Thursday, December 6, 2012

பண்டிகைக்கால வர்த்தகத்திலோ வலைப்பின்னலின் வழுக்கல்களுக்குள்ளோ சறுக்கிவிடாமல் ஆண்டவருக்காக நாம் காத்திருப்போம்.

09.12.2012
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

மனித உடலேற்பு மறைபொருளான கிறிஸ்து பிறப்புக்கு அழைத்துச்செல்லும்  திருவருகைக் காலத்தின் இரண்டாம் வாரத்தில் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். இது கடவுளின் வருகையை, உலகில் அவரது உடனிருப்பைக் குறித்து நிற்கிறது. அனைத்துலகையும் வரலாற்றையும் உள்ளடக்கிய இந்த மறை பொருளில் இரண்டு அம்சங்கள் உள்ளன: இயேசு கிறிஸ்துவின் முதல் மற்றும் இரண்டாம் வருகை. இறைமகன் இயேசுவின் பிறப்பு நம் இல்லங்களில் நிகழ வேண்டுமென்ற எதிர்ப்பார்ப்பில் இல்லத்தை அலங்கரிக்கும் நிகழ்வுகள் இக்காலங்களில் இடம்பெற்று வருகின்றன. கிறிஸ்மஸ் பண்டிகைக்கால வர்த்தகம் சூடு பிடிக்க புதிது புதிதாக எதுவெல்லாமோ சந்தையில் குவிகின்றன. உறவுகளை ஊக்குவிக்கும் முடிவற்ற வலைத்தொடர்புகளும், சமூகத் தொடர்புகளும் இன்றைய உலகில் குவிந்து காணப்பட அனைத்தையும் அனுபவித்து வாழத்துடிக்கும் இன்றைய உலகின் சுயநலக் கொள்கைகள் மனிதரின் மாண்பைக் கீழ்மைப்படுத்துவதாகவே அமைய நம்; மனங்கள் அதனூடேயும் பயணிக்கின்றன. அதனால் பெரும்பான்மை நேரங்களில் நாம் தனிமையின் வெறுமையை உணர்கின்றனர்.

இத்தகைய நிகழ்வுகள் கிறிஸ்மஸ் பெருவிழாவின் உண்மைப் பொருளை உலகிடமிருந்து மறைப்பதற்குத் துணைபோகின்றன. கிறிஸ்மஸ் ஒரு களியாட்டமாக கொண்டாடவே நாம் முனைவது உண்மையாகிறது. நம் மீட்பரின் வருகையை முன்குறித்து பாலைவனத்தின் அறிவிப்புக் குரலாய் திருமுழுக்கு யோவான் செயற்பட்டார். மனந்திரும்புங்கள். கடவுளின் அரசு தெருங்கியுள்ளது என அவர் மக்களை ஆயத்தப்படுத்தினார். மனமாற்றமடைந்து இறைவனை நாடவேண்டுமென்பதே அவரது வேண்டுகோளாயிருந்தது. அவரது குரலைக் கேட்டவர்களும், அவரைப் புறந்தள்ளியவர்களும் இருந்தனர். அவரது குலைக் கேட்டு மீட்படைந்தவர்களும் உள்ளனர். இன்றைய உலக அவலங்கள், பிரச்சினைகளுக் கெல்லாம் காரணம் மக்கள் இயேசுவின் போதனைகளைக் கைக்கொண்டு நடக்காமையே எனலாம்.

ஆன்மிக வரட்சியுடனான மக்கள் மனங்கள் விசுவாசங் கொள்ளாத ஒரு காலகட்டத்தில் திருமுழுக்கு யோவானின் இச்செய்தி அக்கால மக்கள் மனதில் பசுமரத்தாணியாக பதிந்தது. இன்றும் உலகெங்கிலும் இடம்பெறும் பிரச்சினைகள், வன்முறைகள் சமூகச் சீர்குலைவுகளுக்கும் சிக்கல்களுக்கும் ஆன்மிக வறுமையே முக்கிய காரணம். 'என்னைத் தேடுங்கள் சகலதும் உங்களைத் தேடிவரும். கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படுமென்று" கிறிஸ்து போதித்ததை இக்காலத்தில் நாம் சிந்திப்பது அவசியம்.

கிறிஸ்துவின் பிறப்புப் பெருவிழாவை எதிர்நோக்கிக் காத்திருக்கும் நாம் திருமுழுக்கு யோவான் போல் மனந்திரும்புதலுக்கான அறிவிப்பை இன்றைய சமுதாயத்தில் தெரிவிக்க வேண்டியது அவசியம். பாலை நிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது: 'ஆண்டவருக்காக வழியை ஆயத்தம் பண்ணுங்கள், அவருக்காக பாதையைச் செம்மையாக்குங்கள். பள்ளத்தாக்குகள் எல்லாம் நிரப்பப்படும். மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்: கோணலானவை நேராக்கப்படும், கரடுமுரடானவை சமதளமாக்கப்படும் மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர்".

எனவே இறைவருகைக்கான எமது ஆயத்தம் இதய நெருடல்களாக எம்மனங்களில் பதிந்துள்ள ஏக்கம், துயரம், பாவநிலைகள் என்ற பள்ளத்தாக்குகளை இல்லா தொழித்து மன நிம்மதி, மகிழ்ச்சி, அன்பு, தாழ்ச்சி, விட்டுக்கொடுப்பு என்ற கடவுளின் அருளால் நிரப்பப்படவேண்டும். சுய நலம், வைராக்கியம் என்ற குன்றுகளும் மலைகளும் நம் மனங்களில் தலைதூக்கி நிற்கும் போது, அவை கடவுளின் அருள் நமக்குக் கிட்டுவதற்கான தடைகளாக அமையும்.

இதனால் எம் சிந்தனைகள் நேரற்ற கோணலாகவும் கடும் போக்கினால் உள்ளம் கரடுமுரடாகவும் காணப்படுகின்றது. இவற்றை எம்மிலிருந்து களைந்து தாழ்ச்சியை பொறுமையயை பிறர் அன்பை பிறருக்கு உவந்து உதவுவதை இத்திருவருகைக் காலத்தில் மேற்கொள்வோம். பண்டிகைக்கால வர்த்தகத்திலோ வலைப்பின்னலின் வழுக்கல்களுக்குள்ளோ சறுக்கிவிடமல் 'ஆண்டவருக்காக நான் காத்திருக்கிறேன். என் நெஞ்சம் காத்திருக்கின்றது. அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். விடியலுக்காகக் காத்திருக்கும் காவலரைவிட என் நெஞ்சம் என் தலைவருக்காய்க் காத்திருக்கின்றது. கடவுள் நம்பிக்கையில் தான் உயிர்வாழ்ந்திருப்பர்." என்று கத்திருப்போம்.

அத்துடன் கிறிஸ்துவின் வருகையை நம் வாழ்வால் புதிய நற்செய்தி அறிவிப்பின் வடிவாக வாழ்வோம் அனைவரிடையேயும் அமைதியையும் வளர்க்கும் முயற்சிகளில் பங்கேற்போம் அப்போது கரடு முரடான கோணல் மிக்க நம் வாழ்வு கடவுள் அருளும் மீட்பைக் காண்பது உறுதியாகும்.

No comments:

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff