Thursday, June 28, 2012

தொடுவோம். பரிமாறுவோம். புதுவாழ்வு வாழ புதுமனிதர்களாக மாறுவோம்.

01.07.2012
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

இன்றைய நற்செய்தி வாசகம் உணர்ச்சிகளின் குவியலாக இருக்கிறது. அச்சம், அவநம்பிக்கை, அழுகை, துயரம், கலக்கம், ஓலம், புலம்பல், அமளி, வியப்பு, மலைப்பு, நகைப்பு அங்கே இருக்கின்றன. இத்தனையும்  இறைநம்பிக்கையின் எதிரிகள் இவை இருக்கும் இடத்தில் நம்பிக்கை இருக்காது, எனவேதான், இயேசு,“அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்” என அறிவுறுத்துகிறார். இயேசுவின் குணமாக்கும் தொடுதலை இன்று நற்செய்தி படம் பிடித்துக் காட்டுகிறது. இயேசு தம் பணிவாழ்வில் பலரைத் தொட்டுக் குணமாக்கினார். பிறர் தன்னைத் தொட்டுக் குணம் பெறவும் அனுமதித்தார். மைக்கிள் ஆஞ்சலோ, இறைவனின் படைப்பை வரையும்போது, இறைவனின் வல்லமை உள்ள கை, மனிதனைத் தொடுவதாக வரைந்துள்ளார்;. மனிதன் உயிரோட்டம் பெறுகிறான். தொடும்போதெல்லாம் புதிய ஒரு வாழ்வு உதயதாவதைக் காண்கிறோம்.

அதிசய செயல்களால் கவரப்பட்டார்கள். போதனையைக் கண்டு வியந்தவர்கள் இயேசுவை பின்சென்றார்கள். இயேசுவின் எதிரிகளோ அவரிடத்தில் குற்றம் காண்பதற்காக அவரை அணுகினார்கள் இவ்வாறு இயேசுவின் காலத்தில் பலரும் பல நோக்கங்களோடு இயேசுவிடம் சென்றதை நற்செய்தியில் பார்க்கின்றோம். இயேசு ஏற்றுக்கொண்டவர்கள் இயேசுவிடம் வெளிப்பட்ட வல்லமை கடவுளிடமிருந்தே வருகிறது என்பதை ஏற்றுக்கொண்டார்கள். இவ்வாறு கடவுளின் வல்லமையை இயேசுவிடம் கண்ட மக்களுக்கு இயேசு மனமிரங்கி நன்மை புரிந்த தருணங்கள் பல உண்டு. அவற்றில் இன்றைய புதிமைகளை நாமும் கவனிப்போம்.

இரண்டு பெண்கள் இயேசுவின் வல்லமைச்செயலால் புத்துயிர் பெறுகிறார்கள். இரத்தப் போக்கினால் 12 ஆண்டுகள் அவதிப்பட்ட பெண் முதலில் குணம்பெறுகின்றார். அடுத்து சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்துபோன பெண் குணம்பெறுகின்றார். இன்று  மாற்கு நற்செய்தியாளர் இயேசு புரிந்த இந்த இரு உவமைகளையும் விரிவாகத் தருகிறார். இரத்தப் போக்கினால் துன்புற்ற பெண் மக்கள் கூட்டம் இயேசுவை நெருக்கிக் கொண்டிருந்ததால் இயேசுவிடம் சென்று தன் நோயைப் போக்க மன்றாட வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஆயினும் இயேசுவின் மேலுடையையாவது தொட்டுவிட்டால் போதும், தனக்குக் குணம் கிடைத்துவிடும் என அவர் உறுதியாக நம்புகிறார். அப்படியே இயேசுவின் 'மேலுடையின் ஓரத்தை” தொடுகிறார். அவருடைய நம்பிக்கையால்  நோய் நீங்கி நலம் பெறுகிறார். இயேசுவைத் தொட்டுக் குணம் பெற்ற மனிதர்களில் ஒருவராகப் பெருமை அடைகிறார். பன்னிரு ஆண்டுகளாக இரத்தப் போக்கினால் வாடிய பெண் இயேசுவைத் தொட விரும்பியது அவரது நம்பிக்கையையும், துணிவையும் எடுத்துக்காட்டுகிறது. சிறுமியின் தந்தையிடம் இயேசு, அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர் என சிறுமியின் கையைப் பிடித்து சிறுமியைச் சாவிலிருந்து உயிர்பெற்றெழச் செய்தார்.  அச்சிறுமி எழுந்து நடந்தாள்.
 
கைகள் தொடுவதால் இரு வேறு நிகழ்ச்சிகளில் வல்லமை கைமாறுவதை இங்கு காண்கிறோம். பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப்போக்கினால் வருந்திய ஒரு பெண். இயேசு கையை பிடித்த சிறுமி என இரு பெண்களில் புதுமைகள் நிகழ்கின்றன. அப்பெண் இயேசுவைத் தொட்டதால், இயேசுவின் ஆற்றல் கைமாறியதால் அவள் குணமடைந்தாள். இயேசு அக்குழந்தையைத் தொட்டதால், இங்கும் அவரது ஆற்றல் கைமாறியதால்,இறந்த குழந்தை மீண்டும் உயிர் பெற்றது.

தொடுவது நலம் தரும் அனுபவம் என்பதைக் குழந்தைப் பருவத்திலிருந்தே நாம் உணர்ந்திருக்கிறோம். நமது தொடுதல் பிறரை நலமடைய வைப்பதாக இருக்க வேண்டுமேதவிர, பிறரைத் துன்புறுத்துவதற்காக, இழிவு செய்வதற்காக அமையக்கூடாது. அவை மனித மாண்பைக் குறைப்பனவாகவும் விளங்கக்கூடது. பிறரைத் தொடும் ஒவ்வொரு நிகழ்வும் ஒரு பரிமாற்றம். அன்பையும் ஆற்றலையும் வாழ்வையும் பகிர்ந்து கொள்ளும் இறை அனுபவம். இத்தகைய புனித பரிமாற்றம் நாம் கடவுளைத் தொடும்போதும், கடவுள் நம்மைத் தொடும்போதும் நடைபெறுகிறது. நற்கருணை வாங்கும்போது மிகச் சிறப்பாக இப்புனித பரிமாற்றம் அரங்கேறுகிறது. ஒவ்வொரு முறை பிறரைத் தொடும்போதும், வாழ்வளிக்கும் இப்புனித பரிமாற்றத்தை நாம் செயல்படுத்துவோம். ஆகவே இறைவனையும் பிறரையும் நாம் தொடுவதன் சிறப்பை, மாண்பை, மகிமையை உணர்ந்து செயல்படுவோம். எனவே, ஒவ்வொரு முறையும் நாம் பிறரைத் தொடும்போது அது நலம் தரும் அனுபவமாக அமையுமாறு பார்த்துக்கொள்வோம்.

இன்றைய அதிசய நிகழ்ச்சிகள் புதுமை மட்டுமல்ல, ஆழ்ந்த பொருளுடைய நிகழ்ச்சியாகவும் இருக்கின்றன. அதாவது, இயேசு மக்களுக்கு வாழ்வளிக்க வந்தார். அவர்களுக்குப் புத்துயிர் வழங்க வந்தார். அவர்களுக்குக் கடவுளின் வாழ்வில் பங்களிக்க வந்தார். எனவே இயேசு கூறிய வார்த்தைகள்; நாம் இயேசுவின் வல்லமையால் ஒருநாள் உயிர்பெற்றெழுவோம் என்பதற்கு முன் அடையாளமாயிற்று. எனவே இறை வார்த்தையில் புதுப்பிக்கப்பட்டு புதுவாழ்வு வாழ் புதுமனிதர்களாக மாறுவோம்

No comments:

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff