Thursday, July 4, 2013

இயேசுவிற்காய் ஓநாய்கள் மத்தியில் நடை போடக்கூடிய ஆட்டுக் குட்டிகளாவோம்

07.07.2013
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர் 

'அறுவடை மிகுதி, வேலையாள்களோ குறைவு ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்.  புறப்பட்டுப் போங்கள்; ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன்" இயேசு; சீடர்களுக்கு கூறும் பைபிள் பகுதி இன்று எமக்குத் தரப்படுகின்றது.  அத்துடன் தேவ அழைத்தலுக்காக வேண்டும்படி எமக்கு சொல்லப்படுகின்றது. தேவ அழைத்தல் என்றதும், குருக்கள், துறவறிகள் என்ற குறுகிய கண்ணோட்டம் நம் மனதில் எழுவதுன்டு. 'அறுவடைக்கு வேலையாள்கள் தேவை" என்று இயேசு கூறியது குருக்கள், துறவியரைக் குறித்து மட்டும் அல்ல. மாறாக, மக்களின் மனங்களில் இறையரசின் கனவுகளை விதைத்து, அதன் பலன்களை அறுவடை செய்வதற்கு துணிவுடன் முன் வரும் அத்தனை வேலையாள்களையும் நினைத்தே இயேசு இந்த வரிகளைச் சொல்லி இருப்பார்.

இறை நற்செய்தியைப் பரப்புவதற்கு 'ஓநாய்கள் மத்தியில் செல்லக்கூடிய ஆட்டுக் குட்டிகள்" இயேசுவுக்குத் தேவை. ஆடுகள் அல்ல, ஆட்டுக் குட்டிகள். ஓநாய்கள் மத்தியில் ஆட்டுக் குட்டிகளா?  என்ன விபரீத விழையாட்டு இது. ஆனால், வரலாற்றில் இத்தகைய விபரீதங்கள் வீரக் கதைகளாகத் தொடர்ந்து நடந்து வருகின்றன என்பது நமக்குத் தெரியும்.

நீள, அகல, உயரம் என்று எல்லாப் பக்கங்களிலும் அளவுக்கதிகமாய் வளர்ந்திருந்தான் கோலியாத்து. அவனது தோற்றம் பற்றி நாம் படித்திருக்கின்றோம். அந்த மனித மலையோடு மோத, தன் மீது தற்காப்புக்காகப் போடப்பட்ட கவசங்களை எல்லாம் கழற்றிவிட்டு, கையில் கவணும், கல்லும் எடுத்துப் புறப்படும் தாவீதுவை நாம் எண்ணிப்பார்க்கலாம். சிறியவன்; தாவீதுக்கு எங்கிருந்து இந்த வீரம் வந்தது? தன்னையும், தன் ஆடுகளையும் இரத்த வெறி பிடித்த மிருகங்களிடம் இருந்து காத்த இறைவன், இந்த மனித மிருகத்திடமிருந்து தன்னையும், தன் மக்களையும் காப்பார் என்ற அந்த அசைக்க முடியாத நம்பிக்கைதான். ஓநாய்கள் மத்தியில் ஆட்டுக் குட்டி செல்லுமா? தாவீது சென்றார். வெற்றிகொண்டான்.

'யார் இந்த அரை நிர்வாண பரதேசி?" என்று ஆங்கில அரசு ஏளனமாக விவரித்த காந்தியடிகள் பற்றி எமக்குத்தெரியும். அரை நிர்வாணமாய், நிராயுத பாணியாய் சென்று அந்த ஆட்டுக் குட்டி, அந்த ஓநாய்களின் அரசை எவ்வளவு தூரம் ஆட்டிப் படைத்ததென்பது நமக்குத் தெரிந்த வரலாறு.

ஓநாய்கள் மத்தியில் ஆட்டுக் குட்டிகள் செல்லுமா? வழக்கமாய் செல்லாது. ஆனால், அந்த ஆட்டுக் குட்டிகள் மனதில் நம்பிக்கை இருந்தால், ஓநாய்கள் மத்தியில் தலை நிமிர்ந்து வீர நடை போடும். இப்படி, நம்பிக்கையோடு ஓநாய்கள் மத்தியில் நடை போடக்கூடிய ஆட்டுக் குட்டிகள் இயேசுவுக்குத் தேவை. ஓநாய்கள் மத்தியில் போக வேண்டும் என்பது உறுதியாகி விட்டது. சரி அதற்குத் தகுந்தது போல், எல்லா ஏற்பாடுகளும் செய்து கொள்ள வேண்டாமா? கோலியாத்தை எதிர்த்துச் செல்லும் போது, ஒரு கவசம், ஒரு கேடயம், ஓர் ஈட்டி, குறைந்தது ஒரு கத்தி? ஒன்றும் வேண்டாம் என்கிறார் இயேசு. 'பணப்பையோ, வேறு பையோ, மிதியடிகளோ எதுவும் எடுத்துச் செல்ல வேண்டாம்." என்கிறர் இயேசு.

தூங்குவதற்கும் கூட திட்டங்கள் தீட்ட வேண்டிய இக்காலகட்டத்தில் இயேசு சொல்வதை எண்ணி சிரிப்பதா? வியப்பதா? தெரியவில்லை. நடைமுறைக்கு ஒத்துவராத ஒரு நிபந்தனை. ஆனால், ஆர அமர, ஆழமாக சிந்தித்தால், இயேசுவின் இந்தக் கூற்றில் உள்ள உண்மைகள் புரியும். உலகத்தில் பெரும் பகுதிகளை வென்று, ஏராளமாய் பொருள்களைத் திரட்டி வைத்திருந்த மாவீரன் அலெக்சாண்டர் இதே கருத்தைத் தானே தன் இறுதி மூன்று ஆசைகளாகச் சொல்லிச் சென்றார். அதிலும் சிறப்பாக, தனது இறுதிப் பயணத்தில் தனது வெறும் கைகளைத் சவபெட்டிக்கு வெளியில் மக்கள் பார்க்கும் படி வைக்கச் சொன்னது நமக்கு ஒரு பாடம்தானே. வெறும் கையோடு செல்லுங்கள், எதையும் எடுத்துச் செல்ல வேண்டாம் என்று கூறும் இயேசு கொடுக்கச் சொல்கிறார். நீங்கள் நுழையும் இடத்தில் எல்லாம் சமாதானம் என்ற ஆசீரைக் கொடுங்கள் என்கிறார். இயேசுவின் அழைப்பை ஏற்று, உழைக்க முன்வந்து விட்டால், அவரது அரசை விதைத்து, அறுவடை செய்ய துணிந்து விட்டால். ஓநாய்கள் நடுவிலும் துணிவோடு செல்ல வேண்டும், அந்தத் துணிவு, இறை நம்பிக்கையிலிருந்து வர வேண்டும், இந்த நம்பிக்கை ஒன்றை மட்டும் சுமந்து செல்வோம். சமாதானத்தை அனைவருக்கும் வழங்குவோம்.

No comments:

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff