19.10.2014 ' "
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
'சீசருக்கு உரியவற்றை சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்" என்ற இயேசு கூறிய புகழ் பெற்ற வரிகள் பைபிளில் மத்தேயு 22:15-21 இல் எழுதப்பட்டுள்ளது. இது இன்று நமக்கு பைபிள்பகுதியில் இறுதியில் உள்ளடக்கப்படுகின்றது. பைபிளைத் தாண்டி, கத்தோலிக்க மறையைத் தாண்டி, பொருளாதாரம், அரசியல் என்ற பலச் சூழல்களில் மேற்கோளாகப் பயன்படுத்தப்படும் ஒரு புகழ்பெற்ற வரிகள் இது. இயேசு கூறிய அந்தப் புகழ் மிக்கக் கூற்றை இன்று சிந்திப்போம்
சமயத்தையும் கடவுளையும் தங்கள் தனிச் சொத்தாகப் பாவித்த பரிசேயர்களும், மதத் தலைவர்களும் இயேசு சொன்ன இந்த உண்மையால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். உண்மைகளை ஏற்றுக் கொள்வதற்குப் பதிலாக, பரிசேயர்கள் இயேசுவை எப்படியாவது வென்றுவிடும் வெறியில், மற்றொரு குழுவினரையும் தங்களுடன் சேர்த்துக் கொள்கின்றனர். அவர்கள் ஏரோதியர்கள். பரிசேயர்களும், ஏரோதியர்களும் கொள்கை அளவில் எதிரிகள். யூத குலத்தில் கடவுளுக்கு மிகவும் பிரமாணிக்கமாய் இருப்பவர்கள் தாங்கள் மட்டுமே என்று எண்ணி வந்தவர்கள் பரிசேயர்கள். எனவே, கடவுளின் அதிகாரத்திற்கு சவால் விடும் வகையில் அமைந்திருந்த உரோமைய ஆட்சியையும், பேரரசரான சீசரையும் முற்றிலும் வெறுத்தவர்கள் இந்தப் பரிசேயர்கள்.
ஏரோதியர்கள் இதற்கு முற்றிலும் மாறுபட்டவர்கள். யூத சமுதாயத்தின் பச்சோந்திகள் என்று அழைக்கப்பட்டவர்கள் இவர்கள். சீசருக்குச் விலாங்குமீன் போல நடக்கும் ஏரோதுடன் இணைந்து, உரோமைய அரசுக்குச் சாதகமாகப் பணிகள் செய்தவர்கள் இவர்கள். கொள்கை அளவில் இரு வேறு துருவங்களாக, ஜென்ம பகைவர்களாக இருந்த பரிசேயர்களும், ஏரோதியரும் சேர்ந்து விட்டனர். ஏனெனில் இவர்கள் இருவருக்கும் தமக்கு ஒரு பொதுவான எதிரி இருக்கிறார் என கருதினர். அவர்தான் இயேசு. அரசியல் உலகில் நண்பர்கள், எதிரிகள் என்பவர்கள் ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் மாறுபவர்கள் என்பதை நாம் இன்று கண்டுவருகின்றோம். இப்படி ஒரு காட்சியை மீண்டும் நமக்கு நினைவுறுத்துகிறது இன்றைய பைபிளின் முதல் வரிகள். ஏரோதியர்கள் முழுமையான அரசியல் வாதிகள். பரிசேயர்கள் தங்களை மதத்தலைவர்கள் என்று கருதுபவர்கள். அரசியலும், மதமும் இணைந்து இயேசுவை ஒழிக்க திட்டமிடுகின்றன.
கொள்கைகளைப் புறந்தள்ளிவிட்டு, கூட்டணி சேர்ந்து வரும் பரிசேயர்கள் மற்றும் ஏரோதியர்களுடன் இயேசு மேற்கொண்ட உரையாடல் நமக்கு அடுத்த பாடம். நேர்மையுடன் செயல்பட முடியாத பரிசேயர்களும் ஏரோதியர்களும் தேனொழுகப் பேசி, தேள் போலக் கொட்டும் வார்த்தைகளை, உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் வார்த்தைகளைப் பயன்படுத்தினர். இதற்கு முற்றிலும் மாறாக, இயேசு நேரடியாகவே பேசினார். பணிவு என்ற ஆட்டுத் தோலைப் போர்த்தி, இயேசுவை வேட்டையாட வந்திருந்த அந்த ஓநாய்களின் வெளிவேடத்தை கலைத்து, இயேசு நேரடியாகவே பேசினார்: 'சீசருக்கு உரியவற்றை சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்" என்று அவர்களிடம் கூறினார். இயேசு கூறிய இந்த வார்த்தைகள் அரசியலையும் மதத்தையும் இணைத்து சிந்திக்க வாய்ப்பாக உள்ளது. மனித வரலாற்றில் சமயமும் அரசியலும் மோதிக்கொண்ட காலங்களும், கைகோர்த்து நடந்த காலங்களும் உண்டு. சமயங்களில்; அரசியல் புகுந்துள்ளதையும், அரசியலுக்கு மதச்சாயங்கள் பூசப்படுவதையும் நாம் இப்போது அதிக அளவில் கண்டு வருகிறோம். இன்று அரசியல் தலைவர்கள் இறைவனையும், இறைவனின் அடையாளங்களையும் அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்துவதை நாம் பார்க்கிறோம். தன்னையே கடவுளாக்கிக் கொண்ட சீசரின் காலம் முதல், அரசியல்வாதிகளைப் பீடித்துள்ள இந்த வியாதி இன்னும் நீங்கவில்லை. இவ்விதம் அரசியலுக்கு மதச்சாயம் பூசப்படுவது வரலாற்றின் ஒருபக்கம் என்றால், சமயங்களில், அரசியலைக் கலப்பது வரலாற்றின் மறுபக்கம். மதத்தில் அரசியலைக் கலந்த பரிசேயர்களும், யூத மதத்தலைவர்களும் தங்கள் அதிகாரத்திற்குச் சவாலாக வந்த உரோமைய அரசையாகிலும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருந்தனர். ஆனால், இயேசுவைத் தங்கள் பரம எதிரியாகக் கருதினர். அவரைப் பழிதீர்க்கும் வெறியில் இருந்தனர். இயேசுவை ஒழித்து விட அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் அரசியல் வாதிகளின் நாடகங்களையும் மிஞ்சின. இதற்காக, ஏரோதியர்கள் போன்ற தங்கள் எதிரிகளுடனும் சமரசம் செய்துகொண்டனர்.
மதமும் அரசியலும் கலந்த இந்த வரலாறு இன்றும் தொடர்கிறது. இந்தச் சூழலில், நமக்கு இன்று இயேசு கூறும் இந்த வார்த்தைகள் மிகவும் தெளிவாக ஒலிக்கின்றன. சீசருக்குரியதை, இந்த உலகிற்குரியதை நாம் வழங்கித் தான் ஆக வேண்டும். ஆனால், அத்துடன் நம் வாழ்வு, கடமை எல்லாம் முடிந்து விடுவதில்லை. சீசரையும், இவ்வுலகையும் தாண்டிய இறைவன் இருக்கிறார், அவருக்கு உரியதையும் நாம் வழங்க வேண்டும் என்று இயேசு நம்மிடம் இன்று கேட்கிறார். நம் பதில் என்ன? அதிகாரத்தை, சுயநலத்தை காத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் எழும்போது, கொள்கைகளை மூட்டை கட்டி வைத்துவிடும் அரசியல் பச்சோந்திகளைப் போல், நாமும் வாழ்வில் அவ்வப்போது நிறம் மாறுகிறோமா? ஒரு குறிப்பிட்ட ஆதாயத்திற்காக நம் உயர்ந்த கொள்கைகளை விட்டுக் கொடுத்த நேரங்கள், அல்லது உண்மையை மறுத்த நேரங்கள் எத்தனை, எத்தனை? குறிப்பிட்ட ஒருவரைப் பழிவாங்குவதற்காக, அல்லது அவரை வெல்வதற்காக எம்மை எத்தனை தடவை அடமானம் வைத்தோம்? இந்தக் கேள்விகளுக்கு விடைதேட நம் மனங்களைக் கொஞ்சம் இன்று அலசிப்பார்ப்போமா?.
No comments:
Post a Comment