09.09.2012
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
இயேசு தன்னை தேடிவந்த நோயாளர்களைக் பல்வேறு வழிமுறைகளில் குணமாக்கியுள்ளார். சிலரைத் தொலைவிலிருந்தே குணமாக்கினார்.சிலரைத் தொட்டுக் குணமாக்கினார்.சிலரைத் தொடாமல் 'உம் நம்பிக்கை உம்மைக் குணமாக்கிற்று"என்று சொல்லிக் குணமாக்கினார். ஆனால், இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் பார்க்கும் காது கேளாத, திக்கிப்பேசும் மனிதரை இயேசு குணப்படுத்திய முறை வித்தியாசமானது.'இயேசு அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்று,தம் விரல்களை அவர் காதுகளில் இட்டு,உமிழ் நீரால் அவர் நாவைத் தொட்டு, பிறகு வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு, அவரை நோக்கி,'எப்பத்தா"அதாவது 'திறக்கப்படு" என்றார்." உடனே அவருடைய காதுகள் திறக்கப்பட்டன் நாவும் கட்டவிழ்ந்தது. அவர் தெளிவாகப் பேசினார்.இந்த மனிதரைக் குணமாக்க இயேசு கூடுதல் கவனம் எடுத்துக்கொள்கிறார் என கருதலாம்.
செவிடர்களும் வாய்பேச முடியாதவர்களும் நம்மிடையே இல்லையா? இன்று நாம் வாழும் சூழலில் பலபாழ்பட்ட விடயங்கள் நடந்தாலும் யாரும் தட்டிக் கேட்க முன்வருவதில்லையே. இங்கு ஏன் யாருமே தட்டிக் கேட்கவில்லை. ஏன் யாருக்கும் காது கேட்கவில்லையா? அல்லது எல்லோருமே ஊமைகளா? ஏன்னும் கேள்விக் விடைகளை தேடி அலைகின்றன. இன்று இதுபோன்ற நிகழ்சிகளைக் கண்டும் காணாமலும் கேட்டும் கேளாமலும் சென்றால், இயேசுவின் வைத்தியம் நமக்குத் தேவைப்படுகிறது. நாம்தான் காது கேளாதவர். நாம்தான் திக்கு வாயுள்ளவர்கள். வாய்பேச இயலாதவர்கள். நம் காதுகளுக்குள் இயேசுவின் சில அதிரடி வைத்தியம் தேவைப்படும். நாம் நம் காதுகளைத் திறந்தால், நம் வாயைத் திறந்தால், வாய் பொத்தி,காதுகளை பொத்தி வாழும் எத்தனையோ குரல் இழந்த அடித்தள மக்களுக்கு குரலும் வாழ்வும் கொடுத்த இயேசுவைபோல் புதிய மனிதர்களாக மாறுவோம். எங்களைப் பார்த்து, இவர் எத்துணை நன்றாக யாவற்றையும் செய்து வருகிறார் என்பார்கள்.
இயேசு ஆற்றிய புதுமைகள் அக்கால மக்களுக்கு மட்டுமல்ல, நமக்கும் ஒரு நல்ல செய்தியைக் தருகின்றன. அவற்றை நன்குணர்து வாழ்வாக்கினால். நம் காதுகள் திறக்கப்பட்டு, நாவு கட்டவிழும் அதிசய செயல்களை நம் வழியாகச் இயேசு செய்வார். தன்பணிவாழ்வில் இயேசு புரட்சிகரமாகப் பேச வேண்டும் அதனால் மக்களை தன் வயப்படுத்த வேண்டும் என்று முயன்றதில்லை. தான் ஆழ்மனதில் நம்பியவைகளை மக்களுக்குச் சொன்னார். வாழ்ந்தும் காட்டினார். அவரது போதனைகளும், எடுத்துக்கொண்ட நிலைப்பாடும், வாழ்ந்த வாழ்வும் யூதர்களுக்கு ஒரு சவாலாக இருந்தன. இன்றைய நற்செய்தி வழியாக இயேசு இப்படி ஒரு சவாலை இன்று நமக்கும் விடுக்கிறார்.
இயேசு வாய் பேசாத, காது கேளாத ஒருவனை குணமாக்கியப் புதுமையை, தன் வல்லமையை வெளிப்படுத்த அவர் எடுத்துக்கொண்ட முயற்சியாக பார்க்காமல், இன்று நமக்கும் காட்டும் ஒரு மாற்றுப் பாதையாக பார்க்க வேண்டும். தன் குறைகளைப் பார்த்து இயேசுவையும் இந்த சமுதாயத்தின் ஒரு ஆளாக நினைத்து அவன் அவரை அணுக தயங்கியிருக்க வேண்டும். தயக்கம், குழப்பம், தன் மீது தனக்கே ஏற்பட்ட வெறுப்பு என்று பல சிறைகளுக்குள் தன்னையே பூட்டிக்கொண்டவனாக அவன் இருந்திருக்கவேண்டும். இயேசு அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்று, தம் விரல்களை அவர் காதுகளில் இட்டு குணமாக்கினார்.இயேசுவின் இந்த செயல்களில் இருந்து ஒரு சில பாடங்கள்: இயேசு அவர் காதுகளில் கையை வைக்கும் போது, அவரிடம் இயேசு சொல்லாமல் சொல்லியது: 'உன்னை இதுவரை அல்லது இனியும் மனம் தளரச் செய்யும் வண்ணம் இந்த உலகம் சொல்வைதைக் கேளாதே. உன் காதையும், நாவையும் நல்ல செய்திகளுக்காகத் திறந்து விடு. வேதனையில், விரக்தியில், நீ வாழ்ந்தது போதும். உன் சிறைகளைத் திறந்து வெளியே வா. உன் சிறைகள் திறக்கபடுக."என கூறிவிடலாம். எனவே நாமும் தீமைகளைப் பார்க்காதே, கேட்காதே, சொல்லாதே என்று மூன்று குரங்குகள் வழியாக நமது காந்தி கற்றுத்தந்த பாடத்தை வாழ்வாக்குவோம்.
இயேசுவிடம் குறையுள்ள அந்த மனிதனை மற்றவர்கள் கொண்டு வந்தனர். அந்த மனிதன் தானாக இயேசுவிடம் வரவில்லை. அவனுடைய ஒரு சில நண்பர்கள் அவனுக்கு நல்லது நடக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இயேசுவிடம் அவனை கொண்டு வந்தனர். இப்படிப்பட்ட நல்ல உள்ளங்களாக நாம் இன்று மாறுவோம். இயேவைப்போல் நாமும் எம் செவிகளையும், நாவையும், எல்லா புலன்களையும் தொட்டு இதே வார்த்தைகளைச் சொல்லுவோம். நல்லவைகளைப் பார்ப்போம், நல்லவைகளைப் பேசுவோம், நல்லவைகளைக் கேடபோம். கனல் கக்கும் எம் மணல்பரப்பு நீர்த் தடாகமாக்குவோம்
No comments:
Post a Comment