Tuesday, June 19, 2012

உள்ளதை உள்ளவாறு சொல்லி உண்மைக்கு சான்று பகர்வோம்.

24.06.2012
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

இன்று நாம்  திருமுழுக்கு யோவானின் பிறப்பு விழாவைக் கொண்டாடுகிறோம்.  ஆண்டவர் இயேசு, அன்னை மரியா இவர்களோடு பிறப்பு விழாவைக் கொண்டாடும் ஒரே புனிதர் இவர்; மட்டுமே. “ மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள் இறையாட்சி நெருங்கி வந்து விட்டது” என்று யோர்தான் நதியோரம் வீரமுழக்கமிட்ட திருமுழுக்கு யோவானின் குரலொலி இயேசுவைக் கவர்ந்தது. சட்டங்களையும் சடங்குகளையும் உயர்த்திப் பிடிக்காமல் அன்பையும் நீதியையும் சமர்த்துவத்தையும் பகிர்வையும் வலியுறுத்திய இவரது புரட்சிக் கருத்துக்கள் இயேசுவின் கருத்துக்களோடு ஒருமித்திருந்தன.

இன்று எம் நாட்டின் நிலவரம்போல் அன்று திருமுழுக்கு யோவான் காலத்தில் அங்கு அரசியல் பொருளாதார ரீதியில் இஸ்ராயேல் மக்களின் நிலைமை மிகவும் பரிதாபமாக இருந்தது. அரசியலை எடுத்துக்கொண்டால் பிறநாட்டவருக்கு அடிமைகளாய் இருக்கவேண்டிய கட்டயநிலை. மக்களுள் பலர் வறுமைப்பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தனர்.  எனவே அவர்களின் தேவையை மையமாகக் கொண்டு அரசியல் ரீதியாக நிரந்தர விடுதலையும் பொருளாதார ரீதியாக சிறந்த முன்னேற்றமும் பெறுவதற்கு இஸ்ரயேல் மக்கள் ஏக்கத்துடன் துடித்துக் கொண்டிருந்தனர். அப்போது  திருமுழுக்கு யோவான் தம் போதனையின்போது ஆன்மீக மறுமலர்ச்சி பெற வேண்டும் என்று வலியுறுத்திப் பேசினர். அவர்; மெசியாவை நாட்டு அரசியலுக்குள் புகுத்தி விடாமல் ஆன்மீகம் காத்து முழுமனித வளர்ச்சியை வழங்கக் கூடியவராகவே பார்க்கிறார்.

 திருமுழுக்கு யோவான் உள்ளதை உள்ளவாறு சொல்லி உண்மைக்கு சான்று பகர்கின்றார். அஞ்சா நெஞ்சத்தோடு மன்னரது தவறுகளையும் சுட்டிக்காட்டியவர். மக்கள் அவரை மெசியாவாக நினைத்துக் கொண்டு அவரை நெருங்கியபோது அவர்களின் அறியாமையை தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி தானேதான் மெசியா என்றுசொல்லி இறைவனின் மீட்புத் திட்டத்தில் குழப்பம் ஏற்படுத்திடவில்லை. அவர்இயேசுவின் வருகைக்காக மக்களை ஆயத்தப்படுத்தி  நல்வழிப்பாதையில் வாழ வழிகாட்டியவர். இயேசுவுக்கும் திருமுழுக்குக் கொடுத்தவர். அதுபோது இயேசுவை மக்களுக்கு வரவிருந்த மீட்பர் இயேசுதான் என அறிமுகப்படுத்தினார். நற்செய்தி நூலில்  திருமுழுக்கு யோவான் இயேசுவைத் தன் சீடர்களுக்கு அறிமுகம் செய்துவைக்கும் நிகழ்வை காண்கின்றோம். வழியோரம் இந்த அறிமுகம் நடைபெறுகிறது. கோவில்களிலும், புனிதத் தலங்களிலும் இறைவன் அறிமுகம் ஆவதை விட, சாதாரண, எளியச் சூழல்களில் அவர்அறிமுகம் ஆன நிகழ்வுகளே மனித வரலாற்றிலும், விவிலியத்திலும் அதிகம் உள்ளன என்பதை உணரலாம். வழியோரம் அறிமுகமான இயேசுவை வழியோரமாகவே விட்டுவிட்டு அந்தச் சீடர்கள் தங்கள் வழியில் செல்லவில்லை. அவர்கள் இயேசுவைப் பின் தொடர்ந்தார்கள் என யோவான் நற்செய்தியில் பார்கின்றோம்.

நம் உறவுகளும் வாழ்வில் முன்னேறுவதற்கு உதவியாக பலரை நாம் அறிமுகம் செய்து வைக்கிறோம். இந்த அறிமுகங்களில் எல்லாம் மிக முக்கியமான அறிமுகம் அவர்களை இறைவனுக்கு அறிமுகம் செய்துவைப்பது. ஆனால்,இந்த அறிமுகம் நம் உறவுகளுக்கு நடைபெறுகிறதா? நாம் வாழும் இன்றைய அவசர உலகில் இறைவனை அறிமுகம் செய்து வைக்கும் வாய்ப்புக்கள் உள்ளனவா? அல்லது, இறைவனை நாம் கோவில்களில் பூட்டிவிட்டு அவ்வப்போதுமட்டும் நம் உறவுகளுக்குத் திறந்து காட்டுகிறோமா? இவ்வாறு இறைவனைக் கோவில்களில் மட்டும் பூட்டிவைப்பதால், இறைவன் நம் தலைமுறைக்கு அந்நியமாகிப் போய்விட்டாரோ? என்ற கேள்விகளை நாம் ஆழமாக ஆராய வேண்டும்.

சின்ன மீன் ஒன்று கடலில் நீந்திக் கொண்டிருந்தது. அங்குமிங்கும் நீந்தி எதையோ தேடுவதைப் போல் இருந்தது. இதைப் பார்த்த ஒரு பெரிய மீன் அதனிடம், என்ன தேடுகிறாய்?" என்று கேட்க, சின்ன மீன், கடல், கடல் என்று நீங்கள் எல்லாரும் சொல்கிறீர்களே, அது எங்கே என்று தேடிக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னதாம். கடலுக்குள் இருந்துகொண்டே கடலைத் தேடிய சின்ன மீனைப் போல, இறைவனின்; இல்லத்தில் இருந்துகொண்டே இறைவனை அறியாமல் சின்ன மீன்போல் தேடுகின்றோம் நாம். எம் வாழ்வைத் திருப்பிப் பார்க்கும்போது, பல நேரங்களில் காற்றைப் போல, கடலைப் போல இறைவன் நம்மைச் சூழ்ந்திருந்தாலும் அவரைப் புரிந்துகொள்ளாமல் இருந்ததை இப்போது எண்ணிப் பார்க்கலாம். முக்கியமாக, நம் துன்ப நேரங்களில் இறைவன் காணாமற் போய்விட்டதாக எண்ணியிருக்கிறோம். கடவுள் நம் வாழ்வின் இறுதிவரை நமக்கு அறிமுகம் ஆகிக் கொண்டே இருப்பார். இவர்தான் இறைவன் என்று நாம் எல்லைகளை வரையும் ஒவ்வொரு நேரமும், அந்த எல்லைகளை உடைத்து, மாறுபட்டதொரு வழியில் நமக்கு மீண்டும் இறைவன் அறிமுகமாவார். எல்லைகளற்ற இறைவனின் அழகு இது. வாழ்வின் பல நிலைகளில், பலச் சூழல்களில் இறைவன் அறிமுகம் ஆகிறார் என்பது உண்மை.

திருமுழுக்க யோவான் படைத்த இந்த வரலாறு 20 நூற்றாண்டுகளாக வாழ்ந்து வருகிறது. உடன் பிறந்தோரிடையில் இப்படி உன்னதமான எண்ணங்கள், உறவுகள் வளர்ந்தால் உலகத்தை மாற்றும் வரலாறுகள் தொடரும். உடன்பிறந்தோரும், உறவுகளும் கூடிவரும் திருநாளில் நாம் ஒருவரை ஒருவர் இறைவனுக்கு அறிமுகம் செய்துவைப்போம் உடன்பிறந்தோரும், உறவுகளும், ஏன் இந்த உலகம் முழுவதுமே உன்னதமான வரலாறு படைக்க நாம் கருவிகளாவோம்.


No comments:

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff