Friday, December 21, 2012

இயேசுவின் பிறப்பில் நாம் வாழ எம்மை சாத்தியாமாக்குவோம்


23.12.2012
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
திருவருகைக்காலத்தில் இருக்கும் நமக்கு, இது கிறிஸ்து பிறப்பு விழாவுக்கு முன்னான கடைசி ஞாயிறு. இது மனித உடலேற்பு மறைபொருளான கிறிஸ்து பிறப்புக்கு அழைத்துச்செல்லுகிறது.

மத்திய அமெரிக்காவின் மறைந்து போன மாயன் நாகரீக மக்களில் நடுவில் வழக்த்தில் இருந்த  கதை ஒன்று: மனிதன் ஒருநாள் காட்டில் சோகமாக அமர்ந்திருந்தான். காட்டு விலங்குகள் அவனைச் சுற்றி வந்து அவனிடம், ‘நீ சோகமாக இருப்பதை எங்களால் சகிக்க முடியவில்லை. என்ன வேண்டுமானாலும் கேள். நாங்கள் உனக்குத் தருகிறோம்’ என்றன. மனிதன், ‘எனக்கு நல்ல கண்பார்வை வேண்டும்’ என்றான். கழுகு ‘என் பார்வையை உனக்குத் தருகிறேன்’ என்றது. ‘யாரும் எதிர்க்கமுடியாத வலிமை வேண்டும்’ என்றான். ஜகுவார், ‘நான் தருகிறேன்’ என்றது. ‘பாதாளங்களின் இரகசியத்தை அறிய வேண்டும்’ என்றான். பாம்பு, ‘அதை நான் உனக்குக் காட்டுகிறேன்’ என்றது. எல்லா விலங்குகளும் தன் ஆற்றலை இப்படியாக மனிதனுக்குத் தந்தது. எல்லா ஆற்றல்களையும் பெற்ற மனிதன் எழுந்து புறப்பட்டான். அப்போது மான் மற்ற விலங்குகளைப் பார்த்து, ‘மனிதன் இப்போது எல்லாவற்றையும் பெற்று விட்டான். இனி அவனிடம் சோகம், வருத்தம் இருக்காது’ என்றது. அதற்கு ஆந்தை மறுமொழியாக, ‘இல்லை, மனிதனின் மனத்தில் ஒரு துவாரத்தை, வெற்றிடத்தை நான் பார்த்தேன். அது ஒரு தணிக்க முடியாத பசி. அது அவனுக்கு சோகத்தைத் தரும். இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று அவன் எல்லாவற்றையும் கொண்டு அந்த வெற்றிடத்தை நிரப்பிக் கொண்டேயிருப்பான். ஒருநாள் இந்த பூமி சொல்லும்: ‘இதற்கு மேல் நீ எடுத்துக்கொள்ள என்னிடம் ஒன்றுமேயில்லை’. மனிதனின் தேடலை, தேடல் தருகின்ற ஏமாற்றத்தையும், ஏக்கக்தையும், தாகத்தையும், பசியையும், விரக்தியையும் வெளிப்படுத்துகின்ற ஒரு கதை இது.

வாழ்வில் நிகழ்வுகள் எம் எதிர்பார்ப்புகளுக்கு மாறாகச் செல்லும்போதும், வாழ்வின் நிகழ்வுகள் எம் அமைதியைக் குலைக்கும்போதும், நாம் செல்கின்ற பாதை தெளிவாக இல்லாத போதும் நாம் நினைத்துக்கொள்ளுவத கடவுள் இல்லை. ஆனால் “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். என் நுகம் அழுத்தாது. என் சுமை எளிதாயுள்ளது.” என்று எம்மிடம் வரும் இயேசு கூறுகின்றார். எல்லாவற்றையும் கொண்டு வெற்றிடத்தை நிரப்பத் துடிக்கும் எமக்கு ஒரு நிறைவான வழியைக் காட்டுகின்றார் இயேசு. அவரது ஒளியில் நாம் எப்போதும் நடக்க வேண்டுமெனில், இறை வார்த்தையின் வழி நடக்க வேண்டும்.

அநீதியான ஆடம்பரச்  செயல்கள், இரக்கமற்ற அதிகாரம், நியாயமற்ற பொருளாதார நெருக்கடி எனக் கூக்குரலிடும் உலகின் பல பகுதிகள், இயேசுவின் போதனையில் உண்மை அர்த்தத்தைக் காண முடியும். நீதியும்-பிறரன்பும், உண்மையும்-நேர்மையும், அதிகாரமும் - மதித்தலும் ஒன்றுக்கொன்று இணைந்து செல்ல வேண்டும். அத்துடன்  எம் வார்த்தைகள் இன்றும் நம் வாழ்வுடன் இயைந்து செல்பவைகளாக இருக்கவேண்டும். இருப்பவர் இல்லாதவரோடு பகிர்ந்துகொள்ள வேண்டும். இன்று அளவுக்கதிகமாக வைத்திருக்கும் நிலை, மற்றும், அளவுக்கதிகமாகத் துன்புறும் நிலை என்ற இந்த இரு நிலைகளுக்கும் இடையே உள்ள இடைவெளியை நீக்குவதற்கு நீதி எமக்கு அழைப்பு விடுக்கிறது. நேர்மையுடனும், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தாமலும், அயலவர்மீது அன்புடனும் நடக்க வேண்டியத் தேவையில் நாம் உள்ளோம்.

நுகர்வுக் கலாச்சாரத்தில் தன் மகிழ்வைத் தேடிக்கொண்டிருக்கும் இன்றைய உலகில், கிறிஸ்து பிறப்பு விழாவை நாம் காத்திருந்து எவ்விதம் கொண்டாடப்போகின்றோம் என்பது ஏக்கம் நிறைந்த கேள்வி வருகையும், காத்திருத்தலும் நமது அன்றாட வாழ்வில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. வருகை மகிழ்ச்சியையும், காத்திருத்தல் நம்பிக்கையுடன் கூடிய சுகத்தையும் தருகிறது. நாம் பலவேளை பலரின் வருகைக்காக காத்திருந்தபோது  ஏமாற்றம்தான் எஞ்சியிருந்தது. ஆனால் இறைவாக்கினர்கள் வாயிலாக பேசிய இறைவன் இறுதியிலே மனித உரு நமக்காக நம்முடன் வாழ வருகின்றார்;. அவர் நம்மிடம் கேட்பது என்ன? அன்பு மட்டும்தான் அதைத் தர நமது மனம் ஏன் மறுக்கிறது? இறையன்பும், பிறரன்பும்தானே நாம் கடைபிடிக்க வேண்டிய கட்டளைகள். என்னை அன்பு செய் இறையன்பு, உன்னை அன்பு செய்வதுபோல் உன் அயலானையும் அன்பு செய் பிறரன்பு இவைதானே இயேசு நமக்கு கொடுத்த கட்டளைகள். இதனை கடைபிடிக்க நாம் தவறுவது ஏன்? காரணம் சுயநலம்.

கலாசாரமும், பண்பாடும் அழியும்போது, அட்டூழியம் எங்கும் மிளிரும்போது, அரசியலும், சினிமாவும்தான் வாழ்க்கை என்றாகும் போது, குடி, போதை, சீரியலுக்கு அடிமையாகும்போது, இன்னும் பல போதுக்களோடு நாம் வாழும்போது இயேசுவின் பிறப்பு நம்மிலே எப்படி சாத்தியமாகும்.

இருளிலும் இறப்பின் பிடியில் இருப்போருக்கு ஒளிதரவும் நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும், நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும், விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடி வருகிறது எனவே இயேசுவின் பிறப்பில் நாம் வாழ எம்மை சாத்தியாமாக்குவோம்

No comments:

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff