Friday, December 28, 2012

நம் இல்லங்களும் தெய்வீக அன்பால் உருவாக்கப்பட உழைப்போம்

30.12.2012
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
 
இன்று திருக்குடும்ப விழாவைக் கொண்டாடுகிறோம். குடும்ப பண்பை விழக்க படித்த கதைஒன்றை பகிர்வது இங்கு நல்லது: ஒருமுறை ஓர் அரசர் சிறந்த ஓவியத்திற்கு உயர்ந்த பரிசு அளிக்கப்படுமென அறிவித்தார். சிறந்த ஓவியமாய் எதை வரைவது என திறமை மிகு ஓவியர்கள் பலரிடையே குழப்பமாய் இருந்தது. கடைசியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓவியம் இதுதான். “விவசாயி ஒருவர் பகல் முழுவதும் வயலில் உழுது விட்டு மாலை நேரத்தில் களைப்படைந்த நிலையில் கலப்பையை தோழில் போட்டுக் கொண்டு வீடு திரும்புகிறார். அவரின் மனைவி அவரின் குடிசை வாயிலில் நின்று கொண்டு அன்பான முகப்பாவனையில் அவரை வரவேற்க காத்திருந்தார். அவர்களின் சிறுவயது குழந்தையோ வீட்டிலிருந்து அவரை நோக்கி இரு கைகளையும் நீட்டிய நிலையில் ஓடுகிறது”. இம்மூவரும் ஒருவரை ஒருவர் ஏற்று அன்பு செய்து அரவணைப்பதைக் ஓவியம் தெளிவாக காணமுடிகிறது. இம்மூன்று பண்புகளுமே நல்ல குடும்பத்தின் சிறப்பாகும். “ஆண்டவருக்கு அஞ்சும் மனிதனை அவர் சீயோனிலிருந்து ஆசீர்வதிப்பார். கனிதரும் கொடி முன்திரிபோல் அவன் மனைவி அவள் வீட்டின் உட்புறத்தில் இருப்பாள். ஒலிவச் செடிகள் போல அவன் மக்கள் பந்தியில் அவளைச் சூழ்ந்திருப்பர் என நாம் திருப்பாடலில்(தி.பா.128:3-4)வாசிக்கிறோம். இது ஓவிக்கருத்தானாலும் எம்வாழ்விலும் ஒளிரவேண்டும்
 
திருச்சபை திருக்குடும்பத்தை நாம் முன்மாதிரிகையாய் வாழ வேண்டுமென இன்று நினைவுறுத்துகிறது. நல்லவர்கள் வரமுடியா நாசரேத்து ஊரில் அவர் குடியிருந்தாலும் இவர் தச்சன் மகனல்லவா? எனக் குறைத்து மதிப்பிடும் தொழில் செய்தாலும் இவரின் தாய் மரியாவல்லவா? எனப் பெயர் குறிப்பிடும் சாதாரண பெண்ணாய் மரியாள் இருப்பினும் அக்குடும்பத்தில் சூசையப்பரிடம் நீதி இருந்தது. மரியாளிடம் “இதோ ஆண்டவரின் அடிமை” எனக் கூறும் தாழ்ச்சி இருந்தது. இயேசுவிடம் பெற்றோருக்குப் பணியும் கீழ்ப்படிதல் இருந்தது. இக்குடும்பமே நம் குடும்பங்களுக்கு முன் மாதிரிகை.
இக்குடும்பத்தில் ஒருவர் மீது ஒருவர் கொண்ட அன்பு பளிச்சிடுகிறது. பன்னிரண்டு வயதில் மூன்று நாள்கள் காணாமல்போன மகனைத் தேடியலைந்து கண்டுகொண்ட அன்னை, மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக் கொண்டிருந்தோமே என்றார். இந்த வரிகள் அனைத்து அன்னையரின் மனநிலையை, இதய வேதனையை அருமையாக வெளிப்படுத்துகின்றன. தம் பிள்ளை மேல் தாங்கள் கொண்டிருந்த பொறுப்பையும் அக்கறையையும் வெளிப்படுத்துகிறது. நாசரேத்துக்குத் திரும்பிச் சென்ற பிறகு இயேசு இறை நம்பிக்கையிலும் ஞானத்திலும் உடலிலும் வளர வழிகாட்டினர். இவ்வாறு பொறுப்புள்ள பெற்றோருக்கு மரியாவும் சூசையும் முன்மாதிரியாய் விளங்குகின்றனர்.
 
இன்று குடும்பங்கள் பலவிதமான சிக்கல்களைச் சந்திப்பதை பார்க்கிறோம். மண முறிவுகள், பிளவுகள், சண்டை சச்சரவுகள், ஊடகங்களின் தாக்கத்தால் ஆன்மீகச் சிக்கல்கள் போன்றவை குடும்பத்தின் ஆணி வேரையே அசைத்துப் பார்க்கின்றன. திருமணம் செய்யாமல், குடும்ப வாழ்வுக்குள் நுழையாமல் விருப்பம்போல் வாழலாம் என்னும் மனநிலை மெல்ல, மெல்ல பரவி வருகிறது. அத்துடன் ஒவ்வொரு தாயும் தன் பிள்ளைக்காக துன்புறுகிறார். தம் பிள்ளைகள் தம்மை விட்டு, தமது வாழ்வு நடைமுறைகளைவிட்டு விலகிச் செல்லும்போது தாய் பெரிதும் வேதனை அடைகின்றார். படிப்பில் கவனம் செலுத்தாமல், தொலைக்காட்சி, அலைபேசி, இணைய தள விளையாட்டுகளில் ஆர்வம் காட்டும் போது பிள்ளைகளை எண்ணித் தாய்மார்கள் கவலைப்படுகின்றார்கள். அவர்கள் நன்முறைக்குத் திரும்ப வரவேண்டுமென்று தேடுகிறார்கள். எனவே, குடும்பங்களை உறுதிப்படுத்தும் பணியை நாம் அக்கறையுடன் ஆற்றவேண்டும். இந்த நாளில் நமது குடும்பங்கள் அனைத்தும் ஆன்மீக குடும்பங்களாகத் திகழ இறைவனை வேண்டுவோம்.
 
திருக்குடும்பத்தின் தலைவர்கள் விசுவாசம் நிறைந்தவர்களாவும் அருள் வாக்குக்குக் கீழ்படிந்தவர்களாகவும் இறை வார்த்தையை ஆழ்ந்து சிந்தித்து செயற்படுபவர்களாகவும் விளங்கினார்கள். மூவரும் தனித்தனியாகவும் ஒன்றாகவும் சேர்ந்து வளர்த்துக் கொண்ட மதிப்பீடுகள் மனநிலைகள், நற்பண்புகள், செயல்பாடுகள் அனைத்தையும் இன்று சிந்திப்பதோடு வாழவும் நாம் முடிவெடுக்கவும் வேண்டும்.
 
புனித அகுஸ்தினார் மனந்திரும்பி இயேசுவை பின்பற்றுவதற்கு அவரின் தாய் மொனிக்காவின் இடைவிடா செபம் தான் காரணம். புனித குழந்தை தெரசாள் தன் தந்தை மார்டினைக் குறித்து இவ்வாறு கூறுவார். “என் தந்தை இப்பூமியில் வாழும் போதே புனிதரைப் போன்று எனக்குத் தென்பட்டது. அவரின் புனிதமே நாங்கள் அனைவரும் துறவு வாழ்வில் இறைபணி செய்ய காரணம்” என்றார்.
“நல்ல குடும்பமே தேவ அழைத்தலின் விளைநிலம் என்றார் பரிசுத்த தந்தை. வீடு செங்கற்களால் கட்டப்படுகிறது. ஆனால் நல்ல இல்லமோ தெய்வீக அன்பால் உருவாக்கப்படுகிறது". எனவே, நம் குடும்பங்களும் திருக்குடும்பத்தைப் போல் வளரட்டும் வாழட்டும் வாழ்த்துகின்றோம்.

Friday, December 21, 2012

இயேசுவின் பிறப்பில் நாம் வாழ எம்மை சாத்தியாமாக்குவோம்


23.12.2012
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
திருவருகைக்காலத்தில் இருக்கும் நமக்கு, இது கிறிஸ்து பிறப்பு விழாவுக்கு முன்னான கடைசி ஞாயிறு. இது மனித உடலேற்பு மறைபொருளான கிறிஸ்து பிறப்புக்கு அழைத்துச்செல்லுகிறது.

மத்திய அமெரிக்காவின் மறைந்து போன மாயன் நாகரீக மக்களில் நடுவில் வழக்த்தில் இருந்த  கதை ஒன்று: மனிதன் ஒருநாள் காட்டில் சோகமாக அமர்ந்திருந்தான். காட்டு விலங்குகள் அவனைச் சுற்றி வந்து அவனிடம், ‘நீ சோகமாக இருப்பதை எங்களால் சகிக்க முடியவில்லை. என்ன வேண்டுமானாலும் கேள். நாங்கள் உனக்குத் தருகிறோம்’ என்றன. மனிதன், ‘எனக்கு நல்ல கண்பார்வை வேண்டும்’ என்றான். கழுகு ‘என் பார்வையை உனக்குத் தருகிறேன்’ என்றது. ‘யாரும் எதிர்க்கமுடியாத வலிமை வேண்டும்’ என்றான். ஜகுவார், ‘நான் தருகிறேன்’ என்றது. ‘பாதாளங்களின் இரகசியத்தை அறிய வேண்டும்’ என்றான். பாம்பு, ‘அதை நான் உனக்குக் காட்டுகிறேன்’ என்றது. எல்லா விலங்குகளும் தன் ஆற்றலை இப்படியாக மனிதனுக்குத் தந்தது. எல்லா ஆற்றல்களையும் பெற்ற மனிதன் எழுந்து புறப்பட்டான். அப்போது மான் மற்ற விலங்குகளைப் பார்த்து, ‘மனிதன் இப்போது எல்லாவற்றையும் பெற்று விட்டான். இனி அவனிடம் சோகம், வருத்தம் இருக்காது’ என்றது. அதற்கு ஆந்தை மறுமொழியாக, ‘இல்லை, மனிதனின் மனத்தில் ஒரு துவாரத்தை, வெற்றிடத்தை நான் பார்த்தேன். அது ஒரு தணிக்க முடியாத பசி. அது அவனுக்கு சோகத்தைத் தரும். இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று அவன் எல்லாவற்றையும் கொண்டு அந்த வெற்றிடத்தை நிரப்பிக் கொண்டேயிருப்பான். ஒருநாள் இந்த பூமி சொல்லும்: ‘இதற்கு மேல் நீ எடுத்துக்கொள்ள என்னிடம் ஒன்றுமேயில்லை’. மனிதனின் தேடலை, தேடல் தருகின்ற ஏமாற்றத்தையும், ஏக்கக்தையும், தாகத்தையும், பசியையும், விரக்தியையும் வெளிப்படுத்துகின்ற ஒரு கதை இது.

வாழ்வில் நிகழ்வுகள் எம் எதிர்பார்ப்புகளுக்கு மாறாகச் செல்லும்போதும், வாழ்வின் நிகழ்வுகள் எம் அமைதியைக் குலைக்கும்போதும், நாம் செல்கின்ற பாதை தெளிவாக இல்லாத போதும் நாம் நினைத்துக்கொள்ளுவத கடவுள் இல்லை. ஆனால் “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். என் நுகம் அழுத்தாது. என் சுமை எளிதாயுள்ளது.” என்று எம்மிடம் வரும் இயேசு கூறுகின்றார். எல்லாவற்றையும் கொண்டு வெற்றிடத்தை நிரப்பத் துடிக்கும் எமக்கு ஒரு நிறைவான வழியைக் காட்டுகின்றார் இயேசு. அவரது ஒளியில் நாம் எப்போதும் நடக்க வேண்டுமெனில், இறை வார்த்தையின் வழி நடக்க வேண்டும்.

அநீதியான ஆடம்பரச்  செயல்கள், இரக்கமற்ற அதிகாரம், நியாயமற்ற பொருளாதார நெருக்கடி எனக் கூக்குரலிடும் உலகின் பல பகுதிகள், இயேசுவின் போதனையில் உண்மை அர்த்தத்தைக் காண முடியும். நீதியும்-பிறரன்பும், உண்மையும்-நேர்மையும், அதிகாரமும் - மதித்தலும் ஒன்றுக்கொன்று இணைந்து செல்ல வேண்டும். அத்துடன்  எம் வார்த்தைகள் இன்றும் நம் வாழ்வுடன் இயைந்து செல்பவைகளாக இருக்கவேண்டும். இருப்பவர் இல்லாதவரோடு பகிர்ந்துகொள்ள வேண்டும். இன்று அளவுக்கதிகமாக வைத்திருக்கும் நிலை, மற்றும், அளவுக்கதிகமாகத் துன்புறும் நிலை என்ற இந்த இரு நிலைகளுக்கும் இடையே உள்ள இடைவெளியை நீக்குவதற்கு நீதி எமக்கு அழைப்பு விடுக்கிறது. நேர்மையுடனும், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தாமலும், அயலவர்மீது அன்புடனும் நடக்க வேண்டியத் தேவையில் நாம் உள்ளோம்.

நுகர்வுக் கலாச்சாரத்தில் தன் மகிழ்வைத் தேடிக்கொண்டிருக்கும் இன்றைய உலகில், கிறிஸ்து பிறப்பு விழாவை நாம் காத்திருந்து எவ்விதம் கொண்டாடப்போகின்றோம் என்பது ஏக்கம் நிறைந்த கேள்வி வருகையும், காத்திருத்தலும் நமது அன்றாட வாழ்வில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. வருகை மகிழ்ச்சியையும், காத்திருத்தல் நம்பிக்கையுடன் கூடிய சுகத்தையும் தருகிறது. நாம் பலவேளை பலரின் வருகைக்காக காத்திருந்தபோது  ஏமாற்றம்தான் எஞ்சியிருந்தது. ஆனால் இறைவாக்கினர்கள் வாயிலாக பேசிய இறைவன் இறுதியிலே மனித உரு நமக்காக நம்முடன் வாழ வருகின்றார்;. அவர் நம்மிடம் கேட்பது என்ன? அன்பு மட்டும்தான் அதைத் தர நமது மனம் ஏன் மறுக்கிறது? இறையன்பும், பிறரன்பும்தானே நாம் கடைபிடிக்க வேண்டிய கட்டளைகள். என்னை அன்பு செய் இறையன்பு, உன்னை அன்பு செய்வதுபோல் உன் அயலானையும் அன்பு செய் பிறரன்பு இவைதானே இயேசு நமக்கு கொடுத்த கட்டளைகள். இதனை கடைபிடிக்க நாம் தவறுவது ஏன்? காரணம் சுயநலம்.

கலாசாரமும், பண்பாடும் அழியும்போது, அட்டூழியம் எங்கும் மிளிரும்போது, அரசியலும், சினிமாவும்தான் வாழ்க்கை என்றாகும் போது, குடி, போதை, சீரியலுக்கு அடிமையாகும்போது, இன்னும் பல போதுக்களோடு நாம் வாழும்போது இயேசுவின் பிறப்பு நம்மிலே எப்படி சாத்தியமாகும்.

இருளிலும் இறப்பின் பிடியில் இருப்போருக்கு ஒளிதரவும் நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும், நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும், விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடி வருகிறது எனவே இயேசுவின் பிறப்பில் நாம் வாழ எம்மை சாத்தியாமாக்குவோம்

Thursday, December 13, 2012

உண்மை வாழ்வைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகளாவோம்

16.12.2012
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

இன்று நாம் சந்திப்பு. பற்றி சிந்திக்கலாம்  சந்திப்புகள் பலவிதம். புனித பிலிப் நேரி வாழ்வில் நடந்ததாகச் சொல்லப்படும் ஒரு சம்பவம். புனித பிலிப் நேரி ஒருநாள் நண்பர்களுடன் பொழுதுபோக்காக சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சாவைப் பற்றிய பேச்சு அங்கு எழுந்தது. நண்பர்களில் ஒருவர் பிலிப்பிடம், "பிலிப், இதோ, அடுத்த நிமிடமே நீ இறக்கப் போகிறாய் என்று தெரிந்தால், என்ன செய்வாய்?" என்று கேட்டார். பிலிப் அவரிடம், "தொடர்ந்து சீட்டு விளையாடிக் கொண்டிருப்பேன்." என்றாராம். பிலிப் நேரியாரைப் போல் எந்தவித பயமும் இன்றி இறைவனைச் சந்திக்க நாம் என்ன செய்ய வேண்டும்? நல்ல கேள்வி: இதே கேள்வியைத் தான் மக்கள் திருமுழுக்கு யோவானிடம் எழுப்புகிறார்கள். இறைவனைச் சந்திக்க நாங்கள் என்ன செய்ய வேண்டும்? என்று யோவானைச் சுற்றி இருந்த மக்கள் தேட ஆரம்பித்தனர்.

இந்தக் கேள்விக்கு நாம் பதில் தேடு முன்பு, திருமுழுக்கு யோவானைச் சுற்றி நின்ற கூட்டத்தில் இருந்தவர்கள் யாவர் என நோக்கினால்: மக்கள், வரிதண்டுவோர்;, படைவீரர் என நற்செய்தி சொல்கின்றது. ஆனால், ஒரு முக்கிய குழுவைப் பற்றி இன்றைய நற்செய்தியில் இல்லை. ஆனால், அவர்கள் கட்டாயம் அந்தக் கூட்டத்தில் இருந்திருக்க வேண்டும். யார் அவர்கள்? மதத் தலைவர்கள் தான் அவர்கள். யோவானின் புகழ் பரவி வந்ததை அவர்களும் அறிவர். யார் இந்த மனிதர்? என இவரைத் தேடி பாலைவானத்திற்கே மக்கள் போகிறார்கள் என்றால் தங்கள் கேள்விகளுக்கு விடை தேடி அந்த மதத் தலைவர்களும் அங்கு வந்திருப்பர்.

இந்த கூட்டத்தில் யோவான் இறைவனின் வரவை, இறைவன் வார்த்தையை எடுத்துக் கூறுகிறார். இடித்துக் கூறுகிறார். யோவான் சொன்னதைக் கேட்ட மக்கள், வரிதண்டுவோரும், படைவீரர் இவர்கள் நடந்து கொண்டது ஒரு விதம். மதத் தலைவர்கள் நடந்து கொண்டது வேறு ஒரு விதம். கண்ணாடியில் தெரியும் உருவம் சரியில்லை என்றால், கோபத்தில் கண்ணாடியை உடைப்போமா? உடைத்தார்கள் அந்த மதத் தலைவர்கள். யோவான் வாழ்ந்த தவ வாழ்வு, அவரது போதனை எல்லாம் மதத் தலைவர்களின் முகமூடிகளைக் கிழித்து அவர்களது உண்மை உருவைக் காட்டும் கண்ணாடியாக இருந்தது. தங்கள் வாழ்வைச் சங்கடபடுத்தும் இந்த உண்மையை ஊமையாக்க ஒரே வழி? இந்தக் கண்ணாடியை உடைக்க வேண்டும். மதத்தலைவர்கள் தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார்கள். உண்மையை ஊமையாக்க வேண்டும், உண்மை வாழ்வைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகளை உடைக்க வேண்டும் என திட்டம் போட்டனர்.

மதத் தலைவர்களுக்கு மாறாக, தங்கள் வாழ்வின் உண்மை நிலையைக் காட்டிய யோவானிடம் மக்கள், வரிதண்டுவோர்;, படைவீரர்  மீட்படையும் வழி கேட்டார்கள். ஏக்கம் நிறைந்த கேள்வி: நாங்கள் என்ன செய்ய வேண்டும்? நாங்கள் இறைவனைச் சந்திக்க என்ன செய்யவேண்டும்? சாக்குத் துணி அணிந்து, சாம்பல் பூசி, சாட்டைகளால் உங்களையே அடித்துக் கொண்டு கடும் தவம் செய்யுங்கள்." யோவான் இப்படி சொல்வார் என்று எதிர்பார்த்திருந்தனர் அந்த மக்கள். ஏனெனில் யோவானே அத்தகைய கடும் தவங்களைச் செய்து வருகிறவர். ஆனால், யோவான் கூறிய பதில் மிக எளியது:

பிரச்சனைகளுக்கான தீர்வை இயேசுகிறிஸ்துவுடன் நாம் கொள்ளும் ஒன்றிப்பிலேயேக் காணமுடியும், ஏனெனில் அதுவே அன்பு மற்றும் உண்மையை அடிப்படையாகக்கொண்ட வழிகளும் நடவடிக்கைகளும் உருவாகக் காரணமாகிறது. இறைவன் மீது கொண்டுள்ள தாகத்தை நினைவில்கொண்டு, உள்மன வாழ்வைத் தூய்மைப்படுத்தி, பலப்படுத்தவேண்டும்.

மனித குலம் அனைத்தும் ஆண்டாண்டு காலமாக எதிர்நோக்கியிருந்த ஒரு முடிவற்ற புதிய உடன்படிக்கையைக் குறித்து இறைவாக்குனர்கள் வழியாகக் கற்றுக்கொண்டனர். மனித வரலாற்றில் படிப்படியாக உணரப்பட்டு வடிவம் பெற்று வந்த இத்தெய்வீகத்திட்டம், இறைமகன் மனுவுருவெடுத்த இயேசுகிறிஸ்துவின் வருகையில் தான் உச்சநிலையை அடைந்தது. இந்த திருவருகைக்காலத்தில் இறைவனின் மீட்புத்திட்டம் படிப்படியாக வெளியிடப்பட்டதை ஆழ்ந்து தியானிப்போம், கிறிஸ்துவில் இறைவன் நம் அருகே நெருங்கி வந்து கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்துகொள்வோம்;. பெத்லகேம் குடிலை நிறைத்த மகிழ்வு மற்றும் ஒளி நம் வாழ்வின் வழியாக தன் கதிர்களைப் பரப்பி, இறைபிரசன்னத்தை உணர்ந்ததன் சாட்சிகளாக விளங்குவதற்கு, இவ்வுலகின் கவனச்சிதறல்கள், மனக்கலக்கங்கள் மற்றும் மேம்போக்கான நிலைகள் போன்றவைகளின் மத்தியிலும் நம்பிக்கையையும், நற்செய்தியையும் வாழ்வாக்குவோம்.

Thursday, December 6, 2012

பண்டிகைக்கால வர்த்தகத்திலோ வலைப்பின்னலின் வழுக்கல்களுக்குள்ளோ சறுக்கிவிடாமல் ஆண்டவருக்காக நாம் காத்திருப்போம்.

09.12.2012
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

மனித உடலேற்பு மறைபொருளான கிறிஸ்து பிறப்புக்கு அழைத்துச்செல்லும்  திருவருகைக் காலத்தின் இரண்டாம் வாரத்தில் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். இது கடவுளின் வருகையை, உலகில் அவரது உடனிருப்பைக் குறித்து நிற்கிறது. அனைத்துலகையும் வரலாற்றையும் உள்ளடக்கிய இந்த மறை பொருளில் இரண்டு அம்சங்கள் உள்ளன: இயேசு கிறிஸ்துவின் முதல் மற்றும் இரண்டாம் வருகை. இறைமகன் இயேசுவின் பிறப்பு நம் இல்லங்களில் நிகழ வேண்டுமென்ற எதிர்ப்பார்ப்பில் இல்லத்தை அலங்கரிக்கும் நிகழ்வுகள் இக்காலங்களில் இடம்பெற்று வருகின்றன. கிறிஸ்மஸ் பண்டிகைக்கால வர்த்தகம் சூடு பிடிக்க புதிது புதிதாக எதுவெல்லாமோ சந்தையில் குவிகின்றன. உறவுகளை ஊக்குவிக்கும் முடிவற்ற வலைத்தொடர்புகளும், சமூகத் தொடர்புகளும் இன்றைய உலகில் குவிந்து காணப்பட அனைத்தையும் அனுபவித்து வாழத்துடிக்கும் இன்றைய உலகின் சுயநலக் கொள்கைகள் மனிதரின் மாண்பைக் கீழ்மைப்படுத்துவதாகவே அமைய நம்; மனங்கள் அதனூடேயும் பயணிக்கின்றன. அதனால் பெரும்பான்மை நேரங்களில் நாம் தனிமையின் வெறுமையை உணர்கின்றனர்.

இத்தகைய நிகழ்வுகள் கிறிஸ்மஸ் பெருவிழாவின் உண்மைப் பொருளை உலகிடமிருந்து மறைப்பதற்குத் துணைபோகின்றன. கிறிஸ்மஸ் ஒரு களியாட்டமாக கொண்டாடவே நாம் முனைவது உண்மையாகிறது. நம் மீட்பரின் வருகையை முன்குறித்து பாலைவனத்தின் அறிவிப்புக் குரலாய் திருமுழுக்கு யோவான் செயற்பட்டார். மனந்திரும்புங்கள். கடவுளின் அரசு தெருங்கியுள்ளது என அவர் மக்களை ஆயத்தப்படுத்தினார். மனமாற்றமடைந்து இறைவனை நாடவேண்டுமென்பதே அவரது வேண்டுகோளாயிருந்தது. அவரது குரலைக் கேட்டவர்களும், அவரைப் புறந்தள்ளியவர்களும் இருந்தனர். அவரது குலைக் கேட்டு மீட்படைந்தவர்களும் உள்ளனர். இன்றைய உலக அவலங்கள், பிரச்சினைகளுக் கெல்லாம் காரணம் மக்கள் இயேசுவின் போதனைகளைக் கைக்கொண்டு நடக்காமையே எனலாம்.

ஆன்மிக வரட்சியுடனான மக்கள் மனங்கள் விசுவாசங் கொள்ளாத ஒரு காலகட்டத்தில் திருமுழுக்கு யோவானின் இச்செய்தி அக்கால மக்கள் மனதில் பசுமரத்தாணியாக பதிந்தது. இன்றும் உலகெங்கிலும் இடம்பெறும் பிரச்சினைகள், வன்முறைகள் சமூகச் சீர்குலைவுகளுக்கும் சிக்கல்களுக்கும் ஆன்மிக வறுமையே முக்கிய காரணம். 'என்னைத் தேடுங்கள் சகலதும் உங்களைத் தேடிவரும். கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படுமென்று" கிறிஸ்து போதித்ததை இக்காலத்தில் நாம் சிந்திப்பது அவசியம்.

கிறிஸ்துவின் பிறப்புப் பெருவிழாவை எதிர்நோக்கிக் காத்திருக்கும் நாம் திருமுழுக்கு யோவான் போல் மனந்திரும்புதலுக்கான அறிவிப்பை இன்றைய சமுதாயத்தில் தெரிவிக்க வேண்டியது அவசியம். பாலை நிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது: 'ஆண்டவருக்காக வழியை ஆயத்தம் பண்ணுங்கள், அவருக்காக பாதையைச் செம்மையாக்குங்கள். பள்ளத்தாக்குகள் எல்லாம் நிரப்பப்படும். மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்: கோணலானவை நேராக்கப்படும், கரடுமுரடானவை சமதளமாக்கப்படும் மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர்".

எனவே இறைவருகைக்கான எமது ஆயத்தம் இதய நெருடல்களாக எம்மனங்களில் பதிந்துள்ள ஏக்கம், துயரம், பாவநிலைகள் என்ற பள்ளத்தாக்குகளை இல்லா தொழித்து மன நிம்மதி, மகிழ்ச்சி, அன்பு, தாழ்ச்சி, விட்டுக்கொடுப்பு என்ற கடவுளின் அருளால் நிரப்பப்படவேண்டும். சுய நலம், வைராக்கியம் என்ற குன்றுகளும் மலைகளும் நம் மனங்களில் தலைதூக்கி நிற்கும் போது, அவை கடவுளின் அருள் நமக்குக் கிட்டுவதற்கான தடைகளாக அமையும்.

இதனால் எம் சிந்தனைகள் நேரற்ற கோணலாகவும் கடும் போக்கினால் உள்ளம் கரடுமுரடாகவும் காணப்படுகின்றது. இவற்றை எம்மிலிருந்து களைந்து தாழ்ச்சியை பொறுமையயை பிறர் அன்பை பிறருக்கு உவந்து உதவுவதை இத்திருவருகைக் காலத்தில் மேற்கொள்வோம். பண்டிகைக்கால வர்த்தகத்திலோ வலைப்பின்னலின் வழுக்கல்களுக்குள்ளோ சறுக்கிவிடமல் 'ஆண்டவருக்காக நான் காத்திருக்கிறேன். என் நெஞ்சம் காத்திருக்கின்றது. அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். விடியலுக்காகக் காத்திருக்கும் காவலரைவிட என் நெஞ்சம் என் தலைவருக்காய்க் காத்திருக்கின்றது. கடவுள் நம்பிக்கையில் தான் உயிர்வாழ்ந்திருப்பர்." என்று கத்திருப்போம்.

அத்துடன் கிறிஸ்துவின் வருகையை நம் வாழ்வால் புதிய நற்செய்தி அறிவிப்பின் வடிவாக வாழ்வோம் அனைவரிடையேயும் அமைதியையும் வளர்க்கும் முயற்சிகளில் பங்கேற்போம் அப்போது கரடு முரடான கோணல் மிக்க நம் வாழ்வு கடவுள் அருளும் மீட்பைக் காண்பது உறுதியாகும்.

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff