03.08.2014 ' "
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
இன்று தமக்குத்தரப்படும் பைபிள் பகுதியில் இயேசு, 'மக்களை அமரச் செய்யுங்கள்" என்றார். அப்பகுதி முழுவதும் புல்தரையாய் இருந்தது. அமர்ந்திருந்த ஆண்களின் எண்ணிக்கை ஏறக்குறைய ஐயாயிரம். இயேசு அப்பங்களை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அமர்ந்திருந்தோருக்குக் கொடுத்தார். அவ்வாறே மீன்களையும் பகிர்ந்தளித்தார். அவர்களுக்கு வேண்டிய மட்டும் கிடைத்தது. அவர்கள் வயிறார உண்டபின், 'ஒன்றும் வீணாகாதபடி, எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வையுங்கள்" என்று தம் சீடரிடம் கூறினார். மக்கள் உண்டபின் ஐந்து வாற்கோதுமை அப்பங்களிலிருந்து எஞ்சிய துண்டுகளைச் சேர்த்துச் சீடர்கள் பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினார்கள் தரப்படுகின்றது.
மக்களுக்கு இறையாட்சி பற்றிய நற்செய்தியை அறிவித்து, அவர்கள் மனம் மாற வேண்டும் என்று அழைப்பு விடுத்தார் இயேசு. கடவுளின் ஆட்சி மக்களிடையே வந்துகொண்டிருக்கிறது என்பதை அவர்கள் கண்கூடாகக் காணும் விதத்தில் இயேசு பல அதிசய செயல்களையும் புரிந்தார். அச்செயல்கள் வழியாக அவர் மக்களுக்கு நன்மை கொணர்ந்தார். இத்தகைய அரும் செயல்களில் ஒன்று 'ஐயாயிரம் பேருக்கு உணவளித்தல் ஆகும்" மக்களுக்கு இயேசு உணவளித்த நிகழ்ச்சியை நாம் பல கோணங்களிலிருந்து பார்க்கலாம். இஸ்ரயேல் மக்களுக்குக் கடவுள் பாலைநிலத்தில் மன்னா என்னும் உணவை அளித்ததுபோல இங்கு இயேசு பசியுற்றோருக்கு உணவளித்துப் பாதுகாக்கின்றார். எலியா, எலிசா போன்ற இறைவாக்கினர் மக்களுக்கு உணவு வழங்கியதுபோல இங்கும் இயேசு செயல்படுகின்றார். மேலும் நற்கருணையை இயேசு ஏற்படுத்தியதும் இங்கே குறித்துக் காட்டப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் ஓர் ஆழ்ந்த உண்மையை நாம் காண்கிறோம். அதாவது, மக்களுக்கு உணவளிக்க இயேசு வழிவகுத்துவிட்டு, உணவைப் பகிர்ந்தளிக்கின்ற பணியைத் தம் சீடரிடமே விட்டுவிடுகின்றார். யார் இந்த சீடர்கள்;? இயேசுவின் காலத்தில் அவரைப் பின்சென்றவர்கள்தாம் அவர்கள். இன்று நாம் அவருடைய சீடர்களாக இருக்கின்றோம். இயேசுவின் குரலைக் கேட்டு, அவருடைய போதனையை ஏற்று, இயேசுவின் வழியில் நடந்துசெல்ல முன்வரும்போது நாம் இயேசுவின் சீடர்களாக மாறுகிறோம். நமக்கு இயேசு வழங்குகின்ற கட்டளை என்ன? 'நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்". இந்த உணவு எத்தகையது? பிறரது புறப்பசியை ஆற்றுகின்ற உணவு மட்டுமா? இல்லை; ஆன்மப் பசியை ஆற்றவும் சீடர்கள் துணைசெய்ய வேண்டும். இயேசுவின் போதனையை ஏற்று, அதன்படி வாழ்ந்து, இயேசுவுக்குச் சான்றுபகரும்போது நம் வாழ்வு பிறருடைய பசியை ஆற்றுகின்ற உணவாக மாறும். அப்போது, இயேசு தம்மையே நமக்கு உணவாக அளித்ததுபோல நாமும் பிறருக்கு உணவாக நம்மையே கையளிப்போம். அதாவது, நம்முடைய சான்று வாழ்க்கையைக் கண்டு பிறர்; தம் ஆன்மப் பசி ஆறுகின்ற அனுபவம் பெறுவர். பிறருடைய நலனை முன்னேற்றுவதில் இயேசுவின் பணியை ஆற்றிடத் திருச்சபை முழுவதுமே அழைக்கப்பட்டுள்ளது. திருச்சபையின் ஒவ்வொரு உறுப்பினருக்கும், தம்மைப் பின்செல்கின்ற எல்லா மனிதருக்கும் இயேசு வழங்குகின்ற கட்டளை: 'நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்" இக்கட்டளையை ஏற்றுச் செயல்படுத்துவது நம் கடமை. நாம் தயாரா?
கடவுளின் ஆட்சி முழுமையாக மலரும் நாளில் எல்லா மக்களினத்தாருக்கும் கடவுள் பெருவிருந்து அளிப்பார் என்னும் உருவகம் விவிலியத்தில் பல இடங்களில் வருகிறது. தேவைக்கு அதிகமாகவே உணவு தந்து, அனைவரின் பசியையும் கடவுள் போக்குவார்; அவர்களுக்கு முடிவில்லாப் பேரின்பம் அளிப்பார். இவ்வாறு பழைய ஏற்பாட்டு நினைவும், நற்கருணைக் கொண்டாட்ட நினைவும், இறுதிக் கால விருந்தின் நினைவும் உள்ளடங்கிய விதத்தில் மத்தேயு 'அப்பங்கள் பலுகுதல்" நிகழ்ச்சியை வடிவமைக்கிறார். இந்த ஆழ்ந்த பொருள் கொண்ட நிகழ்ச்சியில் இயேசு உண்மையாகவே மக்களின் பசியைப் போக்குகிறார். அவ்வாறே இயேசுவின் சீடர்களும் செய்ய வேண்டும். அவர்களும் மக்களுக்கு உணவளிக்க வேண்டும். எஞ்சியிருக்கும் உணவை வீணடிக்காமல் மக்களின் தேவையை நிறைவேற்ற வேண்டும். மக்கள் பெருந்திரளாக வந்து தம்மை அணுகியதைக் கண்ட இயேசுஅவர்கள்மீது பரிவுகொண்டார். அன்பிலிருந்து தோன்றுகின்ற பரிவுதான் இயேசுவின் உள்ளத்திலிருந்து எழுந்த பாச உணர்வு, அவர் மக்களிடத்தில் கொண்டிருந்த அக்கறை. எம் திருமகனிடம் விளங்கிய பரிவு எங்கள் வாழ்விலும் துலங்கிட இயேசுவோடு பயணிப்போம்.