01.01.2020'"கையில் ஒளியை ஏந்தி இருளைத் துரத்திய மேரிமாதா கடவுளின் அன்னை திருவிழா
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்- ஊடகக்கற்கைநெறி ஆசிரியர்.
ஆண்டின் முதல் நாளை கத்தோலிக்க திருச்சபை, மேரிமாதா (அன்னை மரியா)-இறைவனின் தாய் என்னும் திருவிழாவை சிறப்பாக கொண்டாடி வருகின்றது. மேரிமாதா, இறைவனின் தாய் என்கிற இந்ததிருவிழாவின் முக்கியத்துவம் என்ன? எதற்காக மேரிமாதா இறைவனின்தாய் என்று அழைக்கப் படவேண்டும்? என்ற கேள்விகளை நாம் கேட்டுக்கொண்டால் அதற்கு விடைதேடவேண்டிய கட்டயம் எமக்குஉண்டு. அன்னைமரியா ஆரம்பகால திருச்சபையில் பெற்றிருந்த பங்கும், மரியியல் (மரியாள் பற்றியஆய்வு) சிந்தனைகளையும், மரியாளின் வணக்கத்தையும் கத்தோலிக் கத் திருச்சபை உயிரோட்டத் துடன் உறுதிப்படுத்தியிருந்தது. இயேசவின் சீடர்களைத்தொடர்ந்து திருத்தந்தையர்களும் மரியியல் சிந்தனைகளை அவ்வப்போது போதித்துள்ளனர். புனிதர்களாகிய: ஜஸ்டின், இரேனியுஸ், தெர்த்தூலியன், அலெக்ஸான் டிரியா கிளமெந்து, ஓரிஜன், நீசாநகர கிரகோரி, அம்புரோஸ், அகுஸ்தினார், இரேணிமுஸ் போன்றோரின் மரியியல்சிந்தனைகள் மேரிமாதாவின் வணக்கத்திற்குமேலும் மெருகூட்டுவ தாக அமைந்தன.
மரியாவைப் பற்றிய விசுவாசக் கோட்பாடுகள்.
மேரிமாதா (மரியாளைப்) பற்றி எத்தனையோ நம்பிக்கைகள் இருக்கின்ற போதிலும்,நான்கு கோட்பாடுகள் விசுவாசக்கோட்பாடுகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.(1).இறைவனின்தாய் மரியா-கி.பி431, (2).என்றும் கன்னி மரியா-கி.பி553,(3).அமலஉற்பவிமரியா-கி.பி1854, (4).விண்ணிற்கு எடுத்துச் செல்லப்பட்ட மரியா-கி.பி1950, இந்த நான்கில் காலத்தால் பழமையானதும், முதன்மையானதும் இறைவனின் தாய் மரியா என்னும் விசுவாசக் கோட்பாடேயாகும்.
தந்தையில்லாமல் கடவுளால் பிறக்க முடிந்தபோது, தாயில்லாமல் அவரால் பிறக்க முடியவில்லை. மேரிமாதாவினால் கடவுள் மகிமைக்குள்ளானர் என்பதல்ல பொருள். மகிமை பொருந்திய கடவுளை ஈன்றெடுத்ததால் மேரிமாதா இறைவனின் தாயாகும் பேறுபெற்றார் என்பதே கத்தோலிக்க விசுவாசம். அன்னை மரியாளுக்கு ஆயிரம் சிறப்பியல்புகள் இருந்தாலும் இறைவனின் தாய் என்பதே கிறிஸ்துவின் தாய்க்கு மகிமை சேர்ப்பதாக உள்ளது.
எனவே மரியா எவ்வாறு இறைவனின்தாய் என்று அழைக்கப்பட்டால் என்பதன் வரலாற்றுப்பின்னனி யுடன் நோக்குவோம்: கி.பி 5 நூற்றாண்டில், நெஸ்டோரியஸ் என்னும் கான்ஸ்டாண்டி நோபிளின் ஆயர், 429ம்ஆண்டு, ஒரு ஞாயிற்றுக்கிழமை மறையுரையில், அன்னை மரியாளைப்பற்றி ஒரு தப்பறைக் கொள்கையைப் போதித்தார். இயேசுவில் இரண்டு ஆள்கள் இருக்கிறார்கள்: மனித இயேசுஒன்று, தெய்வீகஇயேசு இன்னொன்று. அவரைப் பொறுத்தவரையில், மரியாள் பெற்றெடுத்தது மனித இயேசுவைத் தான். எனவே, அவள் இயேசுவின் அன்னை என்றுதான் அழைக்கப்பட வேண்டுமே தவிர, கடவுளின் தாய் என்று அழைக்கப்படமுடியாது. இயேசு மரியாவிடமிருந்து பிறக்கும்போது, சாதாரண மனிதராகத்தான் பிறந்தார். பின்னர் தம் வாழ்க்கைக்காலத்தில் கடவுளாக மாறினார் என்று கூறினார். ஆனால், அதுவரை திருச்சபையின் போதனை, இயேசு ஒரே ஆள்தான். ஆனால், அவரிடத்தில் இரண்டு தன்மைகள் இருந்தன்: (One Person and that is Divine Person but he had
two natures namely human and divine) ஒன்று மனிதத்தன்மை, மற்றொன்று தெய்வீகத்தன்மை. நெஸ்தோரியசின் இந்தபோதனை, மக்கள்மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனை ஒட்டி எபேசில் ஆயர்அலெக்ஸான் டரியா, ஆயர் சிரில் தலைமையில் நடைபெற்ற திருச்சங்கத்தில் நெஸ்டோரி யஸ் மற்றும் அவருடைய போதனை கண்டனம் செய்யப்பட்டது. கி.பி431ஆம் ஆண்டு யூன் மாதம் 7ஆம் திகதி முதல் 31ஆம் திகதிவரை நடைபெற்ற எபேசு திருச்சங்கம் மரியா கடவுளின் தாய் என்று அறுதியிட்டு உறுதிபட பிரகடணம் செய்தது.
இயேசு மனித இயல்பு, இறை இயல்பு ஆகிய இரண்டு இயல்புகளையும் கொண்டவர். 'மரியா கடவுளின் தாய்". இந்தத் திருச்சங்கத்தில் இயேசு இறை மற்றும் மனித இயல்புகளைக் கொண்ட ஒரே ஆள் என்பதை மீண்டும் பிரகடனம் செய்யப்பட்டது. அதாவது மரியா கடவுளாகிய இயேசுவைப் பெற்றெடுத்த தால் கடவுளின் தாய் என்றே அழைக்கப்படவேண்டும். இந்த அறிவிப்பைக் கேட்ட எபேசில் கூடியிருந்த மக்கள் ஆர்ப்பரித்து இறைவ னையும், அன்னை மரியாளையும் போற்றினர்.
இயேசு கடவுளின் மகன் மட்டுமல்ல. இயேசு கடவுள் ஆவார். இயேசு கடவுள் என்றால் மரியா கடவுளின் தாயே. தாய் அன்பை உலக மொழிகளில் எடுத்துரைக்க போதிய வார்த்தைகளே இல்லை. இதனை இந்த சின்ன சம்பவம் எடுத்து விளக்கும் என்று நினைக்கின்றோம்: தாயும் குழந்தையும் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த வேளை கொடியதேள் தாயை கொட்டி விடுகிறது. சடரென கண்விழித்த தாய் நல்ல வேளை தேள் என் குழந்தையை கொட்டவில்லை. என்று குழந்தையை தூக்குp அன்பு முத்தம் பகிர்ந்தாள். இதுதான் அன்னையின் தாயன்பு. தாயின் அன்பிற்கு இணையேதுவும் இல்லை. ஆசைப்பட்ட எல்லாவற்றையும் பணமிருந்தால் வாங்கிவிடலாம். ஆனால் அம்மாவை வாங்க முடியுமா? என்கிறது ஒரு சினிமாப்படல் வரி. அதையே புனித ஆகுஸ்தினார் ஒரு மனிதனின் உடலில் உள்ள உறுப்புகள் எல்லாம் நாக்குகளாக மாறினும் மேரிமாதாவை, அவருடைய தாய்மைக்கு ஏற்றவாறு புகழ முடியாது என்கின்றார்.
இரண்டாம் வத்திக்கான் சங்கம் - இறைவனின் தாய்
கத்தோலிக்க திருச்சபையில் இரண்டாம் வத்திக்கான் சங்கம் மிக முக்கிய மானது. இந்த சங்கத்தில் திருச்சபை என்ற ஏடு மரியாவின் தெய்வீகத் தாய்மையை முன்வைப்பதற்கு ஒரு முக்கியக் காரணம் இறை வனின் அன்னை என்ற பழைய மறை பொருளில் திருச்சங்கம் ஒரு புதிய உண்மையைக் கண்டது. மரியாவின் தெய்வீகத் தாய்மை உருவகத்தில் திருச்சபையே ஓர் அன்னையாகிறது. பைபிளில் யோவான் நற்செய்தியை எழுதிய யோவான்: மேரிமாதாவை சீடர்கள் குழுவின் ஓர் அங்கமாகவே காண்கின்றார். அதன் பொருள்: உலகெல்லாம் ஆள்பவரை பெற்றெடுத்தார் மேரிமாதா. திருச்சபையை, உலகை வழிநடத்தும் கிறிஸ்துவைத் தொடர்ந்து ஈன்றெடுக்கின்றது என்கின்றார் ஹிப்போலிட்டஸ். புனித அகுஸ்தினார், கிறிஸ்துவின் சகோதரர்களைப் பெற்றெடுக்கும் திருச்சபை மேரிமாதா போன்று கன்னி அன்னை என்று வலியுறுத்துகின்றார்.
மக்களின் மீட்புக்காக மேரிமாதாவின் சேவையில் மலர்ந்தது அவருடைய தாய்மை. தூய ஆவியின் பிரசன்னத்தினால் உருவானது மேரிமாதாவின் தாய்மை. இயேசுவின் இறைஇயல்பும், மனித இயல்பும் பிரிக்க முடியாத அளவுக்கு மேரிமாதாவால் ஒன்றானது. இறைவன் ஒருபெண் வயிற்றில் கருவானார் என்பது அனைத்து மனித குலத்துக்கும் இறை அந்தஸ்து உயர்கிறது. இவர் மீட்பரின் அன்னையாகவும் எவரையும் மிஞ்சும் முறையில் ஆண்டவரோடு தாராளமாக ஒத்துழைத்த துணையாளராகவும் தாழ்மை கொண்ட அடியாராகவும் விளங்குகின்றார்.
கிறிஸ்துவைகருத்தாங்கி பெற்றெடுத்துப்பேணி வளர்த்தார், கோயிலில் கடவுளுக்குஅர்ப்பணித்து இறுதியாகச் சிலுவையில் உயிர்விடும் தம் மகனோடு மேரிமாதாவும்; துன்பப்பட்டார். எனவே மனிதருக்கு அருள் வாழ்வைப் பெற்றுத்தர கீழ்ப்படிதல், நம்பிக்கை, விசுவாசம், அன்பு போன்ற நற்குணங்களால் நிறைவாழ்வுச் செயலில் மிகச்சிறப்பானவிதத்தில் ஒத்துழைத்தவர். எனவே அருள் வாழ்வில் 'மேரிமாதா" தாயாக அமைந்து ள்ளார். 'ஆராதனை கடவுளுக்கு மட்டும் தான். மற்ற வணக்கங்கள் புனிதர்க ளுக்கு. இவ்வடிப்படையில் மேரிமாதா கிறிஸ்துவின் தாயும், இறைவனின் தாயுமாக இருப்பதால் அவருக்கு சிறப்பான வணக்கம் செலுத்தப்படு கின்றது" என்று இரண்டாம் வத்திக்கான் சங்கம் கூறுகின்றது.
பைபிளில் மேரிமாதா இறைவனின் தாய்
இறைவனின் தாய் மேரிமாதாஎன்னும் கோட்பாட்டிற்கு நிறைய பைபிள் ஆதாரங்கள் உள்ளன. பைபிளில் நற்செய்தி நூல்களை எழுதிய நான்கு நற்செய்தியாளர்களும் மேரிமாதா இறைவனின் அன்னை என குறிப்பிடுகின்றனரர். பைபிளில் மேரிமாதாவை இறைவனின் அன்னை என்றழைக்கும் மேற்கோள்கள் சில: மத்தேயு 2:18, 2:11, 12:46, 13:55, மாற்கு 3:31, லூக்கா 2:34,48,51, 8:19, யோவான் 2:5, 19:25.
மேரிமாதாவிற்கு எதிராக தற்காலத்தில் பலதவறான போதனைகள் பரப்பப்படுகிறன. அந்த போதனைகள் போலிகளால் சோடிக்கக்படுபவை. அவற்றைஅடையாளம் கண்டுகொள்வோம்: மேரிமாதா விடியலின் பொழுது. சத்தியத்தின் சாகாவரம். தரணிக்கு வந்தபொழுதுதான் பூமி தன்னை புதுப்பித்துக் கொண்டது. எங்கள் பாவஇருளில் வெளிச்சநிலா. ஆண்டவரின் தூதில் ஆனந்தம் கண்டவள். ஆண்டவனை தனக்குள்ளே கொண்டவள். ஆகட்டும் என்றதனால் ஆண்டவனின் தாயானவள். மழலையை உறங்கவைக்கும் தாலாட்டுல்ல பூமியே விழிப்பதற்கான பூபாளம் பாடியவள். ஆண்டவனை அழிக்க அரசன் ஏரோது துரத்தி வருகிறனான் என்று கேள்விப் பட்டதும் துள்ளி எழுந்து கையில் ஒளியை ஏந்தி இருயைத்துரத்தியவள். பாதுகை இல்லாதபாதங்களோடு நடந்தவள். அன்றே தொடங்கியது மேரிமாதா வின் மீட்பின்புனிதப் பயணம். வெளிச்சத்தின் விலாசம் எகிப்து வந்து நின்றது. ஆகாயத்தை அழிப்பதற்கு தூசிகள் துரத்தமுடியுhமா எனச்செயற்பட்டு தன்னை இறைத்திட்டத்திற்கு முழுமையாக அர்ப்பணித் தவள். அந்த முழுமையான, நிறைவான, அர்ப்பண வாழ்வே அவரை உலகிற்கு, இறைவனின் தாய், நம் அனைவரின் தாயாக திருச்சபை நமக்கு பறைச்சாற்றுகின்றது. மேரிமாதாவின் சீடத்துவம் நம் தனிமனித வாழ்வில் இறைமனித உறவிலும் ஒன்றித்திருக்க வழிகாட்டுகிறது. இறைவன் இயேசுவை தனது உதிரத்திலே கொண்டிருந்து மேரிமாதா உலகிற்கு கொடையாக அளித்தாள்;. அதைப்போல இறைவனை உலகமக்களுக் கெல்லாம் நாம் வழங்கவேண்டும். மேரிமாதாவைப்போல நாமும் அருள்மிக்க வர்களாய் வாழ்வோம். அப்பொழுது கையில் ஒளியை ஏந்தி இருளைத் துரத்திய மேரிமாதா கடவுளின் அன்னை என்னும் திருவிழா அர்த்தம் நிறைந்ததாக மாறும்.