Thursday, May 30, 2013

'மனநிலை மாற்றம் பெற்று பகிர்தல் வாழ்வை வளப்படுத்துவோம்"

02.06.2013
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
இயேசு தம் திருவுடலையும், இரத்தத்தையும் நமக்கு உணவாகத் தருகிறார்.அவரது பேரன்பைப் போற்றி இன்று அதை எண்ணி நாம் பெருவிழாவாகக் கொண்டாடுகிறோம். உடல் என்பது ஒருவரது ஆளுமையின் மிக வெளிப்படையான கூறாகும். மனம்,  ஆன்மா, உணர்வுகள் என்பவை வெளியில் தெளிவாகக் காணக் கிடைக்காத ஆளுமையின் தளங்கள். ஆனால், உடல் மட்டுமே அனைவருக்கும் அறிமுகமான, வெளிப்படையான தளம். அது மட்டுமல்ல, உடல்தான் இறைவனுக்கு அர்ப்பணம் செய்யத்தகுந்த மிகச் சிறந்த தளமும்கூட. அதனால்தான், இயேசு தம் உடலை இறைவனுக்காகவும், நமக்காகவும் கையளித்தார். இரத்தம் உயிரின் ஆதாரம். இரத்தம் சிந்துதால் தியாகத்தின் அடையாளம். 'இரத்தம் சிந்துதல் இன்றி பாவ மன்னிப்பு இல்லை".  எனவே, எமக்காக தன்னை கையளித்த இயேசுவின் உடலுக்காக, இரத்தத்துக்காக நாம் பிரதியுபகாரமாக  நமது உடலை இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றக் கையளிப்போம். நாம் இரத்தத்தைச் சிந்தாவிட்டாலும், பிறர் வாழ தியாகங்கள் செய்ய முன்வருவோம்.

நாம் கற்றறிந்த ஒரு வரலாற்று உண்மையை இங்கு குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும் 'இயேசுவின் திருஉடல் திருஇரத்த பெருவிழாவிற்கு ஒரு வரலாற்று உண்மை உண்டு. 1263ல் பிராகுவேயைச் சார்ந்த ஒரு கத்தோலிக்க குருவானவர் தன் அழைத்தலைப்பற்றி பல்வேறு கேள்விகளோடு திருப்பயணியாக உரோமை நகர் நோக்கி பயணமானார். பயணத்தின் பாதிவழியில் உரோமையிலிருந்து 70கி.மீ தொலைவிலுள்ள போல்சேனா என்ற இடத்தில் புனித கிறிஸ்தினால் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலுள்ள பீடத்தில் திருப்பலியாற்றினார். அப்பொழுது அர்ச்சிப்பு வார்த்தையை சொல்லி அப்பத்தை உயர்த்தியவுடன் அது சதையாக மாறி இரத்தம் கசிய துவங்கியது. இரத்தம் பீடத்தில் மேலுள்ள கார்ப்பரோல் என்ற விரிப்புதுணிமீது படிந்தது. இந்த நற்கருணை அற்புததிற்கு பிறகு 1264ல் திருத்தந்தை நான்காம் அர்பன் இயேசுவின் திருஉடல் திருஇரத்த திருவிழாவை தொடங்கி கொண்டாட கட்டளை பிறப்பித்தார். அன்றிலிருந்து இவ்பெருவிழா கொண்டாடப்பட்டு வருகின்றது

இதனைவிட இன்னும் சில உண்மைகளை இங்கு குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டும். 1431ல் இங்கிலாந்தில் புனித ஜேர்ன் ஆப் ஆர்க் சிறையில் நெருப்பில் இடப்படுவதற்கு முன்பாக அவரது ஆசைக்கு என்ன வேண்டும், கடைசி உணவாக விருந்தாக என்ன வேண்டும் என்று அவரிடம்  கேட்;கப்பட்டபோது அவர் கூறியது 'நற்கருணை வேண்டும்" என்றதுடன் காரணம் எந்த திருவிருந்து எனக்கு தொடர்ந்து பலம் தந்து என்னோடு இருந்து என்னைத் தொட்டதோ அதுவே நிரந்தர துணை, பலம் பிரசன்னம் என்றார்.

பாத்திமாவிலிருந்து சிறி தொலைவிலுள்ள பலசார் என்ற இடத்தில் 1904ல் பிறந்து 1955ல் இறந்த அலெக்சாண்டிரியா என்ற பெண் ஒரு விபத்தான சூழ்நிலையில் பாதிக்கப்பட்டு படுக்கையிலிருந்து 13 ஆண்டுகள் நற்கருணை மட்டுமேபெற்று வாழ்ந்தது மருத்துவர்களை ஆச்சரியத்துள்ளாக்கியது என்பதும் வரலற்றுப் பதிவாகியுள்ளது. விசுவசித்தால் திருவிருந்து தொடரும் என்றும் நம்மை தொடும்.

அண்மையில் மரியா என்ற 14வயது இளம்பெண் 8மாதங்களாக காத்திருந்து இருதயமாற்று அறுவைசிகிச்சைவழியாக புதிய இதயம் பெற்றாள். அவள் பல நாட்கள் பெற்றோரோடு நற்கருணை திருவிருந்தை தேடிவரக்காரணம் என்ன என்று கேட்டபொழுது அவர்கள் சொன்னது இதுதான் எங்களின் தொடர்விருந்து எங்களை இப்புதிய இதயத்தின் வழியாக தொடும் நற்கருணை இயேசு எங்களுக்கு தினமும் வேண்டும் அவர் தான் நிரந்தர சக்தி என்றார்கள். புனித பீட்டர் ஜீலியன் நாம் நற்கருணை இயேசுவால் ஆட்கொள்ளப்பட வேண்டும் நாம் திருவிருந்தில் அவரை ஆட்கொள்ள வேண்டும் என்றார்.
இப்படி எண்ணற்ற நற்கருணையின் அற்புதங்களை நாம் அறிந்திருக்கின்றோம். இவைகளெல்லாம் இது ஒரு தொடரும் திருவிருந்து என வெளிப்படுத்துகின்றன. அந்த குருவானவரின் சந்தேகத்திற்கு அவரை தொட்டு ஆழப்படித்தியதுபோல நம்மையும் அந்த தொடர் மற்றும் தொடும் உணர்வுக்கு அழைக்கின்றது.
 
இயேசு தமது இறுதி இராப்போசனத்தின்போது அப்பத்தையும் இரசத்தையும் தமது உடலும் இரத்தமும் எனக்கூறி அதனை தம் சீடர்களுக்குப் பகிர்ந்தளித்தார். அப்பம் ஏந்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பகிர்தலின் ஞாபகம் நமக்கு உணர்த்தப்படுகிறது. எனினும் அப்போது எம் மனநிலையில் மாற்றம் ஏற்படுகிறதா என்பதே நாம் சிந்திக்கவேண்டியது. ஏனெனில் பகிர்தல் வாழ்வுக்கு மனநிலை மாற்றம் மிக அவசியம். கல்மனம் படைத்தவர்களால் பகிர்ந்து வாழமுடியாது. அப்பத்தின் வடிவில் இயேசுவின் உடலையும் இரசத்தின் வடிவில் அவரது இரத்தத்தையும் பகிர்ந்து உண்ணும் நாம் அவரது திருவுளப்படி வாழ முற்படுகிறோமா? நம்மில் அதற்கான மனமாற்றம் ஏற்படுகிறதா என்பதையும் சிந்திக்க வேண்டும.; இத்தகைய சிந்தனைகள் ஏற்படுத்தும் மாற்றமே இப்பெருவிழாவை அர்த்தமுள்ளதாக்கும்.

Friday, May 24, 2013

அன்பின் ஐக்கியத்தில் புதிய வாழ்வை பிறக்கசெய்வோம்

26.05.2013
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். என இயேசு தம் சீடரை நோக்கிக் கூறும் வேதகமப்பகுதி மூவொரு கடவுளின் திருவிழாவாகிய இன்று எமக்குத் தரப்படுகின்றது. திருச்சபையில் விழாக்களின் ஒரு சிகரமாக இன்று மூவொரு இறைவனின் திருவிழாவை நாம் கொண்டாடுகிறோம். இத்திருவிழா பாஸ்கா மறைபொருள்களிலுள்ள தந்தை, மகன், தூய ஆவி குறித்த கடவுளின் வெளிப்பாட்டை நினைவுபடுத்துகின்றது. இறைவனின் இந்த இயல்பு அதிபுனித திரித்துவம் எனப்படுகிறது.
 
இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த இறையியல் வல்லுனர் பெக்குலியனால் இந்த மூவொரு கடவுள் என்ற மறையுண்மை கொண்டுவரப்பட்டது. இத்திருவிழா 1334 ஆம் ஆண்டில் திருத்தந்தை 22 ஆம் யோவானால் தொடங்கப்பட்டது. நைசீயா-காண்ஸ்டாண்டி நோபிள் திருச்சங்கங்கத்தில் உறுதி செய்யப்பட்ட இந்த விழா திருச்சபையின் அடித்தளமாக உள்ளது.

மூவொரு இறைவன் நம் கடவுள். இது எப்படி? மூன்றா? ஒன்றா? ஒன்று ஆனால் மூன்று. மூன்றுதான் ஆனால் ஒன்று. யாரும் அறிய முடியா மறைபொருள். தமத்திரித்துவத்தின் மகத்துவம் கூறும்; ஒரே கடவுள், மூன்று ஆட்களாய் இருக்கிறார் என்ற மறையுண்மைகளை மனித அறிவால், எண்ணத்தாலும் மொழியாலும் போதுமான அளவு விளக்க முடியாமல் இருந்த போதிலும், திருச்சபைத் தந்தையர், தங்களது வாழ்வு மற்றும் ஆழமான விசுவாசத்தின் வழியாக விளக்க முயற்சித்திருக்கிறார்கள் என்பது உண்மையே. மூவொரு இறைவனுள் தந்தை யாரு? மகன் இயேசு யாரு? தூயஆவி யாரு? இவர்ளுக்குள் என்ன உறவு, இவர்கள் தமக்குள்  என்ன பேசிகிறார்கள். இவர்;களைப் பற்றி மக்கள், அறிஞர்கள், இறைவாக்கினர்கள், என்ன பேசுகிறார்கள்? இவர்;களை நாம் புரிந்துகொள்ள முடியுமா? இவர்;ககளைப்பற்றிய விளக்கங்களும் விடையற்ற ஒரு புதிர்தானா? என்று அறிவின் தேடலை இன்று முடக்கிவிட்டிருக்கின்றோம்.
 
நம் அறிவுக்குள் கடவுளை அடக்கிவிட முயலும்போதெல்லாம் 4ம் நூற்றாண்டில் வாழ்ந்த நுஎநபசரைள  (இவக்றியஸ்) என்ற கிரேக்கத் துறவியின் வார்த்தைகளை நினைவில் கொள்வது நல்லது: 'கடவுளை நம் அறிவுக்குள் அடக்கிவிட முடியாது. அப்படி அடக்க முடிந்தால், அவர் கடவுளாக இருக்க முடியாது.' என்பதாகும். ஒருமுறை புகழ் பெற்ற அறிவியலார் டாக்டர் ஹென்றி மோரிஸ் கூறுகிறார்– உலகம் பருப்பொருள், இடம், காலம் ஆகியவற்றால் ஆனது. இவை மூன்றும் இல்லையேல், ஏதேனும் ஒன்றுகூட இல்லாதிருந்தாலும் இந்த உலகு இல்லை. அதே போல மூவொரு கடவுளும் இருப்பது அவசியமாகிறது என்கிறார் அவர். இவை ஒவ்வொன்றுமே மூன்றில் ஒன்றாக இருக்கின்றன.

'இந்த உலகில் மிக அழகான, ஆழமான அனுபவங்கள் எல்லாமே நாம் முற்றிலும் புரிந்துகொள்ள முடியாத மறையுண்மைகள். இந்த ஆழமான அனுபவங்களை இதுவரை தங்கள் வாழ்வில் பெறாதவர்களை குறைந்தபட்சம் பார்வை இழந்தவர்கள் என்றாகிலும் சொல்லலாம்.' என்று அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் சொல்லிச்சென்றார். நாம் காணும் இந்த உலகின் பல உண்மைகளுக்கு அறிவியல் விளக்கங்களைக் கண்டு பிடித்த அந்த மாமேதையே வெகு ஆழமான உண்மைகளைச் சந்தித்தபோது மௌனம் காத்தார்.'

நம் இறைவன் மூவொரு கடவுள் என்பதையே நமக்கு அறிமுகம் செய்தவர் இயேசு. கடவுளை ஒரு கூட்டுக் உறவாய் அறிமுகம் செய்தவர் இயேசு. நாம் வழிபடும் இறைவன் உறவுகளின் ஊற்று என்றால், நாமும் உறவுகளுக்கு முக்கியமான, முதன்மையான இடம் தர அழைக்கப்பட்டுள்ளோம். உறவுகளுக்கு நம் வாழ்வில் எந்த இடத்தைத் தந்திருக்கிறோம். நாம் வாழும் இன்றைய உலகில், நம் அன்பு உறவுகளே மிக அதிகமாகப் பழுதடைந்திருக்கிறது. பழுதடைந்துள்ள அந்த உறவை மீண்டும் சரிசெய்ய இன்று உறவாக வாழும், மூவொரு இறைவனின் திருநாள் அழைக்கின்றது. மூன்று ஆளாகிய கடவுளில் நிகழ்கின்ற அன்புப் பரிமாற்றம் கடவுள் அன்புமயம் என்று நாம் கூறுவதற்கு அர்த்தம் தருகிறது. இன்று உறவுகள் சிதறுவதற்கு அன்புறவின் விரிசலே காரணம். உறவுகள் முறிந்து சிதைந்து கொண்டிருக்கும் வாழ்க்கை நிலையை நம் சமுதாயத்தில் கண்கூடாகப் பார்க்கமுடியும். முரட்டு மனிதர்களையும் பாசத்தால் கட்டிப் போட முடியும் என்பது அன்றாட வாழக்கை நமக்கு உணர்த்தும் பாடம். அன்புக்காகவும் உறவுகளுக்காகவும் ஏங்கும் மனிதர்களை நாம் பார்க்க முடியும். கடவுளுக்குள் உறவின் ஒற்றுமையை நாம் தரிசிக்கின்றோம். கடவுள் மூன்று ஆட்களாய் இருக்கிறார், அவர் அன்பின் குழுமம் ஆகும் இதனை முதலில் தெளிவாக வெளிப்படுத்துவது குடும்பமே. கடவுளின் சாயலாக படைக்கப்பட்ட ஆணும் பெண்ணும் ஒரே உடலாக ஆகின்றார்கள், இந்த அன்பு ஐக்கியமானது புதிய வாழ்வை பிறப்பிக்கிறது. இவ்வாறு மனிதக் குடும்பத்தில் விளங்கும் ஒருவர் ஒருவர் மீதான அன்பு வாழ்வைப் பிறப்பிப்பதற்கான அதன் பணியை முன்னிட்டு அது மூவொரு கடவுளின் வெளிப்பாடாக இருக்கின்றது என்று உணர்ந்து இப்பெருவிழாவின் விழுமியங்களை வாழ்வாக்குவோம் 

வாழ்க்கையில் எம் வெற்றிக்குப் ஏணியாக உதவிய கரங்களை நாம் மறந்துவிடலாமா?

19.05.2013'"  ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
 
யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, 'உங்களுக்கு அமைதி உரித்தாகுக!" என்று வாழ்த்தினார். இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள். இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, 'உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்பகிறேன்" என்றார். இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, "தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்…என்றார். வேதகமத்தின் இப்பகுதி இன்று எமக்குத் தரப்படுகின்றது. ஆணிகளால் துளையிடப்பட்டு காயப்பட்ட பகுதியை காட்டினான் என்னும் பகுதியை நோக்குவோம்.

ஷஎங்கள் மூச்சுக்குள்ளே உண்டு பாட்டுச்சந்தம் என்றும் பாட்டுக்கள் தான்  எங்கள் சூரியோதயம்| தருண் ஹீரோவாக நடத்த புன்னகைதேசம் படத்தில் இருந்து எல்லோர் மனதையும் கொள்ளை கொண்ட பாடல் வரிகள் இவை. பெற்றெடுத்த பெற்றோரும் துரத்திவிட ஒட்டி உறவாடியவர்களும் ஏழனம் செய்ய வாழ்கையின் விழிம்புக்கு சென்ற மூன்று இளைஞர்களை தருண் நண்பர்களாக்கி அவர்களுக்காக தன்னை கரைத்து மாடய் வேலைசெய்து அவர்களுக்காக மற்றவர்களிடம் பரிந்துபேசி அவர்களுக்காக மற்றவர்களிடம் ஏளனம் பெற்று அவர்களை இசையில் சாதனை புரியவைத்து நட்புக்கு பாடம் புகட்டியவர்.அந்த நண்பர்களின் பணயம் பைகளையே கூலியாளாகத் தன் கைகளால் தூக்கிகாட்டியவர். இவ்வாறு படம் நகர்கின்றது. எமக்காக தன் கைகளில் ஆணிகளை ஏற்றவர் தம் கைகளை இன்று எமக்கும் காட்டுகின்றார். எமது பதில் என்ன?   

1492 கலப்பகுதியில்  ஜெர்மனி நாட்டில் ஆர்வம் மிக்க ஆல்பிரட் ட்ரூரர் மற்றும் பிரான்ஸ் க்னிக்ஸ்டெயின் ஆகிய இரண்டு நண்பர்கள் சிறந்த ஓவியர்களாக வேண்டும் எனத் திட்டமிட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்கள் ஓரளவு ஓவியம் வரைய தெரிந்திருந்தார்கள். ஆனால் ஓவியப் கல்லூரிக்கு சென்று கற்பதற்குத் தேவையான பணமில்லை. அவர்கள், ஒருவர் வேலை செய்து மற்றவர் படிப்பதற்குப் பண உதவி செய்வதென்றும், அவ்வாறு படித்தவர் மற்றவருக்குப் பிறகு உதவி செய்வதென்றும் உறுதி செய்துகொண்டனர்.
யார் முதலில் கற்கச்; செல்வது என்பதைக் கண்டறிய அவர்கள் ஒரு காசைப் பூவா, தலையா எனப் போட்டுப் பார்த்து முடிவெடுத்துக் கொண்டனர். முதலில ட்ரூரர் முதலில் படிக்கச் சென்றார் . க்னிக்ஸ்டெய்ன் வேலை செய்யச் சென்றார். ட்ரூரர் மிகத் திறமையான ஓவியரானார். தம் ஓவியங்களை நிறைய விலைக்கு விற்கத் தொடங்கினார். தம்முடைய ஒப்பந்தப்படி ஊருக்குத் திரும்பி தம் நண்பர் க்னிக்ஸ்டெய்ன் படிப்பதற்கு ஏற்பாடுகளைச் செய்ய வந்தார். அப்பொழுதுதான் தம் நண்பர் தமக்காகச் செய்திருந்த தியாகத்தை அவர் உணர்ந்தார். தம் நண்பரின் கடுமையான உழைப்புக் காரணமாக அவரது விரல்கள் விறைத்துப் போய் மென்மையான ஓவியம் தீட்டுவதற்குத் தகுதியில்லாதவைகளாக இருந்ததை கண்டார். க்னிக்ஸ்டெய்ன் ஓவியராவதற்கன தன் கனவுகளை மறந்தாலும் வருத்தப்படவில்லை. தம் நண்பருடைய வெற்றியில் இவரும் பெருமகிழ்ச்சி கொண்டார். ஒரு நாள் ஆல்பிரட் ட்ரூரர்;, தம் நண்பர்; க்னிக்ஸ்டெய்ன் கைகளைக் கும்பிட்டபடி செபித்துக் கொண்டிருந்த காட்சியை அவர் காணாத போது ஓவியமாகத் தீட்டினார். அந்த ஓவியம் விலை மதிப்பில்லாத மிகச் சிறந்த ஓவியமாக மதிக்கப்பட்டது. தம் வாழ்வையும் கைகளின் உழைப்பையும் தானமாகத்தந்த நண்பரின் கும்பிட்ட கைகள் இன்று காலமெல்லாம் மறக்கமுடியாத மிகச் சிறந்த ஓவியமாக உலகெங்கும் போற்றப்படுகிறது. இன்று ஓவியக் காட்சி சாலைகளில் ட்ரூரர்;, பல சிறந்த ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு கண்களையும் மனத்தையும் கொள்ளையடிக்கின்றன . ஆனால் எல்லோர் உள்ளத்தையும் கண்டிப்பாகக் கவர்வது கும்பிட்ட கைகள் என்ற அவருடைய நண்பருடைய கரங்களாகும். அந்த ஓவியம் பல லட்சம் பிரதிகள் உலகெங்கும் பிரதி எடுக்கப்பட்டு விற்கப்பட்டுள்ளது. இந்த ஓவியம் அந்தக் கைகளின் தியாகத்தை, நிபந்தனையில்லாத பேரன்பை, கடுமையான உழைப்பை, நன்றிப் பெருக்கை நினைவு படுத்துகின்றது .

இயேசுவின் கைகள் இன்னும் மிகப்பெரிய கதையை நமக்குச் சொல்கின்றன. இதோ, என் கைகளைப் பாருங்கள் என இன்றைய நற்செய்தியில் இயேசு கூறுகிறார். நம் நெஞ்சைத் தொடும் இந்தக் காட்சியை சாட்சியாக்கி உயிரோடு வாழ்வதாகக் காட்டுகிறார். எம் மனதில் இயேசுவின் தழும்புகளும் சிலுவைச் சாவும் அழியாது பதிந்திருக்கின்றன. இயேசு நமக்கு நல்லதொரு நண்பராக உள்ளார். வாழ்க்கையில் எம் வெற்றிக்குப் படியாக, ஏணியாக பின்புலத்திலிருந்து உதவிய கரங்களை நாம் மறந்துவிடுகின்றோம். நம் வாழ்க்கையில் நாம் முன்னேற தம் கைகளைக் காயப்படுத்தி நமக்கு அன்பைப் பொழிந்து உதவியவர்களை நினைத்துப் பார்க்கிறோமா. நம்முடைய வருங்கால வெற்றிகளும் நமக்காக தன்னுயிரைச் சிலுவையில் தந்து ஆணிகள் துளைத்த அந்தக் கரங்களைக் காட்டும் இயேசுவின் கரங்களில் தியாகத்திற்கு எமது சமர்ப்பணம் என்ன?

எம் செயல்கள் நாம் விண்ணகம் நோக்கிப்; செல்பவர்கள் என்னும் எண்ணத்தைப் பிறருக்கு வழங்கவேண்டும்

12.05.2013'"
 ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
 
நாம் ஆண்டவர் இயேசு விண்ணேற்றமடைந்த திருவிழமவை நாம் இன்று கொண்டாடுகின்றோம்.   இயேசு இவ்வுலகில் தனக்கு நேர்ந்த பல துன்பங்களை இறைசித்தத்தை நிறைவேற்ற பொறுமையோடு தாங்கினார். ஆண்டவர் மேல் அவர் வைத்த நம்பிக்கையே அவருக்கு ஆற்றல் கொடுத்தது. இதனால் இறைவன் இயேசுவை உயர்த்தினார். இயேசுவும் விண்ணேற்படைந்தார். இயேசுவின் விண்ணேற்பு ஆண்டவன் பார்வையில் நாமும் இயேசுவைப் போல் உண்மைக்காக நீதிக்காக அன்பிற்காக நம்பிக்கையுடன் வாழும்போது உயர்த்தப்படுவோம் என்ற நம்பிக்கையை அளிக்கின்றது. உண்மைக்கு சாட்சியம் பகிர்வதே எனது பணி என்று கூறிய இயேசு தான் உயிர்தெழுந்தபின் தான் உயிர்த்தெழுந்ததை உலகிற்கு அறிவிக்கவும் அதற்கு சாட்சியம் பகிரவும் அழைப்பு விடுக்கிறார். உலகில் நற்செய்தியையும் மீட்பையும் அறிவிப்பதற்காக நாம் அனுப்பப்படுகின்றோம். நாம் சமுதாயத்தில் புளிக்காரமாகவும் ஒளியாகவும் இருந்து புத்துணர்ச்சியுடனும்; செயல்படவேண்டும். அப்போதுதான் சமுதாயம் கிறிஸ்தவ விழுமியங்களால் உரம் பெற்று உறுதியுடன் உயிர்த்துடிப்புள்ள அங்கமாக கடவுளின்பக்கம்; தடம் பதிக்கும்.

ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்பு விழா நமது வாழ்வின் இலக்கை ஆய்வு செய்ய அழைப்பு விடுக்கிறது. இயேசுவின் விண்ணேற்பு நமக்கெல்லாம் ஒரு முன் மாதிரி. இயேசுவைப் போலவே நாமும் விண்ணேற்படைந்து, கடவுளின் வலப்புறம் அமரவேண்டும் என்பதே இறைவனின் திருவுளம். அதுவே நம் வாழ்வின் இலக்காகவும் வேண்டும். இவ்வுலக வாழ்வு நமக்கொரு இடைப் பயணமே. நமது கண்களோ விண்ணகம் நோக்கியே அமையவேண்டும். இவ்வுலக இன்பங்களில் நமது காலத்தைக் கடத்தாமல், விண் நோக்கி நமது கண்களும், இதயமும் எழும்பட்டும். இவ்வுலகில் வாழ்ந்தாலும், நாம் இவ்வுலகைச் சாராதவர்களாக, விண்ணகம் சார்ந்தவர்களாக நம் வாழ்வு அமையவேண்டும். நமது எண்ணங்கள், சொற்கள், செயல்கள் நாம் விண்ணகம் நோக்கிப் பயணம் செய்பவர்கள் என்னும் எண்ணத்தைப் பிறருக்கு வழங்கவேண்டும்.

கடவுள் நம்மை அன்புசெய்கிறார்;. நாம் கடவுள் காட்டும் வழியில் நடந்து சென்று அவரிடத்தில் நிலையான அமைதியையும் மகிழ்ச்சியையும் கண்டுகொள்ள வேண்டும்; எனும் நற்செய்தியை இயேசு கொண்டுவந்தார். கடவுள் உலகின்மீது கொண்ட எல்லையற்ற அன்பினால் தன் ஒரே மகனை நமக்கு மீட்பராக அளித்தார்;. அவரிடத்தில் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். உண்மைக்கு சாட்சியம் பகிர்ந்து இயேசு உயிர்தெழுந்ததை உலகிற்கு அறிவித்து அதற்கு சாட்சியம் பகிரவேண்டும் என்பதே இயேசு கொண்டுவந்த நற்செய்தியின் சுருக்கம். உலகில் வாழ்கின்ற அனைவருக்கும் இந்நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டும் என்பதே இயேசுவின் விருப்பம். இயேசு உலகில் ஆற்றிய அதே பணியைத் தொடர்ந்து ஆற்றுவதே எமக்கு தரப்பட்ட பொறுப்பு. 'உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள் இயேசுவின் சீடர்கள் ஆற்ற வேண்டிய முக்கிய பணி 'நற்செய்தி அறிவித்தலே. இதை நாம் வெறும் வார்த்தைகளால் வடித்துவிடக்கூடாது. மாறாக, நற்செய்தி என்பது ஒரு வாழ்க்கை முறை. இயேசுவின் போதனையை உள்ளத்தில் ஏற்று, அதை வாழ்வில் சான்று பகிர்தலே நற்செய்தி அறிவிப்பின் முக்கிய அம்சம். இவ்வாறு நாம் நற்செய்திக்கு நம் வாழ்வின் வழியாகச் சான்று பகிர்ந்தால் அனைவரும் நற்செய்தியை அன்னியமாகப் பார்க்கமாட்டார்கள்.

