Wednesday, February 17, 2010

நெற்றியில் திருநீறு ஏன்?; - கத்தோலிக்க நாப்பது நாள் நோன்பின் விளக்கம்.

ம.பிரான்சிஸ்க்.
கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்.

விஞ்ஞனத்தின் விந்தைகளில் வியந்து நிற்கும் மனிதம் கணனியில் கண்டதையும் கண்டுகொள்ளும் யுகத்தில் நடைபோட்டுக் கொண்டு இருக்கின்றான். அவன் இன்னும் எத்தனையோ அறிவியல் முன்னேற்றத்தை எட்டிப் பிடித்தாலும் மறுபக்கத்தில் தன்னில் ஓரு வெறுமை இருப்பதை உணருகின்றான். தனக்கு மேல் ஒரு சக்தி இருப்பதை ஏற்றுக்கொள்ளுகின்றான்.

தனக்கு மேல் உள்ள அந்த சக்தியை கடவுள் என இனம் கண்டு அதனோடு உறவு கொள்ள சடங்குகளை திருவழியாட்டில் உருவாக்குகின்றான். மனித மனங்களை இணைக்கின்ற இத் திரு வழிபாட்டுச் சடங்குகளில் திரு அடையாளங்கள் பயன்; படுத்தப்படுகின்றன. இவ் திரு அடையாளங்கள் வழிபாட்டை மென் மேலும் பண்படுத்தி செயல் வடிவம் கொடுத்து உயிர்பூட்டி வளப்படுத்துகின்றது என்றால் மிகையாகாது.

திருவழிபாட்டு ஆண்டுச் சக்கரத்தில் தவக்காலமும் அல்லது மனமாற்றத்தின் காலமும் ஒன்றாகும். இக் காலம் திருநீற்று புதனுடன் ஆரம்பமாகுகின்றது. அன்றய தினம் திருப்பலி;ப் பூசையில் பங்கு கொள்பவர்களின் நெற்றியில் சாம்பலால் சிலுவை அடையாளம் இடப்படுகின்றது. ஏன் சிலுவை அடையாளம் சாம்பலால் இடப்படுகின்றது? பலரும் வியந்து விடைதேடும் வினாதான் இது.
திருவிலிவியத்தில் மனிதனுடைய பலவீனத்தையும் அழிவையும் குறிக்கும் ஒர் அடையாளமாக சாம்பல் சித்தரிக்கப்பட்டுள்ளது என்பதை பல இடங்களில் நாம் காணலாம். அத்துடன் சாம்பல் மனமாற்றத்தை குறிக்கும் ஒர் அடையாளமாகவும் திரு விலிவியத்தில் பயன்படுத்தப்படுகின்றது.
சோதோம் நகரை அழிவில் இருந்து காப்பாற்ற ஆபிரகாம் இறைவனிடம் பரிந்து பேசிய போது தூசியும் சாம்பலமாகிய நான் என் தலைவருடன் பேசத் துணிந்து விட்டேன் என்று தனது பலவீனத்தை வெளிப்டுத்துகின்றார் (தொ.நூ 18:27)

பலதீமைகளை செய்து பரமனுக்கு தொலைவில் இருந்த நினிவே மக்கள் இறைவனின் தண்டனையில் இருந்து தப்பி அவரோடு தம்மை ஐக்கியப்படுத்திக் கொள்வதற்காக மனம் மாறுகையில் சாக்கு உடை உடுத்திக் கொண்டு சாம்பலின் மீது உட்கார்ந்தார்கள் என்று திருவிலிவியத்தில் (யோனா 3:6) கூறப்படுகின்றது.

இஸ்ராயேல் மக்கள்மீது வரவிருந்த அழிவை முன் குறித்து அதிலிருந்து விடுபடுவதற்காக எரேமியா இறைவாக்கினர் “ஓ மகளாகிய என் மக்களே! சாக்கு உடை உடுத்துங்கள், சாம்பலில் புரளுங்கள், இறந்த ஒரே பிள்ளைக்காகத் துயருற்று அழுவதுபோல் மனமுடைந்து அழுதுபுலம்புங்கள். ஏனெனில், அழிப்பவன் திடிரென நமக்கு எதிராக வருவான்”. (ஏரேமியா6:26) என இஸ்ராயேல் மக்களுக்குக் கூறி மனம்திரும்பும்படி வேண்டனார்.

திருந்த மறுத்த கொராசின் பெத்சாய்தா நகரங்களுக்கு சாபமிடுகையில் இயேசு கொராசின் நகரே ஐயோ உனக்குக் கேடு. பெத்சாய்தா நகரே ஐயோ உனக்குக் கேடு. ஏனெனில் உங்களிடையே செய்யப்பட்ட வல்ல செயல்கள் தீர் சீதோன் நகரங்களில் செய்யப்பட்டிருத்தால் அங்குள்ள மக்கள் முன்பே சாக்கு உடை உடுத்திச் சாம்பல் பூசி மனம் மாறியிருப்பர் ( மத்: 11:21 )என்றார்

தாமார் தன் பாவத்திலிருந்து மனம் திரும்பும் பொருட்டு தன் தலைமீது சாம்பல் தூவினாள். தன் மீது இருந்த பலவண்ண ஆடையைக் கிழுpத்தாள். (2 சாமுவேல் 13:19) என வேதம் கூறுகின்றது.

மொர்தக்காய் தம் ஆடையைக் கிழித்து, சாக்கு உடைஅணிந்து, சாம்பல் பூசிக்கொண்டு, வெளியே நகரின் மையத்திற்கு சென்று ஓலமிட்டு, மனம் கசிந்த அழுதார். (எஸ்தா 4:1) என வேதம் கூறுகின்றது.

யோபு ஆண்டவருக்கு கூறிய பதில் … ஆகையால் என்னையே நொந்து கொள்ளுகின்றேன். புழுதியும் சாம்பலிலும் இருந்து மனம் வருந்துகின்றேன். (யோபு 42:6) போன்ற பகுதிகளும் மனம்திரும்பும் பொருட்டே நடைபெற்றதை நினைவுபடுத்துகின்றன.

எனவே இச் சாம்பல் பூசப்படுவது மனிதன் மண்ணாய் இருக்கின்றான் அவன் மண்ணுக்கே திரும்புவான் என்று நினைவு படுத்துகின்றது. அத்துடன் அவன் தீமைகனள எதிர்த்து போராடி பாவங்களுக்கு மன்னிப்பு கேட்டு மனம் மாறவேண்டும். இந்த நாற்பது நாளிலாவது தபக்கிருபைகள் செய்து இறைவனுடன் புதிய உறவுகளை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்பதை நினைவுபடுத்துகின்றது.

இதை நன்கு உணர்ந்து நாம் எம்முள்ளே வைத்திருக்கும் பொய் பொறாமை போன்ற பள்ளத்தாக்குகளை நிரப்பி, அகந்தை ஆதிக்க உணர்வு ஆகிய மலைக் குன்றுகனள அழித்து, தீய செயல்கள் இச்சை போன்ற கோணலானவைகளை நேராக்கி, ஏரிச்சல் சண்டை சச்சைகள் போன்ற கரடுமுரடுகளை சமதளமாக்கி, வறட்டுக் கௌரவ சாக்கடைகளைத் தூய்மையாக்கி, முறிந்து முடங்கி கிடக்;கும் உறவுகளை மீண்டும் அன்பால் கட்டி இறைவன் அருளும் பாவ மன்னிப்பை பெற எம்மில் திருநீற்றை ஏற்றுக்கொள்வோம். நாம் நெற்றியில் ஏற்றுக்கொள்ளும் இத் திருநீறு தவக்காலத்தின் ஊடாக மனம் மாறிய மைந்தர்களாக கிறிஸ்துவின் உயிர்ப்பு விழாவை அர்த்தமுள்ளதாக கொண்டாட ஆயத்தமாக வேண்டும் என்பதை தான் நினைவுபடுத்துகின்றது.

No comments:

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff