27.07.2014'"
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
இன்று எமக்குத்தரப்படும் பைபிள் பகுதியில் இயேசு உவமைக்கதைகள்வழியாக பேசுகிறார். கடவுளைப் பற்றிய அறியமுடியாத மறை உண்மைகளை இயேசு நமக்கு உவமைகள் வழியாக தருகிறார். எமக்கு உவமைக்கதைகள் மிகவும் பிடிக்கும் என அவர் நன்கு தெரிந்திருக்கிறார்;;.
கடவுளின் ஆட்சி இவ்வுலகில் வந்துகொண்டிருக்கிறது என்னும் நல்ல செய்தியை அறிவித்த இயேசு அதைப் பல உவமைகதைகள் வழியாக மக்களுக்கு அறிவித்தார். குறிப்பாக, தம்மோடு நெருங்கிப் பழகி தம் போதனைகளை அருகிலிருந்து கேட்டு, தாம் புரிந்த அரும் செயல்களை நேரடியாகக் கண்டு அறிந்த தம் சீடர்களுக்கு இயேசு தம் உவமைகதைகளின் உட்பொருளையும் விளக்கிக் கூறினார். ஆனால் உண்மையில் அவர்கள் இயேசுவைப் புரிந்துகொள்ள மிகவும் சிரமப்பட்டார்கள். பல தடவைகளில் இயேசுவின் போதனை அவர்கள் காதுகளில் விழுந்தும் அவர்கள் அப்போதனையை உள்வாங்கித் தம் நடத்தையில் காண்பிக்க தயங்கினார்கள்.
இயேசு நம்மைப் பார்த்து அதே கேள்வியைக் கேட்கின்றார்: இவற்றையெல்லாம் புரிந்துகொண்டீர்களா? இயேசு யார் எனவும் அவர் நமக்கு வழங்கும் செய்தி யாது எனவும் நாம் உண்மையிலேயே புரிந்துகொள்ள வேண்டும் என்றால் நாம் திறந்த மனத்தோடு அவரை அணுக வேண்டும். அவரிடத்தில் நாம் முழுமையாக நம்பிக்கை கொள்ள வேண்டும். நம் இதயத்தைத் திறந்துவைத்து, அங்கே நம்மோடு பேசுகின்ற கடவுளின் குரலுக்கு நாம் கவனமாகச் செவிமடுத்தால் இயேசுவின் போதனைகளை நாம் அறிவளவில் மட்டுமன்றி, நம் இதய ஆழத்திலும் உணர்ந்து புரிந்துகொள்வோம். அப்போது அப்புரிதல் நம் வாழ்வில் ஒரு மாற்றத்தையும் கொணரும். இவ்வாறு நாம் மனம் மாறிய மனிதராக வாழ வேண்டும் என்பதே இயேசுவின் போதனையின் நோக்கம்.
ஜப்பான் சிறையில் இருந்த ஒரு கொலையாளி உவமைகளைப் படித்ததால் மனம் திருந்தியதாக வரலாறு உண்டு. 2ஆவது உலகப்போரின் போது படகு விபத்தில் சிக்கிய மூவர் பற்றி படகு என்ற நூலில் நாம் அவர்கள் பட்ட சிரமத்தைப் படிக்கின்றோம். நம்பிக்கை இழந்து இறந்திருக்க வேண்டிய இவர்கள் விவிலியக் கதைகளை மெதுவாகச் சொல்லக் கேட்டு அவற்றை ஆய்ந்து தெளிந்து ஒரு சிறிய ரப்பர் படகில் 34 நாட்கள் தத்தளித்து 1000 மைல்களுக்கு அப்பால் கரை சேர்திருக்கின்றனர். என் அயலான் யார் என்ற கதை ஆல்பர்ட் ஸ்வைட்சர் போன்ற மிகச் சிறந்த மருத்துவர்களை ஆப்பிரிக்க மக்களுக்குச் சேவை செய்யத் தூண்டியது. எனவே உவமைக்கதைகள் நம்மை கவர்ந்து இழுக்கும் தன்மையுடையவை. மனத்தில் ஆழமாக சித்திரம் ஒன்றை வரைந்து வண்ணம் தீட்டிவிடுவதால் அவை போதனை செய்வதற்கு ஏற்ற ஊடகமாக உள்ளன.அந்த உவமைக்கதைகள் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டுவதோடு வாழ்க்கையைப் பிரதிபலிக்கின்றன. அதன் விளைவாக அவை மிக ஆழமான தாக்கத்தை வாழ்வில் ஏற்படுத்துகின்றன.
ஒருவர் நிலத்தில் புதைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அவர் அதை மூடி மறைத்துவிட்டு மகிழ்ச்சியுடன் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக் கொள்கிறார். விண்ணரசு இப்புதையலுக்கு ஒப்பாகும். ஒருவருக்குக் கிடைக்கும் மிகப் பெரிய புதையல் கிறிஸ்துவின் உறவும் நட்புமாகும். நற்செய்தி விலை மதிப்பில்லாத புதையல். கிறிஸ்துவின் அன்பு நம்மை கிறிஸ்துவாகவே மாற்றும் சக்தி கொண்டது. தமது உடைமைகளையெல்லாம் விற்றுவிட்டு புதையல் மறைந்திருக்கும் நிலத்தை வாங்குவது போல, ஒருவர் கிறிஸ்துவுக்காக தம்மடைய எல்லாவற்றையும் இழக்க நேரிடலாம். அவ்வாறு செய்வது தியாகம் அல்ல. மாறாக இயேசுவைக் கண்ட மகிழ்ச்சியில் நாம் இழப்பது ஒரு சிறு துரும்பாகும். கிறிஸ்துவுக்கும் நம்மைச் சீடர்களாகப் பெறுவதில் மகிழ்ச்சிதான். கிறிஸ்துவுக்காக நான் அனைத்தையும் குப்பை எனக் கருதுகிறேன் என மகிழ்ச்சியோடு முழங்குவார் தூய பவுல். நான் வாழ்ந்தால் கிறிஸ்துவுக்காக , நான் இறப்பதும் எனக்கு ஆதாயமே. புதையலைப் பார்த்தவன் சென்றான், தனக்கு உள்ளவற்றையெல்லாம் விற்று வந்தான். நிலத்தை வாங்கித் தனதாக்கினான். இறை அரசு அவ்வாறு ஒப்புமையில்லாத விலை மதிப்பில்லாத புதையல் என்பதை இந்த உவமை காட்டுகிறது .
உயர்ந்த குறிக்கோளுக்காக நாம் எதையும் தியாகம் செய்யத் தயங்கக் கூடாது. நாம் அனைவருமே வாழ்வில் புதையல் தேடும் ஒருவரைப் போல முழுமையான உறுதியோடு செயல்படவேண்டும். நாம் நாளும் உயர்ந்த மனிதர்களாக வாழ முயன்று வெற்றி பெற்றால் அது வாழ்க்கையில் நாம் பெறும் மாபெரும் வெற்றியாகும்.
No comments:
Post a Comment