14.09.2014 '"
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
இன்று நம் திருச்சபை திருச்சிலுவை மகிமைப் பெருவிழாவைக் கொண்டாடுகிறது. சிலுவையின் முன் அடையாளமாக பழைய ஏற்பாட்டில் நாம் காண்பது வெண்கலத்தால் ஆன பாம்பின் சிலை. அதைப் பற்றியே இன்றைய முதல் வாசகம் பேசுகிறது. சிலை வழிபாடு என்னும் பாவத்தின் காரணமாக கொள்ளிவாய்ப் பாம்புகளை கடவுள் அனுப்பி, பலரும் கடியுண்டு இறந்தபோது, மோசே அவர்களுக்காகப் பரிந்து பேசி மன்றாடியபோது, கடவுளே மோசேயிடம்;, கொள்ளிவாய்ப் பாம்பொன்றைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்து. கடிக்கப்பட்டோரில் இதைப் பார்க்கிற ஒவ்வொருவனும் பிழைப்பான் என்று கூறுகிறார். அவ்வாறே மோசேயும் வெண்கலப் பாம்பு ஒன்றைச் செய்து வைக்க, அதைப் பார்த்த அனைவரும் பிழைத்துக்கொண்ட செய்தியை நாம் எண்ணிக்கை நூலில் வாசிக்கிறோம். இந்த நிகழ்ச்சியையே ஆண்டவர் இயேசுவும் மேற்கோள் காட்டி, அந்த வெண்கலப் பாம்பை தனது சிலுவைச் சாவின் முன் அடையாளமாக யோவான் நற்செய்தியில் எடுத்துக்காட்டுகிறார். பாம்பால் இறந்தவர்களைப் பாம்பினாலே உயிர்பெற்றெழச் செய்த இறைவன், மரத்தால் வந்த சாபத்தை ஒரு மரத்தாலேயே நீக்கினார். இன்று அந்தச் சிலுவை மரத்தை வணங்குகிறோம். அந்தச் சிலுவைக்கு மகிமையைத் தந்த இயேசுவைப் போற்றுவோம். அந்த மகிமைக்குக் காரணமான அவரது கீழ்ப்படிதலைப் பின்பற்றுவோம்.
சிலுவை என்பது அவமானத்தின் சின்னமாக, தோல்வியின் அடையாளமாக இருந்தது. இயேசு அதனை வெற்றியின் சின்னமாக, மாட்சியின் அடையாளமாக மாற்றினார். அந்த சிலுவை குறித்துக்காட்டுகிற இறையியல் செய்திகளையும் நம் வாழ்வில் நாம் கடைப்பிடிக்க வேண்டும். சிலுவை இயேசுவின் கீழ்ப்படிதலைக் குறிக்கிறது. சாவை ஏற்குமளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவை ஏற்கும் அளவுக்கு இயேசு கீழ்ப்படிந்தார் என்று பவுலடியார் கூறுகிறார். நாமும் இறைவனுக்கு, திருச்சபைக்கு, அதிகாரிகளுக்கு, பெரியவர்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும்.
சிலுவை துன்பங்களை மனமுவந்து ஏற்றுக்கொள்வதையும் குறிக்கிறது. இயேசு அந்தச் சிலுவைத் துன்பத்தை அகற்ற மன்றாடினார். ஆனால், அதுதான் இறைவனின் விருப்பம் என்று உணர்ந்ததும் மனம் விரும்பி ஏற்றுக்கொண்டார். ஆகவே, இறைவன் அவருக்கு வெற்றியும், மாட்சியும் தந்தார். நமது வாழ்வில் தவிர்க்க முடியாமல் வரும் சிக்கல்கள், நோய்கள், துன்பங்கள், அவமானங்கள் இவற்றை ஏற்றே தீர வேண்டும் என்னும் நிலை வரும்போது இயேசுவைப் போல நாமும் மனம் உவந்து அவைகளை ஏற்போம். அப்போது தந்தை இறைவன் இயேசுவுக்குச் செய்ததுபோல, நமக்கும் அவரது வெற்றியிலும். மாட்சியிலும் பங்கு தருவார். பாவங்களால் சிறைப்பட்ட உலகை மீட்பது எப்படி என்று கேள்வியும், பரிதவிப்பும் எழுந்தபோது, இறைவன் அதற்கு விடை பகர்ந்தார். மனிதரின் மீட்பு மனிதரிடமிருந்தே வர வேண்டும் என்று தீர்மானித்தார். தன் மகனை மனிதரில் ஒருவராக அனுப்பி வைத்தார். இந்த எண்ணத்தை வெளிப்படுத்தும் ஒரு பைபிள் பகுதி இன்று நமக்குத்தரப்படும் நற்செய்தியில் உள்ளது. 'தம் ஒரே மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார்."
கடவுள் இந்த உலகத்தை அழிப்பதற்கோ, அதற்குத் தண்டனைத் தீர்ப்பு அளிக்கவோ தம் மகனை அனுப்பவில்லை. மாறாக, அவர் வழியாக இவ்வுலகிற்கு மீட்பு வழங்கவே அவர் இயேசுவை அனுப்பினார். இங்கே கடவுளின் எல்லையற்ற அன்பு துலங்குவதை நாம் தெளிவாகக் காண்கின்றோம். மனிதர்கள் அவரை விட்டு அகன்ற போதிலும் அவருடைய அன்பு ஒருநாளும் குறைவுபடவில்லை. மாறாக, தம்மைவிட்டுப் பிரிந்தவர்களையும் அவர் தாராள உள்ளத்தோடு அன்புசெய்கிறார். அவர்கள் தம் தவற்றினை உணர்ந்து மீண்டும் தம்மிடம் திரும்புவார்கள் என்னும் நம்பிக்கை நம் அன்புக் கடவுளுக்கு என்றுமே உண்டு. இயேசு வழியாக விடுதலை அனுபவத்தைப் பெற்ற நாம் கடவுளையும் கடவுள் அன்புசெய்கின்ற உலகத்தையும் அதில் வாழ்கின்ற மனிதர்களையும் நன்மனத்தோடு ஏற்று அன்புசெய்திட அழைக்கப்படுகிறோம். இயேசுவே நமக்கு அன்பின் வழியைக் கற்றுத் தந்துள்ளார். குறிப்பாக, தன்னலம் மறந்து, பிறர் நலம் நாடுகின்ற பண்பை அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்கிறோம். உலகம் கேவலமாகக் கருதிய சிலுவை இயேசுவின் மரணத்தால் அன்பின் அடையாளமாக மாறிற்றி நமக்கு வாழ்வளிக்கும் ஊற்றாக விளங்குகிறது. சிலுவையில் உயர்த்தப்பட்ட இயேசு உண்மையிலேயே கடவுளுக்கு நிகராக உயர்த்தப்பட்டார். நிலைவாழ்வு பெற விரும்புவோர் சிலுவையில் உயர்த்தப்பட்ட இயேசுவை உற்று நோக்க வேண்டும். அவரையே தங்கள் வாழ்க்கை நெறியாகக் கொள்ள வேண்டும். அப்போது தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாகாமல் மீட்பின் கொடையைப் பெற்று மகிழ்வார்கள்.
No comments:
Post a Comment