவரும் நேரத்தில் இறைவனின் பிரசன்னம் அங்கு நிறைந்து பொங்கவும் வழியுண்டு. இந்த உறுதியைத் தான் இயேசு இன்றைய நற்செய்தியின் இறுதி வார்த்தைகளாக சொல்லியிருக்கிறார்: 'இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். " 

Sunday, August 17, 2014

மாயையான மதிப்புகளைத் தேடி அலையாமல் இயேசுவின்; மதிப்புள்ள வாழ்வை தேடுவோம்"

31.08.2014 '"  
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர் 

இன்று எமக்குதரப்படும் பைபிள் பகுதியை மத்தேயு நற்செய்தியாளர் கி.பி.80 - கி.பி.90ம் ஆண்டு காலப்பகுதியில் எழுதியிருக்க வேண்டும். அது கிறிஸ்தவர்கள் இயேசுவை மீட்பராக ஏற்றுக்கொண்டதால், துன்பத்தை அனுபவித்த காலம். துன்பப்படுகிற கிறிஸ்தவர்களுக்கு ஆறுதலையும், நம்பிக்கையையும் மத்தேயு தருகிறார். மத்தேயுவின் சிந்தனை, எண்ண ஓட்டங்கள் அனைத்துமே நடக்கிற நிகழ்வுகளின் அடிப்படையிலும், காலச்சூழ்நிலையின் அடிப்படையிலும் அமைகிறது என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மை. இயேசுவின் வார்த்தை எல்லாக்காலச் சூழ்நிலைகளுக்கும், எல்லா நிகழ்வுகளுக்கும் பொருந்துவதாகவும், அர்த்தம் தருவதாகவும் இருக்கிறது என்பது இதனுடைய வெளிப்பாடு.

இயேசுவைப் பின்பற்றுவதற்கு இரண்டு பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும் என்ற அழைப்பையும் விடுக்கிறார். முதல் பண்பு: தன்னலம் துறத்தல். வாழ்வு என்பது கடவுள் கொடுத்திருக்கிற மிகப்பெரிய கொடை. இந்த வாழ்வை தனக்காகவோ, தன்னுடைய உறவுகளுக்காகவோ வாழ்வது சாதாரண வாழ்க்கை. ஆனால், இயேசுவைப் பின்பற்றுகிற ஒவ்வொருவரும் மற்றவர்களுக்காக வாழ்வதற்கு அழைக்கப்படுகிறோம். 
இரண்டாவது பண்பு: சிலுவையைத்தூக்குதல், அதாவது துன்பத்தை ஏற்றுக்கொள்ளுதல். மற்றவர்களுக்காக வாழும்போது நமக்கு கிடைப்பது துன்பங்களும், துயரங்களும்தான். ஆனால், துன்பங்களைத் தாங்குவதற்கு பயப்படாமல், அதைத்தாங்குவதற்கு இறைவன் பலம் தருவார் என்ற நம்பிக்கை நமக்கு இருக்க வேண்டும். வாழ்வு என்பது இன்பமும், துன்பமும் நிறைந்தது. இரண்டுமே நிரந்தரமானது அல்ல. வாழ்வில் துன்பம் வருகிறபோது சோர்வடைவதும், மகிழ்ச்சி வரும்போது துள்ளிக்குதிப்பதும் மனித இயல்பு. சோகங்கள் வருகிறபோது சோர்ந்து போகாமல், கடவுள் மட்டில் நம்பிக்கை கொள்வோம். அவர் நமக்கு பலம் தருவார், அருள் பொழிவார்.

மானிட வாழ்வின் மிகப் பெரிய மறைபொருள்களில் ஒன்று இழப்பு. யாரும் எதையும் இழக்க விரும்புவதில்லை. ஆனால், சிலவற்றை சில நேரங்களில் இழக்கும்போது, அந்த இழப்புக்கு கைம்மாறாக நாம் பெறும் இன்பம் இழந்ததைவிட பன்மடங்கு மதிப்பு மிக்கது, மேலானது என்பதை அனுபவத்தின் மூலமாகத்தான் அறிய முடியும்.ஞானிகள், அறிஞர்கள், மாமனிதர்கள் இந்த மறைபொருளை, வாழ்வின் இரகசியத்தை அறிந்திருக்கின்றனர். எனவே, இழப்பதற்கு அஞ்சாமல் இழக்க முன் வந்தனர், சில வேளைகளில் தம் உயிரையும்கூட இழந்தனர் இயேசு இன்றைய நற்செய்தி வாசகத்தில் இந்த ஞானத்தை நமக்குக் கற்றுத் தருகிறார். தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர். மாறாக, என் பொருட்டு தம்மையே அழித்துக்கொள்கிற எவரும் வாழ்வடைவர் என்கிறார். இயேசுவின் பொருட்டுக் கடந்த பல நூற்றாண்டுகளாக ஆயிரக்கணக்கானவர்கள் தம் உயிரை இழக்க முன்வந்துள்ளனர். நிலைவாழ்வைப் பெற்றுக்கொண்டுள்ளனர். நாம் உயிரை இழக்க வேண்டாம். சிறிய இன்பங்களை, சிறிய ஆதாயங்களை, நேரத்தை, ஓய்வை, பொழுதுபோக்கை இழக்க முன்வருவோமா.

இயேசு மக்களுக்கு ஒரு புதுவாழ்வு வாக்களித்தார். தாயின் உதரத்தில் கருவாக உருவாகி, உலகில் தோன்றி நம் சாவோடு அழிந்துபோகின்ற உயிரைவிடவும் மேலானது இயேசு வாக்களித்த வாழ்வு. இந்த வாழ்வுக்கு முடிவே இராது. உயிரைத் தியாகம் செய்தாவது நாம் வாழ்வை அடைய வேண்டும் என்பது இயேசுவின் போதனை. சில சமயங்களில் உலகத்தையும்  ஆன்மாவையும் ஒன்றுக்கொன்று எதிரியாகக் காண்பித்து, ஆன்மாவைக் காத்துக்கொள்ள நாம் உலகத்தைக் கைவிட வேண்டும் என்று சிலர் வாதாடுவர். இது இயேசுவின் போதனைக்கு மாறானது. இயேசு வாக்களிக்கின்ற புதிய வாழ்வு ஆன்மாவைச் சார்ந்தது மட்டுமல்ல, அந்த வாழ்வு முழு மனிதரை உள்ளடக்குகின்ற வாழ்வு. இயேசு வாக்களித்த இறையாட்சியையும் முழுவாழ்வையும் பற்றிக்கொள்ள அனைத்தையுமே விட்டுக்கொடுக்க நாம் தயாராக இருக்க வேண்டும்.
இயேசு நாம் வாழ்வு பெற வேண்டும் என்பதற்காக இறந்தார். ஆனால் அவருடைய இறப்பின் வழியாக நாம் முடிவில்லா வாழ்வைப் பெற உரிமை பெறுகின்றோம். இத்தகைய உயரிய கொடையைப் பெற்றுள்ள நாம் அக்கொடையின் மதிப்பைச் சரியாக உணராததால் அதற்குப் பதிலாக மாயையான மதிப்புகளைத் தேடி அலைகின்றோம். இத்தேடல் பயனற்றதாகத்தான் முடியும். மாறாக, நம் சொந்த விருப்பு வெறுப்புகளின்படி நடக்காமல் இயேசுவின் போதனைக்கு ஏற்ப நாம் நடந்தால் நாம் விட்டுக்கொடுப்பதற்குப் பலகோடி மடங்கு மேலான மதிப்புள்ள 'வாழ்வை " பெற்றுக்கொள்வோம்.

எம் சொந்த அனுபவத்தில் இயேசுவை உணர்வேம்

24.08.2014 '"  
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர் 

'நான் யார் என்று மக்கள் சொல்கிறார்கள்?"'நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?" என்று இயேசு இரு கேள்விகள் கேட்கும் பகுதி இன்று எமக்கு பைபிளில் தரப்படுகிறது.

நம்முடைய் வாழ்க்கையில் நம்மை நாமே தேடிய அனுபவங்கள் நமக்கு உண்டு. நம்மை நாமே தேடும் நேரங்களில் பல கேள்விகள் நம் உள்ளத்தில் எழுந்திருக்கும். அவற்றில் மிக முக்கியமாக நம் மனதில் எழுந்த ஒரு கேள்வி: 'நான் யார்?" என்ற கேள்வி. இயேசுவுக்கும் இந்தக் கேள்வி எழுந்தது.

'நான் யார் என்று மக்கள் சொல்கிறார்கள்?" இயேசு இக்கேள்வியை அவர் காலத்து மக்களுக்கு மட்டுமல்ல. இன்றும் கேட்கிறார். மக்கள் இயேசுவைப்பற்றி என்ன சொல்கிறார்கள்? என்னென்னவோ சொல்லிவிட்டார்கள். இன்னும் சொல்லி வருகிறார்கள். நல்லதும், பொல்லாததும். உண்மையும், பொய்யும். விசுவாசச் சத்தியங்களும், கற்பனைக் கதைகளும். அளவுக்கதிகமாகவே சொல்லிவிட்டார்கள். ஆனால், இவ்வளவு சொல்லியும் இயேசுவைப்பற்றி முழுமையாக நம் மனித குலம் சொல்லிவிட்டதா என்று கேட்டால், இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இயேசு இவர்தான், இப்படிப்பட்டவர்தான் என்று சொல்வது மிகக் கடினம். இலக்கணங்களை, வரையறைகளை, வேலிகளை உடைப்பது இயேசுவின் இலக்கணம். இயேசுவின் அழகு.

'நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?" எம்மைப் பார்த்து இயேசு கேட்கிறார். 'நான் யார் என்று மக்கள் சொல்கிறார்கள்?" என்ற கேள்விக்கு நாம் படித்தவைகளை, மனப்பாடம் செய்தவற்றை கொண்டு பதில்களைச் சொல்லிவிடலாம்.

ஆனால், இந்த இரண்டாவது கேள்விக்கு அப்படி எளிதாகப் பதில் சொல்லிவிட முடியாது.நாம் படித்தவற்றைவிட, பட்டுணர்ந்தவையே இக்கேள்விக்குப் பதிலாக வேண்டும். நாம் மனப்பாடம் செய்தவற்றைவிட, மனதார நம்புகிறவையே இக்கேள்விக்கான பதிலைத் தரமுடியும். இக்கேள்வி எமக்கு சங்கடங்களை உருவாக்கலாம். 'என்ன இது. என்ன சொல்வது என புரியவில்லை என் உணர்ந்தால், இது ஒரு நல்ல ஆரம்பம். இயேசுவின் இந்தக் கேள்வி வெறும் கேள்வி அல்ல. ஓர் அழைப்பு. 'என்னைப்பற்றிப் புரிந்து கொள் என்னைப் பற்றிக்கொள். என்னைப் பின்பற்றி வா" என்று பலவழிகளில் இயேசு விடுக்கும் அழைப்பு.

இயேசுவை பற்றி வெறும் புத்தக அறிவு போதாது. அப்படி நாம் தெரிந்துகொள்ளும் கடவுளைக் கோவிலில் வைத்துப் பூட்டிவிடுவோம். விவிலியத்தில் வைத்து மூடிவிடுவோம். அனால்,இயேசுவை அனுபவத்தில் சந்தித்தால், வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும். பல சவால்களைச் சந்திக்க வேண்டும். நம் மனதைக் கவர்ந்த ஒருவரை, கருத்தளவில் புரிந்துகொள்வதோ, அவரைப் புகழ்வதோ எளிது. அவரைப் போல வாழ்வதோ, நம்பிக்கையோடு அவரைத் தொடர்வதோ எளிதல்ல.

இயேசுவைப்பற்றி தெரிந்துகொள்ள, அவரைக் கண்டு பிரமித்துப் போக, அவரை இரசிக்க கேள்வி அறிவு, புத்தக அறிவு போதும். அந்த பிரமிப்பில் நாம் இருக்கும்போது, இயேசு நம்மிடம் "நான் யார் என்று மக்கள் சொல்கிறார்கள்?" என்று கேட்டால், நம் பதில்கள் ஆர்வமாய் ஒலிக்கும். ஆனால், அந்த பிரமிப்பு, இரசிப்பு இவற்றோடு மட்டும் நாம் இயேசுவை உலகறிய பறைசாற்றக் கிளம்பினால், புனித பவுல் சொல்வது போல், 'ஒலிக்கும் வெண்கலமும், ஓசையிடும் தாளமும் போலாவோம்." எனவே, இயேசு நம்மை அடுத்த நிலைக்கு வருவதற்கு கொடுக்கும் அழைப்பு தான் "நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?" என்ற கேள்வியாக எழுகிறது. இது சாதாரண அழைப்பு அல்ல. அவரை நம்பி அவரோடு நடக்க, அவரைப்போல் நடக்க, இரவானாலும், புயலானாலும் துணிந்து நடக்க அவர் தரும் ஓர் அழைப்பு. வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்த கொடுக்கப்படும் இந்த அழைப்பிற்கு, மனதின் ஆழத்திலிருந்து; நம் பதில்களை வரவழைப்போம்.

இயேசுவின் இந்த அழைப்பைப் புரிந்தும் புரியாமலும், சீமோன்: ' நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்" என்று பதிலளித்தார். இயேசுவுடன் தட்டுத் தடுமாறி நடைபயின்ற பேதுரு, இயேசுவைத் தம் சொந்த அனுபவத்தில் சந்தித்தபின், இறுதி மூச்சு வரை உறுதியாய் இருந்ததுபோல், நாமும், சொந்த அனுபவத்தில் இயேசுவை உணர்ந்து, அவருக்காக எதையும் இழக்கும் துணிவு பெறவோம்

Friday, August 15, 2014

பிரிவுகள் பிளவுகள் வேற்றுமைகள் இல்லாத புதிய சமுதாயத்தை சமயங்கள் உருவாக்க உழைப்போம்

17.08.2014 '"   
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர் 

இன்று எமக்குத்தரப்படும் பைபிள் பகுதியில் தாய்மையின் மேன்மை வெளிக்கொணரப்படுகின்றது எனலாம். ஒரு தாயின் விடாப்பிடியான வேண்டுதலையும், அதன் இறுதி வெற்றியையும் இன்றைய பைபிள் பகுதி எடுத்துக்காட்டுகின்றது. கனானியப் பெண்ணின் நம்பிக்கையை இயேசு நன்றாகவே சோதித்துப் பார்த்துவிட்டார் என்றும் கூறலம். பிள்ளைகளுக்குரிய உணவை நாய்க்குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல என்ற கடுமையான மறுமொழிகூட அந்தத் தாயின் நம்பிக்கையை, எதைச் செய்தாவது தன் மகளைக் குணப்படுத்திவிட வேண்டும் என்ற அன்பின் பிடிவாதத்தை, அன்பின் தளராத் தன்மையைத் தோற்கடிக்க முடியவில்லை. உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க் குட்டிகள் தின்னுமே என்று கூர்மதியுடனும், அன்புடனும் பதில் சொல்லி இயேசுவின் பாராட்டையும், மகளுக்கு நலத்தையும் பெற்றுக்கொண்டார்.
'பிள்ளைகளின் உணவை நாய்களுக்குப் போடுவது முறையல்ல முதலில் பிள்ளைகள் வயிறார உண்ணட்டும்" என்கிறார் இயேசு. ஆனால் அதற்கு அந்தப் பெண் அளித்த மறு மொழியோ இயேசுவையே ஒரு குலுக்கு குலுக்கிவிட்டது. ஆம் ஐயா ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே என்றாள் அப்பெண் உடனே தம் எண்ணத்தை மாற்றி புற சமயத்தவரான அந்தப் பெண்ணுக்கு புதுமை செய்ய முன்வருகிறார்.

இயேசுவை அணுகிவந்த கனானியப் பெண்ணுக்கும் இயேசுவுக்கும் இடையே நிகழ்கின்ற உரையாடலில் பல சிறப்பு அம்சங்கள் உண்டு. அப்பெண் இயேசுவிடம் முழு நம்பிக்கை கொண்டிருந்தார். அவர் இயேசுவை மூன்று முறை 'ஐயா" என்றும், 'தாவீதின் மகனே" என்றும் அழைக்கிறார். இந்த இரு வார்த்தைகளும் இயேசுவை மெசியா என அப்பெண் கருதியதைக் காட்டுகிறது. ஆனால் இயேசுவோ பேசாது அதைதியாக நிற்கிறார். ஒரு சொல் கூட அப்பெண்ணுக்குப் பதில்மொழியாக அவர் கூறவில்லை. சீடர்கள் வேறே எரிச்சல் படுகிறார்கள். இயேசுவும் அப்பெண்ணை நாய்க்கு ஒப்பிட்டு இழிவுபடுத்துவது போல் தெரிகிறது. ஆனால் அப்பெண் மன உறுதியை இழக்கவில்லை. இயேசு மனது வைத்தால் போதும் தன் மகள் குணம்பெறுவாள் என அப்பெண் விடாப்பிடியாக நிற்கிறார். கடவுளின் வல்லமையில் நம்பிக்கை கொண்டு அவரை அணுகுவோர் ஏமாற்றமடையார் என்பதற்கு இப்பெண்ணின் ஆழ்ந்த நம்பிக்கை எமக்கு சிறந்த எடுத்துக்காட்டு.

தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்த ஒரு பெண் என்று பல தடைகளைத் துணிவுடன் தாண்டி தன் மகளைக் குணமாக்க இயேசுவை அணுகி வருகிறார். அவரை ஒரு பொருட்டாகக்கூட மதிக்காத இயேசுவிடம் மீண்டும் மீண்டும் அவர் வருகிறார். இஸ்ரயேல் மக்களை குழந்தைகளாகவும், பிற இனத்தவரை நாய்களாகவும் உருவகித்துப் பேசும் இயேசுவின் கடினமான சொற்களையும் மீறி, அப்பெண் இயேசுவை அணுகி வருகிறார். பைபிளில் நற்செய்தியில் நமக்குக் காட்டப்படும் இயேசு சில நேரங்களில் புரியாத புதிராக விளங்குகிறார். அவரைப் புரிந்து கொள்ள சிரமமாக உள்ள ஒரு நற்செய்திப் பகுதி இன்று நமக்குத் தரப்பட்டுள்ளது. இயேசுவின் கடினமான சொற்களையும் வேறொரு கண்ணோட்டத்துடன் புரிந்து கொண்டு அப்பெண் தன் விண்ணப்பத்தை மீண்டும் இயேசுவிடம் வைக்கிறார். தளராத, உறுதியான விசுவாசத்தின் ஓர் எடுத்துக்காட்டாக அந்தக் கானானியப் பெண் நமக்கு முன் உயர்த்தப்படுகிறார். 'அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்" என்று இயேசு அவரை அனுப்பி வைக்கிறார்.

இஸ்ரயேல் மக்களுக்கும் பிறருக்கும் உள்ள பிரிவுகளை, உயர்வு, தாழ்வுகளை இயேசு வலியுறுத்திக் கூறும்போது, அப்பிளவுகளை எல்லாம் தாண்டி, இறைவனின் கருணையும் உண்டு என்பதை ஆணித்தரமாக உணர்த்திய கானானியப் பெண்ணிடம் நாம் கற்றுக் கொள்ளக்கூடியப் பாடங்கள் பல உள்ளன. அந்தப் பெண் கொண்டிருந்த விசுவாசத்தின் ஆழத்தைக் கண்ட இயேசு, அவர் பிற இனத்தவர், அதுவும் பிற இனத்தைச் சார்ந்த ஒரு பெண் என்பதையெல்லாம் புறம்தள்ளி, அவரது விசுவாசத்தை கூட்டத்திற்கு முன் புகழ்துள்ளரே. அங்கும் நமக்குப் பாடங்கள் உள்ளன. 
பிளவுகள், பிரிவுகள், ஏற்றத் தாழ்வுகள் ஆகியவற்றால் நிறைந்து வெறுப்பை உமிழ்ந்து வரும் இன்றைய உலகில் வேறுபாடுகளைகளைந்து மனிதம் போற்ற மனிதம் வளர்க்க பாடுபடுதல் வேண்டும் அப்போது தான் பிரிவுகள் பிளவுகள் வேற்றுமைகள் இல்லாத புதிய சமுதாயத்தை காணமுடியும். அனைத்து மக்களினங்களும் அனைத்து சமயங்களும்  சேர்ந் மண்ணில் மனிதத்தை மலரச் செய்யும்  

Tuesday, August 5, 2014

நம் பிரச்சனைகளை நடுவிலும் கடவுளை சந்திக்க காலடி எடுத்துவைப்போம்

10.08.2014 ' "; 
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர் 

இன்று எமக்குத்தரப்படும் பைபிள் பகுதியில் இயேசு,கடல்மீது நடப்பதையும் இயேசுவின் சீடர் பேதுரு கடல்மீது நடக்கமுனைந்து  பெருங்காற்று வீசியதைக் கண்டு அஞ்சி மூழ்கிப்போவதையும் பேதுரு 'ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்" என்று கத்திய துன்பவேளையில் இயேசு கையை நீட்டி தூக்கி பேதுருவை காப்பாற்றுவதையும் பார்க்கின்றோம்.

இந்தவேளையில் முன்பு ஒருமுறை வாசித்த ஓரு கதையை கட்டயம் கூறித்தான் ஆகவேண்டும்: 'மனிதன் ஒருவன் தன் வாழ்க்கைப் பயணத்தைத் திருப்பிப்பார்க்கிறான். பயணத்தில் கடவுள் தன்னோடு நடந்து வந்ததற்கு சான்றாக பாதை முழுவதும் இரு ஜோடி காலடித் தடங்கள் பதிந்திருந்தன. அவனுக்கு மிக்க மகிழ்ச்சி. ஒரு சில நேரங்களில் அந்தப் பாதையில் ஒரு ஜோடி காலடித்தடங்களே இருந்ததைப் பார்க்கிறான். நினைவுபடுத்தி பார்த்தபோது, அந்த நேரங்களெல்லாம் அவன் அதிகதுன்பத்தில், போராட்டத்தில் கஸ்டப்பட்ட நேரங்கள் என்று கண்டுபிடிக்கிறான். உடனே கடவுளிடம், ஷதுன்ப நேரத்தில் என்னைத் தனியே விட்டுவிட்டு போய்விட்டீர்களே. இது உங்களுக்கே நியாயமா?| என்று முறையிடுகிறான். கடவுள் பொறுமையாக அம்மனிதனுக்குப் பதில் சொன்னார்: ஷமகனே, பெரும் அலைகளாய் உன்வாழ்வில் துன்பங்கள் வந்தபோது ஒருஜோடி காலடித்தடங்களே இருப்பதைப் பார்த்துவிட்டு அவசரப்பட்டு முடிவேடுத்து விட்டாய். அந்த நேரத்தில் உன்னைவிட்டு நான் எங்கும் போகவில்லை. உன்னைத் தூக்கிக் கொண்டு நானே நடந்தேன்.| என்றார் கடவுள்."

தண்ணீரில் நடப்பதே ஒரு சாதனை. அதுவும் புயல், அலை எனச் சுற்றிலும் பயமுறுத்தும் சூழலில் இயேசு பேதுருவைத் தண்ணீரில் நடக்கச் சொன்னது பெரியதொரு சவால். இதில் நம் கவனத்தை ஈர்ப்பது  என்னவென்றால், இயேசு பேதுருவுக்கு அந்தச் சவாலை அளிக்கும் முன்பு காற்றையும், கடலையும் அமைதிப் படுத்தியிருக்கலாம். அப்படிச் செய்யவில்லை என்பதுதான். வாழ்க்கையில் வீசும் புயல்கள் எல்லாம் ஓய்ந்த பிறகுதான், பிரச்சனைகளை எல்லாம் தீர்ந்த பிறகுதான் இறைவனைச் சந்திக்க முதல் அடி எடுத்துவைப்போம் என்று நினைக்கும் நம் எண்ணங்கள் தவறு. மாறாக அந்தப் புயலின் நடுவில் இறைவன் காத்துக்கொண்டிருப்பார் துணிந்து சென்று அவரைச் சந்திக்கலாம் என்பதை இயேசு நமக்கு சொல்லித்தருகிறார் 

பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். அலையும், புயலும் அலைகழித்துக் கொண்டுதான் இருக்கும். அஞ்சாதீர்கள், நம்பிக்கையுடன் துணிந்து வாருங்கள் துயர நேரங்களில் உன்னை தூக்கிச் சுமப்பேன். தம்மை நோக்கிக் கூக்குரல் எழுப்பிய பேதுருவை இயேசு 'உடனே தம் கையை நீட்டிப் தூக்கி காக்கின்றார். புயலின் நடுவில், கடலின் நடுவில் கடவுள் நம்மோடு இருக்கிறார். துயரநேரம் தூணாய்வந்து நம்மையும் கரம்நீட்டி தூக்கிகாப்பார்.

பேதுருவுக்கு இயேசுவைப்போல கடலின்மேல் நடக்கவேண்டும் என்று ஆசை வந்ததுபோல் இன்று எமக்கு கடவுளைப்போல் நாமும்; செய்யவேண்டும் என்று ஆசைப்படுகின்றோம். இயேசுவும் இதைத் தவறு என்று சொல்லவில்லை. பேதுருவை அனுமதித்ததுபோல் எமது ஆசைகளை அனுமதிக்கிறார். இன்று எமது ஆராய்ச்சிகள், புதியகண்டுபிடிப்புக்கள் எல்லாவற்றையும் இறைவன் அனுமதிக்கிறார். ஆனால் பேதுரு கடலில் மூழ்கியதுபோல் மூழ்கிவிடக்கூடுது என்று இறைவன் விரும்புகின்றார். பேதுருவுடைய நம்பிக்கையின்மை, பயம், ஆணவம், தெய்வீக வலுவின்மை, இவையே அவர் மூழ்குவதற்கு காரணமாயிருந்தன. ஆசைப்படுவதில் தவறில்லை. ஆண்டவனைப் போன்ற ஆற்றல் இருக்கிறதா? தெய்வீக ஆற்றலால், இறை உணர்வுகளால் நாம் நிரம்பியிருக்கின்றோமா? என்ற வினாவிற்கு விடைகாணவேண்டும். இயேசு இறைமகனாய் இருந்தும், அவர் தனியே இறைவனிடம் வேண்டுவதற்காக ஒருமலையின்மேல் ஏறினார். பொழுது சாய்ந்தபிறகும் அங்கே அவர் தனியே இருந்தார். தெய்வீக ஆற்றலால் தன்னை நிறைத்துக் கொண்டார். கடல் மீது நடக்குமுன் கடவுள் அருளால் நிரப்பிக்கொண்டார். தந்தையோடு தனியே உறவாடச் சென்ற இயேசு அங்கேயேத் தங்கி விடவில்லை. காற்றோடு, கடலோடு போராடிய தன் சீடர்களைத் தேடி வந்தார். அதுவும், கடல் மீது நடந்து வந்தார். இந்த தெய்வீக ஆற்றல் இல்லாத ஆசை, ஆபத்தில் முடிவது எதிர்பார்க்கக்கூடியதே. அருளால் ஆண்டவனோடு இணைத்து ஆசைப்படுவோம், கடலிலும் நடக்கலாம், மலையையும் தாண்டலாம். 

Tuesday, July 29, 2014

அன்பிலிருந்து தோன்றுகின்ற பரிவு எம்உள்ளத்திலிருந்தும் உருவாகட்டும்

03.08.2014 ' " 


ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர் 

இன்று தமக்குத்தரப்படும் பைபிள் பகுதியில் இயேசு, 'மக்களை அமரச் செய்யுங்கள்" என்றார். அப்பகுதி முழுவதும் புல்தரையாய் இருந்தது. அமர்ந்திருந்த ஆண்களின் எண்ணிக்கை ஏறக்குறைய ஐயாயிரம். இயேசு அப்பங்களை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அமர்ந்திருந்தோருக்குக் கொடுத்தார். அவ்வாறே மீன்களையும் பகிர்ந்தளித்தார். அவர்களுக்கு வேண்டிய மட்டும் கிடைத்தது. அவர்கள் வயிறார உண்டபின், 'ஒன்றும் வீணாகாதபடி, எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வையுங்கள்" என்று தம் சீடரிடம் கூறினார். மக்கள் உண்டபின் ஐந்து வாற்கோதுமை அப்பங்களிலிருந்து எஞ்சிய துண்டுகளைச் சேர்த்துச் சீடர்கள் பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினார்கள் தரப்படுகின்றது.

மக்களுக்கு இறையாட்சி பற்றிய நற்செய்தியை அறிவித்து, அவர்கள் மனம் மாற வேண்டும் என்று அழைப்பு விடுத்தார் இயேசு. கடவுளின் ஆட்சி மக்களிடையே வந்துகொண்டிருக்கிறது என்பதை அவர்கள் கண்கூடாகக் காணும் விதத்தில் இயேசு பல அதிசய செயல்களையும் புரிந்தார். அச்செயல்கள் வழியாக அவர் மக்களுக்கு நன்மை கொணர்ந்தார். இத்தகைய அரும் செயல்களில் ஒன்று 'ஐயாயிரம் பேருக்கு உணவளித்தல் ஆகும்" மக்களுக்கு இயேசு உணவளித்த நிகழ்ச்சியை நாம் பல கோணங்களிலிருந்து பார்க்கலாம். இஸ்ரயேல் மக்களுக்குக் கடவுள் பாலைநிலத்தில் மன்னா என்னும் உணவை அளித்ததுபோல இங்கு இயேசு பசியுற்றோருக்கு உணவளித்துப் பாதுகாக்கின்றார். எலியா, எலிசா போன்ற இறைவாக்கினர் மக்களுக்கு உணவு வழங்கியதுபோல இங்கும் இயேசு செயல்படுகின்றார். மேலும் நற்கருணையை இயேசு ஏற்படுத்தியதும் இங்கே குறித்துக் காட்டப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் ஓர் ஆழ்ந்த உண்மையை நாம் காண்கிறோம். அதாவது, மக்களுக்கு உணவளிக்க இயேசு வழிவகுத்துவிட்டு, உணவைப் பகிர்ந்தளிக்கின்ற பணியைத் தம் சீடரிடமே விட்டுவிடுகின்றார். யார் இந்த சீடர்கள்;? இயேசுவின் காலத்தில் அவரைப் பின்சென்றவர்கள்தாம் அவர்கள். இன்று நாம் அவருடைய சீடர்களாக இருக்கின்றோம். இயேசுவின் குரலைக் கேட்டு, அவருடைய போதனையை ஏற்று, இயேசுவின் வழியில் நடந்துசெல்ல முன்வரும்போது நாம் இயேசுவின் சீடர்களாக மாறுகிறோம். நமக்கு இயேசு வழங்குகின்ற கட்டளை என்ன? 'நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்". இந்த உணவு எத்தகையது? பிறரது  புறப்பசியை ஆற்றுகின்ற உணவு மட்டுமா? இல்லை; ஆன்மப் பசியை ஆற்றவும் சீடர்கள் துணைசெய்ய வேண்டும். இயேசுவின் போதனையை ஏற்று, அதன்படி வாழ்ந்து, இயேசுவுக்குச் சான்றுபகரும்போது நம் வாழ்வு பிறருடைய பசியை ஆற்றுகின்ற உணவாக மாறும். அப்போது, இயேசு தம்மையே நமக்கு உணவாக அளித்ததுபோல நாமும் பிறருக்கு உணவாக நம்மையே கையளிப்போம். அதாவது, நம்முடைய சான்று வாழ்க்கையைக் கண்டு பிறர்; தம் ஆன்மப் பசி ஆறுகின்ற அனுபவம் பெறுவர். பிறருடைய நலனை முன்னேற்றுவதில் இயேசுவின் பணியை ஆற்றிடத் திருச்சபை முழுவதுமே அழைக்கப்பட்டுள்ளது. திருச்சபையின் ஒவ்வொரு உறுப்பினருக்கும், தம்மைப் பின்செல்கின்ற எல்லா மனிதருக்கும் இயேசு வழங்குகின்ற கட்டளை: 'நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்" இக்கட்டளையை ஏற்றுச் செயல்படுத்துவது நம் கடமை. நாம் தயாரா?

கடவுளின் ஆட்சி முழுமையாக மலரும் நாளில் எல்லா மக்களினத்தாருக்கும் கடவுள் பெருவிருந்து அளிப்பார் என்னும் உருவகம் விவிலியத்தில் பல இடங்களில் வருகிறது. தேவைக்கு அதிகமாகவே உணவு தந்து, அனைவரின் பசியையும் கடவுள் போக்குவார்; அவர்களுக்கு முடிவில்லாப் பேரின்பம் அளிப்பார். இவ்வாறு பழைய ஏற்பாட்டு நினைவும், நற்கருணைக் கொண்டாட்ட நினைவும், இறுதிக் கால விருந்தின் நினைவும் உள்ளடங்கிய விதத்தில் மத்தேயு 'அப்பங்கள் பலுகுதல்" நிகழ்ச்சியை வடிவமைக்கிறார். இந்த ஆழ்ந்த பொருள் கொண்ட நிகழ்ச்சியில் இயேசு உண்மையாகவே மக்களின் பசியைப் போக்குகிறார். அவ்வாறே இயேசுவின் சீடர்களும் செய்ய வேண்டும். அவர்களும் மக்களுக்கு உணவளிக்க வேண்டும். எஞ்சியிருக்கும் உணவை வீணடிக்காமல் மக்களின் தேவையை நிறைவேற்ற வேண்டும். மக்கள் பெருந்திரளாக வந்து தம்மை அணுகியதைக் கண்ட இயேசுஅவர்கள்மீது பரிவுகொண்டார். அன்பிலிருந்து தோன்றுகின்ற பரிவுதான் இயேசுவின் உள்ளத்திலிருந்து எழுந்த பாச உணர்வு, அவர் மக்களிடத்தில் கொண்டிருந்த அக்கறை. எம் திருமகனிடம் விளங்கிய பரிவு எங்கள் வாழ்விலும் துலங்கிட இயேசுவோடு பயணிப்போம். 

Monday, July 21, 2014

இயேசுவிற்காக தம்மடைய எல்லாவற்றையும் இழக்க நாம் தயாரா?.

27.07.2014'" 
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர் 
இன்று எமக்குத்தரப்படும் பைபிள் பகுதியில் இயேசு உவமைக்கதைகள்வழியாக பேசுகிறார். கடவுளைப் பற்றிய அறியமுடியாத மறை உண்மைகளை இயேசு நமக்கு உவமைகள் வழியாக தருகிறார். எமக்கு உவமைக்கதைகள் மிகவும் பிடிக்கும் என அவர் நன்கு தெரிந்திருக்கிறார்;;. 

கடவுளின் ஆட்சி இவ்வுலகில் வந்துகொண்டிருக்கிறது என்னும் நல்ல செய்தியை அறிவித்த இயேசு அதைப் பல உவமைகதைகள் வழியாக மக்களுக்கு அறிவித்தார். குறிப்பாக, தம்மோடு நெருங்கிப் பழகி தம் போதனைகளை அருகிலிருந்து கேட்டு, தாம் புரிந்த அரும் செயல்களை நேரடியாகக் கண்டு அறிந்த தம் சீடர்களுக்கு இயேசு தம் உவமைகதைகளின் உட்பொருளையும் விளக்கிக் கூறினார். ஆனால் உண்மையில் அவர்கள் இயேசுவைப் புரிந்துகொள்ள மிகவும் சிரமப்பட்டார்கள். பல தடவைகளில் இயேசுவின் போதனை அவர்கள் காதுகளில் விழுந்தும் அவர்கள் அப்போதனையை உள்வாங்கித் தம் நடத்தையில் காண்பிக்க தயங்கினார்கள்.

இயேசு நம்மைப் பார்த்து அதே கேள்வியைக் கேட்கின்றார்: இவற்றையெல்லாம் புரிந்துகொண்டீர்களா? இயேசு யார் எனவும் அவர் நமக்கு வழங்கும் செய்தி யாது எனவும் நாம் உண்மையிலேயே புரிந்துகொள்ள வேண்டும் என்றால் நாம் திறந்த மனத்தோடு அவரை அணுக வேண்டும். அவரிடத்தில் நாம் முழுமையாக நம்பிக்கை கொள்ள வேண்டும். நம் இதயத்தைத் திறந்துவைத்து, அங்கே நம்மோடு பேசுகின்ற கடவுளின் குரலுக்கு நாம் கவனமாகச் செவிமடுத்தால் இயேசுவின் போதனைகளை நாம் அறிவளவில் மட்டுமன்றி, நம் இதய ஆழத்திலும் உணர்ந்து புரிந்துகொள்வோம். அப்போது அப்புரிதல் நம் வாழ்வில் ஒரு மாற்றத்தையும் கொணரும். இவ்வாறு நாம் மனம் மாறிய மனிதராக வாழ வேண்டும் என்பதே இயேசுவின் போதனையின் நோக்கம். 

ஜப்பான் சிறையில் இருந்த ஒரு கொலையாளி உவமைகளைப் படித்ததால் மனம் திருந்தியதாக வரலாறு உண்டு. 2ஆவது உலகப்போரின் போது படகு விபத்தில் சிக்கிய மூவர் பற்றி படகு என்ற நூலில் நாம் அவர்கள் பட்ட சிரமத்தைப் படிக்கின்றோம். நம்பிக்கை இழந்து இறந்திருக்க வேண்டிய இவர்கள் விவிலியக் கதைகளை மெதுவாகச் சொல்லக் கேட்டு அவற்றை ஆய்ந்து தெளிந்து ஒரு சிறிய ரப்பர் படகில் 34 நாட்கள் தத்தளித்து 1000 மைல்களுக்கு அப்பால் கரை சேர்திருக்கின்றனர். என் அயலான் யார் என்ற கதை ஆல்பர்ட் ஸ்வைட்சர் போன்ற மிகச் சிறந்த மருத்துவர்களை ஆப்பிரிக்க மக்களுக்குச் சேவை செய்யத் தூண்டியது. எனவே உவமைக்கதைகள் நம்மை கவர்ந்து இழுக்கும் தன்மையுடையவை. மனத்தில் ஆழமாக சித்திரம் ஒன்றை வரைந்து வண்ணம் தீட்டிவிடுவதால் அவை போதனை செய்வதற்கு ஏற்ற ஊடகமாக உள்ளன.அந்த உவமைக்கதைகள் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டுவதோடு வாழ்க்கையைப் பிரதிபலிக்கின்றன. அதன் விளைவாக அவை மிக ஆழமான தாக்கத்தை வாழ்வில் ஏற்படுத்துகின்றன. 

ஒருவர் நிலத்தில் புதைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அவர் அதை மூடி மறைத்துவிட்டு மகிழ்ச்சியுடன் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக் கொள்கிறார். விண்ணரசு இப்புதையலுக்கு ஒப்பாகும். ஒருவருக்குக் கிடைக்கும் மிகப் பெரிய புதையல் கிறிஸ்துவின் உறவும் நட்புமாகும். நற்செய்தி விலை மதிப்பில்லாத புதையல். கிறிஸ்துவின் அன்பு நம்மை கிறிஸ்துவாகவே மாற்றும் சக்தி கொண்டது. தமது உடைமைகளையெல்லாம் விற்றுவிட்டு புதையல் மறைந்திருக்கும் நிலத்தை வாங்குவது போல, ஒருவர் கிறிஸ்துவுக்காக தம்மடைய எல்லாவற்றையும் இழக்க நேரிடலாம். அவ்வாறு செய்வது தியாகம் அல்ல. மாறாக இயேசுவைக் கண்ட மகிழ்ச்சியில் நாம் இழப்பது ஒரு சிறு துரும்பாகும். கிறிஸ்துவுக்கும் நம்மைச் சீடர்களாகப் பெறுவதில் மகிழ்ச்சிதான். கிறிஸ்துவுக்காக நான் அனைத்தையும் குப்பை எனக் கருதுகிறேன் என மகிழ்ச்சியோடு முழங்குவார் தூய பவுல். நான் வாழ்ந்தால் கிறிஸ்துவுக்காக , நான் இறப்பதும் எனக்கு ஆதாயமே. புதையலைப் பார்த்தவன் சென்றான், தனக்கு உள்ளவற்றையெல்லாம் விற்று வந்தான். நிலத்தை வாங்கித் தனதாக்கினான். இறை அரசு அவ்வாறு ஒப்புமையில்லாத விலை மதிப்பில்லாத புதையல் என்பதை இந்த உவமை காட்டுகிறது . 

உயர்ந்த குறிக்கோளுக்காக நாம் எதையும் தியாகம் செய்யத் தயங்கக் கூடாது. நாம் அனைவருமே வாழ்வில் புதையல் தேடும் ஒருவரைப் போல முழுமையான உறுதியோடு செயல்படவேண்டும். நாம் நாளும் உயர்ந்த மனிதர்களாக வாழ முயன்று வெற்றி பெற்றால் அது வாழ்க்கையில் நாம் பெறும் மாபெரும் வெற்றியாகும். 

Thursday, July 17, 2014

ஒரு சில மனிதர்களின் வாழ்வையாவது தொட முயற்சிப்போமா

20.07.2014'" 
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர் 

இன்று எமக்குத்தரப்படும் பைபிள் பகுதியில் இயேசு உவமைக்கதைகள்வழியாக பேசுகிறார். நமக்கு இயேசு மூன்று உவமைக்கதைகளை இன்று கூறுகின்றார்:  நல்ல விதைகளை-களைகள், கடுகு விதை,
புளிப்பு மா.   ஏன் இயேசு மக்கள் கூட்டத்துக்கு உவமைக் கதைகள் கூறிப் போதித்தார் என்ற கேள்வி நாமக்குள் எழும்.

'ஒரு நிமிட ஞானம்" என்ற நூலில் காணப்படும் எளியதொரு கதை நாம் கேட்கும் இந்த கேள்விக்கு விடைதர  உதவியாக இருக்கும்: ஒரு குரு எப்போதும் கதைகளையேக் கூறிவந்தார். அவர் கூறிய கதைகள் அவரது சீடர்களுக்குப் பிடித்திருந்தன. இருந்தாலும், இன்னும் ஆழமான உண்மைகளை தங்கள் குரு கற்றுத் தரவேண்டும் என்று சீடர்கள் கேட்க ஆரம்பித்தனர். அவர்கள் என்னதான் வற்புறுத்திக் கேட்டாலும், குரு சொன்ன ஒரே பதில் இதுதான்: 'மனிதர்களுக்கும், உண்மைக்கும் இடையே உள்ள சுருக்கமான வழி, கதையே. இதை நீங்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை."

உண்மைக்கும், எமக்கும், உண்மைக்கடவுளுக்கும், எமக்கும் இடையே உள்ள சுருக்கமான வழி கதைகளே என்று இயேசு உணர்ந்திருந்தார். அதுவரை, மதத் தலைவர்களால் இஸ்ரயேல் மக்களுக்கு அறிமுகமான கடவுள், கல்லில் பொறிக்கப்பட்ட கட்டளைகளில் உறைந்திருந்த கடவுள். அவர் மக்களிடமிருந்து வெகு தூரத்தில் வாழ்ந்துவந்தார். அத்தகையக் கடவுளை, கனிவான ஒரு தந்தையாக கதைவடிவில் இயேசு இஸ்ரயேல் மக்களுக்கு மீண்டும் அறிமுகம் செய்துவைத்தார். 

நாடு, மதம், மொழி,கலாசாரம், என்ற எல்லைகளைக் கடந்து செல்லும் மற்றோர் ஆற்றல் கதைகளுக்கு உண்டு. இத்துடன், மிக முக்கியமாக, காலத்தைக் கடந்து செல்லும் ஆற்றலும் கதைகளுக்கு உண்டு. கதைகளுக்கு உள்ள இவ்வகை ஆற்றலால்தான் இயேசு கூறிய உவமைகதைகள் அவர் வாழ்ந்த குறுகிய நிலப்பரப்பைத் தாண்டியும், 21 நூற்றாண்டுகளைத் தாண்டியம், நம் மத்தியில் இன்றும்வாழ்ந்து வருகின்றன. கதைகளைப்பற்றி, இந்த அறிமுகத்தை இன்று தருவதற்கு இரு காரணங்கள் உண்டு. 

முதலில் களைகள் என்ற உவமைக்கதையிலிருந்து இயேசு சொல்ல விரும்புகிற செய்தி நாம் வாழும் இந்த உலகில் களைகள் என்று சொல்லப்படும் அலகையின் ஆதிக்கம் எப்போதும் இருக்கும். அந்த சாத்தான் தனது வலிமையால், எம்மை  மயக்கி, குழப்பி தன்னுடைய ஆதிக்கத்தின் பிடியில் வைத்திருக்கும். நாம் அதைப்பார்த்து பதற்றப்படத் தேவையில்லை. ஆனால், தீய சக்திகள் இருக்கிறது என்ற உணர்வு நமக்கு வேண்டும். அதைத்தவிர்க்க வேண்டும் என்ற உறுதி நமக்கு வேண்டும். அந்த உணர்வே களைகளிடமிருந்து காப்பாற்றிவிடும். பொறுமை இழக்காது, உறுதியாக இருக்கிறபோது, தீய எண்ணங்களும், சிந்தனைகளும் நம்மை ஒன்றும் செய்துவிட முடியாது. நம்மை கறைபடுத்த முடியாது. தீய எண்ணங்களும், கெட்ட சிந்தனைகளும் நம்மை ஆக்கிரமிக்கிறபோது, பதற்றப்படாமல், தொடர்ந்து கடவுளைப் பற்றிக்கொண்டிருப்போம். நம்முடைய உறுதியும், நம்முடைய பிடியும் ஆண்டவரில் இருக்கிறவரை, தீயவன் நம்மை எதுவும் செய்துவிட முடியாது என்பதே ஆகும் 

அடுத்து கடுகு விதை என்ற உவமைக்கதையிலிருந்து இயேசு சொல்ல விரும்புகிற செய்தி உலகில் நாம் என்னால் எந்த மாற்றமும் செய்ய முடியாது என்ற சலிப்போ, விரக்தியோ கொள்ளக்கூடாது வாருங்கள், கடுகு விதை எவ்வளவு சிறியது. ஆனாலும், அது வளர்ந்து பெரிய மரமாகிறது. வானத்துப் பறவைகளுக்கு நிழல் கொடுக்கின்றது.

அடுத்து புளிப்பு மா என்ற உவமைக்கதையிலிருந்து இயேசு சொல்ல விரும்புகிற செய்தி  புளிப்பு மாவின் அளவு சிறியது. இருப்பினும், மாவு முழுவதையும் அது புளிப்பேற்றுகிறது. அதுபோலத்தான், ஒவ்வொரு சிறிய செயலும், ஒவ்வொரு சிறிய சொல்லும் அவை மௌனமாக இந்த உலகின்மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதே ஆகும்

நாமும் ஒவ்வொரு சிறிய செயல், ஒரு புன்னகை, ஒரு பாராட்டு வார்த்தை, ஒரு அன்பான தொடுதல். போன்றவற்றின் வழியாக ஒரு சில மனிதர்களின் வாழ்வைத் தொட முயற்சிப்போம். இறுதியில், ஏராளமான மனிதர்கள் தொடப்படுவார்கள்.இந்த உலகம் இறைவன் வாழும் இனிய பூமியாக மாறும். 

அன்றாட வாழ்க்கையில் மக்கள் சந்திக்கின்ற நிகழ்ச்சிகளை இயேசு கதையாக எடுத்துச் சொல்லி, அவற்றின் வழியாக மக்களுக்கு இறையாட்சி பற்றிய உண்மைகளை உணர்த்தினார். எனவே, இயேசுவின் உவமைக்கதைகளை  கேட்ட எம்மை இயேசு சிந்திக்கத் தூண்டுகிறார். சிந்திப்போம் மாபெரும் மாற்றம் நம்மில் நிகழ்த்துவோம்.

Thursday, February 20, 2014

Tamil Christian Songs - Nilavum Thoongum Malarum Thoongum


Roman Catholic Tamil Songs - Nee Illaamal Naan Illai


பழி தீர்ப்பதில் ஓர் உயர்ந்தவகை பழிதீர்ப்பை செய்வோமா

23.02.2014
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
23.02.2014'"  பழி தீர்ப்பதில் ஓர் உயர்ந்தவகை பழிதீர்ப்பை செய்வோமா
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
இன்று நமக்குத்தரப்படும் பைபிள்பகுதியில் இயேசு 'கண்ணுக்குக் கண்", 'பல்லுக்குப் பல்"என்று கூறப் பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; தீமை செய்பவரை எதிர்க்கவேண்டாம். மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள் என கூறுவதைக் நாம் பார்க்கின்றோம்.

'கண்ணுக்குக் கண்", 'பல்லுக்குப் பல்"என்ற இந்த பைபிள் வரிகளை சற்றுநோக்குவோமானால்: இயேசு வருவதற்கு முன்பட்டகாலத்திலும் இயேசு வாழ்ந்த காலத்திலும் மக்கள் குழுக்களாக வாழ்ந்தபோது, ஒரு குழுவில் உள்ளவர் வேறொரு குழுவில் உள்ளவருக்கு தீங்கு செய்தால், அது பெரும் சண்டையாகமாறி, இரண்டு குழுக்களுக்கும் பெரும் உயிர்ச்சேதமும், சொத்துசேதமும் ஏற்பட்டுவிடுகின்ற நிலமையே அன்று காணப்பட்டது.இதனைத்தவிர்ப்பதற்காக அவர்களுக்குஒரு புதிய ஒழுங்கைக் கொண்டு வருகிறார்கள் இயேசு. அதுதான் 'கண்ணுக்குக் கண்", 'பல்லுக்குப் பல்". இதன்படி ஒரு குழுவில்உள்ளவர் மற்றகுழுவில் உள்ளவரைத்தாக்கினால், பாதிக்கப்பட்டவருக்கும், அவரைத் தாக்கியவருக்கும் இடையே மட்டும் வழக்குத்தீர்க்கப்படும். ஒரு மனிதனுக்காக குழுக்கள் தங்களிடையே சண்டையில் ஈடுபடாது, பாதிக்கப்பட்டவருக்கு ஒருகண் போயிருந்தால், அவரைத்தாக்கியவருக்கும் அதே தண்டனைக்கொடுக்கப்படும்.இயேசுவாழ்ந்தபோது இதுதான் மக்களிடையே ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் இருந்தது.

இயேசு இப்போது மற்றொரு நிலைக்கு மக்களை அழைத்துச்செல்கிறார். இதன்படி, பகைவருக்கும் அன்பு என்ற பழைய ஏற்பாட்டின் கட்டளைக்கு புத்துயிர் கொடுக்கிறார். இது புதியது அல்ல மாறாக, புதுமையானது. கண்ணுக்குக்கண் என்று சொல்கிற பழைய ஏற்பாட்டில் ஏராளமான இடங்களில் பகைவருக்கு அன்பு என்கிற பார்வை மேலோங்கிக்காணப்படுகிறதையும் நாம் பார்கின்றோம். ஆனால் கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்பது இன்றைய உலகில் பலரது பழிதீர்க்கும் மந்திமாகக் காணப்படுகின்றது. இதற்கு நேர்மாறாக, பழியைத் தீர்க்கும் மந்திரங்களும் வழிகளும் உலகில் பல உண்டு. கண்களையும், மனதையும் திறந்து இவற்றைப் பார்க்க நாம் பழக வேண்டும் என்று இயேசு இன்றைய நற்செய்தியில் நமக்கு அழைப்பு விடுக்கிறார்.

இந்த வேளையில் படித்ததில் பிடித்து என் மனதில் ஆழமாய் பதிந்துவிட்ட ஒரு செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றோன்: 2005ம் ஆண்டு கார்;திகையில், யுhஅயன முhயவiடி-அகமட் கரிப் என்ற பாலஸ்தீனிய சிறுவன் ஒருவன் இஸ்ரயேல் வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டான். அவன் வைத்து விளையாடிக் கொண்டிருந்த பொம்மை துப்பாக்கியை உண்மைத் துப்பாக்கி என்று நினைத்த வீரர்கள் அகமட் கரிப் சுட்டனர். இஸ்ரயேல் வீரர்கள் தங்கள் தவறை உணர்ந்ததும், உடனே அச்சிறுவனை இஸ்ரயேல் பகுதியில் இருந்த ஒரு மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்றனர். அவனது பெற்றோரையும் அழைத்துச் சென்றனர். அங்கு அகமட் கரிப்பை காப்பாற்ற முடியவில்லை. அந்த நேரத்தில் அவனது பெற்றோர் ஓர் அற்புதம்; செய்தனர். கொல்லப்பட்ட தங்கள் மகன் - அகமட் கரிப்னின் உடல் உறுப்புகளைத் தானம் செய்யமுன் வந்தனர். அவர்கள் அந்த உறுப்பு தானத்தை இஸ்ரயேல் பகுதியில் இருந்த மருத்துவமனையிலேயே செய்தனர்.

இதனைக் கேள்விப்பட்ட பாலஸ்தீனியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பலர் கோபமடைந்தனர். ஆனால், கட்டாயம் வேறு பல பாலஸ்தீனியர்கள் மகிழ்ந்திருப்பர். தங்கள் மகனைக் கொன்றது இஸ்ரயேல் படைவீரர்கள் என்று தெரிந்தும், அந்தப் பகுதியிலேயே தங்கள் மகனின் உறுப்புக்களை அவர்கள் தானம் செய்தது பழி தீர்ப்பதில் ஓர் உயர்ந்த வகை. ஐளாஅயநட- யுடிடயா- இஸ்மாஎல்-அப்லா என்ற அந்த சிறுவனின் பெற்றோர் எளிய மக்கள். அந்தப் பெற்றோர் எடுத்த முடிவைப்பற்றி பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது, அவர்கள் சொன்னது: 'எங்கள் மகனின் உறுப்புக்கள் வழியே வாழப்போகும் இஸ்ரயேல் மக்கள் இனிமேலாகிலும் சமாதானத்தை விரும்புவார்கள் என்ற நம்பிக்கையில்தான் இந்த உறுப்புகளை நாங்கள் தானம் செய்தோம்."
 
கண்ணுக்குக் கண், என்று பழிவாங்கத் துடித்துக் கொண்டிருக்கும் இஸ்ரயேல், பாலஸ்தீன மக்களிடையேயும் நமக்கும், கண்ணற்றோருக்குக் கண் என்று சொல்லித்தரும் இஸ்மாஎல்-அப்லா அவர்களின் பாடம், பழியைத் தீர்க்கும் ஓர் அழகிய பாடம். ஆயிரத்தில், பல்லாயிரத்தில் ஒரு சிலர் இப்படி இருப்பதாலேயே இந்த உலகம் இன்னும் மனிதர்கள் வாழும் உலகமாக இருக்கிறது. அளந்து, கணக்குப் பார்த்து அன்பு காட்டும் பலரது நடுவில், பயனேதும் கருதாமல், கணக்குப் பார்க்காமல் வாழும் இஸ்மாஎல்-அப்லா போன்றவர்கள் தொடர்ந்து நம்மிடையே வாழவேண்டும் என்று வேண்டுவோம். கணக்குப் பார்த்து பழிதீர்க்கும் உலகை விட, பழி தீர்ப்பதில் ஓர் உயர்ந்த வகை  என நாம் இங்கு குறிப்பிட்ட நல்ல செயல்கள் வழியாக, பழிகளைத் தீர்ப்பதில் நம் உலகை நாம் வளர்ப்போம். திருவள்ளுவரின் கூற்றாகிய: 'இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்."    என்பதனை மனதில் நிறுத்தி அன்பையே நம் வாழ்வின் அடித்தளமாக கொள்வோம்.


Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff