Monday, April 1, 2013

அற்புதங்களை ஆற்றும் இறை இரக்கத்தை நம்ப சந்தேகக் கல்லறைகளிலிருந்து உயிர் பெற்றெழுவோம்.

07.04.2013 
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

உயிர்ப்பு விழாவுக்கு அடுத்து வரும் ஞாயிறை இறை இரக்க ஞாயிறு என்று கத்தோலிக்கர்  அழைப்பர். இரண்டாம் ஜான்பால் திருத்தந்தையாக இருந்தபோது 2000ஆம்  ஆண்டு உயிர்ப்பு விழாவுக்கு அடுத்துவரும் ஞாயிறை இறை இரக்க ஞாயிறு என்று உருவாக்கினார். இறைவனின் இரக்கம், கருணை இவற்றை வாழ்வின் பல சூழல்களில் பல நிலைகளில் நாம் உணர்ந்திருக்கிறோம். சிறப்பாக, நம் வாழ்வில் ஏற்படும் பல்வேறு சந்தேகப் புயல்களை இறைவன் அடக்கி, மனதில் அமைதியை உருவாக்கும் நேரத்தில் இந்த இறை இரக்கத்தின் சிகரத்தை நாம் தொட்டிருக்கிறோம். சந்தேகமும் அச்சமும் நம் வாழ்வைச் சூழ்ந்தாலும், இறை இரக்கத்தை நம்பி வாழ்ந்தால், உன்னத நிலையை அடையமுடியும் என்பதற்கு வரலாறு பல நிகழ்வுகளை நமக்குக் காட்டுகின்றது. 

இதற்கு நேர்மாறாக,தங்களைத் தாங்களே இயக்கிக்கொள்ள முடியும், இறைவனோ, வேறு எந்த சக்தியோ தங்களை எதுவும் செய்துவிட முடியாது என்று ஆரம்பித்த எந்த நிகழ்வும் துயரத்தின் ஆழத்தில் புதைந்து விடுகிறது என வரலாறு நமக்குக் காட்டுகின்றது. இதற்கு ஒரு நிகழ்வை இங்கு குறித்துக்காட்டுவது நன்று. இது நடந்தது 101 ஆண்டுகளுக்கு முன்.

1912ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ம் திகதி நள்ளிரவில் அட்லாண்டிக் கடலில் மிதந்து சென்ற பனிப்பாறையும் மூன்று ஆண்டுகளாக மனிதர்கள் உருவாக்கிய செயற்கையான 'டைட்டானிக் கப்பலும்" மோதிக் கொண்டன. 'டைட்டானிக்" தனது கன்னிப் பயணத்திற்காக கிளம்பியபோது, 'கடவுளே நினைத்தாலும் இந்தக் கப்பலை மூழ்கடிக்க முடியாது" என்று பெருமையுடன், இறுமாப்புடன் கிளம்பிய. அந்தக் கப்பல் 5ஆம்நாள் நள்ளிரவு பனிப்பாறையில் மோதியது. ஏப்ரல் 15ம் தேதி அதிகாலை இரண்டு மணியளவில் அந்தக் கப்பல் இரண்டாகப் பிளந்து, நடுக்கடலில் மூழ்கியது. அந்தக் கப்பலில் பயணம் செய்த 2223 பேரில் 1517 பேர் அந்த இருளில், குளிரில், கடலில் உயிர் துறந்தனர். உலகிலேயே நகர்ந்து செல்லக்கூடிய மிகப்பெரிய அரண்மனை என்றெல்லாம் பறைசாற்றப்பட்ட இந்தக் கப்பல் தனது முதல் பயணத்திலேயே சமாதியானது. எதுவும், எவ்வகையிலும் தங்களைத் தீண்ட முடியாது என்ற இறுமாப்பு ஏற்பட்டால், வாழ்வில் என்ன நிகழக்கூடும் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றதே இச்சம்பவம். கப்பலை உருவாக்கியவர்கள், அதனை இயக்கியவர்கள் எல்லாருக்கும் அந்த கப்பலின் சக்தி மீது அளவுக்கு மீறிய,ஆபத்தான நம்பிக்கை இருந்தது. இதைத்தான் நாம் இங்கு சிந்திக்க வேண்டும்.

வாழ்வில் நம்பிக்கை தேவைதான். நம்பிக்கையற்ற வாழ்வு நடுக்கடலில் தத்தளிக்கும் படகுபோல் இருக்கும் என்பார்கள் பலர். ஆனால், எதன்மேல் நம்பிக்கை கொள்வது, எவ்வகையான நம்பிக்கை கொள்வது என்பதையும் நாம் தீர ஆராய வேண்டும். நம்பிக்கையை வளர்க்கும் இந்தக்காலத்தில்  நம்பிக்கை இழந்து நடுக்கடலில், சந்தேகப்புயலில் தத்தளித்த சீடர்களைப் பற்றிய ஒரு நிகழ்வு இன்று நமது நற்செய்தியாகிறது. சந்தேகத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாக இயேசுவின் சீடர்களில்; ஒருவரான தோமா சுட்டிக்காட்டப் படுகிறார். தோமா 'இயேசுவின் கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்" என்று சந்தேகத்தை வெளிக்காட்டுகின்றார். கல்வாரியில் இயேசு இறந்ததை நேரடியாகப் பார்த்திருந்தால், அந்த கல்வாரி பயங்கரத்திற்குப் பின் ஒன்றுமே இல்லை என்ற முடிவுக்கும் நாமும் வந்திருப்போம். இயேசுவிடம் கேட்கமுடியாமல், மனதுக்குள் மற்ற சீடர்கள் புதைத்து வைத்திருந்த சந்தேகத்தைத்தான் தோமா வாய்விட்டுச் கேட்டார். எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவை நம்பி மூன்றாண்டுகள் வாழ்ந்தவர்கள் இந்தச் சீடர்கள். அந்த மூன்று ஆண்டுகளில், இயேசுதான் அவர்களது உலகம் என்று ஆகிப் போன நேரத்தில், அந்த உலகம் ஆணி வேரோடு பறிக்கப்பட்டு, சிலுவையில் தொங்கவிடப்பட்டது. இயேசுவின் மரணம் அவர்கள் வாழ்வில் விட்டுச்சென்ற அந்த வெற்றிடத்தை, சந்தேகமும், பயமும் நிரப்பிவிட்டன. இதுவரை அவர்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த நம்பிக்கை தொலைந்து போனது.
 
கருணையே வடிவான இயேசு, சீடர்களின் சந்தேகங்களுக்கு, தோமாவின் சந்தேகங்களுக்கு கூறிய பதில் இதுதான்: 'இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள்" 'நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்" என்றார். இந்த அழைப்பின் மூலம் தோமாவின் மனதை இயேசு மிக ஆழமாகத் தொட்டார். எனவே அந்த மிக ஆழமான மறையுண்மையை தோமா கூறினார். 'நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!" இயேசுவைக் கடவுள் என்று கூறிய முதல் மனிதப் பிறவி தோமாதான். ஆவநம்பிக்கையை நீக்கி நம்பிக்கை கொண்ட தோமா இறுதிவரைக்கும் இயேசுவில் நம்பிக்கையுடன் வாழ்ந்து இறந்தார் புனிதரானார். அறிவுத்திறனுக்கு எட்டாத இறைவனை நம்பும்போது, இறைவனின் இரக்கத்தை நம்பும்போது, நம் வாழ்வில் உருவாகும் சந்தேகப் புயல்கள் தானாகவே அடங்கும்; சந்தேகத்தில் புதையுண்ட நாம், கல்லறைகளிலிருந்து உயிர் பெறுவோம். இந்த அற்புதங்களை ஆற்றும் இறை இரக்கத்தை நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் உணர, இயேசுவை என் கடவுள் என் ஆண்டவர் என ஏற்றுக்கொள்வோம்.

No comments:

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff