Friday, July 27, 2012

பகிர்வின் புதுமையை பாரெங்கும் படைப்போம்.

29.07.2012
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

ஆயிரக்கணக்கான மக்களுக்கு அற்புதமான விதத்தில் இயேசு உணவளித்தார் என்னும் அருஞ்செயல் யோவான் உட்பட நான்கு நற்செய்தியாளர்களாலும் தவறாமல் தமது புத்தகங்களில் தருகின்றனர்;. அப்பங்களை பலுகசெய்த புதுமையை  இன்று நற்செய்தியாக யோவான் நற்செய்தியிலிருந்து பார்க்கின்றோம். இக்கட்டான சூழ்நிலைகளில், எதிர்பாராத இடங்களில் இருந்து புதுமைகள் நிகழத்தான் செய்கின்றன என்பது நற்செய்தி காட்டும் உண்மை. இந்த பாலை நிலத்தில் இத்தனை ஆயிரம் பேருக்கு எப்படி உணவளிப்பது என்று கவலையில், கலக்கத்தில் மூழ்கியிருந்த சீடர்களுக்கு இயேசு உணவளித்து கவலை, கலக்கம் தீர்க்கின்றார். ஐந்து அப்பம், இரண்டு மீன், இயேசுவின் ஆசீர். ஐந்தாயிரம் பேர் வயிறார உண்டனர். மீதியும் பன்னிரண்டு கூடைகளில்இருந்தது. இயேசு தனி ஒருவராய் உணவைப் பலுகச் செய்தது ஒரு புதுமைதான். நற்செய்தியின்படி இது ஒரு பார்வை.
சில விவிலிய அராய்ச்சியாளர்கள் இன்னும் ஒரு பார்வையை முன்வைக்கின்றார்கள்: யூதர்கள் அடிமை வாழ்வு வாழ்ந்ததால் உணவுக்கு அதிகம் கஷ்டப்பட்ட ஒரு மக்கள் இனம். எனவே, அவர்கள் வீட்டை விட்டு வெளியேறும் போது தங்கள் பொதியில்; கொஞ்சம் உணவு எடுத்து செல்வது வழக்கம். அன்றும், இயேசுவின் போதனைகளைக் கேட்க வந்திருந்த போது, அவர்கள் உணவு கெண்டு வந்திருந்தார்கள். மாலை ஆனதும் பசி வயிற்றைக் கிள்ள ஆரம்பித்தது. உணவு பொட்டலங்களை யார் முதலில் பிரிப்பது? பிரித்தால் பகிர வேண்டுமே என்பது அவர்கள் ஏக்கம்

இயேசுவின் போதனைகளில் பகிர்வைப் பற்றி பேசினார். ஆனால் எப்படி இத்தனை பேருக்கு பகிர முடியும்? இந்த கேள்விகளில் அவர்கள் முழ்கி இருந்தார்கள். இயேசுவின் சீடர்களுக்கும் இதே சிந்தனைதான். யார் ஆரம்பிப்பது? அப்போதுதான் அந்த புதுமை நிகழ்ந்தது. ஒரு சிறுவன் தான் கெண்டு வந்திருந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் யேசுவிடம் கொடுத்தான். அங்கே ஆரம்பமானது ஒரு அற்புத விருந்து. ஒரு சிறுவன் ஆரம்பித்த பகிர்வு, ஒரு பெரிய விருந்தை ஆரம்பித்து வைத்தது. அந்த மகிழ்விலேயே அங்கு இருந்தவர்களுக்கு வயிறு நிறைந்திருக்க வேண்டும். எனவே தான் அவர்கள் உண்டது போக மீதி 12 கூடைகளில் நிறைத்ததாக யோவான் நற்செய்தி கூறுகிறது. இயேசு அன்று நிகழ்த்தியது ஒரு பகிர்வின் புதுமை.

நாம் வாழும் இன்றைய சூழலில் இந்த புதுமை அதிகம் தேவைப் படுகிறது. இத்தனை வளங்களும் நவீன வசதிகளும் நிறைந்த இன்றைய உலகில் இன்னும் ஆயிரமாயிரம் மக்கள் பசியிலும் பட்டினியிலும் மடிகின்றார்கள். இதில் என்ன கொடுமை என்றால், பெரும்பாலோனோர் குழந்தைகள். இந்த மரணங்கள் தேவை அற்றவை. இந்த தேவையற்ற மரணங்கள் நிறுத்தப்பட வேண்டுமானால், இயேசு அன்று ஆற்றிய பகிர்வுப் புதுமை மீண்டும் உலகமெல்லாம் நடக்க வேண்டும். இயேசு இன்று நம்மிடையே வந்தால் உணவை இன்னும் பலுக செய்வதைவிட இருக்கும் உணவைப் பகிர்ந்து கொள்ளும் புதுமையைச் செய்வார். தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் உலகத்தை அழிப்போம் என்று கோபத்தில் அன்று சொன்னார் பாரதி. உலகத்தை அழிப்பது எளிது. உலகத்தை வாழ வைக்க, வளப்படுத்த பகிர்ந்துண்ணும் மனதை நமக்கு தர வேண்டும் என இறைமகனிடம் வேண்டுவோம். முன்னேற்றத்தின் பெயரால் உலகத்தையும் இயற்கையையும் அழிப்பதை நிறுத்திவிட்டு, உலகை வளப்படுத்தும் அறிவை, மனதை தரவேண்டும் என இறைவனிடம் வேண்டுவோம்.

பிரச்சினைகளுக்குத் தீர்வு பணத்தால் கிடைத்துவிடாது. அல்லது அறிவுத் திறமையால் சாதித்துவிடுவதும் அல்ல. பல சந்தர்ப்பங்களில் நாம் இப்படித்தான் பணத்தை வைத்து தீர்க்கப் பார்க்கிறோம். பத்துப்பேரை வைத்து சாதிக்கலாம் என நினைக்கிறோம். ஆண்கள் மட்டும் ஏறக்குரைய 5000 பேர், பெண்கள் குழந்தைள் வேறு. இவ்வளவு பெரிய கூட்டத்திற்கு, அந்த  இடத்தில் உணவு கொடுக்க வேண்டும். இது பெரிய பிரச்சினை. பணத்தால் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முற்பட்டால், திருத்தூதர் பிலிப்பு சொன்னதுபோல இரு நூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறு துண்டும் கிடைக்காது. பணத்தை வைத்து செய்யும் முயற்சிகள் எல்லாம் பிரச்சினைகளுக்குத் தீர்வு தருவதல்ல. பிரச்சினைகளைப் பின் விழைவுகளோடு பெரிதாக்குபவை.
ஆகவே இன்றைய நற்செய்தியின்படி திருத்தூதர் அந்திரேயா காட்டிய வழியே சரியானது. “இங்கே ஒரு சிறுவன் இருக்கிறான். அவனிடம் ஐந்து வார்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன” என அடையாளம் காட்டி, அனைவரின் பங்களிப்புக்கும் அடித்தளமிடுகிறார். கடவுளுக்கு நன்றி செலுத்தியதன் வழியாக ஆன்மீகத்தை கூட்டத்துள் ஏற்படுத்தி, அனைவரையும் தங்களிடம் இருப்பதைப் பகிர்ந்துகொள்ளும் பண்பாளர்களாக்குகிறார். பசிப்பிரச்சனை பறந்தோடுகிறது. ஆகவே ஆன்மீகத்தை அனைத்துப் பிரச்சினையினுள்ளும் அனுமதிப்போம். பிரச்சினைகளுக்கு நல்தீர்வுகாண்போம். இயேசுவோடு இனிது வாழ்வோம்.

Friday, July 20, 2012

இயேசுவோடு தனிமையில் கலந்து ஆலோசிப்போம்;. எல்லாம் நன்றாக நடக்கும்

22.07.2012
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

திருத்தூதர்களைத் தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுத்து பணிப் பயிற்சிக்கு அனுப்பிய இயேசு, இப்பொழுது அவர்கள் கற்றுக்கொடுத்தவை, செய்த செயல்கள் அனைத்தையும் கவனமுடன் கேட்கிறார். இங்கு இயேசுவின் உளவியலும், ஞானமும் நம்மை மலைக்க வைக்கின்றன. இன்றைய நற்செய்தி வாசகம் அத்தகைய ஓர் அனுபவத்தை நமக்குத் தருகிறது. இயேசுவின் சீடர்கள் நற்செய்தி அறிவிப்புப் பணியைச் செய்துவிட்டுத் திரும்பிவந்து, தாங்கள் செய்தவை, கற்பித்தவையெல்லாம் இயேசுவிடம் பகிர்ந்துகொண்டபோது, இயேசுவின் பதிலுரையைப் பாருங்கள். களைத்த அவர்களை சற்றே ஓய்வு எடுத்துக்கொள்ளச் சொல்கிறார். அத்துடன், தாமே அவர்களை ஓய்விடத்துக்கு அழைத்துக்கொண்டு செல்கிறார். இயேசுவின் பரிவும், ஞானமும் இந்த அழைப்பில் நன்கு வெளிப்படுகின்றன. இந்த உபசரிப்பை பெற்ற அவர்கள் உடன் இருப்பவர்கள் உறுதியாக அன்போடும் ஆர்வத்தோடும் மிகுந்த அர்ப்பணத்தோடும் பணிசெய்வார்கள். உயிரையும் கொடுப்பார்கள் என்பது தெளிவு.

இயேசுவின் இந்த மனிதாபிமானம் சீடர்களின் மேல் மட்டுமல்ல காட்டப்பட்டதல்ல. எங்களிடத்திலும் அதே மனிதாபமானத்தை எப்பொழுதும் இயேசு காட்டுகின்றார். அன்று மட்டுமல்ல இன்றும் நம் இயேசு அதே மனிதாபம் உள்ளவர். நாம் நன்றாக உழைக்க வேண்டும். ஓய்வு எடுக்க வேண்டும், தனிமையில் சிந்திக்கவும் வேண்டும.; கூட உள்ளவரோடு கலந்து ஆலோசிக்கவும் வேண்டும் என விரும்புகிறார். இயேசுவோடு தனிமையில் கலந்து ஆலோசிக்கும்போது  எல்லாம் நன்றாக எமக்கமையும்.

பெருந்திரளான மக்களைக் கண்ட இயேசு அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள்மீது பரிவுகொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார் என இன்றைய நற்செய்தி முடிகின்றது. இதனை சற்று கூர்ந்து கவனித்தால் மக்கள்மீது இரக்கம் கொண்ட இயேசு அவர்களுக்கு உணவுகொடுக்கவில்லை, அவர்களின் நோய்களைக் குணப்படுத்தவில்லை. எந்த அருங்குறியும் அவர்கள்நடுவில் செய்யவில்லை. மாறாக, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார். இயேசு மனிதர் மீது எதையும் திணிக்க வரவில்லை. அவர் மனித சுதந்திரத்தை எப்போதும் மதிக்கிறவர். மக்கள் கடவுளிடமிருந்து வருகின்ற உண்மையைத் தெரிந்துகொள்ளவேண்டும், அவ்வாறு தெரிந்துகொண்ட உண்மையை வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும் - இதுவே இயேசு மக்களிடமிருந்து எதிர்பார்த்தது. ஆகவே, அவர் மக்களுக்குக் கற்பித்தார். இயேசுவின் இச்செயல் நம் கண்களைத் திறக்க வேண்டும். பசியாயிருப்பவனுக்கு மீனைக் கொடுப்பதைவிட, மீன் பிடிக்கக் கற்றுக்கொடு என்னும் சீனப் பழமொழியை நாம் அறிவோம். மக்கள்மீது பரிவுகொண்ட இயேசு, அவர்களின் பசியை, பிணியை நோக்காமல், அவர்களின் பசிக்கும், பிணிக்குமான காரணத்தைப் பற்றி எடுத்துரைத்தார், அவர்களது ஆன்மீக வெறுமையைப் பற்றிப் பேசினார்;. தந்தை இறைவனின் பேரன்பையும், அருள்காவலையும் பற்றிப் பேசினார். அவர்களின் அகக் கண்களைத் திறந்தார். எம்மாவு நோக்கிச் சென்ற சீடர்களின் கண்களைத் திறந்ததுபோல, ஆயரில்லா ஆடுகள்போல் இருந்த அடிமட்ட மக்களின் வாழ்வுச் சிக்கலையும், அதைத் தீர்ப்பதற்கான வழிகளையும் எடுத்துரைத்தார். இயேசுவிடமிருந்து கற்றதை நாம் வாழ்வில் கடைப்பிடிக்க அழைக்கப்படுகிறோம். அவரைப் போல நாமும் பரிவுடைய மக்களாக மாறுவதே நாம் அவருடைய சீடர்களாக வாழ்கிறோம் என்பதற்கு அடையாளம் ஆகும்.

இதுதான் மிகச் சிறந்த அறப்பணி. இதுதான் சிறந்த அன்புப் பணி. ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்கள்மீது பரிவுகொண்டு அவர்களுக்கு உதவி செய்தது நன்று. ஆனால், அதனினும் நன்று, அவர்களை விழிப்படையச் செய்வது. இதே அழைப்பை இயேசு இன்றும் நமக்குத் தொடர்ந்து தருகிறார். நமது பல்வேறு பரபரப்பான பணிகளுக்கு இடையில் இன்றைய விரைவுக் கலாசார உலகில்; மன அழுத்த்திற்கும் சுமைகளுக்குமிடையில் நாம் நற்செய்திப் பணியாற்றல், அன்புச் சேவைகள் செய்தல். அவர்களுக்குக் கல்வி கற்பித்து, புதிய வாழ்வுக்கு வழிகாட்டுவது. அத்தகைய பரிவுச் செயல்களைச் செய்ய முன்வருவேண்டும்.

Thursday, July 12, 2012

தடைகளை தகர்த்தெறிந்து பாரினில் பணியாளனாய் என்றும் வாழ்வோம்.

15.07.2012
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
இறைவாக்கினரின் அழைப்பு என்பது ஒரு விசித்திரமான விடயமாக விவிலயத்தில் விளங்கப்படுத்தப்படுகின்றது. இறைவாக்கினர்கள் எதிர்பாராத விதமாக, சில சமயங்களில் அவர்களின் விருப்பத்துக்கு மாறாக இறைவனால் அழைக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு தரப்பட்ட இறைவாக்குப் பணி ஒரு சுமையாகவே அவர்கள் கண்டாலும் அது இறைவனின் அழைப்பு என அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். தரப்பட்ட பணியைச் சிறப்பாகச் செய்தனர் என்பது கண்கூடு.

தம் திருத்தூதரை நற்செய்திப் பணிக்கு அனுப்பும் முன்னர் இயேசு அவர்களுக்கு வழங்கிய அறிவுரைகளை இன்று நற்செய்தி  கூறுகின்றது. இயேசு பன்னிரு சீடரையும் தம்மிடம் அழைத்து, அவர்களை இருவர் இருவராக நற்செய்திப் பணியாற்ற அனுப்புகிறார். அப்படியே அவர்களும் புறப்பட்டுச் சென்று மக்கள் மனம்மாற வேண்டுமென்று தமது வாழ்வாலும் போதனையாலும் இறைவாக்குப்பனியை பறைசாற்றினார்கள்;.

அனுப்பப்டும்போது எந்த வல்லரசும் தன் பணியாளர்களுக்கு இவ்வளவு சலுகைகள், பாதுகாப்புக்கள் வழங்கியதாக வரலாறு இல்லை,இனிமேலும் இருக்கப்போவதில்லை: குணமாக்கும் வல்லமை, இறந்தோரை உயிர்தெழச் செய்யும் ஆற்றல், பேய் ஓட்டும் வரம், மனிதனை மனிதனோடும் சமூகத்தோடும் ஆண்டவரோடும் உறவாக்கும் ஒப்பற்ற கொடை, பணத்தை நம்பியோ, பொன்,பொருளை நம்பியோ செல்லவேண்டாம், என்னை மட்டும் நம்பிச் செல்லுங்கள். உணவு, உடை,இடம் தேடி அலைய வேண்டாம். இவை உங்குளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். எந்த அரசு தன் பணியாளர்களுக்கு இப்படிப் பராமரிப்புக் கொடுக்கும்? செல்லும் இடமெங்கும், நாட்டிலும் வீட்டிலும் அமைதியை வாழ்த்தாக, வழங்குங்கள். உங்களை ஏற்றுக் கொள்ளாமலும், உபசரிக்காமலும், உங்களுக்குச் செவிகொடுக்காமலும், உங்களை எதிர்ப்பவர்களை நாம் கடைசி நாளில் கடுந்தண்டனைக்கு உள்ளாக்குவோம். என்னே பாதுகாப்பு. கடவுள் வளங்கும் இந்த பதுகாப்பு

அதன் இறுதிப் பகுதியில் உங்களை ஏற்றுக்கொள்ளாதவர்களுடைய நகரைவிட்டுப் புறப்படும்போது, உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள் என்னும் கருத்து இன்று நம் கவனத்தைக் கவர்கிறது. நற்செய்தி அறிவிக்கப்படும்போது அனைவரும் அதை ஏற்றுக்கொள்வர் என்று எதிர்பார்க்கஇயலாது. ஒருசிலர் அதை ஏற்க மறுப்பர். அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். நற்செய்தியை ஏற்றுக்கொள்ளாதவர்களிடம் நேரத்தையும், ஆற்றலையும் அதிகமாகச் செலவழிக்காமல்  அவர்களுடைய நகரை விட்டுப் புறப்படலாம். அவ்வாறு புறப்படும்போது கால்களிலுள்ள தூசியை உதறிவிடலாம் அதாவது, அவர்களுடைய ஏற்றுக்கொள்ளாமையைப் பொருள்படுத்தாமல்; புறக்கணிக்கலாம் என்கிறார்.

நமது வாழ்வுக்கு இந்த செய்திகள் அவசியமானவை. நமது இல்லத்தில், பணியிடத்தில் நமது சொல்லாலும், செயல்பாடுகளாலும் நல்ல மதிப்பீடுகளை, நல்ல செய்திகளை, நியாயங்களை எடுத்துரைக்க வேண்டியது நமது கடமை. ஆனால், எல்லாரும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டாம். அவர்களிடம் அதிக வாக்குவாதங்கள் செய்து நேரத்தைப் பாழாக்க வேண்டாம். அவர்களைப் புறக்கணித்துவிட்டு, தொடர்ந்து பிறருக்கு நற்செய்தி அறிவிக்கும் பணியில் ஈடுபடுவோம். இறைவாக்குப் பணி செய்பவர்களின் எளிமையைப் பற்றி நற்செய்தி பேசுகிறது. எனவே பணத்துக்கோ, பொருளுக்கோ, உலக இன்பங்களுக்கோ அடிமையாகாதபடி, இறைவன்மீது மட்டுமே நம் நம்பிக்கையை வைப்போம்.

திருத்தூதர் அனுப்பப்பட்டது போன்று நாமும் இந்தஅழைப்பை ஒவ்வொரு திருப்பலியின் முடிவில் மீன்டும் மீன்டும் பெறுகின்றோம். குருக்களின் மூலம், நற்கருணையின் மூலமும், திருப்பலியில் கடைசியில் கொடுக்கப்படும் ஆசிர்வாதத்தின் மூலம், இயேசு நமக்கு அதிகாரம் கொடுத்து, கடவுளின் நற்செய்தியை நாம் சந்திக்கும் அனைவரிடமும் அறிவிக்க அனுப்புகின்றார். அழைப்பை ஏற்போம். கடவுள் பணியிலிருந்து நம்மைப் பிரிக்கின்ற அனைத்துத் தடைகளையும் தகர்த்தெறிந்துவிட்டு, அவரது பணியை நம்பிக்கையோடு பறைசாற்றிட நாம் முன்வருவோம். நம் உள்ளத்திலும் வாழ்விலும் மாற்றம் ஏற்படும்போது நாம் பிறருடைய வாழ்விலும் மாற்றம் நிகழ வேண்டும் என்னும் குறிக்கோளைச் செயல்படுத்த ஊக்கத்தோடு ஈடுபடுவோம். இந்த உலகத்தில் ஒரு வித்தியாசத்தை கொண்டுவருபவர்களாக இருக்கமுனைவோம். நம் ஒவ்வொருவருக்கும் இறைவன் தந்த அழைப்பை மறுக்காமல் பணியை நமது வாழ்வில், சான்று பகர்தலில், உலகப் பொருள்களின்மீது அதிக பற்று கொள்ளாமையில், நம் வாழ்வின் எளிமையில் வெளிப்பட பணியாளராவோம்.

Sunday, July 8, 2012

எங்களுக்காக வானகத்தில் காத்திருக்கும் கைம்மாறை எமதாக்குவோம்


08.07.2012
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

இயேசு தனது சொந்த ஊருக்கு வந்தபோது அவருக்குக் கிடைத்த அனுபவத்தை இன்றைய நற்செய்தி வாசகம் விளக்குகிறது. அவருடைய போதனையைக் கேட்ட சொந்த ஊர்மக்கள் அவரை நம்ப மறுத்து ஏற்றுக்கொள்ளத் தயங்கினார்கள். இந்த அனுபவம் அவருக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தையும், வேதனையையும் அளித்திருக்க வேண்டும்.

1960ஆம் ஆண்டு சுடான் நாட்டில் மதக்கலவரம் பயங்கரமாக பரவியபோது பாரிடே டபான்  என்னும் கத்தோலிக்க இளைஞன் அங்கிருந்து அடுத்திருந்த உகாண்டா நாட்டுக்கு தப்பி சென்றுவிட்டார். உகாண்டாவில் குருவானவராக திருநிலைப்படுத்தப்பட்டார். சுடான் நாட்டில் நிலைமை சரியானதும் டபான் தம் நாட்டிற்குத் திரும்பினார். தம் நாட்டில் அவருக்கு ஒரு பங்குத்தளம் பணிசெய்வதற்கு அளிக்கப்பட்டது. ஆனால் அங்கிருந்த மக்கள் அவரைக் குருவானவர் என நம்ப மறுத்தார்கள்.

மக்கள் பாரிடே டபானை உற்று நோக்கிவிட்டு அவர் ஒரு கறுப்பு நிறத்தவர். அவர் ஒரு குருவானவர் என எப்படி அழைக்கமுடியும் எனக் கேட்டனர். ஏனெனில் அதுவரை அங்கு வெள்ளையர்களே குருவானவர்களாக இருந்து வந்தனர். வெள்ளை நிறத்து குருவானவர்கள் மக்களுக்கு உணவும் ஆடையும் கொடுத்து வந்தனர். டபானோ அந்நாட்டு மக்களினத்தைச் சேர்ந்தவர். அவரிடம் மக்களுக்குக் கொடுப்பதற்கு ஏதுமில்லை. மேலும் அக்கலகட்டத்தில் டபான் இரண்டாம் வத்திக்கான் சங்கம் கொண்டு வந்த மாற்றங்களை அமுலாக்க வேண்டியிருந்தது. ஆந்த மாற்றங்கள் மக்களுக்கு மிகச் சிரமமாக இருந்தன. இந்தக் கறுப்பு நிறக்குரு பீடத்தை திருப்பிவிட்டு மக்களை நோக்கி பலிபூசை நிகழ்த்துகிறார். நமது மொழியிலேயே பலி பூசையை நிகழ்த்துகிறார். இவர் உண்மையான குருவானவராக இருக்கமுடியாது. என அவரை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயங்கினார்கள்.  பல்வேறு சிரமங்களுக்குப் பிறகுதான் அம்மக்கள் டபானை குருவாக ஏற்றுக் கொண்டனர்.

இயேசு தம் சொந்த ஊராகிய நாசரேத்துக்குச் சென்றபோது வெறுத்து ஒதுக்கப்பட்டதன் நவீன கதைதான் குருவானவர் டபான் பட்ட சிரமங்கள் என்று கூறிவிடலாம். இயேசுவும் டபான் என்ற குருவும் மக்களால் ஏளனமாக வெறுத்து ஒதுக்கப்பட்ட இரு எடுத்துக்காட்டுக்கள். மக்கள் ஒருவர் மற்றவரிடம் ,இவர் தச்சர் அல்லவா. மரியாவின் மகன்தானே என இழிவாகப் பேசிக் கொண்டனர். அவர்கள் என்ன நினைத்தார்கள.; இவரும் நம்மைப்போல சாதாரண பணியாளர்தானே. நம்மைவிட கடவுளைப்பற்றி இவருக்கு எப்படி இன்னும் அதிகமாகத் தெரியமுடியும் என்று நினைத்தனர். தச்சன் மகனாகிய இயேசுவுக்கு கடவுள் பற்றிய மெய்யறிவு எப்படி வந்தது என்று நாசரேத்தூர் மக்கள் மட்டும் ஆச்சரியப்படவில்லை நாமும் தான் ஆச்சரியப்படுகின்றோம்.

இயேசுவும் டபான் என்ற குருவைப்போல்  மக்களால் ஏளனமாக வெறுத்து ஒதுக்கப்பட்ட பலரை நாம் இங்கு எடுத்துக்காட்டுக்களாக பார்க்கலாம். அமெரிக்காவின் மாபெரும் பேச்சாளர் பேராயர் புல்டன் ஷீன் என்பவரை அவர் கல்லூரியின் மேடைப்பேச்சுக் கழகம் மிக மட்டரகமான பேச்சாளர் என ஒதுக்கி ஓரம் கட்டினர். நோபல் பரிசு பெற்ற நாவலாசிரியர் ஏர்னஸ்ட் ஹெமிங்வே என்பவர் எழுத்தத் தொடங்கியபோது,உமக்கும் எழுத்துப்பணிக்கும் வெகு தூரம். நீ அதை மறந்துவிடு என்றனர். புகழ்மிக்க ஆங்கில எழுத்தாளர்கள் ஆகத்தா கிறிஸ்டி , சார்லஸ் டிக்கன்ஸ் , ஜேன் ஆஸ்டின் , ஜோசப் காண்ரட் , சாமுவேல் பெக்கட் , ஆர்னல்ட் பென்னட் , மாக்ஸ் பீர்போம், என பெயர்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அவர்கள் காலங்கள் போற்றும் நூலாசிரியர்கள். ஆனால் இவர்கள் எல்லாரும் தொடக்க காலத்தில் தூக்கி குப்பையில் எறியப்பட்டவர்கள் .

இயேசுவையே அவரது காலத்தில் வெறுத்து ஒதுக்கினார்கள். இன்று நம்மோடு பணி செய்பவர்களே நமக்கு எதிரிகளாகச் செயல்படுவதைக் காண்கிறோம். லூனி டியூன்ஸ் என்ற கார்ட்டூன் படத்தில் வரும் ஒரு நாடக பாத்திரம் பேப்பே எல்லோரையும் கவர்ந்த ஒரு கதாபாத்திரம். அவர் மற்றவர்கள் அவரை வெறுத்தாலும் அன்பு காட்டத் தயங்கமாட்டார். இயேசுவும் அப்படித்தான். யாரையும் அவர் தள்ளிவிடுவதில்லை. இயேசுவை மற்றவர்கள் மறுதலித்தாலும் , வெறுத்தாலும் அவர் விடாது அன்பு காட்டுபவர் . நாமும் அவ்வாறே பிறர் நம்மை வெறுத்தாலும் தவறாது அன்பு காட்டுவோம். நாமும் இயேசுவையும், குரு டபானையும், கார்ட்டூன் பாத்திரம் பேப்பேயையும் நமக்கு மாதிரியாக எடுத்துக் கொள்வோம். நீங்கள் வெறுக்கப்படும்போது மகிழுங்கள். உங்களுக்கு வானகத்தில் மிகப்பெரிய கைம்மாறு காத்திருக்கிறது என்னும் இயேசுவின் வார்;த்தைகளை எமது சொத்துக்காளாக்குவோம். 


Sunday, July 1, 2012

மன்றாட்டுக்கள் 02.07.2012



1.“என்னை அனுப்பியவரின் விருப்பத்தை நிறைவேற்றவே நான் விண்ணிலிருந்து இறங்கி வந்தேன்” என்று கூறிய நற்கருணை நாதரே.

புரட்சிகர புதிய கண்டு பிடிப்புக்கள், கவர்ச்சியை காசாக்கும் காரியங்கள், மானிடத்தை மாயைக்குள் அழைத்து செல்ல, மனித மாண்பற்ற தன்மைகளால், பண்பற்ற கலாசார நிலைகளால் ஆன்மீகத்தை அழிவு நிலைக்குள்ளாக்கும் எமக்கு அருள் வழிகாட்டி நிறைவாழ்வை நோக்கி எம்மை அழைத்துச் செல்லும் பாப்பானவர் ஆயார்கள் அருள்பணியாளர்கள் மற்றும் அனைவரையும் ஆசிர்வதித்து அவர்கள் நாளும் பயனிக்கும் சறுக்கான பாதைவழியே வழுக்காமல் உம்மை நோக்கி சென்று  என்றும் உம் திருவுளத்தை நிறைவேற்ற நீரே அவர்களுக்கு துணையாக இருந்தருள வேண்டு என்று நற்கருணை நாதர் ஊடாக இ.உ.ம

2.  “என்னிடம் வருபவரை நான் புறம்பே தள்ளிவிடமாட்டேன்” என்று திருவாய் மொழிந்த இயேசுவே

இன்றைய நிகழ்காலப் பேரழிவுகளால் பெரும் துயருற்று எதிர் கால ஏக்கங்களை உள்ளங்களில் சுமந்துகொண்டு வீங்கிய இதயத்துடன் விரக்தியின் விழிம்பில் இருந்து கொண்டு கற்பனைகளையும் கனவுகளையும் காற்றிலே பறக்க விட்டு வாடி நிற்கும் எம் இளைஞர்களை ஒருகணம் கண்நோக்கிபாரும். ஆண்டவரே நாம் உம்மையே நாடி வருகின்றோம். எம் ஏக்கங்களை துடைத்தருளும் எம் விரக்திகளை  மகிழ்வாக்கியருளும்  எம் கனவுகளை கனிகளாக்கியருளும் கடவுளே என்றும் உம்; பணியில் எம் கால்கள் நடந்து வாழ்வை கண்டடைய வரமருள வேன்டும் என்று நற்கருணை நாதர் ஊடாக இ.உ.ம.

3.சுமைசுமந்து சோர்ந்திருப்போரே எல்லாரும் என்னிடம் வாருங்கள் உங்களை நான் இளைப்பாற்றுவேன்;” என்று கூறிய இயேசுவே.

மரத்துப்போன மனதுடனே, மனிதங்கள் மட்டும் வாழ அதிகார வெறியில் ஆணவம் பாடுகின்றனர் இன்றைய ஆட்சியாளர்கள். இதனால் இனியும் இழக்க ஏதுமின்றி விழியோரத்தில் முடிவில்லா சுமைகளை சுமந்தபடி வழியோரம் வருகின்றன எம் வாழ்க்கை. வேறேங்கும் கிட்டாத மன ஆறுதல் உமது இல்லத்தில் கிட்டும் என்ற நம்பிக்கையுடன் உம் அண்டை ஓடோடி வருகின்றோம் நாம்.  எம் மனவேதனைகள் மகிழ்சியாகமாற்றும், இழப்பால் இடிந்து போன எம் இதயங்களுக்கு இன்றைய உம் இனிமைகள் எல்லாம் நிரந்தரமாக கிடைக்க துணைபுரிய வேண்டும் என்று நற்கருணை நாதர் ஊடாக இ.உ.ம.

4.“ஒடுக்கப்பட்டோர் மீண்டும் ஆண்டவரில் மகிழ்ச்சி பெறுவர்” என்று திருவாய் மொழிந்த கடவுளே.
உரிமைகள் இழந்து நாம் இன்று வேடர் கண்ணியின்று தப்பிப் பிழைத்த பறவைபோல் ஆனோம். அதிகார வாதிகளால் அலைக்களிக்கப் படுகின்றோம். ஒடுக்கப்பட்ட ஒரினமாக நாம் தவிக்கின்றோம் ஏறெடுத்துப் பார்க்க யாருமின்றி, ஏக்கங்கள் மத்தியில் ஏன் இந்த வாழ்க்கை என எம் இதயம் கேட்கிறது. எனினும் எம் வாழ்விற்கு ஒளி தரும் விடிவெள்ளியாக உம்மையே எண்ணி வருகின்றோம்  எம் ஏக்கங்களை துடைத்தருளும் எம் தவிப்புக்களை  மகிழ்வாக்கியருளும். இவற்றினூடாக நாம் நிரந்தர நிம்மதியான வாழ்வை கண்டடைய வரமருள வேன்டும் என்று நற்கருணை நாதர் ஊடாக இ.உ.ம.

5.  உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க என்று கூறிய நற்கருணை நாதரே

நிஜத்தைத் தேடி இளைஞர்கள் நாம்  ஒருகணம் உம் கரங்களில் குழந்தைகளாகின்றோம். பிறர் வாழ எம்மையும் கொடுத்திட, பகிர்வதில் நாம் பறைசாற்றிட, உண்மையின் வழிகளை உலகிற்கு காட்டிய உமது வழியில் நாம் பயணிக்க, நீர் எமக்கு வழியாகும். உலகம் எம்மை வெறுத்தாலும், சோகம் எமக்கு சொத்துக்களானலும், தோல்விகள் எமக்கு தொடர்கதையானாலும், எழுந்து நடக்கின்றோம் நீர் காட்டும் பாதையில்  உம்மை நோக்கி சோர்ந்து போகமல், எம் ஆற்றலை ஆண்டவர் பாதையில் ஆக்கப் பணிகளுக்கு பயன்படுத்தி, அகிலம் என்றும்; அன்பு சிறக்க, மகிழ்ச்சி எங்கும் மண்ணில் மலர, எம் இதயம் துறந்து, உதயம் காண வருகின்றோம், உனதருள் தாரும் இறiவா என நற்கருணை நாதரே ஊடாக இ.உ.ம.

6.“சின்னம் சிறியவர்களுக்கு செய்தபோது அவற்றை எனக்கே செய்தாய்;” என்று கூறிய அன்பரே.

உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி கால் வயிற்றுக் கஞ்சிக்கே உழைப்பின்றி உழலும் இதயங்களுடன், இருப்பதைப் பகிர்ந்து அவர்கள் இதயக் காயத்தை ஆற்றுவோம். உருகும் விழிகளின் விழிநீர் துடைத்து  அவர்களுக்கும் விடியும் பொழுதுகள்  எல்லாம் இனிமைகளை தாங்கி வரும்  விடிவெள்ளிகளாக  மாறி  தினமும் மகிழ வேண்டிய மனங்கள் மகிழ்வினில் திகழ நாமும் கருவிகளாக மாற வரம் தரவேண்டும் என்று நற்கருணை நாதர் ஊடாக இ.உ.ம.

7.  “வாழ்வு தரும் உணவு நானே” எனக்கூறிய நற்கருணை நாதரே

உலகின் பலபாகங்களிலும் வசிக்கும் எமது பங்கு மக்களை உமது கரங்களில் ஒப்படைக்கின்றோம். அவர்களின் உள்ளக்கிடக்கைகளை ஏக்கத்தவிப்புக்களை நீரே பூர்த்தி செய்தருளும். அவர்கள் அனைவரும் வாழ்வுதரும் உணவாகிய உம்மையே  பெற்றுக்கொள்ளவும்  உம்மையே ஆர்வத்தோடு தேடவும் உலகில் பசியோடு தம்மைசுற்றி தவிப்பவர்களுக்கு பசிபோக்கும் கருவியாக மாறவும் நீர் வழித்துணையாக வேண்டும் என்று நற்கருணை நாதர் ஊடாக இ.உ.ம

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff