05.05.2013
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
இயேசு,'அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல" எனக் கூறும் பைபிள் பகுதியை நாம் காண்கின்றோம். எங்கே நிம்மதி, அங்கே எனக்கோர் இடம் வேண்டும் என்பது மனிதனின் தனக்கு அமைதி தேடும் முயற்சியின் பின்னணிப் பாடல் என்று கூறிவிடலாம். துன் வாழ்வில் பொன் இருந்தும், பொருள் இருந்தும், பெண் இருந்தும், பெயர் இருந்தும், மனதிலும் குடும்பத்திலும் அமைதி இல்லாது இந்த பாடலை அன்று தொட்டு இன்றுவரை முனகிக் கொண்டிருக்கிறான் மனிதன். அமைதியைத் தேடி மதுவிலும் மாதுவிலும் புகையிலும் போதையிலும் மூழ்கிக்கொண்டிருக்கிறான் மனிதன். இவற்றில் அமைதி தேடும் மனிதன் இவையெல்லாம் தமக்கு அமைதி தருவதாகப் படம் காட்டி, படுகுழிக்கு பாதை அமைக்கும் கானல்நீர் என்பதை மனிதன் அறிவதில்லை.
வாழப் பிடிக்காமல், வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக இருக்கக்கூடாது நம்முடைய வாழ்க்கை. தவறான, அர்த்தமிழந்த நம் வாழ்வுக்கு அர்த்தம் கொடுக்க நம்மால் முடியும். எப்படி? இயேசுவின் அன்பு நம் வாழ்வில் கடந்து வரும்போது, உருக்குலைந்த நம் வாழ்வு உயிர் பெறும். அந்த இறையன்பை நாம் சுவைத்து, அவரை வழியும் உண்மையுமாக ஏற்று வாழத் தொடங்குவதே அர்த்தமுள்ள வாழ்வுக்கான ஒரே வழி. வாழ்க்கைப் போராட்டங்களிலும் வறுமையின் கோரப்பிடியிலும் கைதிகளாக இருந்த சூழ்நிலைகளிலும் அமைதியை இழக்காமல் வாழ்க்கையின் யதார்த்தத்தை ஏற்றுக் கொண்டு, மகிழ்ச்சியோடு வாழ்ந்து இவ்வுலகிலிருந்து விடைபெற்றவர்கள் ஏராளம். அவர்களுடைய வெற்றியின் ரகசியம் யார்? இயேசுதான். எங்கள் வாழ்விலும் நிறைவான, முழுமையான அமைதியைத் தர அவரால் மட்டுமே முடியும். இயேசு கூறுகிறார்: 'நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள்"
அமைதிதேடி அலைமோதி நிலைகுலையும் மனித சமுதாயத்திற்கு இயேசு பதிலாக தீர்வாக இருக்கிறார். 'என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல" இவ்வாறு தன் தெய்வீக அமைதியில் நமக்குப் பங்கு தருகிறார். எதைப்பற்றியும் கலங்கவோ மருளவோ அவசியம் இல்லா அமைதி இந்த இறை அமைதி. இறைவன் தரும் இந்த அமைதி சற்று வித்தியாசமானது முற்றிலும் புதுமையானது. இது வேதனையில் கிடைக்கும் அமைதி. இழப்பில் குவியும் அமைதி. பாரங்கள் சுமப்பதில் புதைந்திருக்கும் அமைதி. குழப்பங்களின் ஆழத்தில் அமிழ்ந்திருக்கும் அமைதி. வெறுமையில் வெற்றிடத்தில் பரவியிருக்கும் அமைதி. கொடுப்பதில் சேரும் அமைதி. உள்ளுக்குள் இருந்து உயிரூட்டி, உரமூட்டி, உற்சாகப்படுத்தி வாழவைக்கும் அமைதி. இந்த அமைதியைத் தேடுவோம்
உயிர்த்த ஆண்டவர் தருகின்ற அமைதி உலகு சார்ந்த அமைதி அல்ல, போர்களுக்குப் பின் வருகின்ற அமைதி அல்ல, இயற்கை சீற்றங்களுக்குப் பின் வருகின்ற அமைதி அல்ல, நமது உள்ளம் சார்ந்த அமைதி. அதையே இறைவன் நமக்குக் கொடையாக வழங்குகின்றார். ஆண்டவர் கொடுத்த அமைதியின் மூலம் நமது வாழ்வை அச்சங்களற்றதாக ஐயங்களற்றதாக வாழ முனைவோம்
தனி மனிதர்களும், சமூகங்களும், நாடுகளும் நாடித் தேடும் ஒன்று அமைதி. பொருளாதார வளர்ச்சி ஒரு பக்கம் நடந்துகொண்டிருந்தாலும், பல நாடுகளும் போர்களாலும், உள்நாட்டுக் குழப்பங்களாலும் அமைதியின்றி தவித்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஆயுதங்களால் உண்மையான அமைதியைக் கொண்டுவர முடியாது. உறவால்தான் முடியும். குடும்பங்களிலும் இன்று அமைதியற்ற சூழல். கணவன்-மனைவிக்கிடையே, பெற்றோர்-பிள்ளைகளுக்கிடையே அமைதியின்றி வாழும் நிலை காண்கிறோம். பணமோ, பொருள்களோ அமைதியைத் தர இயலாது. உறவுதான் அமைதியைத் தரும்.முதலில், இறைவனோடு நல்லுறவு கொள்வோம். அப்போது, உலகம் தர இயலாத அமைதியை அவர் நமக்குத் தருவார்.
ஹெலன் கெல்லர் என்பவர் புகழ்பெற்ற எழுத்தாளராகவும் சிறந்த பேச்சாளராகவும் அரசியல் ஆர்வலராகவும் விளங்கிய ஓர் அமெரிக்கப் பெண். பிறந்து 19 மாதங்களில் ஏற்பட்ட கடும் காய்ச்சல் காரணமாக கண்பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவற்றை இவர் இழந்தார். எனினும், உலகில் இளங்கலைப்பட்டம் பெற்ற, பார்க்கவும் கேட்கவும் முடியாத முதல் மாற்றுத்திறனாளி என்ற பெருமைக்கு உரித்தானவர் இவர். ஒருநாள் ஹெலன் கெல்லரை பார்க்கச் சென்ற அவரது நண்பர் ஒருவர் அவரிடம் “உங்களுக்கு விருப்பமான ஒன்று தரப்படுகிறது என்றால் அது என்னவாக இருக்க வேண்டும்? என்று கேட்டார். பார்க்கும் திறனும், கேட்கும் திறனும் தனக்குத் தேவை என்று சொல்வார் என அந்த நண்பர் எதிர்பார்த்தார். ஆனால் ஹெலன் கெல்லரோ அமைதியாகப் பதில் சொன்னார்: ஷஇந்த உலகத்தில் அமைதி மலர வேண்டுமென்று கேட்பேன்| என்று. இயேசு எங்களுக்குத் தரும் அமைதியை உலகிற்கு அள்ளி வழங்குவோம்
No comments:
Post a Comment