17.08.2014 '"
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
இன்று எமக்குத்தரப்படும் பைபிள் பகுதியில் தாய்மையின் மேன்மை வெளிக்கொணரப்படுகின்றது எனலாம். ஒரு தாயின் விடாப்பிடியான வேண்டுதலையும், அதன் இறுதி வெற்றியையும் இன்றைய பைபிள் பகுதி எடுத்துக்காட்டுகின்றது. கனானியப் பெண்ணின் நம்பிக்கையை இயேசு நன்றாகவே சோதித்துப் பார்த்துவிட்டார் என்றும் கூறலம். பிள்ளைகளுக்குரிய உணவை நாய்க்குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல என்ற கடுமையான மறுமொழிகூட அந்தத் தாயின் நம்பிக்கையை, எதைச் செய்தாவது தன் மகளைக் குணப்படுத்திவிட வேண்டும் என்ற அன்பின் பிடிவாதத்தை, அன்பின் தளராத் தன்மையைத் தோற்கடிக்க முடியவில்லை. உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க் குட்டிகள் தின்னுமே என்று கூர்மதியுடனும், அன்புடனும் பதில் சொல்லி இயேசுவின் பாராட்டையும், மகளுக்கு நலத்தையும் பெற்றுக்கொண்டார்.
'பிள்ளைகளின் உணவை நாய்களுக்குப் போடுவது முறையல்ல முதலில் பிள்ளைகள் வயிறார உண்ணட்டும்" என்கிறார் இயேசு. ஆனால் அதற்கு அந்தப் பெண் அளித்த மறு மொழியோ இயேசுவையே ஒரு குலுக்கு குலுக்கிவிட்டது. ஆம் ஐயா ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே என்றாள் அப்பெண் உடனே தம் எண்ணத்தை மாற்றி புற சமயத்தவரான அந்தப் பெண்ணுக்கு புதுமை செய்ய முன்வருகிறார்.
இயேசுவை அணுகிவந்த கனானியப் பெண்ணுக்கும் இயேசுவுக்கும் இடையே நிகழ்கின்ற உரையாடலில் பல சிறப்பு அம்சங்கள் உண்டு. அப்பெண் இயேசுவிடம் முழு நம்பிக்கை கொண்டிருந்தார். அவர் இயேசுவை மூன்று முறை 'ஐயா" என்றும், 'தாவீதின் மகனே" என்றும் அழைக்கிறார். இந்த இரு வார்த்தைகளும் இயேசுவை மெசியா என அப்பெண் கருதியதைக் காட்டுகிறது. ஆனால் இயேசுவோ பேசாது அதைதியாக நிற்கிறார். ஒரு சொல் கூட அப்பெண்ணுக்குப் பதில்மொழியாக அவர் கூறவில்லை. சீடர்கள் வேறே எரிச்சல் படுகிறார்கள். இயேசுவும் அப்பெண்ணை நாய்க்கு ஒப்பிட்டு இழிவுபடுத்துவது போல் தெரிகிறது. ஆனால் அப்பெண் மன உறுதியை இழக்கவில்லை. இயேசு மனது வைத்தால் போதும் தன் மகள் குணம்பெறுவாள் என அப்பெண் விடாப்பிடியாக நிற்கிறார். கடவுளின் வல்லமையில் நம்பிக்கை கொண்டு அவரை அணுகுவோர் ஏமாற்றமடையார் என்பதற்கு இப்பெண்ணின் ஆழ்ந்த நம்பிக்கை எமக்கு சிறந்த எடுத்துக்காட்டு.
தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்த ஒரு பெண் என்று பல தடைகளைத் துணிவுடன் தாண்டி தன் மகளைக் குணமாக்க இயேசுவை அணுகி வருகிறார். அவரை ஒரு பொருட்டாகக்கூட மதிக்காத இயேசுவிடம் மீண்டும் மீண்டும் அவர் வருகிறார். இஸ்ரயேல் மக்களை குழந்தைகளாகவும், பிற இனத்தவரை நாய்களாகவும் உருவகித்துப் பேசும் இயேசுவின் கடினமான சொற்களையும் மீறி, அப்பெண் இயேசுவை அணுகி வருகிறார். பைபிளில் நற்செய்தியில் நமக்குக் காட்டப்படும் இயேசு சில நேரங்களில் புரியாத புதிராக விளங்குகிறார். அவரைப் புரிந்து கொள்ள சிரமமாக உள்ள ஒரு நற்செய்திப் பகுதி இன்று நமக்குத் தரப்பட்டுள்ளது. இயேசுவின் கடினமான சொற்களையும் வேறொரு கண்ணோட்டத்துடன் புரிந்து கொண்டு அப்பெண் தன் விண்ணப்பத்தை மீண்டும் இயேசுவிடம் வைக்கிறார். தளராத, உறுதியான விசுவாசத்தின் ஓர் எடுத்துக்காட்டாக அந்தக் கானானியப் பெண் நமக்கு முன் உயர்த்தப்படுகிறார். 'அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்" என்று இயேசு அவரை அனுப்பி வைக்கிறார்.
இஸ்ரயேல் மக்களுக்கும் பிறருக்கும் உள்ள பிரிவுகளை, உயர்வு, தாழ்வுகளை இயேசு வலியுறுத்திக் கூறும்போது, அப்பிளவுகளை எல்லாம் தாண்டி, இறைவனின் கருணையும் உண்டு என்பதை ஆணித்தரமாக உணர்த்திய கானானியப் பெண்ணிடம் நாம் கற்றுக் கொள்ளக்கூடியப் பாடங்கள் பல உள்ளன. அந்தப் பெண் கொண்டிருந்த விசுவாசத்தின் ஆழத்தைக் கண்ட இயேசு, அவர் பிற இனத்தவர், அதுவும் பிற இனத்தைச் சார்ந்த ஒரு பெண் என்பதையெல்லாம் புறம்தள்ளி, அவரது விசுவாசத்தை கூட்டத்திற்கு முன் புகழ்துள்ளரே. அங்கும் நமக்குப் பாடங்கள் உள்ளன.
பிளவுகள், பிரிவுகள், ஏற்றத் தாழ்வுகள் ஆகியவற்றால் நிறைந்து வெறுப்பை உமிழ்ந்து வரும் இன்றைய உலகில் வேறுபாடுகளைகளைந்து மனிதம் போற்ற மனிதம் வளர்க்க பாடுபடுதல் வேண்டும் அப்போது தான் பிரிவுகள் பிளவுகள் வேற்றுமைகள் இல்லாத புதிய சமுதாயத்தை காணமுடியும். அனைத்து மக்களினங்களும் அனைத்து சமயங்களும் சேர்ந் மண்ணில் மனிதத்தை மலரச் செய்யும்
No comments:
Post a Comment