Tuesday, November 20, 2012

பாதங்களை கழுவும் மாமன்னராய் மாறுவோம்


25.11.2012
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

இன்று நாம் கிறிஸ்துவை அரசராக நினைந்து விழாக்கொண்டாடுவதற்கு தரப்பட்ட வாசகம் பிலாத்து இயேசுவைச் சந்தித்தக் காட்சி. இன்நற்செய்தி 'கிறிஸ்துவை அரசர்" என்பதன் உட்பொருளை ஓரளவு உணர்துகின்றது. இயேசு இவ்வுலகில் வாழ்ந்தபோது, அவரை அரசராக எண்ணிப் பார்த்தவர்கள், அரசராக்க முயன்றவர்கள் ஒரு சிலர்.

நற்செய்தியில் இயேசுவை அரசர் என்று கூறிய முதல் மனிதர்கள் கீழ்த்திசை ஞானிகள். இயேசு பிறந்ததும், அவரைக் காண நெடுந்தூரம் பயணம் செய்து தேடி வந்து உலக அரசரைப் போல் அவர் இருப்பார் என்று ஏரோது அரசனின் அரண்மனைக்குச் சென்றனர். ஏரோதிடம், 'யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? என்றார்கள்."  கள்ளம் கபடில்லாமல் அவர்கள் கேட்ட அந்தக் கேள்வி பல நூறு கள்ளம் கபடமற்ற குழந்தைகளின் உயிரைப் பலி வாங்கி விட்டது.

இரண்டாவது சம்பவம் யோவான் நற்செய்தி இயேசு அப்பத்தைப் பலுகச் செய்து, மக்களின் பசியைத் தீர்த்தார்து. இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள், 'உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே என்றார்கள். அவர்கள் வந்து தம்மைப் பிடித்துக் கொண்டுபோய் அரசராக்கப் போகிறார்கள் என்பதை உணர்ந்து இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார்"

மூன்றாவது சம்பவம் எருசலேம் வீதிகளில் நடந்தது. திருவிழாவுக்குப் பெருந்திரளாய் வந்திருந்த மக்கள் இயேசு எருசலேமுக்கு வருகிறார் என்று கேள்வியுற்று, குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு அவருக்கு எதிர்கொண்டுபோய், 'ஓசன்னா! ஆண்டவரின் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! இஸ்ரயேலின் அரசர் போற்றப்பெறுக!' என்று சொல்லி ஆர்ப்பரித்தனர்.

வயிறார உண்டதால் வந்த ஆர்வம் இயேசுவை அரசராக்கத் துடித்தது. தங்களுக்கு விடிவு வராதா என்ற ஏக்கம், எருசலேம் வீதிகளில் ஆரவாரமாய் ஓசன்னா அறிக்கையாக மாறியது. ஆனால், இப்படி அந்தந்த நேரத்தின் தேவைக்கேற்ப தோன்றி மறையும் ஆர்வம், ஆரவாரம் நிலைத்திருக்காது என்பது சில நாட்களிலேயே நிஷரூபணமானது.

நான்காவது சம்பவம் இயேசுவின் விசாரணைகளின் போது நடந்தது. இயேசுவை அரசர் என்று பிறர் கூறிய வதந்திகளால் பயம் கொண்ட பிலாத்து, இயேசுவிடமே நீர் அரசரா? என்று கேட்டார். அந்தக் கேள்வியின் உண்மையான பதிலைக் கண்டு பிடிக்கவும் பிலாத்து பயந்தார்.

ஐந்தாவது பிலாத்துவும் யூதர்களின் தலைமைக்குருக்களும் இடையில் நடந்த உரையாடல் காட்டுகின்றது: யூதரின் அரசன்  என்று எழுதவேண்டாம் மாறாக  யூதரின் அரசன் நான் என்று அவனே சொல்லிக்கொண்டதாக எழுதும்  என்று கேட்டுக்கொண்டனர்  பிலாத்து நான் எழுதியது எழுதியது தான் என்றான்.

'அரசர்" என்று இயேசு அழைக்கப்பட்ட ஆறவதான நிகழ்வு கல்வாரியில் நடந்ததாக லூக்கா நற்செய்தியில் கூறப்பட்டுள்ளது. இயேசுவை அரசராகப் பார்க்க முடியாத உரோமைய வீர்களின் ஏளனக் குரலும், இயேசுவை அரசர் என்று ஏற்றுக் கொண்ட குற்றவாளியின் ஏக்கக் குரலும் இன்நற்செய்தியில் ஒலிக்கின்றன.

உரோமைய வீரர்கள் இதுவரை பல அரசர்களைச் சந்தித்தவர்கள். பல அரசர்களுக்கு பணிவிடை செய்தவர்கள். அவர்களுக்குத் தெரிந்த அரசர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, சிலுவையில் குற்றவாளி போல் தொங்கிக் கொண்டிருந்த இயேசு ஒரு பரிதாபமான, போலி அரசனாய் தெரிந்தார். அவர்களது ஏளனத்திற்குத் தூபம் போடும் வகையில் அந்தச் சிலுவை மீது "இவன் யூதரின் அரசன்." என்று ஏக வசனத்தில் எழுதி, வைக்கப்பட்டிருந்தது.

இந்த ஏளனக் குரல்களுக்கு நேர் மாறாக, இயேசுவுடன் அறையப்பட்டிருந்த குற்றவாளியின் ஏக்கக் குரல் இயேசுவின் அரசத் தன்மையை வெளிப்படுத்துகிறது.'இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்".

சிலுவையில் தொங்கும் அந்த உருவத்தை மனிதன் என்று கூட ஏற்றுக்கொள்ள முடியாத அந்த சூழ்நிலையில், இந்தக் குற்றவாளி இயேசுவை ஓர் அரசனாக எப்படி காண முடிந்தது? அவர் இயேசுவிடம் கண்ட அரசத் தன்மை என்ன? உலக மன்னர்களில் ஒரு சிலர் கைது செய்யப்பட்ட போது, அல்லது அவர்கள் தூக்கு மேடைக்கு கொண்டு செல்லப்பட்ட போது, அவர்கள் காட்டிய கண்ணியம், அமைதி எதிரிகளையும் அவர்கள் மீது மரியாதை காட்ட வைத்தது என்று வரலாறு சொல்கிறது. அந்த கண்ணியத்தை, அந்த அமைதியை இயேசுவிடம் கண்டார் இந்தக் குற்றவாளி. அவர் கண்களில் இயேசு அறையுண்டிருந்த சிலுவை ஒரு சிம்மாசனமாய்த் தெரிந்தது. இயேசு தலையில் சூட்டப்பட்ட முள்முடி, மணி மகுடமாய்த் தெரிந்தது. எனவே, இயேசு அரசரிடம் தன் விண்ணப்பத்தை வைத்தார் அந்தக் குற்றவாளி.

இதுவரை நாம் சிந்தித்த மற்ற நிகழ்வுகளிலும் இயேசு தவறான முறையில் 'அரசன்" என்று கருதப்பட்டார். இவர்களில் யாருக்கும் இயேசு சரியான பதில் கூட சொல்லவில்லை. தன்னை வாழ்வில் அரசரென அழைத்த, அல்லது அரசராக்க முயன்ற பலருக்கும் பதில் தராத இயேசு, இந்தக் குற்றவாளிக்குப் பதில் தருகிறார். தனது உண்மையான அரசை, தனது உண்மையான அரசத் தன்மையை இந்தக் குற்றவாளி கண்டு கொண்டார் என்பதை இயேசு உணர்ந்ததனால் என்னவே அவருக்கு மட்டும் சரியான பதிலைத் தருகிறார். 'நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்" என உறுதிகூறுகின்றார் இயேசு.

இயேசு நமக்கும் இந்த உறுதியைத் தருகிறார். தன் பேரின்ப வீட்டில் நமக்கும் இடம் தர நம்மை அழைக்கிறார். இதுதான் அவர் நிறுவ வந்த அரசு. இதற்குதான் அவர் அரசர். இறைவன் ஒருவரே தேவை, அவர் ஒருவரே போதும் என்று சொல்லக்கூடிய மனங்களில் இந்த அரசு நிறுவப்படும். இந்த அரசில் அரசன் என்றும், அடிமை என்றும் வேறுபாடுகள் இல்லை, எல்லாரும் இங்கு அரசர்கள். இந்த மன்னர்கள் மத்தியில் இயேசு ஒரு மாமன்னராய் அமர்ந்திருப்பார் என்று தேடினால், நமக்கு ஏமாற்றமே காத்திருக்கும். ஏனெனில், இயேசு அரியணையில் அமர்ந்திருக்க மாட்டார். அவர் நம் எல்லாருடைய பாதங்களையும் கழுவிக்கொண்டு இருப்பார். எல்லாரையும் மன்னராக்கி, தானும் மன்னராகும் இயேசுவின் அரசுத்தன்மையைக் கொண்டாடத்தான் இந்த கிறிஸ்து அரசர் திருநாள். இத்திருநாள் தான் கிறிஸ்து அரசர் பெருவிழா.

No comments:

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff