Friday, April 26, 2013

அன்பு எப்படிப்பட்டது, ஏன் ஏற்பட்டது என்ற ஆராய்ச்சியில் இறங்காமல் அந்த அன்பு அனுபவிப்போம்.

28.04.2013 
 ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
இன்று நாம் பிறரின் பால் செலுத்தும் அன்பு வழியாக இறைவன் மாட்சிமை அடையவேண்டும் என்றும், அன்பிலிருந்தே பிறர் நம்மை இயேசுவின் சீடர்களாக அடையாளம் காண்பர் என்றும் கூறும் இறைமொழி கேட்கின்றோம். 'நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்" என்று இயேசு புதிய கட்டளை பற்றிப் பேசுகிறார். அனைத்து எதிர்நிலைச் சூழல்களையும் தடைகளையும் வாய்ப்புக்களாக மாற்றுவதே வரையறையற்ற அன்பின் சிறப்பாகும்.

'நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்" இறைமக்களை வழிநடத்தும் குருக்களிடம் முன் உதாரணமான சகோதரத்துவமும் அன்பும் விளங்க வேண்டும் என்று இரண்டாம் வத்திக்கான் சங்கம் கூறுகின்றது. ஒரு குருவானவர் வரையறையற்ற அன்பின் மகுடமாக வாழ்ந்து காட்டவோண்டும் என்று கூறப்படுகின்றது. அப்போதுதான்  இறைமக்கள் அதனை பின்பற்ற உதவியாக இருக்கும். எனவே இறைமக்கள் பிறரின் பால் செலுத்தும் அன்பு வழியாக இறைவன் மாட்சிமை அடைமுடியும் என்றும், அந்த அன்பிலிருந்தே பிறர் நம்மை இயேசுவின் சீடர்களாக அடையாளம் காண்பர் என்றும் கூறிவிடலாம். திருத்தந்தை இரண்டாம் ஜோன் பவுல் ஒருமுறை கூறும்போது. 'குருவினுடைய வாழ்வு இறைமக்களுக்காக அவருடைய திருச்சபைக்கும் ஆற்றும் சாட்சியத்துடன் கூடிய அன்புப் பணிநிறைந்ததாக இருக்கவேண்டும் " என்றார்.

எனவே இங்கு மக்களை அன்பு செய்து பணிபுரிந்து இயேசுவின் சீடர்களாக இனம் காணப்பட்ட குருக்களில் ஒரு சிலரது அன்பு வாழ்வை பற்றி இங்கு குறிப்பிடுவது சாலம் பொருத்தம்: இயேசு சபை அருள்தந்தை பேத்ரோ அருப்பே 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி முதல் அணுகுண்டு ஹிரோசிமாவை அழித்தபோது ஜப்பானில் பணி புரிந்தவர். 80000க்கும் அதிகமான உயிர்களைப் பலிகொண்ட அந்த கொடுமையின்போது, அந்த நகரின் புறநகர் பகுதியில் இருந்த இயேசு சபை நவதுறவியர் இல்லம் பெரும் சேதமின்றி தப்பித்தது. அந்த இல்லம் ஒரு மருத்துவ மனையாக மாறியது. அங்கிருந்த சிறு கோவிலும் காயப்பட்டவர்களால் நிரம்பி வழிந்தது. அணுகுண்டு வீசப்பட்டதற்கு அடுத்த நாள் அந்த இல்லத்தின் கோவிலில் அருள்தந்தை; பேத்ரோ அருப்பே திருப்பலி நிறைவேற்றினார். அந்தத் திருப்பலி நேரத்தில் அவர்அடைந்த வேதனை அனுபவத்தை இவ்விதம் கூறியுள்ளார்:'நான் திருப்பலி நிகழ்த்தியபோது, அங்கு காயப்பட்டுக் கிடந்தவர்களைப் பார்த்து 'ஆண்டவர் உங்களோடு இருப்பாராக" என்று சொல்ல கைகளை விரித்தேன். ஆனால், அங்கு நான் கண்ட காட்சி என்னை உறைய வைத்தது. எனக்கு முன் காயப்பட்டுக் கிடந்த அந்த மனுக்குலத்தை, அவர்களை அந்த நிலைக்கு உள்ளாக்கிய மனிதர்களின் அழிவுச் சிந்தனைகளை எண்ணியபோது, என் விரிந்த கைகள் அப்படியே நின்றுவிட்டன. அங்கு படுத்திருந்தவர்கள் என்னைப் பார்த்த அந்தப் பார்வை என் உள்ளத்தைத் துளைத்தது. எங்கிருந்தாகிலும் தங்களுக்கு ஆறுதல் வருமா, முக்கியமாக, இந்த பலிபீடத்திலிருந்து ஆறுதல் வருமா என்ற ஏக்கத்தை அவர்கள் பார்வையில் நான் படித்தேன். என் வாழ்வில் மறக்க முடியாத திருப்பலி அது" என்றார் அவர். அருள்தந்தை பேத்ரோ அருப்பே மருத்துவம் படித்தவர் என்பதால், ஹிரோசிமா தாக்குதலுக்குப்பின், நவதுறவியர் இல்லத்தில் மட்டுமல்ல, வெளியிலும் சென்று தன்னால் இயன்ற அளவு மருத்துவ உதவிகள் செய்துவந்தார்.
17ம் நூற்றாண்டில் கனடாவில் மனித உடலை, உடலின் பாகங்களை உண்ணும் பழக்கம் கொண்ட பழங்குடியினரிடையே பணி புரிந்து அவர்கள் மத்தியில் மறைசாட்சியாக உயிர்துறந்த பல இயேசு சபை குருக்களில் Isaac Jogues ஒருவர். இவர் தொடர்ந்து அன்பு செய்து பணிபுரிந்த அந்த மக்களால் சித்ரவதைகள் செய்யப்பட்டார். இந்தச் சித்ரவதைகளால் தன் கை விரல்களையெல்லாம் அவர் இழந்திருந்தார்.
இருபதாம் நூற்றாண்டில் சீனாவில் 21 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட பேராயர் Dominic Tang காற்று வசதி சிறிதும் இல்லாத ஒரு சிறு அறையில் ஐந்து ஆண்டுகள் தனித்து அடைக்கப்பட்டிருந்தார். பேராயர் தன் சிறு அறையை விட்டு ஒரு சில மணி நேரங்கள் வெளியே வர உத்தரவு கிடைத்தபோது சிறை அதிகாரிகள் அவரிடம், 'இந்த சில மணி நேரங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள்?" என்று கேட்டபோது, பேராயர் Dominic Tang அன்புக்கு இலக்கணம் சொல்லிதந்த இயேசுவின் பெயரால் திருப்பலி நிகழ்த்த விரும்புகிறேன் என கூறினாராம்.
வியட்நாமில் சிறைபடுத்தப்பட்டு கடின உழைப்பு முகாமில் ஒன்பது ஆண்டுகள் வைக்கப்பட்டிருந்தார் இயேசு சபை குரு Joseph Nguyen-Cong Doan. அந்த முகாமில், அவரோடு சிறைப்படுத்தப்பட்டிருந்த மற்றொரு குரு சிறை அதிகாரிகளுக்குத் தெரியாமல் கொண்டு வந்திருந்த அப்பம் இரசம் இவைகளை இயேசு சபை குருவுடன் பகிர்ந்து கொண்டார். இரவில் மற்றவர்கள் படுத்து உறங்கியபின், துழளநிh தன் நெஞ்சை ஒரு பீடமாக பயன்படுத்தி, தன் சிறை உடுப்புக்களை தன் பூசை உடுப்புக்களாகக் கருதி அவர் ஆனந்த கண்ணீர் பொங்க அன்பே உருவான இயேசுவின் பெயரால் ஆற்றிய அந்தத் திருப்பளிகளைப்ப் பற்றி பின்னர் மற்றவர்களுக்குச் சொன்னார்.

இயேசுவின் அன்பு இப்படி பல கோடி மக்களின் மனதில் நம்பிக்கையை, வீரத்தை, தியாகத்தை, விதைத்துள்ளது. ஒருவரது அன்பு வெளிப்படும்போது, அதை அனுபவிப்பதே மேல். அதற்குப் பதிலாக, அந்த அன்பு எப்படிப்பட்டது, ஏன் ஏற்பட்டது என்ற ஆராய்ச்சிகளில் இறங்கினால், அங்கு அன்பு காணாமல் போகும் வாய்ப்புக்கள் அதிகம் உண்டு. அன்பு மனித குலத்தின் உயிர்நாடி. மனித குலம் இன்னும் உயிர் வாழ்வதே அன்புடையவர்கள் இருப்பதால் தான். இந்த அன்பைக் கொடுக்கவும், பெறவும் விரும்புவதே மனித இயல்பு. இந்தப் பரிமாற்றம் நம்மிலும் நிகழவேண்டும். இயேசுவின் அன்பு கரை காணாதது. அனைவரையும் அரவணைக்கக் கூடியது. அவருடைய நிறை அன்புக்கு நாம் சாட்சிகளாக வாழவேண்டுமென்றே விரும்புகிறார். இயேசுவின் அன்பு வாழ்வு நம்மில் பிரதிபலிக்கிறதா? தீர்மானங்களுடன் எம்மை திரும்பிப்பார்த்து முன்நகர்வோம்


Friday, April 19, 2013

தன்னைப் பின் தொடர்பவர்களின் துன்பங்களிலும் தன்னை இணைத்துக் கொள்பவரே தலைவர்

21.04.2013
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
 
ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. நான் அவற்றிற்கு நிலைவாழ்வை அளிக்கிறேன். அவை என்றுமே அழியா. அவற்றை எனது கையிலிருந்து யாரும் பறித்துக்கொள்ள மாட்டார். என இயேசு கூறும் பைபிள் பகுதி இன்று எமக்குத் தரப்படுகின்றது. இங்கு ஆயன் ஆடுகள் கதை தெளிவாகின்றது. இயேசு தனது மந்தைய சேர்ந்த ஆடுகளுக்கும்  பிற ஆடுகளுக்கும் உள்ள வேறுபாட்டை விளக்குகின்றார். அவரது ஆடுகள் அவரது குரலை அடையாளம் கண்டுகொள்ளுகின்றன. அவரது குரலுக்கு செவிகொடுக்கின்றன. அவரை பின்தொடர்கின்றன. இப்போது ஆடுகள் யார் ஆயான் யார் என்ற கேள்வி எமக்குள் எழலாம்.

இறைவனை ஆயனாக, பராமரிப்பவராக, வழிநடத்துபவராக முற்காலத்திலிருந்தே மனித இனம் அழைத்து மகிழ்ந்துவருகின்றது. எனவே இறைமக்கள் தான் இங்கு ஆடுகளாகச் சித்தரிக்கப்படுகின்றனர். அவர்கள்; ஆண்டவரே என் ஆயர் என்று  அழைக்க இயேசு நானே நல்லாயன்  என்றும் ஆடுகளுக்கு வாயில் நானே. என் வழியாய் நுழைபவர்களுக்கு ஆபத்தில்லை என்றும் கூறுகின்றார்.  ஆடுகளுக்காக ஓர் ஆயனின் பணிகள் இயேசு வாழ்ந்த காலத்தில் பல: பராமரித்தல், பாதுகாத்தல், உணவளித்தல், தாகம் தணித்தல், குணமாக்கல், வழிநடத்தல், தன் உயிரையேத் தருவது. நல்ல ஆயன் நானே. இறைதந்தை என்னை அறிந்திருக்கிறார்; நானும் அவரை அறிந்திருக்கிறேன். அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன் என்ற இயேசு, தம்புவதற்கு வழிஇருந்தபோதும் ஆடுகளாகிய எமக்காக சித்திரவதையால் சிலுவையில் கொலைசெய்யப்படதன் மூலம் வாழ்க்கை பாடம் கற்பித்தவர்.

எந்த ஒரு சூழலிலும் தன்னைப்பற்றி சிந்திக்காமல், மற்றவர்களையே எண்ணி வாழ்வதைப்போன்ற ஓர் உயர்வான வாழ்வு உலகில் இல்லை. ஆபத்து, துன்பம் என்று வரும்போது தன்னைக்குறித்து ஒருவர் கவலைகொள்வதும், தன்னைக் காத்துக்கொள்ள முயல்வதும் வெகு சாதாரண மனித இயல்பு. அந்த இக்கட்டானச் சூழல்களிலும் தன்னைப்பற்றிய கவலை இல்லாமல், அடுத்தவரைப்பற்றி கவலைப்படும் மனம், மலைபோல் உயர்ந்த மனம். மனித வரலாற்றில் தங்களையே மறந்து, பிறருக்காக வாழ்ந்த பலரைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம்: 1912ம் ஏப்ரல் 15 டைட்டானிக் கப்பல் விபத்திற்குள்ளாகி மூழ்கியது நாமறிந்ததே. ஆயினும், இந்த விபத்தின்போது வெளிப்பட்ட ஒரு சில தியாகச் செயல்கள் நாம்மில் பலருந்கு தெரியாமலிருக்கலாம். அவற்றில் ஒன்று வுhழஅயள டீலடநளஇ துரழணயள ஆழவெஎடையஇ டீநநெனமைவ Pநசரளஉhவைணஇ என்ற மூன்று கத்தோலிக்க குருக்களைப் பற்றியது. கப்பல் மூழ்கிக்கொண்டிருந்தபோது, இம்மூன்று குருக்களுக்கும் உயிர்காக்கும் படகுகளில் தப்பித்துச்செல்ல அனுமதி வழங்கப்பட்டது. தங்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்புக்களை மறுத்துவிட்டு, மரணத்தை எதிர்கொண்டிருந்த மக்களுக்கு ஒப்புரவு அருட்சாதனம் வழங்கியபடி, அம்மக்களுடன் இணைந்து செபித்தபடி அவர்களும் கடலில் மூழ்கி இறந்தனர் என்று சொல்லப்படுகிறது. இந்த விபத்தில் இவர்கள் பெயர்கள் பெரிதாகப் பேசப்படவில்லை. தன்னைப் பின் தொடர்பவர்களின் இன்ப, துன்பங்களில். தன்னையே இணைத்துக் கொள்பவரே உண்மைத் தலைவர்.
 
மாவீரன் அலெக்சாண்டர் தன் படையுடன் மக்ரான் என்ற பாலைநிலத்தை ஒருமுறை கடக்க வேண்டியிருந்தது. கொளுத்தும் வெயிலும், எரிக்கும் மணலும் வீரர்களின் உயிரைக் குடிக்கும் தீயாய் மாறின. அலெக்சாண்டரும் தாகத்தால் துடித்தார். அவர் தாகத்தைத் தணிக்க, இரு தளபதிகள் நீண்டதூரம் நடந்து, சிறிது தண்ணீர் கொண்டுவந்தனர். அவர்களிடம், வீரர்களுக்கும் தண்ணீர் கிடைக்க வழி உண்டா?" என்று கேட்க, அவர்கள், இல்லை மன்னா. உங்கள் ஒருவருக்கு மட்டுமே தண்ணீர் கிடைத்தது என்று சொன்னார்கள். என் வீரர்களுக்குத் தண்ணீர் இல்லாதபோது, எனக்கும் தண்ணீர் தேவையில்லை என்று நீரை மணலில் ஊற்றினாராம். துன்பம் என்று வந்தால், தங்களுடன் தலைவனும் சேர்ந்து துன்புறுவார் என்பதை உணர்ந்த வீரர்கள், தங்கள் தலைவனைப் பெருமையுடன் எண்ணி ஆர்ப்பரித்தனர். நல்லாயன் ஞாயிறென்று என்று அழைக்கப்படும் இந்த ஞாயிறில் நாம் இன்றையத் தலைவர்களைப பற்றி எண்ணிப் பார்க்கவும், வருங்காலத் தலைவர்களுக்காகச் செபிக்கவும் கடமைப்பட்டிருக்கின்றோம்.
 
இயேசுவை மட்டும் நம்பி அவர் கையில் எம்மை ஒப்படைத்து வாழ்ந்தால் இயேசுவும் நமக்கு  நல்ல ஆயனுக்கரிய பணிகளை நமக்குச் செய்வார். நாங்கள் யாருடைய கையில் இருக்கின்றோம், யாருடைய கையைப் பிடித்திருக்கின்றோம், யார் எங்கள் கையைப் பிடித்திருக்கின்றார் என்பதைப் பொறுத்துத்தான் எங்கள் வாழ்க்கைக்கு  நல்லவைகளும் அல்லது கெட்டவைகளும் வந்துசேரும். அன்பின் உச்சிக்கே சென்று தாமே அன்பாகி, நம்மேல் அளவு கடந்த அன்பைப் பொழியும் அன்பாம் ஆயனுக்கு அவருடைய அழைப்புக்கு அவருடைய படிப்பினைகள் மதிப்பீடுகளுக்கு, அவருடைய கட்டளைகளுக்கு நாம் செவிமடுக்கிறோமா?. என் ஆடுகள் என் குரலுக்குச் செவிசாய்க்கும் என்பார் இயேசு. நாம் இயேசுவால் என் ஆடுகள் என்று அழைக்கப்படும் நிலையில் உள்ளோமா? நம்முடைய வாழ்வைக் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்.

Friday, April 12, 2013

இயேசுவின் ஆசீரையும் ஆலோசனையையும் அதிகமாகத் தேடுவோம்

14.04.2013
 ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

 
இன்று நமக்குத் தரப்படும் வேதாகமப்பகுதியின் படி உயிர்த்த இயேசு தம் சீடரிடம் காட்டும் பாசமும், பரிவும் நமக்கு ஒரு பாடத்தை சொல்லித்தருகின்றன. சீடர்கள்  தம்மைக் கைவிட்டு ஓடிவிட்டதையோ, தமது உயிர்ப்பை நம்ப மறுத்ததையோ, தங்களின் பழைய வாழ்க்கைக்கே மீண்டும் திரும்ப முடிவு செய்ததையோ இயேசு பொருட்படுத்தவில்லை. மாறாக, தந்தை தம் பிள்ளைகள்மேல் பரிவு காட்டுவதுபோல, இயேசு தம் சீடர்களுக்குப் பரிவு காட்டுகிறார். அவர்களுக்கு மீன்பாடு கிடைக்கவில்லை என்பதை அவர்களிடம் விசாரித்து அறிந்த பின்பு 'படகின் வலப்பக்கத்தில் வலை வீசுங்கள்; மீன் கிடைக்கும்" என்று ஆசீரும் ஆலோசனையும் கொடுக்கிறார். வலையை இழுக்க முடியாத அளவு நிறைய மீன்கள் கிடைத்துள்ளன.  பெரும் மீன்பாடு கிடைத்ததால் களைப்போடும், பசியோடும் அவர்கள் கரைக்கு வரும்போது, அவர்களுக்கு உணவு தயாரித்து உணவருந்த வாருங்கள் என்று அழைக்கும்போதும், உயிர்த்த இயேசுவின் பரிவை நாம் கண்கூடாகக் காண முடிகிறது.
படகின் வலப்பக்கத்தில் வலைவீசுங்கள்; மீன் கிடைக்கும் இயேசு சொன்னபோது அவர் கூறியதில் அவர்கள் நம்பிக்கை கொண்டு அவ்வாறே செய்கிறார்கள். இயேசுவை நாம் காண வேண்டும் என்றால் நமக்கு நம்பிக்கை தேவை. சாதாரண மனிதராக இயேசுவை நாம் பார்த்தால் அவருடைய போதனைகளும் சாதனைகளும் நம்மைக் கவர்ந்தாலும் கூட அவர் கடவுளின் மகனாக நம்மிடையே வந்து நமக்காகத் துன்புற்று இறந்து நமக்கு இறைவாழ்வில் பங்களித்துள்ளார் என்னும் உண்மையைக் கண்டுகொள்ள நாம் தவறிவிடுவோம். நாளெல்லாம் உழைத்து, இன்னல்களுக்கு நடுவிலேயும் வெற்றி காண இயலாமல் நாம் தவிக்கின்ற தருணங்கள் உண்டு. எவ்வளவுதான் முயன்றாலும் நம்மால் சாதிக்க இயலாத காரியங்களும் உண்டு. அவ்வேளைகளில் நாம் இயேசுவின் குரலுக்குச் செவிமடுக்க வேண்டும். நாம் அவருடைய குரலைக் கேட்டு அதன்படி செயல்பட்டால் வெற்றி நமதாகும்.

விசுவாசம், அல்லது நம்பிக்கை என்பது முழுமையான அர்ப்பணமாகும். இதயத்தை இறைவனுக்கு அர்ச்சனை செய்பவர்தான் உண்மையான விசுவாசி. முழுமையான அர்ப்பணத்தோடு நாம் வாழ்வை ஒழுங்குபடுத்த வேண்டும். உண்மையான விசுவாசியின் வாழ்க்கை, கடல் நடுவே கம்பீரமாக நிற்கும்  பாறையைப் போன்றது. அலைகளால் அதை எதுவும் செய்யமுடியாது. வாழ்க்கையில் பிரச்னைகள் தோன்றினாலும் விசுவாசியின் விசுவாசம் குன்றி விடாது. அதனால்தான் ஆண்டவர், 'உன் முழு இதயத்தோடும் முழு  உள்ளத்தோடும் முழு ஆற்றலோடும் முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக" எனக்  எமக்கு கற்பித்தார்.

இயேசு, சீமோன் பேதுருவிடம், 'யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களைவிட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா? " 'யோவானின் மகன் சீமோனே, நீ என்மீது அன்பு செலுத்துகிறாயா?" 'யோவானின் மகன் சீமோனே, உனக்கு என்னிடம் அன்பு உண்டா? " என்று கேட்கின்றார்;.

உனக்கு என்னிடம்  அன்பு உண்டா? என்று இயேசு மூன்றாம் முறை கேட்டதால் பேதுரு துயருற்று, அவரிடம், 'ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம் மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா? " என்றார். தன் நிலையை உணர்ந்து. தான் எம்படிப்பட்டவர் என்று பதிலிறுக்கின்றார்.  இயேசு அவரிடம், 'என் ஆடுகளைப் பேணி வளர் " என்று சரியான பாதையை அவருக்குக் காட்டுகின்றார். இயேசு சொன்ன வார்த்தையை நம்பி எதிர்ப்பு, போராட்டம் குழப்பம் சவால்கள் மத்தியிலும் இயேசுவின் ஆடுகளாயிய எம்மை பேணி வளர்த்தார் பேதுது.

நம்முடைய வாழ்வில் உண்மையான இயல்பு எப்போது அதிகம் வெளிப்படுகின்றது? எதிர்ப்பு, குழப்பம், போராட்டம் இவை பெருகும்போது நமது உண்மை இயல்பு வெளிப்படும். வாழ்க்கை மிகச் சீராக, சுமுகமாகச் செல்லும்போது, நாம் எதை நம்புகிறோம், எதை நம்புவதில்லை, எது நமது வாழ்வின் அடிப்படை என்ற கேள்விகளெல்லாம் எழாது. ஆனால், போராட்டங்களில், சங்கடங்களில் நாம் சிக்கிக் கொள்ளும்போது, நமது நிலைப்பாடு என்ன, நாம் எப்படிப்பட்டவர்கள் என்பதெல்லாம் முதலில் நமக்குத் தெரிய வரும், பின்னர் இவை பிறருக்கும் தெரிய வரும். வாழ்வுப் பாதைகளை, பயணங்களைத் தீர்மானிக்கும் நேரம் பல மாற்றங்களை சந்திக்கும் சூழல்கள் உருவாகும். பல்வேறு பாதைகள் குறுக்கும் நெடுக்குமாக நம் வாழ்வில் தெரியும்போது, அவரை நம்பினால் இறைவன் சரியான வழியை, சரியான திசையை நமக்குக் காட்ட தயாரக இருக்கின்றார். தெளிவில்லாத, அரை குறையான வாழ்வினால் நாம் இழப்பது அதிகம். இருளுக்குப் பழகிப் போன கண்களுக்கு ஒளி உறுத்தலாக இருக்கும். வாழ்க்கையில் நல்லவர்கள்கூடப் பல சமயங்களில் தோற்றுப்போய் விடுகிறார்கள். ஆனால், நம்பிக்கை உடையவர்கள் என்றைக்கும் தோற்பதில்லை. நாம் வேறெதிலும் நம்பிக்கை வைப்பதை விட பெரிதும் இயேசுவின் ஆசீரையும் ஆலோசனையையும் அதிகமாகத் தேடுவோம். அவரது உதவியைக் நம்புவோம். இழப்பு இருக்காது. எல்லாம் நிறைவாக நிறைந்து இருக்கும். உயிர்த்த இயேசுவின் பாசத்தை நாமும் அனுபவிப்போம்.

Monday, April 1, 2013

அற்புதங்களை ஆற்றும் இறை இரக்கத்தை நம்ப சந்தேகக் கல்லறைகளிலிருந்து உயிர் பெற்றெழுவோம்.

07.04.2013 
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

உயிர்ப்பு விழாவுக்கு அடுத்து வரும் ஞாயிறை இறை இரக்க ஞாயிறு என்று கத்தோலிக்கர்  அழைப்பர். இரண்டாம் ஜான்பால் திருத்தந்தையாக இருந்தபோது 2000ஆம்  ஆண்டு உயிர்ப்பு விழாவுக்கு அடுத்துவரும் ஞாயிறை இறை இரக்க ஞாயிறு என்று உருவாக்கினார். இறைவனின் இரக்கம், கருணை இவற்றை வாழ்வின் பல சூழல்களில் பல நிலைகளில் நாம் உணர்ந்திருக்கிறோம். சிறப்பாக, நம் வாழ்வில் ஏற்படும் பல்வேறு சந்தேகப் புயல்களை இறைவன் அடக்கி, மனதில் அமைதியை உருவாக்கும் நேரத்தில் இந்த இறை இரக்கத்தின் சிகரத்தை நாம் தொட்டிருக்கிறோம். சந்தேகமும் அச்சமும் நம் வாழ்வைச் சூழ்ந்தாலும், இறை இரக்கத்தை நம்பி வாழ்ந்தால், உன்னத நிலையை அடையமுடியும் என்பதற்கு வரலாறு பல நிகழ்வுகளை நமக்குக் காட்டுகின்றது. 

இதற்கு நேர்மாறாக,தங்களைத் தாங்களே இயக்கிக்கொள்ள முடியும், இறைவனோ, வேறு எந்த சக்தியோ தங்களை எதுவும் செய்துவிட முடியாது என்று ஆரம்பித்த எந்த நிகழ்வும் துயரத்தின் ஆழத்தில் புதைந்து விடுகிறது என வரலாறு நமக்குக் காட்டுகின்றது. இதற்கு ஒரு நிகழ்வை இங்கு குறித்துக்காட்டுவது நன்று. இது நடந்தது 101 ஆண்டுகளுக்கு முன்.

1912ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ம் திகதி நள்ளிரவில் அட்லாண்டிக் கடலில் மிதந்து சென்ற பனிப்பாறையும் மூன்று ஆண்டுகளாக மனிதர்கள் உருவாக்கிய செயற்கையான 'டைட்டானிக் கப்பலும்" மோதிக் கொண்டன. 'டைட்டானிக்" தனது கன்னிப் பயணத்திற்காக கிளம்பியபோது, 'கடவுளே நினைத்தாலும் இந்தக் கப்பலை மூழ்கடிக்க முடியாது" என்று பெருமையுடன், இறுமாப்புடன் கிளம்பிய. அந்தக் கப்பல் 5ஆம்நாள் நள்ளிரவு பனிப்பாறையில் மோதியது. ஏப்ரல் 15ம் தேதி அதிகாலை இரண்டு மணியளவில் அந்தக் கப்பல் இரண்டாகப் பிளந்து, நடுக்கடலில் மூழ்கியது. அந்தக் கப்பலில் பயணம் செய்த 2223 பேரில் 1517 பேர் அந்த இருளில், குளிரில், கடலில் உயிர் துறந்தனர். உலகிலேயே நகர்ந்து செல்லக்கூடிய மிகப்பெரிய அரண்மனை என்றெல்லாம் பறைசாற்றப்பட்ட இந்தக் கப்பல் தனது முதல் பயணத்திலேயே சமாதியானது. எதுவும், எவ்வகையிலும் தங்களைத் தீண்ட முடியாது என்ற இறுமாப்பு ஏற்பட்டால், வாழ்வில் என்ன நிகழக்கூடும் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றதே இச்சம்பவம். கப்பலை உருவாக்கியவர்கள், அதனை இயக்கியவர்கள் எல்லாருக்கும் அந்த கப்பலின் சக்தி மீது அளவுக்கு மீறிய,ஆபத்தான நம்பிக்கை இருந்தது. இதைத்தான் நாம் இங்கு சிந்திக்க வேண்டும்.

வாழ்வில் நம்பிக்கை தேவைதான். நம்பிக்கையற்ற வாழ்வு நடுக்கடலில் தத்தளிக்கும் படகுபோல் இருக்கும் என்பார்கள் பலர். ஆனால், எதன்மேல் நம்பிக்கை கொள்வது, எவ்வகையான நம்பிக்கை கொள்வது என்பதையும் நாம் தீர ஆராய வேண்டும். நம்பிக்கையை வளர்க்கும் இந்தக்காலத்தில்  நம்பிக்கை இழந்து நடுக்கடலில், சந்தேகப்புயலில் தத்தளித்த சீடர்களைப் பற்றிய ஒரு நிகழ்வு இன்று நமது நற்செய்தியாகிறது. சந்தேகத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாக இயேசுவின் சீடர்களில்; ஒருவரான தோமா சுட்டிக்காட்டப் படுகிறார். தோமா 'இயேசுவின் கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்" என்று சந்தேகத்தை வெளிக்காட்டுகின்றார். கல்வாரியில் இயேசு இறந்ததை நேரடியாகப் பார்த்திருந்தால், அந்த கல்வாரி பயங்கரத்திற்குப் பின் ஒன்றுமே இல்லை என்ற முடிவுக்கும் நாமும் வந்திருப்போம். இயேசுவிடம் கேட்கமுடியாமல், மனதுக்குள் மற்ற சீடர்கள் புதைத்து வைத்திருந்த சந்தேகத்தைத்தான் தோமா வாய்விட்டுச் கேட்டார். எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவை நம்பி மூன்றாண்டுகள் வாழ்ந்தவர்கள் இந்தச் சீடர்கள். அந்த மூன்று ஆண்டுகளில், இயேசுதான் அவர்களது உலகம் என்று ஆகிப் போன நேரத்தில், அந்த உலகம் ஆணி வேரோடு பறிக்கப்பட்டு, சிலுவையில் தொங்கவிடப்பட்டது. இயேசுவின் மரணம் அவர்கள் வாழ்வில் விட்டுச்சென்ற அந்த வெற்றிடத்தை, சந்தேகமும், பயமும் நிரப்பிவிட்டன. இதுவரை அவர்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த நம்பிக்கை தொலைந்து போனது.
 
கருணையே வடிவான இயேசு, சீடர்களின் சந்தேகங்களுக்கு, தோமாவின் சந்தேகங்களுக்கு கூறிய பதில் இதுதான்: 'இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள்" 'நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்" என்றார். இந்த அழைப்பின் மூலம் தோமாவின் மனதை இயேசு மிக ஆழமாகத் தொட்டார். எனவே அந்த மிக ஆழமான மறையுண்மையை தோமா கூறினார். 'நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!" இயேசுவைக் கடவுள் என்று கூறிய முதல் மனிதப் பிறவி தோமாதான். ஆவநம்பிக்கையை நீக்கி நம்பிக்கை கொண்ட தோமா இறுதிவரைக்கும் இயேசுவில் நம்பிக்கையுடன் வாழ்ந்து இறந்தார் புனிதரானார். அறிவுத்திறனுக்கு எட்டாத இறைவனை நம்பும்போது, இறைவனின் இரக்கத்தை நம்பும்போது, நம் வாழ்வில் உருவாகும் சந்தேகப் புயல்கள் தானாகவே அடங்கும்; சந்தேகத்தில் புதையுண்ட நாம், கல்லறைகளிலிருந்து உயிர் பெறுவோம். இந்த அற்புதங்களை ஆற்றும் இறை இரக்கத்தை நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் உணர, இயேசுவை என் கடவுள் என் ஆண்டவர் என ஏற்றுக்கொள்வோம்.

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff