25.12.2013 ம.பிரான்சிஸ்க்- கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்.
கடவுள் பிறப்பெடுத்து உலகிற்கு வருகிறார் என்று நாம் காலம் காலமாக நம்பிவருகின்றோம். இந்த உலகுக்கும் கடவுளுக்கும் உறவு உண்டு. கடவுளுக்கு இந்த உலகின்மீது அக்கறையுண்டு என்பதைத்தான் கடவுளின் பிறப்புகள் நமக்கு உணர்த்துகின்றன. அப்படி கடவுள் உலகில் இயேசுவாக பிறப்புக் கொண்ட ஒரு நிகழ்வைத் தான் கிறித்தவர்கள் கிறிஸ்துமஸ் பெருவிழாவாகக் கொண்டாடிவருகின்றனர். பொதுவாக கடவுள் பிறந்து வருவது மக்களையும் படைப்பனைத்தையும் அழிவினின்றுகாக்கவும், அவையனைத்தும் நிறைவான நிலையான வாழ்வைக் கொண்டிருக்கவேண்டும் என்ற காரணத்திற்காகவுமே ஆகும்.
கடவுளின் பிறப்பும் ஒரு குறிப்பிட்ட பேருண்மையை நமக்கு உணர்த்துகிறது. அதாவது 'மண்ணினின்று உண்மை முளைத்தெழும்" என்னும் பைபிள் வரிகளை உண்மையில் நோக்குவோம். அவை எமக்கு வருங்காலத்தைக் காட்டுகின்றன. 'உண்மை உலகிலிருந்து முளைத்தெழுகிறது." வாக்குறுதியாய் வரும் இவ்இறை வார்த்தை ஏனைய வார்த்கைளின் வெளிப்பாடுகளுடன் இணைந்து வருகிறது: 'பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்;, நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும். மண்ணினின்று உண்மை முளைத்தெழும்; விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். நல்லதையே ஆண்டவர் அருள்வார்; நல்விளைவை நம்நாடு நல்கும். நீதி அவர்முன் செல்லும்; அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும.;" என்பதேயாகும்.
கிறிஸ்து பிறப்பில் இந்த இறைவாக்கு இன்று நிறைவேறுகிறது. பெத்லகேமில் கன்னிமரியிடம் பிறந்த இயேசுவில் பேரன்பும் உண்மையும் சந்தித்தன, நீதியும் நிறைவாழ்வும் முத்தமிட்டன, மண்ணிலிருந்து உண்மை முளைவிட்டது, விண்ணிலிருந்து நீதி கீழ்நோக்கியது. கிறிஸ்து எங்கே பிறந்தார் என்ற கேள்வியை எழுப்பும்போதும், உண்மை இவ்வுலகில் முளைத்தது என பார்க்கும்போதும். உண்மை இவ்வுலகில் கன்னிமரியிடம் பிறப்பெடுத்ததைக் காண்கின்றோம்.
'மண்ணினின்று உண்மை முளைத்தெழுந்தது. விண்ணினின்று நீதி கீழ்நோக்கியது." இறைத்தந்தையின் இதயத்தில் இருக்கும் உண்மை. உலகிலிருந்து முளைத்தெழுந்தது, ஏனெனில் அந்த உண்மை தாயின் உதரத்திலும் இருந்தது. உலகம் முழுமையையும் தாங்கிப்பிடிக்கும் உண்மை இம்மண்ணிலிருந்து கிளம்பி வந்தது, ஏனெனில் இது ஒரு பெண்ணின் கைகளிலிருந்து எழுந்து வந்தது. ஆகாயமும் அடக்கிக்கொள்ள முடியாத இந்த உண்மை இவ்வுலகில் எழுந்தருளி ஒரு மாடடைக் கொட்டகையில் படுத்திருக்கின்றது. மேன்மைமிகு சிறப்பு வாய்ந்த ஓர் இறைவன் இவ்வளவு தாழ்மையுடன் பிறப்பெடுப்பதால் அவருக்கு என்ன பயன்? எவ்வித பயனும் பலனுமில்லை. ஆனால், நாம் நம்பினால் அது நமக்குப் பயனுள்ளதாகும் என்பதைக் காட்டுகின்றது.
'நாம் நம்பினால்" இதுவே விசுவாச சக்தி. கடவுளே அனைத்தையும் படைத்தார், அவரே இயலக்கூடாததை இயலக்கூடியதாக்கினார். ஆம். மனு உருவானார். வரம்பற்ற அவரது அன்பின் ஆற்றல் மனிதர்களின் புரிந்துகொள்ளுதலையும் தாண்டி உருப்பெற்றது. முடிவற்றவர் குழந்தையாய் உருவெடுத்து மனித சமுதாயத்தில் நுழைந்தார். இருப்பினும் நாம்; எம் இதயக்கதவுகளைத் திறக்கவில்லையெனில். அவர்; எம் இதயத்திற்குள் நுழைய இயலாது. உண்மை பிறந்துள்ளது. இறைவன் பிறந்துள்ளார். இவ்வுலகம் கனியைத் தந்துள்ளது.
கிறிஸ்துவின் பிறப்பின் நிகழ்வுகளை உற்றுக் கவனித்தால் அவை இன்று வசதியும் செல்வமும் பணபலமும் படைபலமும் ஆயுதபலமும் அறிவியல் வளர்ச்சியும் தொழில்நுட்பத்திறனும் மிக்க நமது சமுதாயத்திற்கு தேவையான பல பேருண்மைகளை தாங்கியனவாக உள்ளன.
கிறிஸ்துவினுடைய பிறப்பு மின்விளக்குகளும் மீடியாவெளிச்சமும் நிறைந்த சூழலிலோ, படிப்பறிவு நிறைந்த அறிஞர்களின் மத்தியிலோ, செல்வம் கொழித்த வசதிகள் மலிந்த குடியிருப்பிலோ நிகழாமல், ஆள் அரவமற்ற இருளான இடத்தில், கண்டுக்கொள்ளப்படாத ஆட்டிடையர்கள் மத்தியில், அசிங்கங்கமும் அழுக்குமான மாட்டுக் குடிலில் நிகழ்ந்தது. கடவுள் இவ்வாறு பிறந்தது, வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் அவர் எதிரானவர் அல்ல. மாறாக, அவற்றில் மறைந்திருக்கும் முரண்பாடுகளையும், அவலங்களையும் சுட்டிக்காட்டி வாழ்வின் அவசியங்களின் மட்டில் நமது கவனத்தைத் திருப்புவதற்காகவே எனலாம்.
புதிய பொருளாதாரப் புரட்சியாக இருக்கின்ற உலகமயமாக்குதல் பல வளர்ச்சிகளை வென்றெடுத் துள்ளது. வசதிகளையும் வருவாயையும் பெருக்கித்தந்திருக்கின்றது. ஆனால் அவற்றின் பின்னணியில் உள்ள தளர்ச்சிகள், புறக்கணிப்புகள், மறுக்கப்படுதல்கள், மறக்கப்படுதல்கள் மற்றும் வேரறுக்கப்படுதல் பெரும்பாலும் வெளிச்சத்திற்கு வருவதில்லை. ஆடம்பரங்களும், சொகுசு சாதனங்களும், தொலைத்தொடர்பு சாதனங்களும் அக்கறைக் காட்டப்பட்டு அத்தியாவசிங்கள், இன்றியமையாதவைகள் கண்டுக்கொள்ளப்படாமல் விடப்பட்டுவிட்டன. இதற்கு எடுத்துக்காட்டு குடும்ப உறவிலும் பாதிப்பு ஏற்படுத்திவிட்டுள்ளது. கணவனும் மனைவியுமாக கை நிறைய சம்பாதிக்க முடிகிறது. ஆனால் விவாகரத்து அதிகரித்துக் கொண்டேபோகிறது. பல அறைகள் கொண்ட மாளிகைப் போன்ற வீடுகள் மலிந்துக் கொண்டிருக்கின்றன, ஆனால் அதில் வாழத்தான் போதிய மனிதர்கள் இல்லை. குழந்தைகளுக்கு கேட்டதெல்லாம் கிடைத்துவிடுகிறது, ஆனால் பெற்றோரின் உடனிருப்பு கிடைப்பதில்லை. உயரமான கட்டிடங்கள், ஆனால் தாழ்வான எண்ணங்கள். வகைவகையான உணவுகள், ஆனால் அவை ஊட்டச்சத்து குன்றிப்போனவை. தொலைத்தூரங்களை இணைக்க கம்பளம் விரித்தாற்போல நெடுஞ்சாலைகள், ஆனால் அடுத்த வீட்டார் கண்டுக்கொள்ளப்படுவதில்லை. அலைபேசிக்கொண்டு யாரோடுயெல்லாமோ எங்கங்கோ இருப்பவர்களோடு பேசமுடிகிறது, ஆனால் அடுத்திருப்பவரோட உரையாட மனமில்லை. உணர்வே இன்றி உறங்குகின்றோமா? இது உறக்கமா? அல்லது மயக்கமா? மனிதவாழ்வு களவாடப் பட்டுள்ளதே! சிறைபிடிக்கப் பட்டுள்ளதே! இதனை வென்றெடுக்கவே மனுமகன் மனிதன் ஆனார் என்னும் பெருவிழாவை கொண்டாடும் நாம் ஓர் உறுதி கொள்வோமா? கிறிஸ்துவின் பிறப்பு, சாதி, சமயம், இனம், மொழி என்பவற்றை கடந்ததென்பதை எங்கும் எடுத்துரைப்போம் தடைகளைத் தகர்த்தெறிந்து கிறிஸ்துவிற்காய் எம்மையே அடுத்தவருக்கு தாரைவார்த்து கொடுப்போம். அப்போது எம்பணிக்காய் இமயமே இறங்கி வரும். கிறிஸ்துபிறப்பு விழா எம்மில் அர்த்தம் பெறும்.
ஆழமாகக் வடுக்களைத் தந்து காயமுறவைத்த, பிரிவினைகளைச் சுமக்கவைத்த போர் போய்முடிந்துள்ளஇன்நிலையில் தற்போது மெதுமெதுவாக நம்நாட்டிற்கு அமைதி மொட்டவிழ்கிறது இவ்வோளையில் இயேசுவின் பிறப்பால் ஆசீர்வதிக்கப்பட்டு நாட்டுமக்களாகிய நாம் அன்பை எம்மண்ணில் வளர்த்து அனைவரும் ஒன்றிணைந்து நற்சமூகங்களை கட்டியெழுப்பி உண்மை மீதான மதிப்பு, மனிதருக்கான மாண்பு தளைத்தோங்கிட செய்வோம்.
அன்பும் உண்மையும், நீதியும் அமைதியும் சந்தித்தன. பெத்லகேமில் மரியன்னையிடம் பிறந்தவர், மனுக்குலத்திற்குள் மனுவுரு எடுத்துள்ளார். மனிதனாகப் பிறந்தார் இறைமகன், கடவுள் வரலாற்றில் தோன்றினார். அவரின் பிறப்பு அனைத்து மனித குலத்திற்கும் புது வாழ்வின் முளையானது. ஒவ்வொரு நிலமும் நல்நிலமாக மாறி, அங்கு அன்பு, அமைதி, உண்மை, நீதி ஏற்கப்பட்டு, முளைவிடட்டும். அனைவருக்கும் கிறிஸ்து பிறப்புப் பெருவிழா வாழ்த்துக்களும் புதுவருட வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
No comments:
Post a Comment