07.09.2014 '"
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
புகழ்பெற்ற கொக்கோ கோலா நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி டீசயைn பு.னுலளழn என்பவர் குடும்ப உறவுகள் பற்றி எழுதிய சிறு கட்டுரையின் வரிகளை இங்கு இன்று குறிப்பிடுவது நன்று: 'பல பந்துகளை ஒரே நேரத்தில் தூக்கிப் போட்டுப் பிடிக்கும் வித்தையைப் போல, வாழ்க்கையைக் கற்பனை செய்து பாருங்கள். உங்கள் கையில் ஐந்து பந்துகள் உள்ளன. அவை நீங்கள் செய்யும் ஷதொழில், உங்கள் குடும்பம், உடல் நலம், நண்பர்கள் மற்றும் உங்கள் மனம்|. இந்த ஐந்து பந்துகளில் உங்கள் தொழில் என்பது மட்டும் ஒரு இரப்பர் பந்து. அது கைதவறி கீழே விழுந்தாலும், மறுபடி எகிறி குதித்து உங்கள் கைகளுக்கு வந்துவிடும். ஆனால், மற்ற நான்கு பந்துகள் - அதாவது குடும்பம், உடல்நலம், நண்பர்கள், மனம் ஆகிய நான்கும் கண்ணாடியால் ஆனவை. அவை கீழே விழுந்தால், சிதறி விடும். அவற்றை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வருவது இயலாத காரியம்." வாழ்வின் மிக முக்கிய அம்சங்களில் ஒன்றான நமது குடும்ப உறவுகள் கண்ணாடி பந்துகள். தவறினால் சிதறிவிடும். குடும்ப உறவுகளைப் பற்றிய சில எளிய, தெளிவான பாடங்களை நாம் புரிந்து கொள்ள தவறுகிறோம், அல்லது, புரிந்து கொண்டாலும் பின்பற்றத் தவறுகிறோம் என்பதைச் ஆழமாக அலசிப்பார்க்க இன்றைய ஞாயிறு சிந்தனை நம்மை அழைக்கிறது.
இன்று தொலைக்காட்சிகளில் மெகாத் தொடர்களின் குடும்பத்திற்குள் நிகழும் பிரச்சனைகள் ஒவ்வொரு நாளும் காட்டப்படுகின்றன. பிரச்சனைகள் ஒன்றா, இரண்டா? அவை ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கிக்கொண்டே போகலாம் இந்த பிரச்சனைகளுக்குள் நசுக்கப்பட்டு அந்த கதாபாத்திரங்கள் படும் வேதனைகள் ஒவ்வொரு நாளும் வெகு நேரம் காட்டப்படுகின்றன.இந்த பிரச்சினைகள் இன்று எம் குடும்பத்தில் நிஜமாகின்றன. இதற்கு இத்தொடர்களில் வரும் நிகழ்ச்சிகள் பின்புலத்தில் இந்தக் குடும்பங்களைப் பாதிக்கின்றன என்று ஆணித்தரமாக கூறலாம்
குடும்பப் பிரச்சனைகளைப் பற்றி நம் தொலைக்காட்சித் தொடர்கள் சொல்வதைப் பரவலாக ஏற்றுக்கொள்ளும் நம்மிடம், பிரச்சனைகளைத் தீர்க்கும் மாற்று வழியொன்றை இன்றைய நற்செய்தியில் இயேசு கூறுகிறார். இந்த நற்செய்தியைக் கேட்கும்போது நம் மனங்களில் நம்பிக்கை பிறக்கின்றதா? அல்லது, இயேசு கூறும் வார்த்தைகள் நடைமுறை வாழ்வுக்கு ஒத்து வராது என்று நமது மனம் சொல்கிறதா? உண்மையாகவே நம் உள்ளத்தில் என்னதான் நிகழ்கிறதென்று அலசிப் தேடுவோம். இன்றைய நற்செய்தியின் துவக்கமே ஒரு சாட்டையடிபோல, நம்மை விழித்தெழச் செய்கிறது. 'உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால..." என்பவை இயேசு கூறும் ஆரம்ப வார்த்தைகள். இந்த முதல் வரியில் இயேசு கூறியிருப்பதே ஒரு சவால் ஆகும் 'நீ உன் சகோதரன் அல்லது சகோதரிக்கு எதிராகப் பாவம் செய்திருந்தால்…" என்று இயேசு ஆரம்பித்திருந்தால், அது இயல்பாக இருந்திருக்கும். ஆனால், அவர் அப்படி ஆரம்பிக்கவில்லை. 'உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால்…" என்று ஆரம்பத்திலேயே நம் சிந்தனைகளைப் புரட்டிப் போடுகிறார்.
பிரச்சனையைத் தீர்க்க, குற்றத்தைக் களைய நாம் மேற்கொள்ளும் முதல் முயற்சிகள் எவ்விதம் இருக்கவேண்டும் என்பதை இயேசு இன்றைய நற்செய்தியில் தொடர்ந்து தெளிவாக்குகிறார். அவர் கூறும் முதல் படி என்ன? நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள். அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது உங்கள் உறவு தொடரும்.
ஆனால் நாம் தவறிழைத்தவரைத் தனியே அழைத்து, மனம் விட்டுப் பேசுவதற்குப் பதில் பல மாறுபட்ட, சிக்கலான வழிகளைக் கடைபிடிக்கிறோம். பிரச்சனைகளைப் பெரிதாக்குகிறோம். நாம் பார்க்கும் மெகாத் தொடர்கள் கூறும் வழி இது. பிரச்சனை பெரிதானால்தான் மெகாத் தொடர்கள் பல வாரங்கள் ஓடும். குற்றவாளி ஒழிய வேண்டும், பழிக்குப் பழி தீர்க்கப்பட வேண்டும். அப்போதுதான் நாடகம் விறுவிறுப்பாக இருக்கும். நடைமுறை வாழ்வில் நம் குடும்பங்களில் விறுவிறுப்பு வேண்டுமா, நமது குடும்பங்களிலும் இதுபோல் நிகழ வேண்டுமா? பிரச்சனை பெரிதாக வேண்டுமா அல்லது, விடைகள், தீர்வுகள் வேண்டுமா என்று நாம் தீர்மானிக்க வேண்டும்.
இயேசு கூறும் இலக்கணப்படி அமையும் குடும்பங்களில் குற்றம் புரிந்தவர் திருந்தி வரவேண்டும் என்று காத்திருக்காமல், முதல் முயற்சிகளை நாம் மேற்கொண்டால், அங்கு பிரச்சனைகள் தீர வழியுண்டு. உறவுகள் வலுப்பட வழியுண்டு. அவர்கள் கூடிவரும் நேரத்தில் இறைவனின் பிரசன்னம் அங்கு நிறைந்து பொங்கவும் வழியுண்டு. இந்த உறுதியைத் தான் இயேசு இன்றைய நற்செய்தியின் இறுதி வார்த்தைகளாக சொல்லியிருக்கிறார்: 'இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். "
No comments:
Post a Comment