21.09.2014'"
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
இன்று இயேசு ஒரு உவமை கூறுகின்றார்: நிலக்கிழார் ஒருவர் தம் வேலையாள்களை வேலைக்கு அமர்த்த விடியற்காலையில் வெளியே சென்றார். அவர் நாளொன்றுக்கு ஒரு தெனாரியம் கூலி என வேலையாள்களுடன் ஒத்துக்கொண்டு அவர்களைத் தம் திராட்சைத் தோட்டத்துக்கு அனுப்பினார். ஏறக்குறைய காலை ஒன்பது மணிக்கு அவர் வெளியே சென்றபொழுது சந்தை வெளியில் வேறு சிலர் வேலையின்றி நிற்பதைக் கண்டார். அவர்களிடம், நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்; நேர்மையான கூலியை உங்களுக்குக் கொடுப்பேன் என்றார். அவர்களும் சென்றார்கள். மீண்டும் ஏறக்குறைய பன்னிரண்டு மணிக்கும் பிற்பகல் மூன்று மணிக்கும் வெளியே சென்று அப்படியே செய்தார். ஏறக்குறைய ஐந்து மணிக்கும் வெளியே சென்று வேறு சிலர் நிற்பதைக் கண்டார். அவர்களிடம், நாள் முழுவதும் வேலை செய்யாமல் ஏன் இங்கே நின்றுகொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டார். அவர்கள் அவரைப் பார்த்து, எங்களை எவரும் வேலைக்கு அமர்த்தவில்லை என்றார்கள். அவர் அவர்களிடம், நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள் என்றார். பின்பு அனைவருக்கும் சமமாக சம்பளம் கொடுக்கின்றார். அந்நிலக்கிழாரின் செயலுக்கு எதிராக முணுமுணுத்தவர்களை பார்த்து எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உங்களுக்கு பொறாமையா? என கேட்கின்றார்.
இன்று இயேசு கூறும் உவமைக்கதையில் வரும் வேலையாட்கள், வேலைக்காகக் காத்துக் கொண்டிருந்தவர்கள், சோம்பேறிகள் அல்ல. காலையிலிருந்து அவர்கள் யாராவது தங்களை வேலைக்கு அழைத்துச்செல்வார்களா? என்று காத்திருக்கிறார்கள். இவர்கள் அன்றாடக்கூலிகள். சமுதாயத்தின் அடிவிளிம்பில் இருக்கக்கூடிய மக்கள். அடிமைகளைவிட இவர்களின் நிலைமை மிக மோசமாக இருந்தது. . உழைத்தால் தான் உண்ண முடியும் என்ற நிலைமை. கடுமையாக நாள் முழுவதும் உழைத்தாலும், அரைவயிற்று உணவு தான் அவர்களுக்கு கிடைக்கும். ஒருநாள் வேலையில்லை என்றாலும், அவர்களின் குடும்பமே பட்டினி கிடக்க வேண்டியிருக்கும். இப்படிப்பட்ட தொழிலாளர்களைத்தான் இன்று நாம் பார்க்கிறோம்.
நீதி என்பது என்ன? என்று இன்றைய உவமைக்கதையின் பின்னணியில் பார்த்தால். ஒருவருக்குரியதை அவருக்கு வழங்குவதுதான் நீதி. இந்த நீதியும் மனிதரின் பார்வையில் ஒன்றாகவும், இறைவனின் பார்வையில் வேறொன்றாகவும் இருப்பதை இன்றைய உவமைக்கதை சுட்டிக்காட்டுகிறது. அத்துடன், மனித நீதியை விட்டு விலகி, இறைநீதியின் பக்கம் நம் நடைபோடவும் அறைகூவல் விடுக்கிறது. மனித நீதியின்படி முதலில் பணியில் சேர்ந்து, அதிக நேரம் உழைத்தவர்களுக்கு அதிக ஊதியம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். தாமதமாக வந்து, குறைந்த நேரம் உழைத்தவர்கள் குறைவாகப் வழங்கப்பட்டிருக்க வேண்டும். இதுதான் சரி. அப்போதுதான் அனைவரும் நேர்மையாக உழைப்பர்.
ஆனால், இறைவனின் பார்வை அப்படி இல்லை. அது பரிவின் பார்வையாக, பாசத்தின் பார்வையாக இருக்கிறது. ஏதோ ஒரு காரணத்தால், சில வேளைகளில் மனித, சமூக காரணங்களால் எல்லா மனிதர்களுக்கும் சமமான வாய்ப்புகளும், திறமைகளும் அமைந்துவிடுவதில்லை. ஒரு சிலர் பிறரைவிட பிற்பட்டவர்களாக, அல்லது பிற்படுத்தப்பட்டவர்களாக இருந்துவிடுகின்றனர். அவர்கள்மீது சிறப்பான ஒரு பரிவைப் பொழிந்து அவர்களுக்கும் அதிக ஆற்றலும், வாய்ப்புகளும் கிடைத்தவர்களுக்கு இணையான ஊதியத்தை நிலக்கிழார் வழங்குகிறார். இதுதான் இறை நீதி. கடவுளின் நீதி மனித நீதியைப் போன்றதல்ல. மனிதர் வழங்கும் நீதி வரையறைக்கு உட்பட்டது. ஆனால் கடவுள் வழங்கும் நீதி தாராள அன்பின் அடிப்படையில் அமைந்தது. கடவுளின் அன்புதான் அவருடைய நீதிக்கு அடிப்படை. எனவே, கடவுள் அநீதியாகச் செயல்படுகிறார் என்பதைவிட, தாராள உள்ளத்தோடு நடந்துகொள்கிறார் என்பதே உண்மை. கடவுளின் நீதி மனித கணிப்புகளுக்கு அப்பாற்பட்டது என நாம் உணர வேண்டும். கடவுள் மக்களை வேறுபடுத்திப் பார்ப்பதில்லை;. அதே நேரத்தில் அவருடைய கொடை எப்போதுமே தாராளமாக நமக்கு வழங்கப்படுகிறது. எனவே, கடவுளின் தாராளத்தைக் கண்டு நாம் பொறாமைப்படுதல் பொருத்தமாகாது. கடவுளின் நீதி இரக்கமும் பரிவும் தோய்ந்த அன்பு இதயத்திலிருந்து பிறக்கும் ஒன்று. கடவுளின் இரக்கத்திற்கு எல்லை கிடையாது. கடவுளின் இரக்கத்திற்கு நாம் மனித கணிப்புப்படி வேலி கட்ட முடியாது. முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்னும் தத்துவம் கடவுளைப் பொறுத்தமட்டில் உண்மை ஆகாது. முதலில் வந்தாலும் சரி, கடைசியில் வந்தாலும் சரி எல்லாருக்கும் சம உரிமையே என்பதே கடவுளின் நீதி. கடவுள் தாராள உள்ளத்தோடு பிறருக்கு நன்மை செய்கிறாரே என நினைத்து நாம் பொறாமைப்படுவதும் முறையாகாது மாறாக, எல்லா மக்களையும் சமமாக நடத்துகின்ற நம் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல நாமும் நிறைவுள்ளவர்களாய் இருக்க வேண்டும். நமது மனித பார்வையில் நீதியைப் பாராமல், இறைவனின் பார்வையில் நீதியை, மனிதர்களைக் காணக் கற்றுக்கொள்வோம்
No comments:
Post a Comment