Thursday, July 17, 2014

ஒரு சில மனிதர்களின் வாழ்வையாவது தொட முயற்சிப்போமா

20.07.2014'" 
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர் 

இன்று எமக்குத்தரப்படும் பைபிள் பகுதியில் இயேசு உவமைக்கதைகள்வழியாக பேசுகிறார். நமக்கு இயேசு மூன்று உவமைக்கதைகளை இன்று கூறுகின்றார்:  நல்ல விதைகளை-களைகள், கடுகு விதை,
புளிப்பு மா.   ஏன் இயேசு மக்கள் கூட்டத்துக்கு உவமைக் கதைகள் கூறிப் போதித்தார் என்ற கேள்வி நாமக்குள் எழும்.

'ஒரு நிமிட ஞானம்" என்ற நூலில் காணப்படும் எளியதொரு கதை நாம் கேட்கும் இந்த கேள்விக்கு விடைதர  உதவியாக இருக்கும்: ஒரு குரு எப்போதும் கதைகளையேக் கூறிவந்தார். அவர் கூறிய கதைகள் அவரது சீடர்களுக்குப் பிடித்திருந்தன. இருந்தாலும், இன்னும் ஆழமான உண்மைகளை தங்கள் குரு கற்றுத் தரவேண்டும் என்று சீடர்கள் கேட்க ஆரம்பித்தனர். அவர்கள் என்னதான் வற்புறுத்திக் கேட்டாலும், குரு சொன்ன ஒரே பதில் இதுதான்: 'மனிதர்களுக்கும், உண்மைக்கும் இடையே உள்ள சுருக்கமான வழி, கதையே. இதை நீங்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை."

உண்மைக்கும், எமக்கும், உண்மைக்கடவுளுக்கும், எமக்கும் இடையே உள்ள சுருக்கமான வழி கதைகளே என்று இயேசு உணர்ந்திருந்தார். அதுவரை, மதத் தலைவர்களால் இஸ்ரயேல் மக்களுக்கு அறிமுகமான கடவுள், கல்லில் பொறிக்கப்பட்ட கட்டளைகளில் உறைந்திருந்த கடவுள். அவர் மக்களிடமிருந்து வெகு தூரத்தில் வாழ்ந்துவந்தார். அத்தகையக் கடவுளை, கனிவான ஒரு தந்தையாக கதைவடிவில் இயேசு இஸ்ரயேல் மக்களுக்கு மீண்டும் அறிமுகம் செய்துவைத்தார். 

நாடு, மதம், மொழி,கலாசாரம், என்ற எல்லைகளைக் கடந்து செல்லும் மற்றோர் ஆற்றல் கதைகளுக்கு உண்டு. இத்துடன், மிக முக்கியமாக, காலத்தைக் கடந்து செல்லும் ஆற்றலும் கதைகளுக்கு உண்டு. கதைகளுக்கு உள்ள இவ்வகை ஆற்றலால்தான் இயேசு கூறிய உவமைகதைகள் அவர் வாழ்ந்த குறுகிய நிலப்பரப்பைத் தாண்டியும், 21 நூற்றாண்டுகளைத் தாண்டியம், நம் மத்தியில் இன்றும்வாழ்ந்து வருகின்றன. கதைகளைப்பற்றி, இந்த அறிமுகத்தை இன்று தருவதற்கு இரு காரணங்கள் உண்டு. 

முதலில் களைகள் என்ற உவமைக்கதையிலிருந்து இயேசு சொல்ல விரும்புகிற செய்தி நாம் வாழும் இந்த உலகில் களைகள் என்று சொல்லப்படும் அலகையின் ஆதிக்கம் எப்போதும் இருக்கும். அந்த சாத்தான் தனது வலிமையால், எம்மை  மயக்கி, குழப்பி தன்னுடைய ஆதிக்கத்தின் பிடியில் வைத்திருக்கும். நாம் அதைப்பார்த்து பதற்றப்படத் தேவையில்லை. ஆனால், தீய சக்திகள் இருக்கிறது என்ற உணர்வு நமக்கு வேண்டும். அதைத்தவிர்க்க வேண்டும் என்ற உறுதி நமக்கு வேண்டும். அந்த உணர்வே களைகளிடமிருந்து காப்பாற்றிவிடும். பொறுமை இழக்காது, உறுதியாக இருக்கிறபோது, தீய எண்ணங்களும், சிந்தனைகளும் நம்மை ஒன்றும் செய்துவிட முடியாது. நம்மை கறைபடுத்த முடியாது. தீய எண்ணங்களும், கெட்ட சிந்தனைகளும் நம்மை ஆக்கிரமிக்கிறபோது, பதற்றப்படாமல், தொடர்ந்து கடவுளைப் பற்றிக்கொண்டிருப்போம். நம்முடைய உறுதியும், நம்முடைய பிடியும் ஆண்டவரில் இருக்கிறவரை, தீயவன் நம்மை எதுவும் செய்துவிட முடியாது என்பதே ஆகும் 

அடுத்து கடுகு விதை என்ற உவமைக்கதையிலிருந்து இயேசு சொல்ல விரும்புகிற செய்தி உலகில் நாம் என்னால் எந்த மாற்றமும் செய்ய முடியாது என்ற சலிப்போ, விரக்தியோ கொள்ளக்கூடாது வாருங்கள், கடுகு விதை எவ்வளவு சிறியது. ஆனாலும், அது வளர்ந்து பெரிய மரமாகிறது. வானத்துப் பறவைகளுக்கு நிழல் கொடுக்கின்றது.

அடுத்து புளிப்பு மா என்ற உவமைக்கதையிலிருந்து இயேசு சொல்ல விரும்புகிற செய்தி  புளிப்பு மாவின் அளவு சிறியது. இருப்பினும், மாவு முழுவதையும் அது புளிப்பேற்றுகிறது. அதுபோலத்தான், ஒவ்வொரு சிறிய செயலும், ஒவ்வொரு சிறிய சொல்லும் அவை மௌனமாக இந்த உலகின்மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதே ஆகும்

நாமும் ஒவ்வொரு சிறிய செயல், ஒரு புன்னகை, ஒரு பாராட்டு வார்த்தை, ஒரு அன்பான தொடுதல். போன்றவற்றின் வழியாக ஒரு சில மனிதர்களின் வாழ்வைத் தொட முயற்சிப்போம். இறுதியில், ஏராளமான மனிதர்கள் தொடப்படுவார்கள்.இந்த உலகம் இறைவன் வாழும் இனிய பூமியாக மாறும். 

அன்றாட வாழ்க்கையில் மக்கள் சந்திக்கின்ற நிகழ்ச்சிகளை இயேசு கதையாக எடுத்துச் சொல்லி, அவற்றின் வழியாக மக்களுக்கு இறையாட்சி பற்றிய உண்மைகளை உணர்த்தினார். எனவே, இயேசுவின் உவமைக்கதைகளை  கேட்ட எம்மை இயேசு சிந்திக்கத் தூண்டுகிறார். சிந்திப்போம் மாபெரும் மாற்றம் நம்மில் நிகழ்த்துவோம்.

No comments:

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff