Friday, April 12, 2013

இயேசுவின் ஆசீரையும் ஆலோசனையையும் அதிகமாகத் தேடுவோம்

14.04.2013
 ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

 
இன்று நமக்குத் தரப்படும் வேதாகமப்பகுதியின் படி உயிர்த்த இயேசு தம் சீடரிடம் காட்டும் பாசமும், பரிவும் நமக்கு ஒரு பாடத்தை சொல்லித்தருகின்றன. சீடர்கள்  தம்மைக் கைவிட்டு ஓடிவிட்டதையோ, தமது உயிர்ப்பை நம்ப மறுத்ததையோ, தங்களின் பழைய வாழ்க்கைக்கே மீண்டும் திரும்ப முடிவு செய்ததையோ இயேசு பொருட்படுத்தவில்லை. மாறாக, தந்தை தம் பிள்ளைகள்மேல் பரிவு காட்டுவதுபோல, இயேசு தம் சீடர்களுக்குப் பரிவு காட்டுகிறார். அவர்களுக்கு மீன்பாடு கிடைக்கவில்லை என்பதை அவர்களிடம் விசாரித்து அறிந்த பின்பு 'படகின் வலப்பக்கத்தில் வலை வீசுங்கள்; மீன் கிடைக்கும்" என்று ஆசீரும் ஆலோசனையும் கொடுக்கிறார். வலையை இழுக்க முடியாத அளவு நிறைய மீன்கள் கிடைத்துள்ளன.  பெரும் மீன்பாடு கிடைத்ததால் களைப்போடும், பசியோடும் அவர்கள் கரைக்கு வரும்போது, அவர்களுக்கு உணவு தயாரித்து உணவருந்த வாருங்கள் என்று அழைக்கும்போதும், உயிர்த்த இயேசுவின் பரிவை நாம் கண்கூடாகக் காண முடிகிறது.
படகின் வலப்பக்கத்தில் வலைவீசுங்கள்; மீன் கிடைக்கும் இயேசு சொன்னபோது அவர் கூறியதில் அவர்கள் நம்பிக்கை கொண்டு அவ்வாறே செய்கிறார்கள். இயேசுவை நாம் காண வேண்டும் என்றால் நமக்கு நம்பிக்கை தேவை. சாதாரண மனிதராக இயேசுவை நாம் பார்த்தால் அவருடைய போதனைகளும் சாதனைகளும் நம்மைக் கவர்ந்தாலும் கூட அவர் கடவுளின் மகனாக நம்மிடையே வந்து நமக்காகத் துன்புற்று இறந்து நமக்கு இறைவாழ்வில் பங்களித்துள்ளார் என்னும் உண்மையைக் கண்டுகொள்ள நாம் தவறிவிடுவோம். நாளெல்லாம் உழைத்து, இன்னல்களுக்கு நடுவிலேயும் வெற்றி காண இயலாமல் நாம் தவிக்கின்ற தருணங்கள் உண்டு. எவ்வளவுதான் முயன்றாலும் நம்மால் சாதிக்க இயலாத காரியங்களும் உண்டு. அவ்வேளைகளில் நாம் இயேசுவின் குரலுக்குச் செவிமடுக்க வேண்டும். நாம் அவருடைய குரலைக் கேட்டு அதன்படி செயல்பட்டால் வெற்றி நமதாகும்.

விசுவாசம், அல்லது நம்பிக்கை என்பது முழுமையான அர்ப்பணமாகும். இதயத்தை இறைவனுக்கு அர்ச்சனை செய்பவர்தான் உண்மையான விசுவாசி. முழுமையான அர்ப்பணத்தோடு நாம் வாழ்வை ஒழுங்குபடுத்த வேண்டும். உண்மையான விசுவாசியின் வாழ்க்கை, கடல் நடுவே கம்பீரமாக நிற்கும்  பாறையைப் போன்றது. அலைகளால் அதை எதுவும் செய்யமுடியாது. வாழ்க்கையில் பிரச்னைகள் தோன்றினாலும் விசுவாசியின் விசுவாசம் குன்றி விடாது. அதனால்தான் ஆண்டவர், 'உன் முழு இதயத்தோடும் முழு  உள்ளத்தோடும் முழு ஆற்றலோடும் முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக" எனக்  எமக்கு கற்பித்தார்.

இயேசு, சீமோன் பேதுருவிடம், 'யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களைவிட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா? " 'யோவானின் மகன் சீமோனே, நீ என்மீது அன்பு செலுத்துகிறாயா?" 'யோவானின் மகன் சீமோனே, உனக்கு என்னிடம் அன்பு உண்டா? " என்று கேட்கின்றார்;.

உனக்கு என்னிடம்  அன்பு உண்டா? என்று இயேசு மூன்றாம் முறை கேட்டதால் பேதுரு துயருற்று, அவரிடம், 'ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம் மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா? " என்றார். தன் நிலையை உணர்ந்து. தான் எம்படிப்பட்டவர் என்று பதிலிறுக்கின்றார்.  இயேசு அவரிடம், 'என் ஆடுகளைப் பேணி வளர் " என்று சரியான பாதையை அவருக்குக் காட்டுகின்றார். இயேசு சொன்ன வார்த்தையை நம்பி எதிர்ப்பு, போராட்டம் குழப்பம் சவால்கள் மத்தியிலும் இயேசுவின் ஆடுகளாயிய எம்மை பேணி வளர்த்தார் பேதுது.

நம்முடைய வாழ்வில் உண்மையான இயல்பு எப்போது அதிகம் வெளிப்படுகின்றது? எதிர்ப்பு, குழப்பம், போராட்டம் இவை பெருகும்போது நமது உண்மை இயல்பு வெளிப்படும். வாழ்க்கை மிகச் சீராக, சுமுகமாகச் செல்லும்போது, நாம் எதை நம்புகிறோம், எதை நம்புவதில்லை, எது நமது வாழ்வின் அடிப்படை என்ற கேள்விகளெல்லாம் எழாது. ஆனால், போராட்டங்களில், சங்கடங்களில் நாம் சிக்கிக் கொள்ளும்போது, நமது நிலைப்பாடு என்ன, நாம் எப்படிப்பட்டவர்கள் என்பதெல்லாம் முதலில் நமக்குத் தெரிய வரும், பின்னர் இவை பிறருக்கும் தெரிய வரும். வாழ்வுப் பாதைகளை, பயணங்களைத் தீர்மானிக்கும் நேரம் பல மாற்றங்களை சந்திக்கும் சூழல்கள் உருவாகும். பல்வேறு பாதைகள் குறுக்கும் நெடுக்குமாக நம் வாழ்வில் தெரியும்போது, அவரை நம்பினால் இறைவன் சரியான வழியை, சரியான திசையை நமக்குக் காட்ட தயாரக இருக்கின்றார். தெளிவில்லாத, அரை குறையான வாழ்வினால் நாம் இழப்பது அதிகம். இருளுக்குப் பழகிப் போன கண்களுக்கு ஒளி உறுத்தலாக இருக்கும். வாழ்க்கையில் நல்லவர்கள்கூடப் பல சமயங்களில் தோற்றுப்போய் விடுகிறார்கள். ஆனால், நம்பிக்கை உடையவர்கள் என்றைக்கும் தோற்பதில்லை. நாம் வேறெதிலும் நம்பிக்கை வைப்பதை விட பெரிதும் இயேசுவின் ஆசீரையும் ஆலோசனையையும் அதிகமாகத் தேடுவோம். அவரது உதவியைக் நம்புவோம். இழப்பு இருக்காது. எல்லாம் நிறைவாக நிறைந்து இருக்கும். உயிர்த்த இயேசுவின் பாசத்தை நாமும் அனுபவிப்போம்.

No comments:

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff