Friday, July 12, 2013

'அடுத்திருப்பவர்" என்ற சொல்லுக்கு உயிருள்ள ஓர் எடுத்துக்காட்டைத் உருவாக்கி நல்ல சமாரியராவோம்

14.07.2013  ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
நல்ல சமாரியர் என்னும் உவமைக் கதைவழியாக இயேசு இன்று நம்முடன் பேசுகின்றார்: 'ஒருவர் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார். அவருடைய ஆடைகளை கள்வர்; உரிந்து கொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போனார்கள். குரு ஒருவர் தற்செயலாய் அவ்வழியே வந்தார். அவர் அவரைக் கண்டதும் மறு பக்கமாக விலகிச் சென்றார். அவ்வாறே லேவியர் ஒருவரும் அவ்விடத்துக்கு வந்து அவரைக் கண்டதும் மறுபக்கமாய் விலகிச் சென்றார். ஆனால் அவ்வழியே பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டார். பணிவிடை செய்தார்" இது உவமைக் கதையின் சுருக்கம்.

Good Samaritan  என்ற சொற்களை Google தேடலில் தேடும்போது,0.21நொடிப் பொழுதில் 24400000 விவரங்கள் தோன்றின. இவற்றில் பல இலட்சம் விவரங்கள் 'நல்ல சமாரியர்" என்ற பெயர்தாங்கிய மருத்துவமனைகளும்,பிறரன்பு நிறுவனங்களும்ஆகும். இத்தேடலில் குறிப்பிடத்தக்க விடயம் 'நல்ல சமாரியர்" என்ற பெயரில் பல நாடுகளில்; சட்டங்களும் கடைபிடிக்கப்படுகின்றன. அமேரிக்கா, கனடா,மற்றும் ஐரோப்பாவின் பலநாடுகளில்'நல்ல சமாரியர்"என்ற பெயரில் சட்டங்கள் உள்ளன.இந்நாடுகளில் பொதுவிடங்களில் யாரேனும்அடிபட்டால், என்ன செய்யலாம், செய்யக் கூடாது என்பனவற்றை விளக்கும்விதிகள் இந்த'நல்ல சமாரியர்"சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளன.

இவ்வருடம் பிப்ரவரி 5நாள் அமெரிக்காவின் நியூயார்க், நகருக்கருகே நெடுஞ்சாலையில் ஏற்பட்ட ஒரு நிகழ்வை இங்குகுறிப்பிடலாம: Pedro Lugo - பிற்றோ லூகோ என்ற 69 வயது மனிதர், கார் பழுதடைந்ததால் நெடுஞ்சாலையின் ஓரத்தில் தவித்துக்கொண்டிருந்த ஒரு மாற்றுத் திறனாளியான பெண்ணுக்கு உதவி செய்தார். அப்பெண்ணின் காரை சரி செய்ய உதவினார். பின்னர் பிற்றோ தன் காரில் ஏறி மீண்டும் நெடுஞ்சாலைக்குள் நுழைந்தபோது, வேகமாக வந்தஒரு பாரஊர்தி பிற்றோவின் கார்மீது மோதியது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்வழியில் பிற்றோ உயிர்துறந்தார். கனடாவின் Vancouver நகரில் குற்றம்புரிந்த ஒருவரைக் காவல்துறையினர் கண்டுபிடிக்க உதவியவரை 'நல்ல சமாரியர்"என்ற அடைமொழியால் குறிப்பிட்டனர். அவ்விருசெய்திகளுக்கு நாளிதழ்கள் தந்த தலைப்புக்கள்: ““Good Samaritan dies after helping disabled.”, “ Good Samaritan helped nab suspec in Vancouver…” 21 நூற்றாண்டுகள் ஆகியும் இயேசுவின் இந்த உவமை கத்தோலிக்கம் என்ற வட்டத்தைத் தாண்டி மக்கள் மனங்களில் தூண்டுதலாய் உள்ளது தெளிவாகிறது. 

இந்த உலகப் புகழ்பெற்ற 'நல்ல சமாரியர்" உவமை பிறந்த பின்னணி லூக்கா நற்செய்தியில் பின்வருமாற கூறப்பட்டுள்ளது: திருச்சட்ட அறிஞர் ஒருவர் எழுந்து அவரைச் சோதிக்கும் நோக்குடன், 'போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார். இவ்வாறு  இவ்வுவமையின் பின்னணி ஆரம்பமாகிறது. இயேசுவிடம் எவ்வகையிலாவது குறைகாண வேண்டும் என்ற ஆவலில் திருச்சட்ட அறிஞர் கேள்வியைத் தொடுத்தாலும், இயேசு அந்த வாய்ப்பை நழுவவிடாமல், அற்புதமானதொரு உலகப் புகழ்பெற்ற உவமையைக் கூறினார். தொடக்கத்தில் கேட்ட கேள்வி நிலை வாழ்வைப்பற்றியது. முடிவில் சொன்ன பதில் இரக்கம் என்று. இரண்டுக்கும் இடைப்பட்ட இடத்தில் வருவது அயலான். இந்த அயலானைப்பற்றி தெழிவாக புரிந்துகொண்டால் தொடக்கமும் முடிவும் சரியாகிவிடும்.

நல்லவர்-கெட்டவர் என்ற அடையாளங்களை ஒவ்வொருவர்மீதும் பதிப்பது இயேசுவின் எண்ணம் அல்ல. 'அடுத்திருப்பவர்" என்ற சொல்லுக்கு உயிருள்ள ஓர் எடுத்துக்காட்டைத் தருவது ஒன்றே இயேசுவின் எண்ணமாக இருந்தது. சமுதாயத்தில் நல்லவர்-கெட்டவர், உயர்ந்தவர்-தாழ்ந்தவர், படித்தவர்-படிக்காதவர்,வெள்ளை-கறுப்பு, அவர்-இவர் என்று அடையாளங்களை ஆயிரக்கணக்கில் நாம் உருவாக்கி விட்டதால் 'அடுத்தவர்" என்ற அடிப்படை அடையாளத்தைக் கண்டுபிடிக்க இயலாமல் நாம் தவிக்கிறோம். நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் நமக்கு 'அடுத்தவர் " என்ற அடிப்படை அடையாளத்தை மறைக்கும் அளவுக்கு நாம் ஏற்கனவே உருவாக்கி வைத்திருக்கும் வேறு பல அடையாளங்களை அவர்கள் மீது ஒட்டிவிடுகிறோம். பின்னர் 'அடுத்தவர் எங்கே?" என்ற தேடலில் இறங்குகிறோம். இந்த அடையாளங்களுக்கு எவ்வித முக்கியத்துவமும் கொடுக்காமல் 'மனிதர்" என்ற ஒரே காரணத்திற்காக  மற்றவர் மீது பரிவுகொண்டு உதவிகள் செய்ய முன்வருபவர்களும் 'அடுத்தவர்' அகின்றனர். அவர்களே 'நல்ல சமாரியர்"

Thursday, July 4, 2013

இயேசுவிற்காய் ஓநாய்கள் மத்தியில் நடை போடக்கூடிய ஆட்டுக் குட்டிகளாவோம்

07.07.2013
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர் 

'அறுவடை மிகுதி, வேலையாள்களோ குறைவு ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்.  புறப்பட்டுப் போங்கள்; ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன்" இயேசு; சீடர்களுக்கு கூறும் பைபிள் பகுதி இன்று எமக்குத் தரப்படுகின்றது.  அத்துடன் தேவ அழைத்தலுக்காக வேண்டும்படி எமக்கு சொல்லப்படுகின்றது. தேவ அழைத்தல் என்றதும், குருக்கள், துறவறிகள் என்ற குறுகிய கண்ணோட்டம் நம் மனதில் எழுவதுன்டு. 'அறுவடைக்கு வேலையாள்கள் தேவை" என்று இயேசு கூறியது குருக்கள், துறவியரைக் குறித்து மட்டும் அல்ல. மாறாக, மக்களின் மனங்களில் இறையரசின் கனவுகளை விதைத்து, அதன் பலன்களை அறுவடை செய்வதற்கு துணிவுடன் முன் வரும் அத்தனை வேலையாள்களையும் நினைத்தே இயேசு இந்த வரிகளைச் சொல்லி இருப்பார்.

இறை நற்செய்தியைப் பரப்புவதற்கு 'ஓநாய்கள் மத்தியில் செல்லக்கூடிய ஆட்டுக் குட்டிகள்" இயேசுவுக்குத் தேவை. ஆடுகள் அல்ல, ஆட்டுக் குட்டிகள். ஓநாய்கள் மத்தியில் ஆட்டுக் குட்டிகளா?  என்ன விபரீத விழையாட்டு இது. ஆனால், வரலாற்றில் இத்தகைய விபரீதங்கள் வீரக் கதைகளாகத் தொடர்ந்து நடந்து வருகின்றன என்பது நமக்குத் தெரியும்.

நீள, அகல, உயரம் என்று எல்லாப் பக்கங்களிலும் அளவுக்கதிகமாய் வளர்ந்திருந்தான் கோலியாத்து. அவனது தோற்றம் பற்றி நாம் படித்திருக்கின்றோம். அந்த மனித மலையோடு மோத, தன் மீது தற்காப்புக்காகப் போடப்பட்ட கவசங்களை எல்லாம் கழற்றிவிட்டு, கையில் கவணும், கல்லும் எடுத்துப் புறப்படும் தாவீதுவை நாம் எண்ணிப்பார்க்கலாம். சிறியவன்; தாவீதுக்கு எங்கிருந்து இந்த வீரம் வந்தது? தன்னையும், தன் ஆடுகளையும் இரத்த வெறி பிடித்த மிருகங்களிடம் இருந்து காத்த இறைவன், இந்த மனித மிருகத்திடமிருந்து தன்னையும், தன் மக்களையும் காப்பார் என்ற அந்த அசைக்க முடியாத நம்பிக்கைதான். ஓநாய்கள் மத்தியில் ஆட்டுக் குட்டி செல்லுமா? தாவீது சென்றார். வெற்றிகொண்டான்.

'யார் இந்த அரை நிர்வாண பரதேசி?" என்று ஆங்கில அரசு ஏளனமாக விவரித்த காந்தியடிகள் பற்றி எமக்குத்தெரியும். அரை நிர்வாணமாய், நிராயுத பாணியாய் சென்று அந்த ஆட்டுக் குட்டி, அந்த ஓநாய்களின் அரசை எவ்வளவு தூரம் ஆட்டிப் படைத்ததென்பது நமக்குத் தெரிந்த வரலாறு.

ஓநாய்கள் மத்தியில் ஆட்டுக் குட்டிகள் செல்லுமா? வழக்கமாய் செல்லாது. ஆனால், அந்த ஆட்டுக் குட்டிகள் மனதில் நம்பிக்கை இருந்தால், ஓநாய்கள் மத்தியில் தலை நிமிர்ந்து வீர நடை போடும். இப்படி, நம்பிக்கையோடு ஓநாய்கள் மத்தியில் நடை போடக்கூடிய ஆட்டுக் குட்டிகள் இயேசுவுக்குத் தேவை. ஓநாய்கள் மத்தியில் போக வேண்டும் என்பது உறுதியாகி விட்டது. சரி அதற்குத் தகுந்தது போல், எல்லா ஏற்பாடுகளும் செய்து கொள்ள வேண்டாமா? கோலியாத்தை எதிர்த்துச் செல்லும் போது, ஒரு கவசம், ஒரு கேடயம், ஓர் ஈட்டி, குறைந்தது ஒரு கத்தி? ஒன்றும் வேண்டாம் என்கிறார் இயேசு. 'பணப்பையோ, வேறு பையோ, மிதியடிகளோ எதுவும் எடுத்துச் செல்ல வேண்டாம்." என்கிறர் இயேசு.

தூங்குவதற்கும் கூட திட்டங்கள் தீட்ட வேண்டிய இக்காலகட்டத்தில் இயேசு சொல்வதை எண்ணி சிரிப்பதா? வியப்பதா? தெரியவில்லை. நடைமுறைக்கு ஒத்துவராத ஒரு நிபந்தனை. ஆனால், ஆர அமர, ஆழமாக சிந்தித்தால், இயேசுவின் இந்தக் கூற்றில் உள்ள உண்மைகள் புரியும். உலகத்தில் பெரும் பகுதிகளை வென்று, ஏராளமாய் பொருள்களைத் திரட்டி வைத்திருந்த மாவீரன் அலெக்சாண்டர் இதே கருத்தைத் தானே தன் இறுதி மூன்று ஆசைகளாகச் சொல்லிச் சென்றார். அதிலும் சிறப்பாக, தனது இறுதிப் பயணத்தில் தனது வெறும் கைகளைத் சவபெட்டிக்கு வெளியில் மக்கள் பார்க்கும் படி வைக்கச் சொன்னது நமக்கு ஒரு பாடம்தானே. வெறும் கையோடு செல்லுங்கள், எதையும் எடுத்துச் செல்ல வேண்டாம் என்று கூறும் இயேசு கொடுக்கச் சொல்கிறார். நீங்கள் நுழையும் இடத்தில் எல்லாம் சமாதானம் என்ற ஆசீரைக் கொடுங்கள் என்கிறார். இயேசுவின் அழைப்பை ஏற்று, உழைக்க முன்வந்து விட்டால், அவரது அரசை விதைத்து, அறுவடை செய்ய துணிந்து விட்டால். ஓநாய்கள் நடுவிலும் துணிவோடு செல்ல வேண்டும், அந்தத் துணிவு, இறை நம்பிக்கையிலிருந்து வர வேண்டும், இந்த நம்பிக்கை ஒன்றை மட்டும் சுமந்து செல்வோம். சமாதானத்தை அனைவருக்கும் வழங்குவோம்.

பாதைமாறமல் பயணங்கள் தொடர பரமனிடம் பணிவோம் ' "

 30.06.2013
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
1519ம் ஆண்டு ர்நசயெனெழ ஊழசவநள (கெர்நாண்டோ கோர்ரெஸ்) என்ற படைத் தளபதி க்யூபாவை விட்டுத் தன் தொண்டர்களுடன் மெக்சிகோ வந்து சேர்ந்தார். தன்னைப் பின் தொடர்ந்தவர்கள் மெக்சிகோவில் மேற்கொள்ள விருக்கும் போராட்டங்களுக்காகப் பயந்து, மீண்டும் க்யூபாவிற்குத் திரும்பக் கூடாதென, அவர்கள் வந்தக் கப்பலை எரித்து விட்டார். துணிந்த பின் மனம் திரும்பிப் பார்க்கக் கூடாதென்ற கருத்தை வலியுறுத்த, இந்த நிகழ்வைச் அன்றைய பத்திரிகைகள் சுட்டிக் காட்டின. 'கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல"  என்று இயேசு கூறிய இந்த வரிகளைச் அறிந்து தன் பணியின் பெற்றிக்காக அவ்வாறு செயற்பட்டிருக்கலாம் அந்த தளபதி.
இன்றைய நற்செய்தி வாசகம் இயேசுவின் சீடத்துவத்தைப் பற்றிச் சிந்திக்க நம்மை அழைக்கின்றது .இயேசு தன் சீடர்களுக்கு விடுக்கும் அழைப்பு நிபந்தனைகள் நிறைந்தது. அனைத்தையும் துறந்து தன்னைப் பின்செல்ல வேண்டும் என்ற அழைப்பை ஏற்றுத்தான், அவரது முதல் சீடர்கள் படகுகளையும், வலைகளையும் விட்டுவிட்டுச் சென்றனர் என்று நாம் தொளிவாக அறிந்திருக்கின்றோம்.. இப்போதோ, இன்னும் சில சீடர்கள் முன் வருகின்றனர். ஆனால், இயேசு அவர்களுக்குத் தம் நிபந்தனைகளை எடுத்துரைக்கிறார்: மானிட மகனுக்குத் தலைசாய்க்கவும் இடம் இல்லை. எனவே, அவரது சீடர்களும் இடம், பொருள், மனிதர்கள் மீது பற்று கொண்டிருக்கக் கூடாது. எங்கும், எப்போதும் செல்ல கூடிய மனநிலை கொண்டிருக்க வேண்டும். எளிய வாழ்வு வாழ வேண்டும். தமது குடும்பம், உறவினர்கள், நண்பர்கள் பற்றி அதிகக் கவலை படக்கூடாது. அவர்களை இறைவன் பார்த்துக்கொள்வார். சீடரின் பணி தலைவரைப் பின்பற்றுவதே. தனது அழைத்தலை விட்டுவிட்டுக் கடந்த கால வாழ்வுக்குத் திரும்பிச் செல்லும் எண்ணம் கொண்டிருக்கக் கூடாது. எதிர்காலம் பற்றிய கவலையோ, கடந்த காலம் பற்றிய ஏக்கமோ கூடாது. நிகழ்காலத்தில் இயேசுவோடு வாழ வேண்டும். நமது அழைப்பு என்ன? நமது தடுமாற்றங்கள் எதில் இருக்கின்றன என்று ஆய்வு செய்து, நிபந்தனையற்ற விதத்தில் இயேசுவைப் பின்பற்றவேண்டும்

இன்று நற்செய்தி பார்க்கின்ற மூன்று மனிதர்கள் இயேசுவிடம் வந்து அவரது சீடராய் வாழ விருப்பம் தெரிவிக்கின்றனர். இவர்கள் மூவரும் எம்மையே பிரதிபலிக்கின்றார்கள் என்பதை நாம் உணர வேண்டும். நாமும் இயேசுவின் சிறந்த சீடர்களாய் வாழ விரும்புகிறோம். நமக்கும் நல்ல எண்ணங்கள், உயர்ந்த சிந்தனைகள் அவ்வப்போது எழுகின்றன. ஆனால், பல தடைகள் நம்மை ஈர்க்கின்றன. சீடராய் வாழவிடாமல் தடுக்கின்றன. எனவே, நாமும் அந்த மூன்று மனிதர்களைப் போல சாக்குபோக்குகளைக் கண்டுபிடிக்கிறோம். முதலில் என்னுடைய வீட்டுக் கடமைகள் முடியட்டும், அல்லது இந்தப் பணிகளை ஆற்றிவிட்டு அதன்பின் நான் முழு நேரமாக இறைபணியில் ஈடுபடுவேன் என்றெல்லாம் எண்ணுகின்ற நல்ல உள்ளங்கள் பல இருக்கின்றன. ஆனால், இயேசு ஒரு தெளிவைத் தருகின்றார்: அனைத்திற்கும் மேலாக ஆண்டவரைத் தேடுங்கள். அவருக்குப் பணி புரியுங்கள். மற்ற அனைத்தையும் அவரே உங்கள் பொருட்டு பார்த்துக்கொள்வார். எனவே, பல்வேறு பணிகளுக்கு மத்தியில் இயேசுவின் சீடராய் வாழ விரும்பும் நாம் அனைத்திற்கும் மேலாக இயேசுவையே முதற் கடமையாகக் கருதுவோம். மற்ற கடமைகளையெல்லாம் அவரே பார்த்துக்கொள்வார்.
நல்லது ஒன்று செய்ய வேண்டும் என்று மனதில் பட்டால், அதை உடனடியாகச் செய்து விடுவது மிகவும் நல்லது. இயேசுவைப் பின் பற்றுவது, அவரைப் போல வாழ முற்படுவது மிக, மிக நல்லதொரு எண்ணம். அந்த எண்ணம் மனதில் தோன்றினால், தாமதிக்க வேண்டாம். ஒன்றே செய்யினும், நன்றே செய்க் நன்றே செய்யினும், இன்றே செய்க என்னும் வாக்கை நாம் எமதாக்கவேண்டும்.
இன்று வாசகத்தில் இயேசுவின் பதில்கள் இரண்டு முரண்பட்ட நிலைகளைக் காட்டுகின்றன.  ஒருவருக்கு பதிலாக, தலைசாய்க்க கூட இடமில்லையென்றுறுவதும், மற்றவருக்கு உடனே என்னைப் பின்செல் என்றும் கூறுவதையும் காட்டுகின்றது. இருவேறு நிகழ்வாக இருந்தாலும், யாருக்கு என்ன பதில் என்பதனை பார்த்தால் சிறப்பு அழைப்பு அல்லது அவரவர் என்ன செய்ய பணிக்கபட்டு இருக்கிறார்களோ அதனை தான் செய்ய வேண்டும். நமக்கு அண்டவருடைய திட்டம் என்ன எதற்காய் அழைப்பு பெற்று இருக்கின்றோம் என்பதனை அறிந்து தெரிந்து செயல்படுவதுவே விவேகமானது.
நாம் இயேசுவை பின் செல்ல வேண்டும் என்றால், நாம் நமக்கு பிடித்த பல விடயங்களை, கெட்ட எண்ணங்களை விட்டு அவர் பின் செல்ல வேண்டும். மற்றவர்கள் மேல் உள்ள பொறாமையும், அதிருப்தியும், விருப்பமின்மையும் நாங்கள் தூக்கி எறியவேண்டும். யாரும் எங்களை ஏற்று கொள்ள வில்லையாயினும், அதனை ஏற்று கொண்டும் நாம் இயேசுவை பின் செல்ல வேண்டும். நமது எண்ணங்களை மற்றவர்கள் கட்டுபாட்டுக்குள் விட கூடாது. நமது காலணியில் உள்ள அழுக்கை துடைத்து எறிய வேண்டும் என்றால், நமது தீய எண்ணங்களை துடைத்து விட்டு, இயேசுவின் மகிழ்வில் நிலைத்திருக்க வேண்டும். இயேசுவைப் பின்தொடரும் பயணம் ஒரு கலப்பையில் கை வைத்து உழுகின்ற சிறப்பான தொழில். பின்னால் திரும்பிப் பார்த்தால் தொழிலில் சுத்தம் இருக்காது. கவனம் சிதறும். பாதை மாறும். பல சிக்கல்கள் வந்துவிடும். இயேசுவின் வழிகாட்டுதலை மனதில் கொண்டு வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்வோம். அது வெற்றியில், மகிமையில் முடியும்.


23.06.2013 ' " இயேசு வாழும் கடவுளின் மகன் என எமது வாழ்வால் காட்டுவோம்
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
'நான் யார்?" என்ற கேள்வியை நாம் பலதடவைகள் எம்மிடமோ, பிறரிடமோ? கேட்டிருக்கின்றோம். 
அன்று இயேசுவிற்கும் இந்தக் கேள்வி எழுந்தது. இக் கேள்வியை கேட்பதன் மூலம் தான் யார் என்பது பற்றி இயேசு ஒரு சுய ஆய்வு மற்றும் பொது ஆய்வு நடத்தி தம்மை அறிந்து கொள்ளிறார் எனலாம். 21 நூற்றாண்டுகளாக மனிதர்கள் 'இந்த இயேசு யார்?" என்னும் கேள்விற்கு விடைதேடுகின்றனர். இக்கேள்விக்குப் பதில் என்ன?. இயேசு, மக்களும் சீடர்களும் தம்மை யார் என்று கூறுகிறார்கள் என்னும் கேள்வியைக் கேட்கிறார். இயேசுவின் இந்தத் தேடலை இன்றைய நற்செய்தி நமக்குக் தருகின்றது. இன்றைய நற்செய்தியில் இயேசுவின் இந்த இரு கேள்விகள் நாம்  கவனிப்போம்: 'நான் யார் என்று மக்கள் சொல்கிறார்கள்?" 'நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?"

இரண்டாயிரம் வருடங்களாக மனித வரலாற்றில் அதிகமான,ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தியவர்களைக் குறித்து கருத்துக் கணிப்புகள் பல நடந்துள்ளன. ஏறக்குறைய எல்லாக் கருத்துக் கணிப்புகளிலும் இயேசுவின் பெயர் முதலிடம் அல்லது முதல் மூன்று இடங்களில் ஒன்றாக இருந்துள்ளது. ஈராயிரம் ஆண்டுகளில் மனித வரலாற்றை இத்தனை ஆழமாகப் பாதித்துள்ளவர்கள் ஒரு சிலரே. மக்கள் இயேசுவைப் பற்றி என்ன சொல்கிறார்கள்? என்று நோக்கினால் என்னென்னவோ சொல்லி விட்டார்கள். இன்னும் சொல்லி வருகிறார்கள். நல்லதும் பொல்லாததும். உண்மையும் பொய்யும். விசுவாசச் சத்தியங்களும் கற்பனைக் கதைகளும். ஓர் இறைவாக்கினர் எனவூம் அளவுக்கதிகமாகவே சொல்லி விட்டார்கள். ஆனால் இவ்வளவு சொல்லியும் இயேசுவைப் பற்றி முழுமையாக மனித குலம் சொல்லிவிட்டதா என்று கேட்டால், இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இயேசு இவர்தான், இப்படித்தான், என்று இலக்கணம் சொல்வது மிகக் கடினம். இலக்கணங்களை,வரையறைகளை, வேலிகளை உடைப்பது இயேசுவின் இலக்கணம். எனவே சிறு வயது முதல் நாம் பயின்றவைகளை எல்லாம் பட்டியலிட்டு இயேசு கேட்ட அந்த முதல் கேள்விக்குப்: 'நான் யார் என்று மக்கள் சொல்கிறார்கள்?" பதில் ஒப்பித்து விடலாம்.

'நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?" இந்தக் கேள்வி நமக்குத் தான் தரப்படுகின்றது. இந்த இரண்டாவது கேள்விக்கு அப்படி எளிதாகப் பதில் சொல்லிவிட முடியாது. முதலில் நாம் இயேசுவை யார் என அடையாளம் காணவேண்டும். இயேசுவின் மன நிலை நமது மன நிலையாக மாற வேண்டும்;. இயேசுவின் வாழ்க்கைப் பாணி நமது வாழ்க்கைப் பாணியாக மாற வேண்டும். அப்போது நாம்: 'நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?" என்னும் கேள்விக்கு நம் வாழ்க்கையாலே பதிலளிக்க முடியும்.  நாம் படித்தவைகளை விட பட்டுணர்ந்தவைகளே இந்தக் கேள்விக்குப் பதிலாக வேண்டும். நாம் மனப்பாடம் செய்தவைகளை விட மனதார நம்புகிறவைகளே இந்தக் கேள்விக்கான பதிலைத் தரமுடியும். இந்தக் கேள்வி நம்மில் பலருக்கு சங்கடங்களை உருவாக்குகின்றன என உணர்ந்தால் அது ஒரு நல்ல ஆரம்பம். இயேசுவின் இந்தக் கேள்வி வெறும் கேள்வி அல்ல. ஓர் அழைப்பு. 'என்னைப் பற்றிப் புரிந்து கொள். என்னைப் பற்றிக் கொள்" என்று இயேசு விடுக்கும் அழைப்பு. இது சாதாரண அழைப்பு அல்ல. அவரை நம்பி அவரோடு நடக்க அவரைப் போல் நடக்க பகலானாலும், இரவானாலும் மழையானலும், புயலானாலும் துணிந்து நடக்க அவர் தரும் ஓர் அழைப்பு. வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்த கொடுக்கப்படும் இந்த அழைப்பிற்கு மனதின் ஆழத்திலிருந்து வரட்டும் நம் பதில்கள்.

இயேசுவை அறிந்துகொள்ளும் இரு வழிகளை இன்றைய நற்செய்தி நமக்கு வழங்குகிறது. சொந்த ஈடுபாடு எதுவூம் இல்லாமல் இயேசுவைப் பற்றிய கருத்துக்களைத் திரட்டுவது முதல் வழி. 'மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?" என்று இயேசு கேட்டபோது இந்த முதல் வழியில் திரட்டிய பதில்களைச் சீடர்கள் இயேசுவிடம் கூறினர். பின்னர் இயேசு தன் சீடர்களிடம் 'ஆனால் நீங்கள்இ நான் யார் எனச் சொல்கிறீர்கள்?" என்று கேட்டார். சீமோன் பேதுருஇ 'நீர் மெசியா வாழும் கடவுளின் மகன்" என்கின்றார்;. பேதுருவின் பதில் வெறும் கருத்துக்களைத் தாண்டி விசுவாசத்தின் அறிக்கையாக இங்கு ஒலிக்கிறது.
இன்று எங்களிடம் இயேசு, 'நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?"என்ற இதே கேள்வியைக் கேட்கிறார் என வைத்துக்கொண்டால்: இயேசுவின் கேள்விக்கு தாராள மனதோடும் துணிவோடும் பேதுருவின் விசுவாச அறிக்கைக்குப் பதிலாக நாம் உலகிற்கு இயேசு மெசியா வாழும் கடவுளின் மகன்" என எமது வாழ்வால் காட்டுவோமா?

16.06.2013 ' "பிறரின் குற்றங்களை மன்னித்து கடவுளின் அன்பின் பொருட்டு ஏற்றுக்கொள்வோம்.
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
பரிசேயரகிய சீமோன் வீட்டில் இயேசு விருந்து உண்பதற்கு வருகிறார். அப்போது அங்கே அழையாத ஒரு விருந்தினர் வருகிறார். அது ஒரு பெண். அப்பெண் எந்தவொரு வார்த்தைகூட பேசவில்;லை. ஆனால் அவர் செய்த செயல்களை அற்புதமானவை.

இக்காலத்தில் பரிசேயர்கள் விருந்து உண்பதற்கு ஒருமரபு  முறையை வைத்திருந்தார்கள்: 'விருந்தினர் ஒரு மேசை முன் அமர்ந்து, தலையணையில் சாய்ந்த நிலையில் இடது முட்டுக்கையை ஊன்றிக் கொண்டு வலது கையால் உணவை எடுத்து உண்பர். அப்போது விருந்தினரின் கால்கள் மடக்கப்பட்ட நிலையில் அவர்களின் காலடிகள் பின்புறம் தெரியும்" இதனால்தான் அந்தப் பாவியான பெண் இயேசுவுக்குப் பின்னால் கால்மாட்டில் அழுதுகொண்டே நின்றார். தன் வாழ்க்கை பாழாகிப் போனதே என்னும் மனக் கவலையால் அவர் அழுதாரா? புதியதொரு வாழ்வைத் தொடங்கவேண்டும் எனத் தீர்மானித்து, தன் தவறுகளை நினைத்து மனம் வருந்தி அழுதாரா? தெரியவில்லை ஆனால் அவர் தேடி வந்தது இயேசுவைத்தான் அவரை கண்டுகொள்கிறார். உணவருந்திக் கொண்டிருந்த இயேசுவின் காலடிகளின் அருகில் நின்று அழுததால் கண்ணீர்த் துளிகள் இயேசுவின் பாதங்களை நனைக்கின்றன. நனைந்த இயேசுவின் காலடிகளைத் தன் கூந்தலால் துடைக்கின்றார். இயேசுவின் பாதங்களை முத்தமிடுகிறார். தன் கையிலிருந்த படிகச் சிமிழிலிருந்து நறுமணத் தைலத்தை எடுத்து இயேசுவின் காலடிகளில் கரிசனையோடு பூசுகின்றார்.

இச்சம்பவம் உண்மையிலேயே வியப்புக்குரியதுதான். விருந்து நடக்கும்போது அங்கே நுழைவதற்கு அப்பெண்ணுக்கு அனுமதி இருக்கவில்லை. அதுவும் சட்ட நுணுக்கங்களைத் துல்லியமாகக் கடைப்பிடித்த பரிசேயர் ஒருவர் அன்று பாவியான பெண்ணை வீட்டில் ஏற்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. மேலும், இறைவாக்கினர் என மக்களால் கருதப்பட்ட இயேசுவிடம் சென்று அவருடைய காலடிகளை அப்பெண் தொட்டார் என்பது நினைத்துக் கூட பார்க்கமுடியாத இன்னும் ஒரு பெரிய தவறு, எல்லை மீறல் ஆகும். ஆனால் இயேசு அப்பெண்ணின் இதயத்தில் புதைந்துகிடந்த சிந்தனைகளை நன்கறிந்திருந்தார். அப்பெண்ணின் உள்ளத்தில் எழுந்த அன்பும் நம்பிக்கையும் இயேசுவுக்கு வெளிச்சமாகிறிருந்தன். எனவே இயேசு பாவியான அப்பெண்ணைப் போற்றிப் பேசுகின்றார். இயேசுவை வீட்டுக்கு அழைத்துவிட்டு அவருக்கு உரிய மரியாதை காட்டாத சீமோன் எதையெல்லாம் செய்யாது விட்டாரோ அதையெல்லாம் அப்பெண் இயேசுவுக்குச் செய்வதை நாம் இங்கு பார்க்கின்றோம். அதாவது, வீட்டுக்குள் நுழைவதற்கு முன் காலடிகளைக் கழுவுவது வழக்கம். அப்பெண் இயேசுவின் காலடிகளைத் தன் கண்ணீரால் கழுவித் தன் தலைமுடியால் துடைக்கிறார். விருந்தினரை முத்தமிட்டு வரவேற்பது வழக்கம். ஆனால் அப்பெண்ணோ இயேசுவின் காலடிகளையே முத்தமிடுகிறார். விருந்தினரின் தலையில் எண்ணெய் பூச வேண்டும். ஆனால் அப்பெண்ணோ தன்னையே தாழ்த்திக்கொண்டு, இயேசுவின் காலடிகளைத் தொட்டு அவற்றில் நறுமணத் தைலம் பூசுகிறார். இவ்வாறு அவர் தன் அன்பை வெளிப்படுத்துகிறார். இயேசு அப்பெண்ணின் அன்பையும் நம்பிக்கையையும் பாராட்டியதோடு அவருடைய பாவங்களையும் மன்னித்து, அவருக்கு மீட்பைபும் அமைதியையும் வாக்களிக்கின்றார். அன்பு இருக்கும் இடத்தில் கடவுளின் அருள் தோன்றும் என்பதற்குப் பாவியான பெண் சிறந்த எடுத்துக்காட்டாகிறாள்.

மனித இதயத்தில் பல ஏக்கங்கள் உண்டு. பிறர் நம்மை ஏற்று, மனிதராக நம்மை மதிக்க வேண்டும் என்பது அடிப்படையான ஏக்கம். ஏதாவது தவறுகள் நேர்ந்துவிட்டால் அவற்றைப் பிறர் மன்னித்துவிட வேண்டும் என்பதும் மனித எதிர்பார்ப்புக்கில் ஒன்று. அதுபோலவே,கடவுளுக்கு நாம் ஏற்புடையவர்களாக இருக்கவேண்டும் என்பதும் நம் உள்ளத்தின் அடிப்படையான வேட்கை. நாமாகவே முயன்று நம்மைக் கடவுளுக்கு ஏற்புடையவர்களாக மாற்ற இயலாது. ஏனென்றால் நாம் பாவத்தின் விளைவாகக் கடவுளிடமிருந்து பிரிந்து போய்விட்டோம். தவறிச் சென்ற நம்மை மீண்டும் கண்டுபிடித்து, நம்மைத் தம்மோடு உறவுகொண்டாட அழைத்து, அதைச் செயல்படுத்தும் சக்தி கடவுளுக்கு மட்டுமே உண்டு. எனவே, நம்மைத் தமக்கு உகந்தவர்களாக மாற்றுகின்ற கடவுளிடமிருந்து நாம் இரக்கத்தையும் மன்னிப்பையும் கொடையாகப் பெறுகிறோமே தவிர நமது சொந்த சக்தியில் நம்பிக்கை கொண்டு அதைப் பெறுவதில்லை. கடவுளிடமிருந்து நாம் பெறுகின்ற மன்னிப்பு என்னும் அருளைவிடப் பெரிய கொடை இல்லை. இயேசுவை அணுகிவந்து, அவருடைய காலடிகளில் நறுமனத் தைலம் பூசித் தன் அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்திய பெண்ணைப் பார்த்து இயேசு அமைதியில் செல்க என்கிறார். அப்பெண்ணுக்குக் கடவுளின் இரக்கமும் மன்னிப்பும் கிடைத்ததால் அவர் அமைதியில் செல்லலாம். மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படுவது இயல்பு. மன்னித்து ஏற்கும் பண்பு இல்லாவிட்டால் அந்த விரிசல்கள் விரிந்துகொண்டே போகும். பிறரிடம்தான் குறைகள் எல்லாம் உள்ளன, நம்மிடம் யாதொரு குறையும் இல்லை என நாம் நினைத்தால் முறிந்த உறவுகள் ஒருநாளும் சரியாகிட இயலாது. மாறாக, நம்மை மன்னித்து ஏற்கின்ற கடவுளின் இரக்கத்தை நாம் அனுபவிக்கும்போது, அதே முறையில் பிறரின் குற்றங்களை மன்னித்து அவர்களையும் கடவுளின் அன்பின் பொருட்டு ஏற்றுக்கொள்வோம். அப்போது நம் உள்ளத்தில் அமைதி ஏற்படும். அன்பு இருக்கும் இடத்தில் மன்னிப்புக்கு இடம் உண்டு.

02.06.2013 'மனநிலை மாற்றம் பெற்று பகிர்தல் வாழ்வை வளப்படுத்துவோம்"
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
இயேசு தம் திருவுடலையும், இரத்தத்தையும் நமக்கு உணவாகத் தருகிறார்.அவரது பேரன்பைப் போற்றி இன்று அதை எண்ணி நாம் பெருவிழாவாகக் கொண்டாடுகிறோம். உடல் என்பது ஒருவரது ஆளுமையின் மிக வெளிப்படையான கூறாகும். மனம்,  ஆன்மா, உணர்வுகள் என்பவை வெளியில் தெளிவாகக் காணக் கிடைக்காத ஆளுமையின் தளங்கள். ஆனால், உடல் மட்டுமே அனைவருக்கும் அறிமுகமான, வெளிப்படையான தளம். அது மட்டுமல்ல, உடல்தான் இறைவனுக்கு அர்ப்பணம் செய்யத்தகுந்த மிகச் சிறந்த தளமும்கூட. அதனால்தான், இயேசு தம் உடலை இறைவனுக்காகவும், நமக்காகவும் கையளித்தார். இரத்தம் உயிரின் ஆதாரம். இரத்தம் சிந்துதால் தியாகத்தின் அடையாளம். 'இரத்தம் சிந்துதல் இன்றி பாவ மன்னிப்பு இல்லை".  எனவே, எமக்காக தன்னை கையளித்த இயேசுவின் உடலுக்காக, இரத்தத்துக்காக நாம் பிரதியுபகாரமாக  நமது உடலை இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றக் கையளிப்போம். நாம் இரத்தத்தைச் சிந்தாவிட்டாலும், பிறர் வாழ தியாகங்கள் செய்ய முன்வருவோம்.

நாம் கற்றறிந்த ஒரு வரலாற்று உண்மையை இங்கு குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும் 'இயேசுவின் திருஉடல் திருஇரத்த பெருவிழாவிற்கு ஒரு வரலாற்று உண்மை உண்டு. 1263ல் பிராகுவேயைச் சார்ந்த ஒரு கத்தோலிக்க குருவானவர் தன் அழைத்தலைப்பற்றி பல்வேறு கேள்விகளோடு திருப்பயணியாக உரோமை நகர் நோக்கி பயணமானார். பயணத்தின் பாதிவழியில் உரோமையிலிருந்து 70கி.மீ தொலைவிலுள்ள போல்சேனா என்ற இடத்தில் புனித கிறிஸ்தினால் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலுள்ள பீடத்தில் திருப்பலியாற்றினார். அப்பொழுது அர்ச்சிப்பு வார்த்தையை சொல்லி அப்பத்தை உயர்த்தியவுடன் அது சதையாக மாறி இரத்தம் கசிய துவங்கியது. இரத்தம் பீடத்தில் மேலுள்ள கார்ப்பரோல் என்ற விரிப்புதுணிமீது படிந்தது. இந்த நற்கருணை அற்புததிற்கு பிறகு 1264ல் திருத்தந்தை நான்காம் அர்பன் இயேசுவின் திருஉடல் திருஇரத்த திருவிழாவை தொடங்கி கொண்டாட கட்டளை பிறப்பித்தார். அன்றிலிருந்து இவ்பெருவிழா கொண்டாடப்பட்டு வருகின்றது

இதனைவிட இன்னும் சில உண்மைகளை இங்கு குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டும். 1431ல் இங்கிலாந்தில் புனித ஜேர்ன் ஆப் ஆர்க் சிறையில் நெருப்பில் இடப்படுவதற்கு முன்பாக அவரது ஆசைக்கு என்ன வேண்டும், கடைசி உணவாக விருந்தாக என்ன வேண்டும் என்று அவரிடம்  கேட்;கப்பட்டபோது அவர் கூறியது 'நற்கருணை வேண்டும்" என்றதுடன் காரணம் எந்த திருவிருந்து எனக்கு தொடர்ந்து பலம் தந்து என்னோடு இருந்து என்னைத் தொட்டதோ அதுவே நிரந்தர துணை, பலம் பிரசன்னம் என்றார்.

பாத்திமாவிலிருந்து சிறி தொலைவிலுள்ள பலசார் என்ற இடத்தில் 1904ல் பிறந்து 1955ல் இறந்த அலெக்சாண்டிரியா என்ற பெண் ஒரு விபத்தான சூழ்நிலையில் பாதிக்கப்பட்டு படுக்கையிலிருந்து 13 ஆண்டுகள் நற்கருணை மட்டுமேபெற்று வாழ்ந்தது மருத்துவர்களை ஆச்சரியத்துள்ளாக்கியது என்பதும் வரலற்றுப் பதிவாகியுள்ளது. விசுவசித்தால் திருவிருந்து தொடரும் என்றும் நம்மை தொடும்.

அண்மையில் மரியா என்ற 14வயது இளம்பெண் 8மாதங்களாக காத்திருந்து இருதயமாற்று அறுவைசிகிச்சைவழியாக புதிய இதயம் பெற்றாள். அவள் பல நாட்கள் பெற்றோரோடு நற்கருணை திருவிருந்தை தேடிவரக்காரணம் என்ன என்று கேட்டபொழுது அவர்கள் சொன்னது இதுதான் எங்களின் தொடர்விருந்து எங்களை இப்புதிய இதயத்தின் வழியாக தொடும் நற்கருணை இயேசு எங்களுக்கு தினமும் வேண்டும் அவர் தான் நிரந்தர சக்தி என்றார்கள்.
புனித பீட்டர் ஜீலியன் நாம் நற்கருணை இயேசுவால் ஆட்கொள்ளப்படவேண்டும் நாம் திருவிருந்தில் அவரை ஆட்கொள்ள வேண்டும் என்றார்.
இப்படி எண்ணற்ற நற்கருணையின் அற்புதங்களை நாம் அறிந்திருக்கின்றோம். இவைகளெல்லாம் இது ஒரு தொடரும் திருவிருந்து என வெளிப்படுத்துகின்றன. அந்த குருவானவரின் சந்தேகத்திற்கு அவரை தொட்டு ஆழப்படித்தியதுபோல நம்மையும் அந்த தொடர் மற்றும் தொடும் உணர்வுக்கு அழைக்கின்றது. இயேசு தமது இறுதி இராப்போசனத்தின்போது அப்பத்தையும் இரசத்தையும் தமது உடலும் இரத்தமும் எனக்கூறி அதனை தம் சீடர்களுக்குப் பகிர்ந்தளித்தார். அப்பம் ஏந்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பகிர்தலின் ஞாபகம் நமக்கு உணர்த்தப்படுகிறது. எனினும் அப்போது எம் மனநிலையில் மாற்றம் ஏற்படுகிறதா என்பதே நாம் சிந்திக்கவேண்டியது. ஏனெனில் பகிர்தல் வாழ்வுக்கு மனநிலை மாற்றம் மிக அவசியம். கல்மனம் படைத்தவர்களால் பகிர்ந்து வாழமுடியாது. அப்பத்தின் வடிவில் இயேசுவின் உடலையும் இரசத்தின் வடிவில் அவரது இரத்தத்தையும் பகிர்ந்து உண்ணும் நாம் அவரது திருவுளப்படி வாழ முற்படுகிறோமா? நம்மில் அதற்கான மனமாற்றம் ஏற்படுகிறதா என்பதையும் சிந்திக்க வேண்டும.; இத்தகைய சிந்தனைகள் ஏற்படுத்தும் மாற்றமே இப்பெருவிழாவை அர்த்தமுள்ளதாக்கும்.


Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff