Thursday, October 16, 2014

சமயத்திற்கும் அரசியலுக்கும் மதம்பிடிக்காது பாத்துக்கொள்வோம்

19.10.2014 ' " 
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர் 

'சீசருக்கு உரியவற்றை சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்" என்ற இயேசு கூறிய புகழ் பெற்ற வரிகள் பைபிளில் மத்தேயு 22:15-21 இல் எழுதப்பட்டுள்ளது. இது இன்று நமக்கு பைபிள்பகுதியில் இறுதியில் உள்ளடக்கப்படுகின்றது.  பைபிளைத் தாண்டி, கத்தோலிக்க மறையைத் தாண்டி, பொருளாதாரம், அரசியல் என்ற பலச் சூழல்களில் மேற்கோளாகப் பயன்படுத்தப்படும் ஒரு புகழ்பெற்ற வரிகள் இது. இயேசு கூறிய அந்தப் புகழ் மிக்கக் கூற்றை இன்று  சிந்திப்போம் 

சமயத்தையும் கடவுளையும் தங்கள் தனிச் சொத்தாகப் பாவித்த பரிசேயர்களும், மதத் தலைவர்களும் இயேசு சொன்ன இந்த உண்மையால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். உண்மைகளை ஏற்றுக் கொள்வதற்குப் பதிலாக, பரிசேயர்கள் இயேசுவை எப்படியாவது வென்றுவிடும் வெறியில், மற்றொரு குழுவினரையும் தங்களுடன் சேர்த்துக் கொள்கின்றனர். அவர்கள் ஏரோதியர்கள். பரிசேயர்களும், ஏரோதியர்களும் கொள்கை அளவில் எதிரிகள். யூத குலத்தில் கடவுளுக்கு மிகவும் பிரமாணிக்கமாய் இருப்பவர்கள் தாங்கள் மட்டுமே என்று எண்ணி வந்தவர்கள் பரிசேயர்கள். எனவே, கடவுளின் அதிகாரத்திற்கு சவால் விடும் வகையில் அமைந்திருந்த உரோமைய ஆட்சியையும், பேரரசரான சீசரையும் முற்றிலும் வெறுத்தவர்கள் இந்தப் பரிசேயர்கள்.

ஏரோதியர்கள் இதற்கு முற்றிலும் மாறுபட்டவர்கள். யூத சமுதாயத்தின் பச்சோந்திகள் என்று அழைக்கப்பட்டவர்கள் இவர்கள். சீசருக்குச் விலாங்குமீன் போல நடக்கும் ஏரோதுடன் இணைந்து, உரோமைய அரசுக்குச் சாதகமாகப் பணிகள் செய்தவர்கள் இவர்கள்.  கொள்கை அளவில் இரு வேறு துருவங்களாக, ஜென்ம பகைவர்களாக இருந்த பரிசேயர்களும், ஏரோதியரும் சேர்ந்து விட்டனர். ஏனெனில் இவர்கள் இருவருக்கும் தமக்கு ஒரு பொதுவான எதிரி இருக்கிறார் என கருதினர். அவர்தான் இயேசு.  அரசியல் உலகில் நண்பர்கள், எதிரிகள் என்பவர்கள் ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் மாறுபவர்கள் என்பதை நாம் இன்று கண்டுவருகின்றோம். இப்படி ஒரு காட்சியை மீண்டும் நமக்கு நினைவுறுத்துகிறது இன்றைய பைபிளின் முதல் வரிகள். ஏரோதியர்கள் முழுமையான அரசியல் வாதிகள். பரிசேயர்கள் தங்களை மதத்தலைவர்கள் என்று கருதுபவர்கள். அரசியலும், மதமும் இணைந்து இயேசுவை ஒழிக்க திட்டமிடுகின்றன. 

கொள்கைகளைப் புறந்தள்ளிவிட்டு, கூட்டணி சேர்ந்து வரும் பரிசேயர்கள் மற்றும் ஏரோதியர்களுடன் இயேசு மேற்கொண்ட உரையாடல் நமக்கு அடுத்த பாடம். நேர்மையுடன் செயல்பட முடியாத பரிசேயர்களும் ஏரோதியர்களும் தேனொழுகப் பேசி, தேள் போலக் கொட்டும் வார்த்தைகளை, உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் வார்த்தைகளைப் பயன்படுத்தினர். இதற்கு முற்றிலும் மாறாக, இயேசு நேரடியாகவே பேசினார். பணிவு என்ற ஆட்டுத் தோலைப் போர்த்தி, இயேசுவை வேட்டையாட வந்திருந்த அந்த ஓநாய்களின் வெளிவேடத்தை கலைத்து, இயேசு நேரடியாகவே பேசினார்: 'சீசருக்கு உரியவற்றை சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்" என்று அவர்களிடம் கூறினார். இயேசு கூறிய இந்த வார்த்தைகள் அரசியலையும் மதத்தையும் இணைத்து சிந்திக்க வாய்ப்பாக உள்ளது. மனித வரலாற்றில் சமயமும் அரசியலும் மோதிக்கொண்ட காலங்களும், கைகோர்த்து நடந்த காலங்களும் உண்டு. சமயங்களில்; அரசியல் புகுந்துள்ளதையும், அரசியலுக்கு மதச்சாயங்கள் பூசப்படுவதையும் நாம் இப்போது அதிக அளவில் கண்டு வருகிறோம். இன்று அரசியல் தலைவர்கள் இறைவனையும், இறைவனின் அடையாளங்களையும் அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்துவதை நாம் பார்க்கிறோம். தன்னையே கடவுளாக்கிக் கொண்ட சீசரின் காலம் முதல், அரசியல்வாதிகளைப் பீடித்துள்ள இந்த வியாதி இன்னும் நீங்கவில்லை. இவ்விதம் அரசியலுக்கு மதச்சாயம் பூசப்படுவது வரலாற்றின் ஒருபக்கம் என்றால், சமயங்களில், அரசியலைக் கலப்பது வரலாற்றின் மறுபக்கம். மதத்தில் அரசியலைக் கலந்த பரிசேயர்களும், யூத மதத்தலைவர்களும் தங்கள் அதிகாரத்திற்குச் சவாலாக வந்த உரோமைய அரசையாகிலும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருந்தனர். ஆனால், இயேசுவைத் தங்கள் பரம எதிரியாகக் கருதினர். அவரைப் பழிதீர்க்கும் வெறியில் இருந்தனர். இயேசுவை ஒழித்து விட அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் அரசியல் வாதிகளின் நாடகங்களையும் மிஞ்சின. இதற்காக, ஏரோதியர்கள் போன்ற தங்கள் எதிரிகளுடனும் சமரசம் செய்துகொண்டனர். 

மதமும் அரசியலும் கலந்த இந்த வரலாறு இன்றும் தொடர்கிறது. இந்தச் சூழலில், நமக்கு இன்று இயேசு கூறும் இந்த வார்த்தைகள் மிகவும் தெளிவாக ஒலிக்கின்றன. சீசருக்குரியதை, இந்த உலகிற்குரியதை நாம் வழங்கித் தான் ஆக வேண்டும். ஆனால், அத்துடன் நம் வாழ்வு, கடமை எல்லாம் முடிந்து விடுவதில்லை. சீசரையும், இவ்வுலகையும் தாண்டிய இறைவன் இருக்கிறார், அவருக்கு உரியதையும் நாம் வழங்க வேண்டும் என்று இயேசு நம்மிடம் இன்று கேட்கிறார். நம் பதில் என்ன? அதிகாரத்தை, சுயநலத்தை காத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் எழும்போது, கொள்கைகளை மூட்டை கட்டி வைத்துவிடும் அரசியல் பச்சோந்திகளைப் போல், நாமும் வாழ்வில் அவ்வப்போது நிறம் மாறுகிறோமா?  ஒரு குறிப்பிட்ட ஆதாயத்திற்காக நம் உயர்ந்த கொள்கைகளை விட்டுக் கொடுத்த நேரங்கள், அல்லது உண்மையை மறுத்த நேரங்கள் எத்தனை, எத்தனை? குறிப்பிட்ட ஒருவரைப் பழிவாங்குவதற்காக, அல்லது அவரை வெல்வதற்காக எம்மை எத்தனை தடவை அடமானம் வைத்தோம்? இந்தக் கேள்விகளுக்கு விடைதேட நம் மனங்களைக் கொஞ்சம் இன்று அலசிப்பார்ப்போமா?. 

Thursday, October 9, 2014

இறையரசுக்குத் தயர்படுத்த தெருக்களுக்கும் சாலையோரங்களுக்கும் செல்வோம்


12.10.2014 ' " 
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர் 

மன்னர் மகனின் திருமணம் இயேசு விண்ணரசை விளக்குவதற்கு பயண்படுத்திய ஒர் உவமையாகும். இது பைபிளில் மத்தேயு 22:1-14 இல் எழுதப்பட்டுள்ளது. இது இன்று நமக்கு பைபிள்பகுதியாக தரப்படுகிறது. இயேசு இதில் விண்ணரசைப் இளவரசனின் திருமணத்துக்கு ஒப்பிட்டுகிறார். இத்த உவமை மேலும் பல படிப்பிணைகளையும் கொண்டுள்ளது. இதன் மூலகருத்தாக 'அழைப்புப் பெற்றவர்கள் பலர், ஆனால் தெரிந்தெடுக்கப் பட்டவர்களோ சிலர்" என குறிப்பிடலாம். இங்கு கடவுளை அரசராகவும், இயேசு தன்னை இளவரசனாகவும் விண்ணரசை திருமண வீடாகவும் ஒப்பிட்டு இந்த உவமையை கூறினார். விண்ணரசிற்கு வருமாறு கடவுளின் மக்களுக்கு ஆதவாது யூதர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனாலும் அவர்கள அவ்வழைப்பை புறக்கனிக்கவே கடவுள் அவ்வரசை யூதரல்லாதோருக்கு கொடுத்தார். இருப்பினும் யூதரல்லதவரும் ஆயத்தமற்றிருந்தால் ஆதவாது திருமண ஆடையின்றி திருமணத்தில் பங்கேற்க முடியாது.

அன்றைய காலத்தில் யூதர்களின் வழக்கப்படி தம் விழாக்களுக்கு உறவினர்களுக்கு அழைப்பு கொடுக்கின்றபோது, விழா நடைபெறும் நாள் சொல்லப்படுவதில்லை. முதலில் உறவினர்களுக்கு விழா பற்றிய அழைப்பு மட்டும்தான் கொடுக்கப்படுகின்றது. விழாவுக்கான விருந்து, நிகழ்ச்சிகள் அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்ட பின்னர் இரண்டாவது கொடுக்கின்ற அழைப்புதான் விருந்திலே கலந்துகொள்வதற்கான அழைப்பு.

இன்றைய நற்செய்தியிலே அரசர் விழா பற்றிய அழைப்பை ஏற்கெனவே தெரிவித்திருந்தார். இரண்டாவதாக, விருந்து நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டபின், அவர்களை அழைத்துவர, பணியாளர்களை அனுப்புகிறார். இந்த உவமையை இயேசு யூதர்களை மனதில் வைத்து சொல்லியிருக்க வேண்டும். யூதர்களுக்கு அழைப்பு இருந்தும், அவர்கள் அதை உதாசினப்படுத்தினார்கள். எனவே, அழைப்பு மற்றவர்களுக்கு- புறவினத்தார்க்கு செல்கிறது. அழைப்பு வந்துவிட்டது என்பதற்காக தகுதியற்ற நிலையில் நாம் பங்கேற்க முடியாது.

இயேசு கூறும் இந்த உவமையைக் கொஞ்சம் கூர்ந்து கவனிப்போம் அரசனுடைய மகனுக்குத் திருமணம். எம்மைப் பொறுத்தவரை அந்தத் திருமணத்தில் பங்கேற்பது மிகவும் பெருமை வாய்ந்த ஒரு செயல். ஆனால், அழைக்கப்பெற்றவர்கள் வர விரும்பவில்லை என்று உவமை கூறுகிறது. இருந்தும் மீண்டும் அரசர் தன் பணியாளர்களை அனுப்பி விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன். வாருங்கள் என்று அழைக்கிறார். அவர்களோ அதைப் பொருட்படுத்தவில்லை. இறையாட்சியின் பார்வையில் இத்தகைய மனிதர்களாக நம்மில் பலர் இருக்கிறோம் என்பதையே இந்த உவமை வழியாக இயேசு சுட்டிக்காட்டுகிறார்.

இறைவன் தருகிற நிறைவான மகிழ்ச்சி, ஆறுதல், நிறைவு இவற்றை வேறு யாரும், எதுவும் தரப்போவதில்லை. ஆனால், நாம் இறைவனின் அழைப்பை பொருட்படுத்தாமல் இருக்கிறோம். அவர் தரும் விருந்துக்கு வர விரும்பாமல் இருக்கிறோம். காரணம், இந்த உலகம் காட்டும் ஈர்ப்புகள். அன்றாட வாழ்வின் கடமைகள், பணிகள். இந்த உவமையில் வரும் மனிதர்களைப் பார்த்து வியக்கும் நாம், இப்போது நம்மைப் பார்த்தே கொஞ்சம் வியப்போம்.

இன்றைய உவமையில் வரும் சம்பவத்தில் 'நீங்கள் சாலையோரம் செல்லுங்கள். காணும் எல்லாரையும் திருமண விருந்துக்கு அழைத்து வாருங்கள்" என்னும் பகுதியை எடுத்துக்கொண்டு  நாம் தெருக்களில் நடந்துசெல் நல்ல நட்பு கிடைக்கும்;. தெருக்களுக்கு, வீதிகளுக்கு, சாலையோரத்துக்கு செல்லுவோம், அன்பை இழந்து, நட்பை சுவாசிக்காத, முன்பின்தெரியாத, முகவரியில்லா மனிதர்;கள் இருக்கும் இடம் இது. இவர்களோடு இணைவது, முழு சமூக, சகோதர, மகிழ்ச்சிநிறை விருந்து கொண்டாட்டம் தினம் செய்வோம். இதைத்தான் அன்னை தெரேசா அவர்கள் செய்தார், வெளியே தெருக்களுக்கும்  சாலையோரத்திற்கும் சென்று அங்குள்ள நோயாளிகள், பாவிகள், ஏழைகள் மற்றும் அன்பு கொடுக்கப்படாதவர்களுக்கு வாழ்வு கொடுத்தார். ஆசிர்வதிக்கப்பட்டவர் ஆனார்.  எனவே இயேசு இன்று எமக்குத் தரும் அழைப்பை நான் பொருட்படுத்தி தெருக்களுக்கும் சாலையோரத்திற்கும் சொல்வோம். இறையரசுக்கு தயாராக நாமும் மற்றவர்களும் வாழ வழி அமைப்போம். 

Friday, October 3, 2014

இறைவன் எதிர்பார்க்கும் கனிகளை எம் வாழ்வில் வழங்குவோம்.

05.10.2014 ' "
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர் 

இன்று தமக்குத்தரப்படும் பைபிள் பகுதியில் இயேசு, ஓர் உவமைக்கதை கூறுகின்றார்.  திராட்சைத் தோட்டம் போட்டு, அதைக் குத்தகைக்கு விட்ட நிலக்கிழார் தமக்குச் சேரவேண்டிய பழங்களைப் பெற்றுவர பணியாளர்களை அனுப்பியபோது, தோட்டத் தொழிலாளர்கள் பழங்களைக் கொடுக்காததோடு, பணியாளர்களைத் தாக்கினார்கள், இறுதியில் நிலக்கிழாரின் மகனையும் கொன்றுபோட்டார்கள். இஸ்ரயேல் மக்கள் திராட்சைத்தோட்டத்தோடு தங்களை ஒப்பிடுவதை பழையஏற்பாட்டில் நாம் பார்க்கலாம். 'படைகளின் ஆண்டவரது திராட்சைத்தோட்டம் இஸ்ரயேல் குடும்பத்தாரே". பொதுவாக திராட்சைத்தோட்டங்கள் முள்வேலிகளால் பாதுகாப்பாக அமைக்கப்பட்டிருந்தது. கரடிபோன்ற கொடூரமான காட்டு விலங்குகளிடமிருந்தும், திருடர்களி டமிருந்து பாதுகாக்கவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திராட்சைத்தோட்டத்தில் உயர்ந்த கோபுரம் ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. இந்த கோபுரத்தினால் இரண்டு பயன்பாடுகள் இருந்தன. திருடர்கள் வருவதை முன்கூட்டியே பார்த்து எச்சரிக்கையாக தோட்டத்தைப் பாதுகாப்பதற்கும், திராட்சைத்தோட்டத்தில் வேலை செய்கிறவர்கள் தங்குவதற்கும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாலஸ்தீனம் ஆடம்பர வாழ்வுக்கு ஏற்ற இடமில்லை என்பதால், பொதுவாக திராட்சைத்தோட்ட உரிமையாளர்கள் தங்களின் திராட்சைத்தோட்டங்களை குத்தகைக்கு கொடுத்துவிட்டு, குத்தகைப்பணத்தைப் பெறுவதில் மட்டும்தான் கவனமாக இருந்தார்கள். இதுதான் இயேசு வாழ்ந்த காலத்தில் இருந்த சூழ்நிலை

இந்த இடத்தில் அரசன் தாவீதுவின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை கூறித்தான் ஆகவேண்டும்: இறைவாக்கினர் நாத்தான் அரசன் தாவீதிடம் ஊரியவின் மனைவியுடன் தகாத உறவு வைத்த நிகழ்வை ஓர் உவமையாக சொன்னபோது தாவீதுக்கு பெருகோபப்பட்டு. முதலில் தாமே அம்மனிதன் என்பதை உணராமல் அதனைச் செய்தவன் சாகவேண்டும் என்று கூறினார்;. பின் மனதுருகி இறைவனிம் மன்னிப்புகேட்டான். ஆனால், இங்கு இயேசுவின் உவமையைக் கேட்ட தலைமைக் குருக்களும், பரிசேயரும் தங்களைப் பற்றியே அந்த உவமையை இயேசு கூறினார் என்று 'உணர்ந்துகொண்டனர்." ஆனால், மனம் மாறவில்லை, மாறாக அவரைப் பிடிக்க வழிதேடினார்கள். இந்த உவமையை இன்று கேட்கும் எமது பதில் என்ன? தாவீதைப் போல நாமே அம்மக்கள் என்பதை உணராமல் கோபம் கொள்கிறோமா? அல்லது பரிசேயர்கள் போல உணர்ந்துகொண்டும் மனம் மாறாமல் இருக்கின்றோமா? விடைதேடவேண்டிய காலமிது. தாவீதைப் போல, மனதுருகி இறைவனிம் மன்னிப்பு கேட்போம். இறைவன் எதிர்பார்க்கும் கனிகளை எம் வாழ்வில் வழங்குவோம்.

தனக்குச் சேரவேண்டிய பங்கைக் கேட்பதற்கு, தோட்ட உரிமையாளர் தன் பணியாளரை, தனித் தனியாக அனுப்புகிறார். மோசே துவங்கி, திருமுழுக்கு யோவான் முடிய இறைவன் அனுப்பிய பணியாளர்கள் அனைவருமே தனி மனிதர்களாக வந்தவர்கள். இவர்களை நினைவுறுத்தவே, பணியாளர்கள் தனியே வந்தனர் என்றும், அவர்கள் அனைவருமே குத்தகைக்காரர்களின் வன்முறைக்கு உள்ளாயினர் என்றும் இயேசு குறிப்பிடுகிறார். குத்தகைக்காரர்களான மதத் தலைவர்கள் வெளிப்படுத்திய இந்த வன்முறையை நாம் இன்று வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் இயேசு இந்தஉவமையை இன்று எமக்குக் கூறி நாம் கடவுள் எமக்கு தந்த பொறுப்பை மறந்து, கணக்கு கொடுக்க தவறிவிடுகின்றோம். கடவுள் இன்றுகுருக்களை துறவிகளை இறைவாக்கினராக அனுப்பிஎங்களின்; பொறுப்புக்களை நினைவூட்டுகிறார். நாம் கண்டுகொள்ளாமல் அவர்கள் மீது குற்றம் கண்டு கூண்டில் நிறுத்த முனைகின்றோம். ஆனால், அவர்களோ இறைவனின் மனிதர்கள். கடவுள் அவர்களை கண்காணிப்பார் என்பதை மறந்து மரணதண்டனை வழங்கத்துடிக்கும் கூட்டத்திற்கு வலுச்சேர்க்கின்றோம். ஆனாலும், கட்டுவோர் விலக்கிய கல்லே கட்டிடத்தின் மூலைக்கல் ஆனதுபோல, அவர்கள் கடவுளின் மகன் வழியாக, இந்த உலகத்திற்கு வாழ்வுகொடுக்கிறாரகள்;. ஆனால், நம்முடைய கர்வம், ஆணவம், அகந்தை நமது பொறுப்பை தவறாகப்பயன்படுத்த நம்மைத்தூண்டுகிறது. இந்த வாழ்வு கடவுள் கொடுத்தது. ஆனால், இந்த வாழ்வை எப்படி வாழ்வது? என்பது நம்மைப்பொறுத்தது. கடவுள் நமக்கு முழுமையான சுதந்திரத்தைக் கொடுக்கிறார். அந்த சுதந்திரத்தை பொறுப்போடு பயன்படுத்த நாம் அழைக்கப்படுகிறோம். இன்றைய உலகில் கொடுக்கப்பட்டிருக்கிற சுதந்திரத்தை நாம் பலவழிகளில் தவறாக, முறைகேடாகப் பயன்படுத்துகிறோம். அதை நல்லமுறையில் பயன்படுத்தி பயன்பெற முயற்சி எடுப்போம்.

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff