Friday, September 19, 2014

கடவுளின்; பார்வையில் நீதியை, மனிதர்களைக் காணக் கற்றுக்கொள்வோம்.

21.09.2014'"
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர் 

இன்று இயேசு ஒரு உவமை கூறுகின்றார்: நிலக்கிழார் ஒருவர் தம் வேலையாள்களை வேலைக்கு அமர்த்த விடியற்காலையில் வெளியே சென்றார். அவர் நாளொன்றுக்கு ஒரு தெனாரியம் கூலி என வேலையாள்களுடன் ஒத்துக்கொண்டு அவர்களைத் தம் திராட்சைத் தோட்டத்துக்கு அனுப்பினார். ஏறக்குறைய காலை ஒன்பது மணிக்கு அவர் வெளியே சென்றபொழுது சந்தை வெளியில் வேறு சிலர் வேலையின்றி நிற்பதைக் கண்டார். அவர்களிடம், நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்; நேர்மையான கூலியை உங்களுக்குக் கொடுப்பேன் என்றார். அவர்களும் சென்றார்கள். மீண்டும் ஏறக்குறைய பன்னிரண்டு மணிக்கும் பிற்பகல் மூன்று மணிக்கும் வெளியே சென்று அப்படியே செய்தார். ஏறக்குறைய ஐந்து மணிக்கும் வெளியே சென்று வேறு சிலர் நிற்பதைக் கண்டார். அவர்களிடம், நாள் முழுவதும் வேலை செய்யாமல் ஏன் இங்கே நின்றுகொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டார். அவர்கள் அவரைப் பார்த்து, எங்களை எவரும் வேலைக்கு அமர்த்தவில்லை என்றார்கள். அவர் அவர்களிடம், நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள் என்றார். பின்பு அனைவருக்கும் சமமாக சம்பளம் கொடுக்கின்றார். அந்நிலக்கிழாரின் செயலுக்கு எதிராக முணுமுணுத்தவர்களை பார்த்து எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உங்களுக்கு பொறாமையா? என கேட்கின்றார். 

இன்று இயேசு கூறும் உவமைக்கதையில் வரும் வேலையாட்கள், வேலைக்காகக் காத்துக் கொண்டிருந்தவர்கள்,  சோம்பேறிகள் அல்ல. காலையிலிருந்து அவர்கள் யாராவது தங்களை வேலைக்கு அழைத்துச்செல்வார்களா? என்று காத்திருக்கிறார்கள். இவர்கள் அன்றாடக்கூலிகள். சமுதாயத்தின் அடிவிளிம்பில் இருக்கக்கூடிய மக்கள். அடிமைகளைவிட இவர்களின் நிலைமை மிக மோசமாக இருந்தது. . உழைத்தால் தான் உண்ண முடியும் என்ற நிலைமை. கடுமையாக நாள் முழுவதும் உழைத்தாலும், அரைவயிற்று உணவு தான் அவர்களுக்கு கிடைக்கும். ஒருநாள் வேலையில்லை என்றாலும், அவர்களின் குடும்பமே பட்டினி கிடக்க வேண்டியிருக்கும். இப்படிப்பட்ட தொழிலாளர்களைத்தான் இன்று நாம் பார்க்கிறோம். 

நீதி என்பது என்ன? என்று இன்றைய உவமைக்கதையின் பின்னணியில் பார்த்தால். ஒருவருக்குரியதை அவருக்கு வழங்குவதுதான் நீதி. இந்த நீதியும் மனிதரின் பார்வையில் ஒன்றாகவும், இறைவனின் பார்வையில் வேறொன்றாகவும் இருப்பதை இன்றைய உவமைக்கதை  சுட்டிக்காட்டுகிறது. அத்துடன், மனித நீதியை விட்டு விலகி, இறைநீதியின் பக்கம் நம் நடைபோடவும் அறைகூவல் விடுக்கிறது. மனித நீதியின்படி முதலில் பணியில் சேர்ந்து, அதிக நேரம் உழைத்தவர்களுக்கு அதிக ஊதியம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். தாமதமாக வந்து, குறைந்த நேரம் உழைத்தவர்கள் குறைவாகப் வழங்கப்பட்டிருக்க வேண்டும். இதுதான் சரி. அப்போதுதான் அனைவரும் நேர்மையாக உழைப்பர்.
ஆனால், இறைவனின் பார்வை அப்படி இல்லை. அது பரிவின் பார்வையாக, பாசத்தின் பார்வையாக இருக்கிறது. ஏதோ ஒரு காரணத்தால், சில வேளைகளில் மனித, சமூக காரணங்களால் எல்லா மனிதர்களுக்கும் சமமான வாய்ப்புகளும், திறமைகளும் அமைந்துவிடுவதில்லை. ஒரு சிலர் பிறரைவிட பிற்பட்டவர்களாக, அல்லது பிற்படுத்தப்பட்டவர்களாக இருந்துவிடுகின்றனர். அவர்கள்மீது சிறப்பான ஒரு பரிவைப் பொழிந்து அவர்களுக்கும் அதிக ஆற்றலும், வாய்ப்புகளும் கிடைத்தவர்களுக்கு இணையான ஊதியத்தை நிலக்கிழார் வழங்குகிறார். இதுதான் இறை நீதி. கடவுளின் நீதி மனித நீதியைப் போன்றதல்ல. மனிதர் வழங்கும் நீதி வரையறைக்கு உட்பட்டது. ஆனால் கடவுள் வழங்கும் நீதி தாராள அன்பின் அடிப்படையில் அமைந்தது. கடவுளின் அன்புதான் அவருடைய நீதிக்கு அடிப்படை. எனவே, கடவுள் அநீதியாகச் செயல்படுகிறார் என்பதைவிட, தாராள உள்ளத்தோடு நடந்துகொள்கிறார் என்பதே உண்மை. கடவுளின் நீதி மனித கணிப்புகளுக்கு அப்பாற்பட்டது என நாம் உணர வேண்டும். கடவுள் மக்களை வேறுபடுத்திப் பார்ப்பதில்லை;. அதே நேரத்தில் அவருடைய கொடை எப்போதுமே தாராளமாக நமக்கு வழங்கப்படுகிறது. எனவே, கடவுளின் தாராளத்தைக் கண்டு நாம் பொறாமைப்படுதல் பொருத்தமாகாது. கடவுளின் நீதி இரக்கமும் பரிவும் தோய்ந்த அன்பு இதயத்திலிருந்து பிறக்கும் ஒன்று. கடவுளின் இரக்கத்திற்கு எல்லை கிடையாது. கடவுளின் இரக்கத்திற்கு நாம் மனித கணிப்புப்படி வேலி கட்ட முடியாது. முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்னும் தத்துவம் கடவுளைப் பொறுத்தமட்டில் உண்மை ஆகாது. முதலில் வந்தாலும் சரி, கடைசியில் வந்தாலும் சரி எல்லாருக்கும் சம உரிமையே என்பதே கடவுளின் நீதி. கடவுள் தாராள உள்ளத்தோடு பிறருக்கு நன்மை செய்கிறாரே என நினைத்து நாம் பொறாமைப்படுவதும் முறையாகாது மாறாக, எல்லா மக்களையும் சமமாக நடத்துகின்ற நம் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல நாமும் நிறைவுள்ளவர்களாய் இருக்க வேண்டும். நமது மனித பார்வையில் நீதியைப் பாராமல், இறைவனின் பார்வையில் நீதியை, மனிதர்களைக் காணக் கற்றுக்கொள்வோம்

Friday, September 12, 2014

தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாகாமல் மீட்பின் கொடையைப் பெறுவோம்

14.09.2014 '" 
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர் 

இன்று நம் திருச்சபை திருச்சிலுவை மகிமைப் பெருவிழாவைக் கொண்டாடுகிறது. சிலுவையின் முன் அடையாளமாக பழைய ஏற்பாட்டில் நாம் காண்பது வெண்கலத்தால் ஆன பாம்பின் சிலை. அதைப் பற்றியே இன்றைய முதல் வாசகம் பேசுகிறது. சிலை வழிபாடு என்னும் பாவத்தின் காரணமாக கொள்ளிவாய்ப் பாம்புகளை கடவுள் அனுப்பி, பலரும் கடியுண்டு இறந்தபோது, மோசே அவர்களுக்காகப் பரிந்து பேசி மன்றாடியபோது, கடவுளே மோசேயிடம்;, கொள்ளிவாய்ப் பாம்பொன்றைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்து.  கடிக்கப்பட்டோரில் இதைப் பார்க்கிற ஒவ்வொருவனும் பிழைப்பான் என்று கூறுகிறார். அவ்வாறே மோசேயும் வெண்கலப் பாம்பு ஒன்றைச் செய்து வைக்க, அதைப் பார்த்த அனைவரும் பிழைத்துக்கொண்ட செய்தியை நாம் எண்ணிக்கை நூலில் வாசிக்கிறோம். இந்த நிகழ்ச்சியையே ஆண்டவர் இயேசுவும் மேற்கோள் காட்டி, அந்த வெண்கலப் பாம்பை தனது சிலுவைச் சாவின் முன் அடையாளமாக யோவான் நற்செய்தியில் எடுத்துக்காட்டுகிறார். பாம்பால் இறந்தவர்களைப் பாம்பினாலே உயிர்பெற்றெழச் செய்த இறைவன், மரத்தால் வந்த சாபத்தை ஒரு மரத்தாலேயே நீக்கினார். இன்று அந்தச் சிலுவை மரத்தை வணங்குகிறோம். அந்தச் சிலுவைக்கு மகிமையைத் தந்த இயேசுவைப் போற்றுவோம். அந்த மகிமைக்குக் காரணமான அவரது கீழ்ப்படிதலைப் பின்பற்றுவோம்.

சிலுவை என்பது அவமானத்தின் சின்னமாக, தோல்வியின் அடையாளமாக இருந்தது. இயேசு அதனை வெற்றியின் சின்னமாக, மாட்சியின் அடையாளமாக மாற்றினார். அந்த சிலுவை குறித்துக்காட்டுகிற இறையியல் செய்திகளையும் நம் வாழ்வில் நாம் கடைப்பிடிக்க வேண்டும். சிலுவை இயேசுவின் கீழ்ப்படிதலைக் குறிக்கிறது. சாவை ஏற்குமளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவை ஏற்கும் அளவுக்கு இயேசு கீழ்ப்படிந்தார் என்று பவுலடியார் கூறுகிறார். நாமும் இறைவனுக்கு, திருச்சபைக்கு, அதிகாரிகளுக்கு, பெரியவர்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும்.

சிலுவை துன்பங்களை மனமுவந்து ஏற்றுக்கொள்வதையும் குறிக்கிறது. இயேசு அந்தச் சிலுவைத் துன்பத்தை அகற்ற மன்றாடினார். ஆனால், அதுதான் இறைவனின் விருப்பம் என்று உணர்ந்ததும் மனம் விரும்பி ஏற்றுக்கொண்டார். ஆகவே, இறைவன் அவருக்கு வெற்றியும், மாட்சியும் தந்தார். நமது வாழ்வில் தவிர்க்க முடியாமல் வரும் சிக்கல்கள், நோய்கள், துன்பங்கள், அவமானங்கள் இவற்றை ஏற்றே தீர வேண்டும் என்னும் நிலை வரும்போது இயேசுவைப் போல நாமும் மனம் உவந்து அவைகளை ஏற்போம். அப்போது தந்தை இறைவன் இயேசுவுக்குச் செய்ததுபோல, நமக்கும் அவரது வெற்றியிலும். மாட்சியிலும் பங்கு தருவார். பாவங்களால் சிறைப்பட்ட உலகை மீட்பது எப்படி என்று கேள்வியும், பரிதவிப்பும் எழுந்தபோது, இறைவன் அதற்கு விடை பகர்ந்தார். மனிதரின் மீட்பு மனிதரிடமிருந்தே வர வேண்டும் என்று தீர்மானித்தார். தன் மகனை மனிதரில் ஒருவராக அனுப்பி வைத்தார். இந்த எண்ணத்தை வெளிப்படுத்தும் ஒரு பைபிள் பகுதி இன்று நமக்குத்தரப்படும் நற்செய்தியில் உள்ளது. 'தம் ஒரே மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார்." 

கடவுள் இந்த உலகத்தை அழிப்பதற்கோ, அதற்குத் தண்டனைத் தீர்ப்பு அளிக்கவோ தம் மகனை அனுப்பவில்லை. மாறாக, அவர் வழியாக இவ்வுலகிற்கு மீட்பு வழங்கவே அவர் இயேசுவை அனுப்பினார். இங்கே கடவுளின் எல்லையற்ற அன்பு துலங்குவதை நாம் தெளிவாகக் காண்கின்றோம். மனிதர்கள் அவரை விட்டு அகன்ற போதிலும் அவருடைய அன்பு ஒருநாளும் குறைவுபடவில்லை. மாறாக, தம்மைவிட்டுப் பிரிந்தவர்களையும் அவர் தாராள உள்ளத்தோடு அன்புசெய்கிறார். அவர்கள் தம் தவற்றினை உணர்ந்து மீண்டும் தம்மிடம் திரும்புவார்கள் என்னும் நம்பிக்கை நம் அன்புக் கடவுளுக்கு என்றுமே உண்டு. இயேசு வழியாக விடுதலை அனுபவத்தைப் பெற்ற நாம் கடவுளையும் கடவுள் அன்புசெய்கின்ற உலகத்தையும் அதில் வாழ்கின்ற மனிதர்களையும் நன்மனத்தோடு ஏற்று அன்புசெய்திட அழைக்கப்படுகிறோம். இயேசுவே நமக்கு அன்பின் வழியைக் கற்றுத் தந்துள்ளார். குறிப்பாக, தன்னலம் மறந்து, பிறர் நலம் நாடுகின்ற பண்பை அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்கிறோம். உலகம் கேவலமாகக் கருதிய சிலுவை இயேசுவின் மரணத்தால் அன்பின் அடையாளமாக மாறிற்றி நமக்கு வாழ்வளிக்கும் ஊற்றாக விளங்குகிறது. சிலுவையில் உயர்த்தப்பட்ட இயேசு உண்மையிலேயே கடவுளுக்கு நிகராக உயர்த்தப்பட்டார். நிலைவாழ்வு பெற விரும்புவோர் சிலுவையில் உயர்த்தப்பட்ட இயேசுவை உற்று நோக்க வேண்டும். அவரையே தங்கள் வாழ்க்கை நெறியாகக் கொள்ள வேண்டும். அப்போது தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாகாமல் மீட்பின் கொடையைப் பெற்று மகிழ்வார்கள்.

Friday, September 5, 2014

நம் நடுவில் இயேசு இருக்க நாம் உழைப்போம்

07.09.2014 '"  
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர் 
புகழ்பெற்ற கொக்கோ கோலா நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி டீசயைn பு.னுலளழn என்பவர் குடும்ப உறவுகள் பற்றி எழுதிய சிறு கட்டுரையின் வரிகளை இங்கு இன்று குறிப்பிடுவது நன்று: 'பல பந்துகளை ஒரே நேரத்தில் தூக்கிப் போட்டுப் பிடிக்கும் வித்தையைப் போல, வாழ்க்கையைக் கற்பனை செய்து பாருங்கள். உங்கள் கையில் ஐந்து பந்துகள் உள்ளன. அவை நீங்கள் செய்யும் ஷதொழில், உங்கள் குடும்பம், உடல் நலம், நண்பர்கள் மற்றும் உங்கள் மனம்|. இந்த ஐந்து பந்துகளில் உங்கள் தொழில் என்பது மட்டும் ஒரு இரப்பர் பந்து. அது கைதவறி கீழே விழுந்தாலும், மறுபடி எகிறி குதித்து உங்கள் கைகளுக்கு வந்துவிடும். ஆனால், மற்ற நான்கு பந்துகள் - அதாவது குடும்பம், உடல்நலம், நண்பர்கள், மனம் ஆகிய நான்கும் கண்ணாடியால் ஆனவை. அவை கீழே விழுந்தால், சிதறி விடும். அவற்றை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வருவது இயலாத காரியம்." வாழ்வின் மிக முக்கிய அம்சங்களில் ஒன்றான நமது குடும்ப உறவுகள் கண்ணாடி பந்துகள். தவறினால் சிதறிவிடும். குடும்ப உறவுகளைப் பற்றிய சில எளிய, தெளிவான பாடங்களை நாம் புரிந்து கொள்ள தவறுகிறோம், அல்லது, புரிந்து கொண்டாலும் பின்பற்றத் தவறுகிறோம் என்பதைச் ஆழமாக அலசிப்பார்க்க இன்றைய ஞாயிறு சிந்தனை நம்மை அழைக்கிறது.

இன்று தொலைக்காட்சிகளில் மெகாத் தொடர்களின் குடும்பத்திற்குள் நிகழும் பிரச்சனைகள் ஒவ்வொரு நாளும் காட்டப்படுகின்றன. பிரச்சனைகள் ஒன்றா, இரண்டா? அவை ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கிக்கொண்டே போகலாம்  இந்த பிரச்சனைகளுக்குள் நசுக்கப்பட்டு அந்த கதாபாத்திரங்கள் படும் வேதனைகள் ஒவ்வொரு நாளும் வெகு நேரம் காட்டப்படுகின்றன.இந்த பிரச்சினைகள் இன்று எம் குடும்பத்தில் நிஜமாகின்றன. இதற்கு இத்தொடர்களில் வரும் நிகழ்ச்சிகள் பின்புலத்தில் இந்தக் குடும்பங்களைப் பாதிக்கின்றன என்று ஆணித்தரமாக கூறலாம் 

குடும்பப் பிரச்சனைகளைப் பற்றி நம் தொலைக்காட்சித் தொடர்கள் சொல்வதைப் பரவலாக ஏற்றுக்கொள்ளும் நம்மிடம், பிரச்சனைகளைத் தீர்க்கும் மாற்று வழியொன்றை இன்றைய நற்செய்தியில் இயேசு கூறுகிறார். இந்த நற்செய்தியைக் கேட்கும்போது நம் மனங்களில் நம்பிக்கை பிறக்கின்றதா? அல்லது, இயேசு கூறும் வார்த்தைகள் நடைமுறை வாழ்வுக்கு ஒத்து வராது என்று நமது மனம் சொல்கிறதா? உண்மையாகவே நம் உள்ளத்தில் என்னதான் நிகழ்கிறதென்று அலசிப் தேடுவோம். இன்றைய நற்செய்தியின் துவக்கமே ஒரு சாட்டையடிபோல, நம்மை விழித்தெழச் செய்கிறது. 'உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால..." என்பவை இயேசு கூறும் ஆரம்ப வார்த்தைகள். இந்த முதல் வரியில் இயேசு கூறியிருப்பதே ஒரு சவால் ஆகும் 'நீ உன் சகோதரன் அல்லது சகோதரிக்கு எதிராகப் பாவம் செய்திருந்தால்…" என்று இயேசு ஆரம்பித்திருந்தால், அது இயல்பாக இருந்திருக்கும். ஆனால், அவர் அப்படி ஆரம்பிக்கவில்லை. 'உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால்…" என்று ஆரம்பத்திலேயே நம் சிந்தனைகளைப் புரட்டிப் போடுகிறார். 

பிரச்சனையைத் தீர்க்க, குற்றத்தைக் களைய நாம் மேற்கொள்ளும் முதல் முயற்சிகள் எவ்விதம் இருக்கவேண்டும் என்பதை இயேசு இன்றைய நற்செய்தியில் தொடர்ந்து தெளிவாக்குகிறார். அவர் கூறும் முதல் படி என்ன? நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள். அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது உங்கள் உறவு தொடரும்.
ஆனால் நாம் தவறிழைத்தவரைத் தனியே அழைத்து, மனம் விட்டுப் பேசுவதற்குப் பதில் பல மாறுபட்ட, சிக்கலான வழிகளைக் கடைபிடிக்கிறோம். பிரச்சனைகளைப் பெரிதாக்குகிறோம். நாம் பார்க்கும் மெகாத் தொடர்கள் கூறும் வழி இது. பிரச்சனை பெரிதானால்தான் மெகாத் தொடர்கள் பல வாரங்கள் ஓடும். குற்றவாளி ஒழிய வேண்டும், பழிக்குப் பழி தீர்க்கப்பட வேண்டும். அப்போதுதான் நாடகம் விறுவிறுப்பாக இருக்கும். நடைமுறை வாழ்வில் நம் குடும்பங்களில் விறுவிறுப்பு வேண்டுமா, நமது குடும்பங்களிலும் இதுபோல் நிகழ வேண்டுமா? பிரச்சனை பெரிதாக வேண்டுமா அல்லது, விடைகள், தீர்வுகள் வேண்டுமா என்று நாம் தீர்மானிக்க வேண்டும்.

இயேசு கூறும் இலக்கணப்படி அமையும் குடும்பங்களில் குற்றம் புரிந்தவர் திருந்தி வரவேண்டும் என்று காத்திருக்காமல், முதல் முயற்சிகளை நாம் மேற்கொண்டால், அங்கு பிரச்சனைகள் தீர வழியுண்டு. உறவுகள் வலுப்பட வழியுண்டு. அவர்கள் கூடிவரும் நேரத்தில் இறைவனின் பிரசன்னம் அங்கு நிறைந்து பொங்கவும் வழியுண்டு. இந்த உறுதியைத் தான் இயேசு இன்றைய நற்செய்தியின் இறுதி வார்த்தைகளாக சொல்லியிருக்கிறார்: 'இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். " 

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff