Thursday, September 19, 2013

தலைவர்களே, அனைவரும் வாழ்வுபெற பரந்த மனத்தோடு, பலரையும் உற்று நோக்குங்கள்.

22.09.2013
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

 
இன்று நமக்குத்தரப்படும் பைபிள் பகுதியில் இயேசு மூன்று அறிவுரைகளை நமக்குத் தருகிறார் முதலாவது நேர்மையற்ற செல்வத்தைக் கொண்டு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள். நம்மிடத்தில் உள்ள திறமைகள், ஆற்றல்கள், குறிப்பாக பணம். இவற்றைக் கொண்டு நல்ல நண்பர்களை, குறிப்பாக மறுவுலக வாழ்வுக்கான நண்பர்களைத் தேடிக்கொள்ள வேண்டும். எனவே, செல்வம் சேர்த்து வைப்பதற்கல்ல. மாறாக, இறைவனுக்காகப் பயன்படத்துவதற்காக. அதை மனதில் கொள்வோம்.

இரண்டாவது நேர்மையற்ற செல்வத்தைக் கையாள்வதிலேயே நம்பத்தகாதவராய் இருந்தால், உண்மைச் செல்வத்தை யார் ஒப்படைப்பார்? எனவே, நிதியை, குறிப்பாக பொது நிதியைக் கையாள்வதில் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் இருக்க வேண்டும். நிதியை நேர்மையோடு கையாள்பவர் மற்ற அனைத்தையும் கையாள்வதில் நம்பிக்கைக்குரியவராய் இருப்பார்.

மூன்றாவது ஒரு வேலையாள் இரு தலைவர்களுக்கு ஊழியம் செய்யமுடியாது.ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்,அல்லது ஒருவரைச் சார்ந்துகொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார்.'நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது." ஏன எடுத்துக்காட்டுகின்றார். கடவுளையும், காசையும் நாம் வழிபட முடியாது. செல்வத்தின்மீது அதிகப்பற்றுகொள்வது சிலைவழிபாட்டுக்கு ஒப்பானது. எனவே, செல்வத்தைக் கடவுளுக்கு இணையாக்காமல் வாழ்வோம்.

இயேசு இன்று செல்வத்திற்குப் பணிவிடை செய்வது குறித்தும் பேசியிருக்கிறார். 'கடவுளுக்கும், செல்வத்திற்கும் பணிவிடை செய்யமுடியாது." என்று இயேசு கூறும் வார்த்தைகளைக் கேட்கும்  இன்றைய தலைவர்களும் தொண்டர்களும் ஏளனமாய்ச் சிரித்துக் கொள்வார்கள். 'கடவுளுக்கும், செல்வத்திற்கும் பணிவிடை செய்யமுடியாது" என்று யார் சொன்னது. நாங்கள் கடவுளுக்கும், செல்வத்திற்கும் பணிவிடை செய்கிறோம். ஏனெனில் எங்கள் கடவுளே செல்வம்தான், என்று சொல்கிறார்கள் இவர்கள். இங்கு கடவுளுக்கு இணையாக உயிரற்ற ஒரு பொருளை இயேசு முன் வைக்கிறார். இது சாத்தியமாகுமா? சாத்தியமாகியுள்ளது, சரித்திரமாகியுள்ளது. கடவுளுக்குப் பதில் செல்வத்தைக் கடவுளாக்கி, வழிபடும், பணிவிடை செய்யும் பலரை நாம் இன்று பார்க்கின்றோம். இயேசுவின் இந்தக் கூற்று செல்வத்திற்கு எதிராக, செல்வத்தைக் கண்டனம் செய்து பேசப்பட்டதாகத் தோன்றலாம். செல்வம் சேர்ப்பது, செல்வத்தைப் பகிர்வது, செலவிடுவது இவைகளை இயேசு குறை கூறவில்லை. செல்வத்திற்குப் பணிவிடை செய்வதையே அவர் தவறு என்று எச்சரிக்கிறார். செல்வம் என்ற உயிரற்றப் பொருள் நமக்குப் பணிவிடை செய்யவேண்டும். இதுதான் இயற்கை. அதற்குப் பதிலாக, உயிரற்ற செல்வத்திற்கு உயிரும், அறிவும் கொண்ட நாம் பணிவிடை செய்வது தவறு என்று இயேசு எச்சரிக்கிறார்.

'எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்யமுடியாது" என இன்று இயேசு கூறும் இவ் வார்த்தைகளை எம் இன்றைய அரசியலுடன் கொஞ்சம் சிந்திக்க தூண்டுகிறது. எம் பகுதி இன்று தேர்தல் முடிவுகளை சந்தித்து எம்மை வழிநடத்த ஒரு தலைவரை எதிர்பாத்திருப்பதால், இவ்வரிகளை ஓரளவு சிந்திப்பது பயனளிக்கும். இயேசு இவ்வார்த்தைகளைச் சொன்னபோது, உண்மையான தலைவன், உண்மையான பணியாளரைப் பற்றி அவர் நினைத்துப் பார்த்திருக்க வேண்டும். நல்ல பண்புகள் உள்ள ஒருவரைத் தலைவராக தெரிவுசெய்து ஏற்றுக் கொள்ளும் பணியாளர், அத்தலைவன் மீது உள்ள மதிப்பினால், அன்பினால் அவருக்குப் பணிவிடை செய்வார். தலைவன் தரும் பணம்;, அல்லது பிற பயன்கள் இவைகளுக்காகச் செய்யப்படும் பணிவிடை அல்ல தொண்டரின் பணி. இவைகளை எல்லாம் தாண்டி, பணியாளரின் பணிவிடை அமைந்திருக்கும். 'எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது" என்ற இயேசுவின் கூற்று, இன்றுவரை நாம் சந்தித்த நமது அரசியல் தலைவர்கள், தொண்டர்களுக்குப் பொருந்தாது. இந்தத் தலைவர்கள், தொண்டர்கள் அனைவரும் வேறொரு தெய்வத்திற்குப் பணியாளர்கள். பணம் என்ற தெய்வத்திற்கு இவர்கள் அனைவரும் பணிவிடை செய்கிறார்கள். செல்வத்தைக் கொண்டு பிறரன்புச் செயல் புரிகின்ற தலைவர்களை மக்கள் என்றும் நிலையாக தம் உள்ள உறைவிடங்களில் உறுதியாக வைத்திருப்பார்கள் என்பது வரலாறு. எனவே தலைவர்களே, அனைவரும் வாழ்வுபெற பரந்த மனத்தோடு, பலரையும் உற்று நோக்குங்கள்.

No comments:

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff