Tuesday, March 26, 2013

புனிதத்திற்கு புத்துயிரூட்ட கல்வாரிஊர்வலத்திற்கு புதிதாய் அன்பர்களை திரட்டுவோம்

24.03.2013'"
 ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்


இயேசு வெற்றியோடு எருசலேமில் நுழைந்ததை நினைவுகூரும் விதமாக இன்று நாம் குருத்தோலைப் பவனி ஞாயிறை கொண்டாடுகின்றோம். இந்தப் பவனி ஓர் ஆழமான ஆன்மீக அடையாளத்தைக் கொண்டுள்ளது, வாழும் கடவுளை நோக்கி இட்டுச் செல்லும் உன்னத பாதை வழியாக நாம் இயேசுவோடு சேர்ந்து பயணம் தொடர இது அழைக்கின்றது. நாம் வாழும் இக்காலத்தில் காலநிலை மாற்றத்தால் கடந்த வருடம்முதல் இன்றுவரை பல எதிர்பாராத விளைவுகளை நாம் கண்டுவருகின்றோம். இன்னும் சூறாவளி வரப்போகிறது என் கடந்த வருட இறுதியில் நாம் எச்சரிக்கை செய்யப்பட்டோம். இன்று நாம் குருத்து ஞாயிறு, சூறாவளி இரண்டையும் இணைத்து நோக்கினால் வரலாற்றில், முதல் குருத்துஞாயிறு நடந்த போது சூறாவளி ஒன்று எருசலேம் நகரைத் தாக்கியது. காற்று வடிவத்தில் வந்த சூறாவளி அல்ல, கடவுள் வடிவத்தில் வந்த சூறாவளி எனலாம். சூறாவளி என்ன செய்யும்? எல்லாவற்றையும் தலைகீழாகப் புரட்டிப் போடும். இதனடிப்படையில் பார்க்கும்போது, முதல் குருத்து ஞாயிறு நிகழ்வுகள் எல்லாவற்றையும் தலை கீழாக புரட்டிப் போட்டது.

இயேசு எருசலேமில் நுழைந்தபோது, மக்கள்; ஊர்வலம் ஒன்று தானாகவே ஏற்பட்டது. இன்று நடப்பதுபோல ஏற்பாடு செய்யப்பட்டதல்ல. அங்கு திருவிழா நாட்களில் எருசலேமில் இப்படி தானாகவே ஏற்படும் கூட்டங்கள், மதத் தலைவர்களுக்கும், உரோமைய அரசுக்கும் பலவித பயங்களை உருவாக்கியிருந்தன என்பதை நாம் பைபிளில் பார்கின்றோம். இயேசுவைச் சுற்றி எழுந்த இந்த ஊர்வலமும் அதிகாரவர்க்கத்தை அங்கு ஆட்டிப் படைத்திருக்க வேண்டும். இயேசு தன் பணிவாழ்வை ஆரம்பித்ததிலிருந்து, யூத மதத் தலைவர்களின் அதிகார வாழ்வு ஆட்டம் கண்டது. இந்தத் தலைகீழ் மாற்றங்களின் சிகரம் எருசலேம் நகரில் இயேசு ஊர்வலமாய் வந்தது. இதைத் தொடர்ந்து, அவர் அந்த மதகுருக்களின் அரணாக இருந்த எருசலேம் கோவிலில் நுழைந்து, அங்கிருந்த அமைப்பையும் தலைகீழாக்கினார். துரத்தினார். எனவே, இந்த குருத்து ஞாயிறு, அதிகார அமைப்புகளைப் பல வழிகளிலும் புரட்டிப் போட்ட ஒரு சூறாவளிதானே எனலாம்

இயேசு ஊர்வலத்தில் போய்க் கொண்டிருந்தபோது அங்கிருந்தவர்கள் தங்கள் மேலுடைகளை வழியில் விரித்துக் கொண்டே சென்றார்கள். அவர்கள் அனைவரும் தாங்கள் கண்ட எல்லா வல்ல செயல்களுக்காகவும் உரத்தக் குரலில் மகிழ்ச்சியோடு கடவுளைப் புகழத் தொடங்கினர்;: 'ஆண்டவர் பெயரால் அரசராய் வருகிறவர் போற்றப் பெறுக! விண்ணகத்தில் அமைதியும் மாட்சியும் உண்டாகுக!" என்றனர். அப்போது கூட்டத்தில் இருந்த பரிசேயர்களுள் சிலர் அவரை நோக்கி, 'போதகரே, உம் சீடர்களைக் கடிந்து கொள்ளும்" என்றனர். அதற்கு இயேசு மறுமொழியாக, 'இவர்கள் பேசாதிருந்தால் கற்களே கத்தும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார். இன்றும் உலகெங்கும் அரசர்களை காப்பற்ற ஊர்வலங்கள் நடக்கின்றன. மக்கள் எவ்வாறு திரட்டப்படுகின்றார்கள். அவர்களின் ஏழ்மையை எள்ளி நகையாடும் ஆதிக்கசக்தியின் திருவிளையாடல் என்பது இங்கு உண்மையாகின்றதல்லவா. இயேசு தனது பதிலில் உண்மையை உரைக்க கற்களே கத்தும் என்றார். ஆனால் இங்கு உண்மையை மறைக்க திரட்டப்படுவோர் வாழ்வதற்கான வழிகளுக்காக தம்மை கற்களாக்கியே செல்லுகின்றார்கள். அங்கு ஏந்தப்படும் பதாதைகள் இலக்கணப்பிழைகளை தாங்கி நிற்கும் ஒன்றே இவர்கள் தானாக திரளவில்லை உண்மையை மறைக்க திரட்டப்பட்டார்கள் என்ற உண்மையை புலப்படுத்தியதுடன் இது பொய்மையின் வெளிப்பாடு, அநீதியை காப்பாற்ற எடுக்கும் முயற்சி என்னும் உண்மையை எமக்கு சொல்லித்தருகின்றது. 

குருத்து ஞாயிறு நிகழ்வு அநீதிக்கெதிரான போராட்டமும் உண்மையைக் காக்க வேண்டுமென்ற விடாஉறுதியும் ஒன்றையொன்று பிரிக்க முடியாதவை. இவற்றில் ஒன்றைப் பிரித்து மற்றொன்றுக்காக யாராலும் உழைக்க முடியாது" என்பதே நமக்குச் சொல்லித் தருகிறது. அநீதிகளை எதிர்த்து உண்மையைக் காக்கப் போராடுகின்றவர்கள் இறந்தும் வாழ்கிறார்கள். இவர்களால்தான் இலட்சியங்களுக்கு இறப்பே இல்லாமல் இருக்கின்றது. பேராயராக ஒஸ்கார் ரொமெரோ தனது நாட்டில் நடந்த அரசபடைகளின் அநீதிகளை எதிர்த்த போது சூட்டு கொல்லப்படுகின்றார். இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் நாத்சி அடக்குமுறையால் பலர் மறைசாட்சிகளாகின்றனர் இன்றும் பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரோடு எரிக்கப்படுகின்றார்கள். துருக்கி, பங்களாதேஸ், இந்தியா எனப்பலநாடுகளில் கிறிஸ்தவர்கள் கொல்லப்படுகின்றனர்,இந்த மறைசாட்சிகளின் வீரத்துவமான வாழ்வுக்கு அடிப்படையாக இருப்பவர் இயேசு. இந்தப் புரட்சி வீரரின் போதனைகளும் செயல்பாடுகளுமே அவர்களுக்கு உள்ளூக்கம் தந்தன.

இன்றுடன் புனிதவாரம் தொடங்ககின்றது இந்த வாரத்தில் நடந்தவைகளில் புனிதம் எதுவும் வெளிப்படையாகக் தெரிகிறதா. நம்பிக்கைக்குரிய நண்பர் காட்டிக் கொடுத்தார். அன்புக்கரிய  அன்பர்  மறுதலித்தார். மற்ற நண்பர்கள் ஓடி ஒளிந்து கொண்டனர். மனசாட்சி விலை போனது. பொய்சாட்சிகள் சொல்லப்பட்டன. வழக்கு என்ற பெயரில் அரசியல் சதுரங்கம் விளையாடப்பட்டது. இயேசு நல்லவர், குற்றமற்றவர் என்று தெரிந்தும் தவறாகத் தீர்ப்பு சொல்லப்பட்டது. இங்கு புனிதம் எங்காவது தெரிந்ததா? புனிதம் என்பதற்கே வேறொரு இலக்கணம் எழுத வேண்டியுள்ளதே. எனவே , வேறொரு இலக்கணம்தான் எழுதப்பட்டது. கடவுள் என்ற மறையுண்மைக்கே மாற்று இலக்கணம் தந்தவர் இயேசு. கடவுள் துன்பப்படக் கூடியவர்தான். அதுவும் அன்புக்காக எந்த துன்பத்தையும், எவ்வளவு துன்பத்தையும் ஏற்பவரே நம் கடவுள் என்று கடவுளைப் பற்றி வித்தியாசமான ஓர் இலக்கணத்தை இயேசு அந்தச் சிலுவையில் சொன்னாரே, அதேபோல் இந்தப் புனிதவாரம் முழுவதும் இயேசுவின் வாழ்வில் நடந்த எல்லா நிகழ்வுகளும் புனிதத்தை இந்த பூமிக்குக் கொண்டு வந்தன. வெளிப்படையாகத் தெரியாத இந்தப் புனிதத்தை நாம் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். புனிதவாரம் கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கைப் பாடங்கள் பல உள்ளன. கற்றுக்கொள்ளச் செல்வோம் கல்வாரிக்கு.

No comments:

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff