Tuesday, July 29, 2014

அன்பிலிருந்து தோன்றுகின்ற பரிவு எம்உள்ளத்திலிருந்தும் உருவாகட்டும்

03.08.2014 ' " 


ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர் 

இன்று தமக்குத்தரப்படும் பைபிள் பகுதியில் இயேசு, 'மக்களை அமரச் செய்யுங்கள்" என்றார். அப்பகுதி முழுவதும் புல்தரையாய் இருந்தது. அமர்ந்திருந்த ஆண்களின் எண்ணிக்கை ஏறக்குறைய ஐயாயிரம். இயேசு அப்பங்களை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அமர்ந்திருந்தோருக்குக் கொடுத்தார். அவ்வாறே மீன்களையும் பகிர்ந்தளித்தார். அவர்களுக்கு வேண்டிய மட்டும் கிடைத்தது. அவர்கள் வயிறார உண்டபின், 'ஒன்றும் வீணாகாதபடி, எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வையுங்கள்" என்று தம் சீடரிடம் கூறினார். மக்கள் உண்டபின் ஐந்து வாற்கோதுமை அப்பங்களிலிருந்து எஞ்சிய துண்டுகளைச் சேர்த்துச் சீடர்கள் பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினார்கள் தரப்படுகின்றது.

மக்களுக்கு இறையாட்சி பற்றிய நற்செய்தியை அறிவித்து, அவர்கள் மனம் மாற வேண்டும் என்று அழைப்பு விடுத்தார் இயேசு. கடவுளின் ஆட்சி மக்களிடையே வந்துகொண்டிருக்கிறது என்பதை அவர்கள் கண்கூடாகக் காணும் விதத்தில் இயேசு பல அதிசய செயல்களையும் புரிந்தார். அச்செயல்கள் வழியாக அவர் மக்களுக்கு நன்மை கொணர்ந்தார். இத்தகைய அரும் செயல்களில் ஒன்று 'ஐயாயிரம் பேருக்கு உணவளித்தல் ஆகும்" மக்களுக்கு இயேசு உணவளித்த நிகழ்ச்சியை நாம் பல கோணங்களிலிருந்து பார்க்கலாம். இஸ்ரயேல் மக்களுக்குக் கடவுள் பாலைநிலத்தில் மன்னா என்னும் உணவை அளித்ததுபோல இங்கு இயேசு பசியுற்றோருக்கு உணவளித்துப் பாதுகாக்கின்றார். எலியா, எலிசா போன்ற இறைவாக்கினர் மக்களுக்கு உணவு வழங்கியதுபோல இங்கும் இயேசு செயல்படுகின்றார். மேலும் நற்கருணையை இயேசு ஏற்படுத்தியதும் இங்கே குறித்துக் காட்டப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் ஓர் ஆழ்ந்த உண்மையை நாம் காண்கிறோம். அதாவது, மக்களுக்கு உணவளிக்க இயேசு வழிவகுத்துவிட்டு, உணவைப் பகிர்ந்தளிக்கின்ற பணியைத் தம் சீடரிடமே விட்டுவிடுகின்றார். யார் இந்த சீடர்கள்;? இயேசுவின் காலத்தில் அவரைப் பின்சென்றவர்கள்தாம் அவர்கள். இன்று நாம் அவருடைய சீடர்களாக இருக்கின்றோம். இயேசுவின் குரலைக் கேட்டு, அவருடைய போதனையை ஏற்று, இயேசுவின் வழியில் நடந்துசெல்ல முன்வரும்போது நாம் இயேசுவின் சீடர்களாக மாறுகிறோம். நமக்கு இயேசு வழங்குகின்ற கட்டளை என்ன? 'நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்". இந்த உணவு எத்தகையது? பிறரது  புறப்பசியை ஆற்றுகின்ற உணவு மட்டுமா? இல்லை; ஆன்மப் பசியை ஆற்றவும் சீடர்கள் துணைசெய்ய வேண்டும். இயேசுவின் போதனையை ஏற்று, அதன்படி வாழ்ந்து, இயேசுவுக்குச் சான்றுபகரும்போது நம் வாழ்வு பிறருடைய பசியை ஆற்றுகின்ற உணவாக மாறும். அப்போது, இயேசு தம்மையே நமக்கு உணவாக அளித்ததுபோல நாமும் பிறருக்கு உணவாக நம்மையே கையளிப்போம். அதாவது, நம்முடைய சான்று வாழ்க்கையைக் கண்டு பிறர்; தம் ஆன்மப் பசி ஆறுகின்ற அனுபவம் பெறுவர். பிறருடைய நலனை முன்னேற்றுவதில் இயேசுவின் பணியை ஆற்றிடத் திருச்சபை முழுவதுமே அழைக்கப்பட்டுள்ளது. திருச்சபையின் ஒவ்வொரு உறுப்பினருக்கும், தம்மைப் பின்செல்கின்ற எல்லா மனிதருக்கும் இயேசு வழங்குகின்ற கட்டளை: 'நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்" இக்கட்டளையை ஏற்றுச் செயல்படுத்துவது நம் கடமை. நாம் தயாரா?

கடவுளின் ஆட்சி முழுமையாக மலரும் நாளில் எல்லா மக்களினத்தாருக்கும் கடவுள் பெருவிருந்து அளிப்பார் என்னும் உருவகம் விவிலியத்தில் பல இடங்களில் வருகிறது. தேவைக்கு அதிகமாகவே உணவு தந்து, அனைவரின் பசியையும் கடவுள் போக்குவார்; அவர்களுக்கு முடிவில்லாப் பேரின்பம் அளிப்பார். இவ்வாறு பழைய ஏற்பாட்டு நினைவும், நற்கருணைக் கொண்டாட்ட நினைவும், இறுதிக் கால விருந்தின் நினைவும் உள்ளடங்கிய விதத்தில் மத்தேயு 'அப்பங்கள் பலுகுதல்" நிகழ்ச்சியை வடிவமைக்கிறார். இந்த ஆழ்ந்த பொருள் கொண்ட நிகழ்ச்சியில் இயேசு உண்மையாகவே மக்களின் பசியைப் போக்குகிறார். அவ்வாறே இயேசுவின் சீடர்களும் செய்ய வேண்டும். அவர்களும் மக்களுக்கு உணவளிக்க வேண்டும். எஞ்சியிருக்கும் உணவை வீணடிக்காமல் மக்களின் தேவையை நிறைவேற்ற வேண்டும். மக்கள் பெருந்திரளாக வந்து தம்மை அணுகியதைக் கண்ட இயேசுஅவர்கள்மீது பரிவுகொண்டார். அன்பிலிருந்து தோன்றுகின்ற பரிவுதான் இயேசுவின் உள்ளத்திலிருந்து எழுந்த பாச உணர்வு, அவர் மக்களிடத்தில் கொண்டிருந்த அக்கறை. எம் திருமகனிடம் விளங்கிய பரிவு எங்கள் வாழ்விலும் துலங்கிட இயேசுவோடு பயணிப்போம். 

Monday, July 21, 2014

இயேசுவிற்காக தம்மடைய எல்லாவற்றையும் இழக்க நாம் தயாரா?.

27.07.2014'" 
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர் 
இன்று எமக்குத்தரப்படும் பைபிள் பகுதியில் இயேசு உவமைக்கதைகள்வழியாக பேசுகிறார். கடவுளைப் பற்றிய அறியமுடியாத மறை உண்மைகளை இயேசு நமக்கு உவமைகள் வழியாக தருகிறார். எமக்கு உவமைக்கதைகள் மிகவும் பிடிக்கும் என அவர் நன்கு தெரிந்திருக்கிறார்;;. 

கடவுளின் ஆட்சி இவ்வுலகில் வந்துகொண்டிருக்கிறது என்னும் நல்ல செய்தியை அறிவித்த இயேசு அதைப் பல உவமைகதைகள் வழியாக மக்களுக்கு அறிவித்தார். குறிப்பாக, தம்மோடு நெருங்கிப் பழகி தம் போதனைகளை அருகிலிருந்து கேட்டு, தாம் புரிந்த அரும் செயல்களை நேரடியாகக் கண்டு அறிந்த தம் சீடர்களுக்கு இயேசு தம் உவமைகதைகளின் உட்பொருளையும் விளக்கிக் கூறினார். ஆனால் உண்மையில் அவர்கள் இயேசுவைப் புரிந்துகொள்ள மிகவும் சிரமப்பட்டார்கள். பல தடவைகளில் இயேசுவின் போதனை அவர்கள் காதுகளில் விழுந்தும் அவர்கள் அப்போதனையை உள்வாங்கித் தம் நடத்தையில் காண்பிக்க தயங்கினார்கள்.

இயேசு நம்மைப் பார்த்து அதே கேள்வியைக் கேட்கின்றார்: இவற்றையெல்லாம் புரிந்துகொண்டீர்களா? இயேசு யார் எனவும் அவர் நமக்கு வழங்கும் செய்தி யாது எனவும் நாம் உண்மையிலேயே புரிந்துகொள்ள வேண்டும் என்றால் நாம் திறந்த மனத்தோடு அவரை அணுக வேண்டும். அவரிடத்தில் நாம் முழுமையாக நம்பிக்கை கொள்ள வேண்டும். நம் இதயத்தைத் திறந்துவைத்து, அங்கே நம்மோடு பேசுகின்ற கடவுளின் குரலுக்கு நாம் கவனமாகச் செவிமடுத்தால் இயேசுவின் போதனைகளை நாம் அறிவளவில் மட்டுமன்றி, நம் இதய ஆழத்திலும் உணர்ந்து புரிந்துகொள்வோம். அப்போது அப்புரிதல் நம் வாழ்வில் ஒரு மாற்றத்தையும் கொணரும். இவ்வாறு நாம் மனம் மாறிய மனிதராக வாழ வேண்டும் என்பதே இயேசுவின் போதனையின் நோக்கம். 

ஜப்பான் சிறையில் இருந்த ஒரு கொலையாளி உவமைகளைப் படித்ததால் மனம் திருந்தியதாக வரலாறு உண்டு. 2ஆவது உலகப்போரின் போது படகு விபத்தில் சிக்கிய மூவர் பற்றி படகு என்ற நூலில் நாம் அவர்கள் பட்ட சிரமத்தைப் படிக்கின்றோம். நம்பிக்கை இழந்து இறந்திருக்க வேண்டிய இவர்கள் விவிலியக் கதைகளை மெதுவாகச் சொல்லக் கேட்டு அவற்றை ஆய்ந்து தெளிந்து ஒரு சிறிய ரப்பர் படகில் 34 நாட்கள் தத்தளித்து 1000 மைல்களுக்கு அப்பால் கரை சேர்திருக்கின்றனர். என் அயலான் யார் என்ற கதை ஆல்பர்ட் ஸ்வைட்சர் போன்ற மிகச் சிறந்த மருத்துவர்களை ஆப்பிரிக்க மக்களுக்குச் சேவை செய்யத் தூண்டியது. எனவே உவமைக்கதைகள் நம்மை கவர்ந்து இழுக்கும் தன்மையுடையவை. மனத்தில் ஆழமாக சித்திரம் ஒன்றை வரைந்து வண்ணம் தீட்டிவிடுவதால் அவை போதனை செய்வதற்கு ஏற்ற ஊடகமாக உள்ளன.அந்த உவமைக்கதைகள் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டுவதோடு வாழ்க்கையைப் பிரதிபலிக்கின்றன. அதன் விளைவாக அவை மிக ஆழமான தாக்கத்தை வாழ்வில் ஏற்படுத்துகின்றன. 

ஒருவர் நிலத்தில் புதைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அவர் அதை மூடி மறைத்துவிட்டு மகிழ்ச்சியுடன் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக் கொள்கிறார். விண்ணரசு இப்புதையலுக்கு ஒப்பாகும். ஒருவருக்குக் கிடைக்கும் மிகப் பெரிய புதையல் கிறிஸ்துவின் உறவும் நட்புமாகும். நற்செய்தி விலை மதிப்பில்லாத புதையல். கிறிஸ்துவின் அன்பு நம்மை கிறிஸ்துவாகவே மாற்றும் சக்தி கொண்டது. தமது உடைமைகளையெல்லாம் விற்றுவிட்டு புதையல் மறைந்திருக்கும் நிலத்தை வாங்குவது போல, ஒருவர் கிறிஸ்துவுக்காக தம்மடைய எல்லாவற்றையும் இழக்க நேரிடலாம். அவ்வாறு செய்வது தியாகம் அல்ல. மாறாக இயேசுவைக் கண்ட மகிழ்ச்சியில் நாம் இழப்பது ஒரு சிறு துரும்பாகும். கிறிஸ்துவுக்கும் நம்மைச் சீடர்களாகப் பெறுவதில் மகிழ்ச்சிதான். கிறிஸ்துவுக்காக நான் அனைத்தையும் குப்பை எனக் கருதுகிறேன் என மகிழ்ச்சியோடு முழங்குவார் தூய பவுல். நான் வாழ்ந்தால் கிறிஸ்துவுக்காக , நான் இறப்பதும் எனக்கு ஆதாயமே. புதையலைப் பார்த்தவன் சென்றான், தனக்கு உள்ளவற்றையெல்லாம் விற்று வந்தான். நிலத்தை வாங்கித் தனதாக்கினான். இறை அரசு அவ்வாறு ஒப்புமையில்லாத விலை மதிப்பில்லாத புதையல் என்பதை இந்த உவமை காட்டுகிறது . 

உயர்ந்த குறிக்கோளுக்காக நாம் எதையும் தியாகம் செய்யத் தயங்கக் கூடாது. நாம் அனைவருமே வாழ்வில் புதையல் தேடும் ஒருவரைப் போல முழுமையான உறுதியோடு செயல்படவேண்டும். நாம் நாளும் உயர்ந்த மனிதர்களாக வாழ முயன்று வெற்றி பெற்றால் அது வாழ்க்கையில் நாம் பெறும் மாபெரும் வெற்றியாகும். 

Thursday, July 17, 2014

ஒரு சில மனிதர்களின் வாழ்வையாவது தொட முயற்சிப்போமா

20.07.2014'" 
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர் 

இன்று எமக்குத்தரப்படும் பைபிள் பகுதியில் இயேசு உவமைக்கதைகள்வழியாக பேசுகிறார். நமக்கு இயேசு மூன்று உவமைக்கதைகளை இன்று கூறுகின்றார்:  நல்ல விதைகளை-களைகள், கடுகு விதை,
புளிப்பு மா.   ஏன் இயேசு மக்கள் கூட்டத்துக்கு உவமைக் கதைகள் கூறிப் போதித்தார் என்ற கேள்வி நாமக்குள் எழும்.

'ஒரு நிமிட ஞானம்" என்ற நூலில் காணப்படும் எளியதொரு கதை நாம் கேட்கும் இந்த கேள்விக்கு விடைதர  உதவியாக இருக்கும்: ஒரு குரு எப்போதும் கதைகளையேக் கூறிவந்தார். அவர் கூறிய கதைகள் அவரது சீடர்களுக்குப் பிடித்திருந்தன. இருந்தாலும், இன்னும் ஆழமான உண்மைகளை தங்கள் குரு கற்றுத் தரவேண்டும் என்று சீடர்கள் கேட்க ஆரம்பித்தனர். அவர்கள் என்னதான் வற்புறுத்திக் கேட்டாலும், குரு சொன்ன ஒரே பதில் இதுதான்: 'மனிதர்களுக்கும், உண்மைக்கும் இடையே உள்ள சுருக்கமான வழி, கதையே. இதை நீங்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை."

உண்மைக்கும், எமக்கும், உண்மைக்கடவுளுக்கும், எமக்கும் இடையே உள்ள சுருக்கமான வழி கதைகளே என்று இயேசு உணர்ந்திருந்தார். அதுவரை, மதத் தலைவர்களால் இஸ்ரயேல் மக்களுக்கு அறிமுகமான கடவுள், கல்லில் பொறிக்கப்பட்ட கட்டளைகளில் உறைந்திருந்த கடவுள். அவர் மக்களிடமிருந்து வெகு தூரத்தில் வாழ்ந்துவந்தார். அத்தகையக் கடவுளை, கனிவான ஒரு தந்தையாக கதைவடிவில் இயேசு இஸ்ரயேல் மக்களுக்கு மீண்டும் அறிமுகம் செய்துவைத்தார். 

நாடு, மதம், மொழி,கலாசாரம், என்ற எல்லைகளைக் கடந்து செல்லும் மற்றோர் ஆற்றல் கதைகளுக்கு உண்டு. இத்துடன், மிக முக்கியமாக, காலத்தைக் கடந்து செல்லும் ஆற்றலும் கதைகளுக்கு உண்டு. கதைகளுக்கு உள்ள இவ்வகை ஆற்றலால்தான் இயேசு கூறிய உவமைகதைகள் அவர் வாழ்ந்த குறுகிய நிலப்பரப்பைத் தாண்டியும், 21 நூற்றாண்டுகளைத் தாண்டியம், நம் மத்தியில் இன்றும்வாழ்ந்து வருகின்றன. கதைகளைப்பற்றி, இந்த அறிமுகத்தை இன்று தருவதற்கு இரு காரணங்கள் உண்டு. 

முதலில் களைகள் என்ற உவமைக்கதையிலிருந்து இயேசு சொல்ல விரும்புகிற செய்தி நாம் வாழும் இந்த உலகில் களைகள் என்று சொல்லப்படும் அலகையின் ஆதிக்கம் எப்போதும் இருக்கும். அந்த சாத்தான் தனது வலிமையால், எம்மை  மயக்கி, குழப்பி தன்னுடைய ஆதிக்கத்தின் பிடியில் வைத்திருக்கும். நாம் அதைப்பார்த்து பதற்றப்படத் தேவையில்லை. ஆனால், தீய சக்திகள் இருக்கிறது என்ற உணர்வு நமக்கு வேண்டும். அதைத்தவிர்க்க வேண்டும் என்ற உறுதி நமக்கு வேண்டும். அந்த உணர்வே களைகளிடமிருந்து காப்பாற்றிவிடும். பொறுமை இழக்காது, உறுதியாக இருக்கிறபோது, தீய எண்ணங்களும், சிந்தனைகளும் நம்மை ஒன்றும் செய்துவிட முடியாது. நம்மை கறைபடுத்த முடியாது. தீய எண்ணங்களும், கெட்ட சிந்தனைகளும் நம்மை ஆக்கிரமிக்கிறபோது, பதற்றப்படாமல், தொடர்ந்து கடவுளைப் பற்றிக்கொண்டிருப்போம். நம்முடைய உறுதியும், நம்முடைய பிடியும் ஆண்டவரில் இருக்கிறவரை, தீயவன் நம்மை எதுவும் செய்துவிட முடியாது என்பதே ஆகும் 

அடுத்து கடுகு விதை என்ற உவமைக்கதையிலிருந்து இயேசு சொல்ல விரும்புகிற செய்தி உலகில் நாம் என்னால் எந்த மாற்றமும் செய்ய முடியாது என்ற சலிப்போ, விரக்தியோ கொள்ளக்கூடாது வாருங்கள், கடுகு விதை எவ்வளவு சிறியது. ஆனாலும், அது வளர்ந்து பெரிய மரமாகிறது. வானத்துப் பறவைகளுக்கு நிழல் கொடுக்கின்றது.

அடுத்து புளிப்பு மா என்ற உவமைக்கதையிலிருந்து இயேசு சொல்ல விரும்புகிற செய்தி  புளிப்பு மாவின் அளவு சிறியது. இருப்பினும், மாவு முழுவதையும் அது புளிப்பேற்றுகிறது. அதுபோலத்தான், ஒவ்வொரு சிறிய செயலும், ஒவ்வொரு சிறிய சொல்லும் அவை மௌனமாக இந்த உலகின்மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதே ஆகும்

நாமும் ஒவ்வொரு சிறிய செயல், ஒரு புன்னகை, ஒரு பாராட்டு வார்த்தை, ஒரு அன்பான தொடுதல். போன்றவற்றின் வழியாக ஒரு சில மனிதர்களின் வாழ்வைத் தொட முயற்சிப்போம். இறுதியில், ஏராளமான மனிதர்கள் தொடப்படுவார்கள்.இந்த உலகம் இறைவன் வாழும் இனிய பூமியாக மாறும். 

அன்றாட வாழ்க்கையில் மக்கள் சந்திக்கின்ற நிகழ்ச்சிகளை இயேசு கதையாக எடுத்துச் சொல்லி, அவற்றின் வழியாக மக்களுக்கு இறையாட்சி பற்றிய உண்மைகளை உணர்த்தினார். எனவே, இயேசுவின் உவமைக்கதைகளை  கேட்ட எம்மை இயேசு சிந்திக்கத் தூண்டுகிறார். சிந்திப்போம் மாபெரும் மாற்றம் நம்மில் நிகழ்த்துவோம்.

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff