Friday, December 28, 2012

நம் இல்லங்களும் தெய்வீக அன்பால் உருவாக்கப்பட உழைப்போம்

30.12.2012
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
 
இன்று திருக்குடும்ப விழாவைக் கொண்டாடுகிறோம். குடும்ப பண்பை விழக்க படித்த கதைஒன்றை பகிர்வது இங்கு நல்லது: ஒருமுறை ஓர் அரசர் சிறந்த ஓவியத்திற்கு உயர்ந்த பரிசு அளிக்கப்படுமென அறிவித்தார். சிறந்த ஓவியமாய் எதை வரைவது என திறமை மிகு ஓவியர்கள் பலரிடையே குழப்பமாய் இருந்தது. கடைசியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓவியம் இதுதான். “விவசாயி ஒருவர் பகல் முழுவதும் வயலில் உழுது விட்டு மாலை நேரத்தில் களைப்படைந்த நிலையில் கலப்பையை தோழில் போட்டுக் கொண்டு வீடு திரும்புகிறார். அவரின் மனைவி அவரின் குடிசை வாயிலில் நின்று கொண்டு அன்பான முகப்பாவனையில் அவரை வரவேற்க காத்திருந்தார். அவர்களின் சிறுவயது குழந்தையோ வீட்டிலிருந்து அவரை நோக்கி இரு கைகளையும் நீட்டிய நிலையில் ஓடுகிறது”. இம்மூவரும் ஒருவரை ஒருவர் ஏற்று அன்பு செய்து அரவணைப்பதைக் ஓவியம் தெளிவாக காணமுடிகிறது. இம்மூன்று பண்புகளுமே நல்ல குடும்பத்தின் சிறப்பாகும். “ஆண்டவருக்கு அஞ்சும் மனிதனை அவர் சீயோனிலிருந்து ஆசீர்வதிப்பார். கனிதரும் கொடி முன்திரிபோல் அவன் மனைவி அவள் வீட்டின் உட்புறத்தில் இருப்பாள். ஒலிவச் செடிகள் போல அவன் மக்கள் பந்தியில் அவளைச் சூழ்ந்திருப்பர் என நாம் திருப்பாடலில்(தி.பா.128:3-4)வாசிக்கிறோம். இது ஓவிக்கருத்தானாலும் எம்வாழ்விலும் ஒளிரவேண்டும்
 
திருச்சபை திருக்குடும்பத்தை நாம் முன்மாதிரிகையாய் வாழ வேண்டுமென இன்று நினைவுறுத்துகிறது. நல்லவர்கள் வரமுடியா நாசரேத்து ஊரில் அவர் குடியிருந்தாலும் இவர் தச்சன் மகனல்லவா? எனக் குறைத்து மதிப்பிடும் தொழில் செய்தாலும் இவரின் தாய் மரியாவல்லவா? எனப் பெயர் குறிப்பிடும் சாதாரண பெண்ணாய் மரியாள் இருப்பினும் அக்குடும்பத்தில் சூசையப்பரிடம் நீதி இருந்தது. மரியாளிடம் “இதோ ஆண்டவரின் அடிமை” எனக் கூறும் தாழ்ச்சி இருந்தது. இயேசுவிடம் பெற்றோருக்குப் பணியும் கீழ்ப்படிதல் இருந்தது. இக்குடும்பமே நம் குடும்பங்களுக்கு முன் மாதிரிகை.
இக்குடும்பத்தில் ஒருவர் மீது ஒருவர் கொண்ட அன்பு பளிச்சிடுகிறது. பன்னிரண்டு வயதில் மூன்று நாள்கள் காணாமல்போன மகனைத் தேடியலைந்து கண்டுகொண்ட அன்னை, மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக் கொண்டிருந்தோமே என்றார். இந்த வரிகள் அனைத்து அன்னையரின் மனநிலையை, இதய வேதனையை அருமையாக வெளிப்படுத்துகின்றன. தம் பிள்ளை மேல் தாங்கள் கொண்டிருந்த பொறுப்பையும் அக்கறையையும் வெளிப்படுத்துகிறது. நாசரேத்துக்குத் திரும்பிச் சென்ற பிறகு இயேசு இறை நம்பிக்கையிலும் ஞானத்திலும் உடலிலும் வளர வழிகாட்டினர். இவ்வாறு பொறுப்புள்ள பெற்றோருக்கு மரியாவும் சூசையும் முன்மாதிரியாய் விளங்குகின்றனர்.
 
இன்று குடும்பங்கள் பலவிதமான சிக்கல்களைச் சந்திப்பதை பார்க்கிறோம். மண முறிவுகள், பிளவுகள், சண்டை சச்சரவுகள், ஊடகங்களின் தாக்கத்தால் ஆன்மீகச் சிக்கல்கள் போன்றவை குடும்பத்தின் ஆணி வேரையே அசைத்துப் பார்க்கின்றன. திருமணம் செய்யாமல், குடும்ப வாழ்வுக்குள் நுழையாமல் விருப்பம்போல் வாழலாம் என்னும் மனநிலை மெல்ல, மெல்ல பரவி வருகிறது. அத்துடன் ஒவ்வொரு தாயும் தன் பிள்ளைக்காக துன்புறுகிறார். தம் பிள்ளைகள் தம்மை விட்டு, தமது வாழ்வு நடைமுறைகளைவிட்டு விலகிச் செல்லும்போது தாய் பெரிதும் வேதனை அடைகின்றார். படிப்பில் கவனம் செலுத்தாமல், தொலைக்காட்சி, அலைபேசி, இணைய தள விளையாட்டுகளில் ஆர்வம் காட்டும் போது பிள்ளைகளை எண்ணித் தாய்மார்கள் கவலைப்படுகின்றார்கள். அவர்கள் நன்முறைக்குத் திரும்ப வரவேண்டுமென்று தேடுகிறார்கள். எனவே, குடும்பங்களை உறுதிப்படுத்தும் பணியை நாம் அக்கறையுடன் ஆற்றவேண்டும். இந்த நாளில் நமது குடும்பங்கள் அனைத்தும் ஆன்மீக குடும்பங்களாகத் திகழ இறைவனை வேண்டுவோம்.
 
திருக்குடும்பத்தின் தலைவர்கள் விசுவாசம் நிறைந்தவர்களாவும் அருள் வாக்குக்குக் கீழ்படிந்தவர்களாகவும் இறை வார்த்தையை ஆழ்ந்து சிந்தித்து செயற்படுபவர்களாகவும் விளங்கினார்கள். மூவரும் தனித்தனியாகவும் ஒன்றாகவும் சேர்ந்து வளர்த்துக் கொண்ட மதிப்பீடுகள் மனநிலைகள், நற்பண்புகள், செயல்பாடுகள் அனைத்தையும் இன்று சிந்திப்பதோடு வாழவும் நாம் முடிவெடுக்கவும் வேண்டும்.
 
புனித அகுஸ்தினார் மனந்திரும்பி இயேசுவை பின்பற்றுவதற்கு அவரின் தாய் மொனிக்காவின் இடைவிடா செபம் தான் காரணம். புனித குழந்தை தெரசாள் தன் தந்தை மார்டினைக் குறித்து இவ்வாறு கூறுவார். “என் தந்தை இப்பூமியில் வாழும் போதே புனிதரைப் போன்று எனக்குத் தென்பட்டது. அவரின் புனிதமே நாங்கள் அனைவரும் துறவு வாழ்வில் இறைபணி செய்ய காரணம்” என்றார்.
“நல்ல குடும்பமே தேவ அழைத்தலின் விளைநிலம் என்றார் பரிசுத்த தந்தை. வீடு செங்கற்களால் கட்டப்படுகிறது. ஆனால் நல்ல இல்லமோ தெய்வீக அன்பால் உருவாக்கப்படுகிறது". எனவே, நம் குடும்பங்களும் திருக்குடும்பத்தைப் போல் வளரட்டும் வாழட்டும் வாழ்த்துகின்றோம்.

No comments:

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff