ம.பிரான்சிஸ்க்- கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்,
வசீம் தாஜுதீனைப்- (கவலொக் விளையாட்டுக் கழக றக்கி தலைவர்) பின்தொடர்ந்து சென்று டிபண்டர் (Defender Range Rover) வாகனத்தினுள் இருந்த அருண விதான கமகே எனப்படும் கஜ்ஜா 2011ஆம் ஆண்டுமுதல் 2013ஆம்ஆண்டுவரை பாதுகாப்பு அமைச்சில் ஒரு சாரதியாவார். பொலீஸ் ஊடகப்பேச்சாளர் ஏ.எஸ்.பி மினுர சேனறத் செப்டம்பர் 30ஆம் திகதி மாலை திடீர் ஊடகச் சந்திப்பொன்றை நடத்தி வசீம் தாஜுதீனை பின்தொடர்ந்த டிபண்டரில் இருந்த நபர் கஜ்ஜா என்றும் அவரது மனைவி விசாரணைகளின்போது தெரிவித்ததாகவும் அறிவிக்க இலங்கையின் அரசியல் களம் அலங்கமலங்கமாகியது. சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, கஜ்ஜாவின் மனைவி வாக்குமூலம் கொடுத்தால் நாமல் ஏன் குழப்பமடைய வேண்டும் என்று வினவுகிறார். நாமல் ராஜபக்சை சம்பந்தமே இல்லாமல் அறிக்கைக்குமேல் அறிக்கை விட்டு முயலாமையாகிறார்.
கஜ்ஜாவுக்கு மூன்று பிள்ளைகள். மூத்தவருக்கு 16 இளையவருக்கு 9 மற்றும் மகளுக்கு 6 வயதுகள். இந்த இளைய இரு பிள்ளைகளும் பெப்ரவரி 18, 2025அன்று தந்தையுடன் சுட்டு கொல்லப்பட்டார்கள். அதுபற்றி பின்னர் நோக்குவோம். ராஜபக்சைக்களுக்கு இப்படி எல்லாம் ஏவலாளிபோல உழைத்தேன் என்று ஊடகவியலாளர் சமுதித்தவினுடைய வலையொளிச் சனலுக்கு இரண்டு தடவை நேர்காணல் வழங்கியிருந்தார் கஜ்ஜா.
கஜ்ஜாவின் மூத்தமகனின் ஊடக சந்திப்பு,
பொலிஸ் ஊடகப்பேச்சாளரின் அறிக்கை வந்த மறுநாள் கஜ்ஜாவின் மூத்தமகன் இந்துவர விதான கமகே ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினார். நன்னுடைய தந்தையைத் தன் தாயாரும் அவரோடு முறையற்ற தொடர்பைப்பேணி வந்த நபரும்தான் தீர்த்துக் கட்டியிருக்கவேண்டும். சம்பத் ராமநாயக்க எனப்படும் அந்த நபர் பக்கோ சமன் எனப்படும் இந்தோனேசியவில் கைது செய்யப்பட்டு அழைத்துவரப்பட்ட பாதாள உலகத் தாதவிற்கு நெருக்கமான பெயர்வழி. இந்த சந்தேகம் தனது தந்தையின் சகோதரிகளுக்கு இருப்பதாகவும் சொல்லியிருக்கிறார் அவர். இதுபற்றி தனது முகநூலில் ஒரு பதிவும் எழுதியிருந்தார். அத்துடன் அனது தந்தையின் கொலையைத் தொடர்ந்து ஒரு தொகை பணம் தனது தாயாரின் கணக்குக்கு கைமாற்றப்பட்டிருக்கிறது. இது மேலும் தனது தந்தையின் கொலையில் சந்தேகங்களை எழுப்புகின்றது என்றும் அவர் கூறுகிறார். கஜ்ஜாவின் மூத்தமகனின் திடிர் பிரவேசம் யாரும் எதிர்பார்த்திராத ஒன்று. பாடசாலைக் கல்வியை முறையாகப் பெறாத, பாடசாலைக் கல்வியை இடை நிறுத்திய கஜ்ஜாவின் மகனை ஊடகவியலாளர் சந்திப்பு நடத்துமளவிற்கு கொண்டுபோன அந்த சத்தி எது? இதன் பின்னால் கடந்த காலங்களில் இனவாதத்தை மூட்டிய இரு பிரதான சத்திகள் இருப்பதாக சமூக ஊடகங்களில் பலத்த ஊகங்கள் முன்வைக்கப்பட்டன. சிங்கள மொழியில் அதுவரை இலக்கணப் பிழையின்றி ஒரு பதிவேனும் எழுதியிராத கஜ்ஜாவின் மூத்தமகன், ஆங்கில எழுத்துகளால் கிறுக்கிப்போடும் கஜ்ஜாவின் இந்த மகன். ஆங்கிலத்தில் சரியாக எழுதத் தெரியாத கஜ்ஜாவின் இந்த மகன், தாயார் யாரோ ஒரு நபருடன் தொடர்பு பட்டிருந்தார் என்றும் தனது தந்தை நல்லவர்-வல்லவர் என்றும் சுத்தமான சிங்களத்தில் எழுதியிருந்தார். இது எப்படி சாத்தியமானது என்பது புரியாத புதிர் என முகநூல் பயனர்கள் பலர் தெரிவித்தனர்.
கஜ்ஜாவின் மனைவி ஊடக சந்திப்பு
இதனைத் தொடர்ந்துதான் கஜ்ஜாவின் மனைவி அஜித் தர்மபால என்பவருடைய வலையொளி சனலுக்குப் பேட்டி ஒன்றை வழங்கினார். தன்னுடைய கணவர் 2009ஆண்டு மார்கழி வரை கரகம்பிட்டிய எத்தியாவத்த பேருந்து 76 வழித்தடத்தில் சாரதியாகப் பணிபுரிந்தவர் என்றும், ஊடகங்களில் இன்று அவதூறு சொல்லும் மூத்தமகன்: இந்துவர விதான கமகே தை 03, 2010 பிறந்ததாகவும் மகன் பிறந்தகாலத்தில் தாம் கணவருடன் மகிந்த ராஜபக்சையின் சொந்த ஊரான நதமுல்லையில் இருந்ததாகவும் வலஸ்முல்ல-யாழ்ப்பணம் வழித்தடத்தில் பயணிக்கும் பேருந்தில் தனது கணவர் சாரதியாக வேலைக்குச் சேர்ந்ததாகவும் கஜ்ஜாவின் மனைவி சொல்லியிருந்தார். அப்படி ஒருவருடம் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கும்போது ஒருநாள் பேருந்தில் கஞ்சா கடத்தி தனது கணவர் கஜ்ஜா பொலிஸ்சில் பிடிபட்டதாகவும் தனது தந்தையும் கபில திஸ்சாநாயக்கவும் முன்னாள் தென்மாகாண உறுப்பினரும் சேர்ந்து தன் கணவரை எப்படியோ பிணையில் வெளியில் எடுத்ததார்கள். அதன் பின்னர் கபில திஸ்சாநாயக்கவும் மகிந்த இராஜபக்சையும் சேர்ந்து பாதுகாப்பு அமைச்சில் சாரதி வேலை பெற்றுக் கொடுத்ததாகவும் 2011முதல் 2013 வரை அவர் பாதுகாப்பு அமைச்சில் பணிபுரிந்ததாகவும் சாட்சியம் பகிர்ந்தார் கஜ்ஜாவின் மனைவி. அதாவது வசீம் தாஜுதீன் இறந்த காலப்பகுதியான மே17,2012 கஜ்ஜா பாதுகாப்பு அமைச்சில்தான் பணிபுரிந்திருக்கிறார் என்பது அவரதுமனைவியின் இந்தவாக்கு மூலத்தின்மூலம் நிருபணமாகின்றது. கஜ்ஜாவின் மனைவியின் வாக்கு மூலத்தைப் பதிவுசெய்திருந்த சிஐடியின் மேலதிக விசாரணைகளில் கஜ்ஜா வசீம் தாஜுதின் இறந்த காலப்பகுதியில் பாதுகாப்பு அமைச்சில்தான் பணிபுரிந்தர் என்று உத்தியோக பூர்வமாக அறிவித்திருக்கின்றது.
இன்னும் ஒரு முக்கியமான விடயம் அரசசாட்சியாக இருக்கவேண்டிய கஜ்ஜாவை பக்கோ சமன் ஏதோ கஞ்சாக் கொடுக்கல் வாங்கற் தகராறில் ஒப்பந்த அடிப்படையில் கொலைசெய்திருந்ததாகச் சொல்லியிருந்தார். கஜ்ஜாவின் கொலையைப் பெறுப்பெடுக்கமேலும் சில றெளடிகள் தயாரக இருந்ததாகவும் ஒன்றும் அறியாத இருபாலகரும் சூடுபட்ட விழுந்து இறந்ததும் அவர்கள் பின்வாங்கியதாகவும் தெரிவித்திருந்தார் பக்கோ சமன். ஆனால் கைதுசெய்யப்பட்ட ஒப்பந்த கொலையாளிகள் வழங்கிய வாக்குமூலத்தில் தமக்கு காரணங்கள் எதுவும் தெரியாது என்றும் தாம் கஜ்ஜாவைக் கொல்லமுன்னர் பக்கோ சமனைத் தொடர்பு கொண்டு இருபிள்ளைகளும் கூட இருக்கிறார்கள் என்று சொன்னதும் பரவாயில்லை அடித்துச் சாத்திவிட்டுப் போ என்று பக்கோ சமன் சொன்னதாகவும் வாக்குமூலம் கொடுத்திருந்தார்கள்.
வசீம் தாஜுதீனின் திட்டமிடப்பட்ட கொலையில் பங்காளர்கள்
கஜ்ஜா இறந்தது இரவு நேரம். இரவு 11மணிக்கெல்லாம் கஜ்ஜாவின் மூத்தமகன் கஜ்ஜாவிடம் இரவு சாப்பிட்ட சாப்பாடு ஒத்துக்கொள்ளவில்லை என்றும் ஒரு கொத்துறொட்டி வாங்கிவரும்படி கஜ்ஜாவை கடைக்கு அனுப்பியதாகவும் கஜ்ஜா மேட்டார்சைக்கிளை ஸ்ராட்செய்ததும் இளைய பிள்ளைகள் இருவரும் ஏறிக்கொண்டதாகவும் ஒரு கதை சொல்லப்படுகின்றது. எது எப்படியோ கஜ்ஜாவின் மகனை விசாரிக்க சிஐடி இப்போது தயாராகிறது. அத்தோடு ஊடகவியலாளர் சமுதித்திடம் ஆலமரத்தடியில் புலம்பவதுபோல புலம்பித் தீர்த்து ஒன்றுக் கொன்று முரணான பதில்களைக் கொடுத்த கஜ்ஜாவின் ககோதரிகளையும் விசாரிக்க சிஐடி தயாராகிறது. எனி இந்த விசாரணை எந்தக்கோணத்தில் நகரும் என்று பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கும் இந்த நிலையில், சிராந்தி இராஜபக்சையைத் தலைவராகக் கொண்ட சிறிலிய சவியா அமைப்பு என்றும் சிராந்தி இராஜபக்சை என்றும் இதுதொடர்பாக முணுமுணுப்புக்கள் ஏற்படத் தொடங்கி இருக்கின்றன. அத்துடன் மகிந்த இராஜபக்சையின் மூத்தமகன் நாமல் மற்றும் இரண்டாவது மகன் யோசித்த ஆகியோரும் வசீம் தாஜுதீனின் திட்டமிடப்பட்ட கொலையில் மிகப் பெரிய வகிபங்காளர்கள் என்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. வசீம் தாஜுதீன் இறந்த தருணத்தில் கஜ்ஜா பாதுகாப்புப் அமைச்சில் எந்தப் பிரிவில் இருந்தார். யாருக்கு சேவகம் செய்தார். எந்த வண்டியில் சாரதியாகப் பணிபுரிந்தார் என்பதற்கான மர்மங்கள் உத்தியோக பூர்வமாக விலகும்போது வசீம் தாஜுதீன் மரணத்தின் 13 ஆண்டு கால துயர் விலகிவிடும்.
வசீம் தாஜுதீன் இறந்தவுடன் பொலிஸ் அறிக்கை: அவர் மதுபோதையில் சாரத்தியத்தால் இறந்தார் என்று தெரிவித்தது. ஆனால் அவர் மது அருந்துவதில்லை என்பது உண்மை. எனவே யாரைக்காப்பாற்ற பொலிஸ் அறிக்கையைத் தயாரித்தது என்பது விசாரணையின் பின்பு புலப்படும். பிரேதப் பரிசோதனையின் உண்மை மூல அறிக்கைக்கும் அரசாங்கப் பகுப்பாய்வு அறிக்கைக்கும் வேறுபாடுகள் இருப்பதை சிஐடி கண்டுபிடித்தது. ஆவணி 2015 வசீம் தாஜுதீனின் உடல் மீண்டும் இரண்டாவது பிரேதப் பரிசோதனைக்கு தோண்டி எடுக்கப்பட்டு வைத்தியர் அஜித் தென்னக்கோன் மற்றும் அவரது குழுவிர் மேற்கொண்ட பரிசோதனையில் நெஞ்சு, களுத்துப் பகுதிகளில் சில எலும்புகள் காணாமல் போயிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
அனுர குமார திசாநாயக்காவின் உரை சொல்லும் கதை
2017 ஆண்டு ஆவணி 15திகதி அன்னாள் நாடாளமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்கே ஒரு கூட்டத்தில் உரையாற்றும்போது கீழ்காணும்வாறு போட்டுத் தாக்கியிருப்பார். 2012 ஆண்டு வசீம் தாஜுதீன் கொல்லப்பட்ட தினத்தில் திம்பிரிகஸ்யாயவில் உள்ள எரிபொருள் நிலையத்தில் இருந்த கடையில் வசீம் தாஜுதீன் ஒரு தண்ணீர்ப் போத்தல் வாங்குகின்றார். தண்ணீர்ப் போத்தலை வாங்கிக் காருக்குள் வைத்துவிட்டு பயணத்தை ஆரம்பித்தபோது ஒரு டிபண்டர் வசீம் தாஜுதீனைப் பின்தொடர்ந்து வருகின்றது. அந்த டிபண்டரைச் சிஐடி விசாரணைகளிலின்போது அடையாளம் கண்டுகொள்கிறது. டிபண்டரின் சரித்திரத்தைத் தேடிச்சென்றபோது அது சமூகசேவை அமைச்சுக்குச் சொந்தமானது என நிரூபணமாகிறது. அப்போது சமூகசேவை அமைச்சராகப் பீலிக்ஸ் பெரேரா இருந்தார். பீலிக்ஸ் பெரேராவிற்குச் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் வழங்கிய டிபண்டர் வாகனம் அது என்று மேலும் தகவலைத் திரட்டி எடுக்கிறது சிஐடி. புதுவகையான அந்த டிபண்டரைச் சிரந்தி கண்டார். அதன்மீது அவருக்குப் பேரார்வம் ஏற்பட்டது. ஷபீலிக்ஸ் அதை எங்களின் பாவனைக்குத் தந்துவிடுங்கள் என்று கேட்டுப் பெற்றுக் கொண்டாராம் சிரந்தி|. பீலிக்ஸ் பெரேரா டிபண்டரின் சாவிலை சிரந்திக்குக் கையளிக்கும் நிகழ்வின் போட்டோ என்னிடம் இருக்கிறது. அதற்குப் பிறகு என்ன நடந்தது. இந்த டிபண்டருக்கான எரிபொருள் செலவுகளைச் சனாதிபதிச் செயலகமே அப்போது பெறுப்பெடுத்தது. சனாதிபதிச் செயலகத்தின் தரவுகளின்படி அந்த வாகனத்தை யோசித்த இராசபக்சே பாவித்திருக்கிறார்.
வசீம் தாஜுதீன் விவகாரத்திற்குப் பிறகு இந்த டிபண்டர் காணமல் போயுள்ளது. சிஐடி அந்த டிபண்டர் ஹபரணையில் கைவிடப்பட்ட நிலையில் இருந்தபோது கண்டுபிடித்தது. ஏன் சனாதிபதிச் செயலக வாகனம் ஹபரணையில் இருக்கவேண்டும். யாரைப் பார்க்கப் போவதற்கு அந்த வாகனம் ஹபரணைக்குச் சென்றது. ஹபரணையில் சிஐடி அந்த டிபண்டர் வாகனத்தை மீட்டபோது அதன் நிறம் மூன்றுதடவை மாற்றப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆகாவே இங்கே பிரச்சினை இருப்பது உறுதியாகுகின்றது. வசீம் தாஜுதீன் கொல்லப்பட்ட இரவில் அவரது காரைப் பின்தொடர்ந்து ஒரு டிபண்டர் செல்கிறது. இது சிரந்தியின் சிரிலிய எனப்படும் நிதியத்திற்குச் சொந்தமான ஒன்று. இதை யோசித்த ராயபைக்சே பாவித்திருக்கிறார். கடைசியில் நிறத்தை மாற்றி ஒழித்து வைத்திருக்கிறார்கள். இப்படி அத்தனையையும் கண்டுபிடித்த சிஐடி, வாக்குமூலம் வழங்கக்கூறி சிரந்தியை விசாரணைக்கு அழைத்தது. இது நியாயமானது தானே. கல்வி அறிவு இல்லாத, சமூகத்தைப்பற்றி எந்தவித பிரக்ஞையும் இல்லாத, நாட்டையோ, மக்களையோ பற்றி எந்தவித பாசமுமில்லாத மனிதர்களை உருவாக்கி இருக்கிறார்கள் இந்த இராசபக்சைக்கள். ஆனால் சிரந்தியை சிஐடிக்கு அழைக்கும்போது அவர்கள் வந்து தேசத்தின் அம்மா என்று கத்துகிறார்கள். ஒரு இளைஞனின் கொலை சம்மந்தமாக விசாரணைக்கு சிஐடி அழைத்திருக்கிறது. இந்த கும்பல் வந்து தேசத்தின் அம்மா என்று ஓலமிடுகிறது. இப்படியாக நீண்டுகொண்டு போகும் இந்தஉரை இப்போதும் வலையொளியில் இருக்கிறது.
பிரதமர் ரணிலின் கபடம்
அன்று சிரந்தியை சிஐடி விசாரணைக்கு அழைத்தபோது பிரதமர் ரணில் தனது அளவில்லாக் கருணைக் கடலைத் திறந்து விட்டார். சிஐடிக்குப், பாதம் நொந்துகொண்டு சிரந்தி போவதற்குப் பதிலாக, சிரந்தியிடம் சிஐடி அதிகரிகளை அனுப்பி அழகு பார்த்தார் ரணில். இப்படி நல்லாட்சி என்பதையே கெட்டா வார்த்தையாக்கி நல்லாட்சியின் பெறுமானங்களைச் சிதைத்தவரைத்தான் அவரது ஆதரவுக் கண்மணிகள் ஆசியாவின் அதி அற்புத சனநாயகச் செம்மல் என்று இன்றும் துதிபாடுகிறார்கள். சனாதிபதி சிறிசேன தன்னுடைய பங்குக்குக் கருத்தும் மூட்டினார். அவருக்கு இரவு 10 மணிக்குப் பிறகு நாட்டில் நடப்பது எதுவுமே தெரியவில்லை. மாலை நேர காலிவிதி வாகனநெரிசலைக் கடக்க முயலும் இரு குருடர்கள் போலதான் அன்றைய ஆட்சியின் இலச்சணம் இருந்தது.
கஜ்ஜாவை யார் வைத்திருந்தார்கள்
அன்று நாடாளமன்ற உறுப்பினராய் டிபண்டர் கதை சொல்லும் அனுர குமார திசாநாயக்கா இன்று சனாதிபதி. அன்று சிஐடி பணிப்பாளராய் இருந்த கீர்த்திமிகு ஷhனி அபயசேகர இன்றும் சிஐடி பணிப்பாளராய் இருக்கிறார். இதனால்தான் இந்த விசாரணைகள்மீது பொதுமக்களுக்குத் துளியளவேனும் நம்பிக்கை ஏற்பட்டிருக்கின்றது. அனுர குமார திசாநாயக்கா அன்று சொன்னதைப் பார்க்கும்போது தாஜுதீனைப் பின்தொடர்ந்த டிபண்டர் வாகனத்தில்தான் கஜ்ஜா இருந்திருக்கிறார் என்று தெளிவாகுகிறது. இன்று கஜ்ஜா உயிரோடு இல்லை. கேள்வி என்னவென்றால் சொப்பன சுந்தரியை யார் வைத்திருக்கிறார் என்று செந்தில் கவுண்டமணியிடம் கேட்டமாதிரி கஜ்ஜாவை அல்லது டிபண்டரை யார் வைத்திருந்தார்கள்.
Hisham.M.Vlog என்னும் வலையொளிப் பதிவிலிருந்தும் https://www.adaderana.lk, colombo telegraph.com, Lankanewsweb.net, www.lankaenews.com, https://www.dailymirroronline.lk,bbc news .com, dbsjeyaraj.com, Morning.html, The Morning Telegraph.com, Tamil Guardian.com பதிவிலிருந்தும் தொகுக்கப்பட்டது)

No comments:
Post a Comment