நீதியில், நேர்மையில் உருவாகும் விடுதலையும், வெற்றியும் தன் மக்களுக்கு உண்டு என்று இறைவன் உறுதி அளிக்கிறார். இன்றைய உலகையும், நாளைய உலகையும் குறித்து நம்பிக்கை இழந்திருக்கும் நமக்கு, பிளவுகள், பிரிவுகள், ஏற்றத் தாழ்வுகள் ஆகியவற்றால் நிறைந்து வெறுப்பை உமிழ்ந்து வரும் இன்றைய உலகிற்கு  நீதியை நிலைநாட நேர்மையைக் கடைபிடிக்க இயேசுவின் விண்ணேற்பு எமக்கு வாழிகாட்டட்டும்
 
சிலுவைப்பாடுகளின்; கொடூரமான நிலையிலும் தந்தை தன்னை காப்பாற்றி உயிர்த்தெழச் செய்வார் என உறுதியாக இயேசுநம்பினார். சிலுவைப் பாடுகளே இயேசுவின் மாட்சியின் வெளிப்பாடுகளாயின. அதுவே உன்னதமான மகிமைபெற வழிவகுத்தது. அதுவே இன்று நாம் கொண்டாடும் விண்ணேற்பு விழா. இயேசு மாட்சிமையடைதலின் முழுமை இன்றைய விண்ணேற்பு நிகழ்விலே நிறைவடைகின்றது. இயேசு அடைந்த மாட்சியிலும் மகிமையிலும் மதிமயங்கி இருக்க நாம் அழைக்கப்படவில்லை. மாறாக நமக்கு தரப்பட்ட பணியை நிறைவேற்றவே அழைக்கப்படுகின்றோம். இவ்வுலகை அன்பு நிலவும் ஓர் இடமாக, நீதி தவழ்கின்ற தளமாக நம்பிக்கை முளைத்திடும் திடலாக மாற்றியமைத்திட நாம் உழைக்கவேண்டும் என்பதே நற்செய்தி அறிவிப்பின் முக்கிய அம்சமாகும். நாம் தூயஆவியால் உந்தப்பட்டு நற்செய்தியின் தூதுவர்களாக மாறி நற்செய்திப் பணியில் முழுமையாக நம்மை ஈடுபடுத்தினால் இவ்வுலகில் கடவுளின் ஆட்சி இன்னும் தெளிவாகத் துலங்கும். நற்செய்தியால் நம் வாழ்வு உருமாற்றம் பெறும். இயேசுவின் விண்ணேற்புப் பெருவிழா எம்மில் அர்த்தம்பெறும்.

Thursday, May 2, 2013

இயேசு எங்களுக்குத் தரும் அமைதியை உலகிற்கு வாரி வழங்குவோம்

05.05.2013
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

இயேசு,'அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல" எனக் கூறும் பைபிள் பகுதியை நாம் காண்கின்றோம். எங்கே நிம்மதி, அங்கே எனக்கோர் இடம் வேண்டும் என்பது மனிதனின் தனக்கு அமைதி தேடும் முயற்சியின் பின்னணிப் பாடல் என்று கூறிவிடலாம். துன் வாழ்வில் பொன் இருந்தும், பொருள் இருந்தும், பெண் இருந்தும், பெயர் இருந்தும், மனதிலும் குடும்பத்திலும் அமைதி இல்லாது இந்த பாடலை அன்று தொட்டு இன்றுவரை முனகிக் கொண்டிருக்கிறான் மனிதன். அமைதியைத் தேடி மதுவிலும் மாதுவிலும் புகையிலும் போதையிலும் மூழ்கிக்கொண்டிருக்கிறான் மனிதன். இவற்றில் அமைதி தேடும் மனிதன் இவையெல்லாம் தமக்கு அமைதி தருவதாகப் படம் காட்டி, படுகுழிக்கு பாதை அமைக்கும் கானல்நீர் என்பதை மனிதன் அறிவதில்லை.

வாழப் பிடிக்காமல், வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக இருக்கக்கூடாது நம்முடைய வாழ்க்கை. தவறான, அர்த்தமிழந்த நம் வாழ்வுக்கு அர்த்தம் கொடுக்க நம்மால் முடியும். எப்படி?  இயேசுவின் அன்பு நம் வாழ்வில் கடந்து வரும்போது, உருக்குலைந்த நம் வாழ்வு உயிர் பெறும். அந்த இறையன்பை நாம் சுவைத்து, அவரை வழியும் உண்மையுமாக ஏற்று வாழத் தொடங்குவதே அர்த்தமுள்ள வாழ்வுக்கான ஒரே வழி.  வாழ்க்கைப் போராட்டங்களிலும் வறுமையின் கோரப்பிடியிலும் கைதிகளாக இருந்த சூழ்நிலைகளிலும் அமைதியை இழக்காமல் வாழ்க்கையின் யதார்த்தத்தை ஏற்றுக் கொண்டு, மகிழ்ச்சியோடு வாழ்ந்து இவ்வுலகிலிருந்து விடைபெற்றவர்கள் ஏராளம்.  அவர்களுடைய வெற்றியின் ரகசியம் யார்? இயேசுதான். எங்கள் வாழ்விலும் நிறைவான, முழுமையான அமைதியைத் தர அவரால் மட்டுமே முடியும்.  இயேசு கூறுகிறார்: 'நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள்"

அமைதிதேடி அலைமோதி நிலைகுலையும் மனித சமுதாயத்திற்கு இயேசு பதிலாக தீர்வாக இருக்கிறார். 'என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல" இவ்வாறு தன் தெய்வீக அமைதியில் நமக்குப் பங்கு தருகிறார். எதைப்பற்றியும் கலங்கவோ மருளவோ அவசியம் இல்லா அமைதி இந்த இறை அமைதி. இறைவன் தரும் இந்த அமைதி சற்று வித்தியாசமானது முற்றிலும் புதுமையானது. இது வேதனையில் கிடைக்கும் அமைதி. இழப்பில் குவியும் அமைதி. பாரங்கள் சுமப்பதில் புதைந்திருக்கும் அமைதி. குழப்பங்களின் ஆழத்தில் அமிழ்ந்திருக்கும் அமைதி. வெறுமையில் வெற்றிடத்தில் பரவியிருக்கும் அமைதி. கொடுப்பதில் சேரும் அமைதி. உள்ளுக்குள் இருந்து உயிரூட்டி, உரமூட்டி, உற்சாகப்படுத்தி வாழவைக்கும் அமைதி. இந்த அமைதியைத் தேடுவோம்

உயிர்த்த ஆண்டவர் தருகின்ற அமைதி உலகு சார்ந்த அமைதி அல்ல, போர்களுக்குப் பின் வருகின்ற அமைதி அல்ல, இயற்கை சீற்றங்களுக்குப் பின் வருகின்ற அமைதி அல்ல, நமது உள்ளம் சார்ந்த அமைதி. அதையே இறைவன் நமக்குக் கொடையாக வழங்குகின்றார். ஆண்டவர் கொடுத்த அமைதியின் மூலம் நமது வாழ்வை அச்சங்களற்றதாக ஐயங்களற்றதாக வாழ முனைவோம்

தனி மனிதர்களும், சமூகங்களும், நாடுகளும் நாடித் தேடும் ஒன்று அமைதி. பொருளாதார வளர்ச்சி ஒரு பக்கம் நடந்துகொண்டிருந்தாலும், பல நாடுகளும் போர்களாலும், உள்நாட்டுக் குழப்பங்களாலும் அமைதியின்றி தவித்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஆயுதங்களால் உண்மையான அமைதியைக் கொண்டுவர முடியாது. உறவால்தான் முடியும். குடும்பங்களிலும் இன்று அமைதியற்ற சூழல். கணவன்-மனைவிக்கிடையே, பெற்றோர்-பிள்ளைகளுக்கிடையே அமைதியின்றி வாழும் நிலை காண்கிறோம். பணமோ, பொருள்களோ அமைதியைத் தர இயலாது. உறவுதான் அமைதியைத் தரும்.முதலில், இறைவனோடு நல்லுறவு கொள்வோம். அப்போது, உலகம் தர இயலாத அமைதியை அவர் நமக்குத் தருவார்.

ஹெலன் கெல்லர் என்பவர் புகழ்பெற்ற எழுத்தாளராகவும் சிறந்த பேச்சாளராகவும் அரசியல் ஆர்வலராகவும் விளங்கிய ஓர் அமெரிக்கப் பெண். பிறந்து 19 மாதங்களில் ஏற்பட்ட கடும் காய்ச்சல் காரணமாக கண்பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவற்றை இவர் இழந்தார். எனினும், உலகில் இளங்கலைப்பட்டம் பெற்ற, பார்க்கவும் கேட்கவும் முடியாத முதல் மாற்றுத்திறனாளி என்ற பெருமைக்கு உரித்தானவர் இவர். ஒருநாள் ஹெலன் கெல்லரை பார்க்கச் சென்ற அவரது நண்பர் ஒருவர் அவரிடம் “உங்களுக்கு விருப்பமான ஒன்று தரப்படுகிறது என்றால் அது என்னவாக இருக்க வேண்டும்? என்று கேட்டார். பார்க்கும் திறனும், கேட்கும் திறனும் தனக்குத் தேவை என்று சொல்வார் என அந்த நண்பர் எதிர்பார்த்தார். ஆனால் ஹெலன் கெல்லரோ அமைதியாகப் பதில் சொன்னார்: ஷஇந்த உலகத்தில் அமைதி மலர வேண்டுமென்று கேட்பேன்| என்று. இயேசு எங்களுக்குத் தரும் அமைதியை உலகிற்கு அள்ளி வழங்குவோம்

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff