24.08.2014 '"
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
'நான் யார் என்று மக்கள் சொல்கிறார்கள்?"'நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?" என்று இயேசு இரு கேள்விகள் கேட்கும் பகுதி இன்று எமக்கு பைபிளில் தரப்படுகிறது.
நம்முடைய் வாழ்க்கையில் நம்மை நாமே தேடிய அனுபவங்கள் நமக்கு உண்டு. நம்மை நாமே தேடும் நேரங்களில் பல கேள்விகள் நம் உள்ளத்தில் எழுந்திருக்கும். அவற்றில் மிக முக்கியமாக நம் மனதில் எழுந்த ஒரு கேள்வி: 'நான் யார்?" என்ற கேள்வி. இயேசுவுக்கும் இந்தக் கேள்வி எழுந்தது.
'நான் யார் என்று மக்கள் சொல்கிறார்கள்?" இயேசு இக்கேள்வியை அவர் காலத்து மக்களுக்கு மட்டுமல்ல. இன்றும் கேட்கிறார். மக்கள் இயேசுவைப்பற்றி என்ன சொல்கிறார்கள்? என்னென்னவோ சொல்லிவிட்டார்கள். இன்னும் சொல்லி வருகிறார்கள். நல்லதும், பொல்லாததும். உண்மையும், பொய்யும். விசுவாசச் சத்தியங்களும், கற்பனைக் கதைகளும். அளவுக்கதிகமாகவே சொல்லிவிட்டார்கள். ஆனால், இவ்வளவு சொல்லியும் இயேசுவைப்பற்றி முழுமையாக நம் மனித குலம் சொல்லிவிட்டதா என்று கேட்டால், இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இயேசு இவர்தான், இப்படிப்பட்டவர்தான் என்று சொல்வது மிகக் கடினம். இலக்கணங்களை, வரையறைகளை, வேலிகளை உடைப்பது இயேசுவின் இலக்கணம். இயேசுவின் அழகு.
'நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?" எம்மைப் பார்த்து இயேசு கேட்கிறார். 'நான் யார் என்று மக்கள் சொல்கிறார்கள்?" என்ற கேள்விக்கு நாம் படித்தவைகளை, மனப்பாடம் செய்தவற்றை கொண்டு பதில்களைச் சொல்லிவிடலாம்.
ஆனால், இந்த இரண்டாவது கேள்விக்கு அப்படி எளிதாகப் பதில் சொல்லிவிட முடியாது.நாம் படித்தவற்றைவிட, பட்டுணர்ந்தவையே இக்கேள்விக்குப் பதிலாக வேண்டும். நாம் மனப்பாடம் செய்தவற்றைவிட, மனதார நம்புகிறவையே இக்கேள்விக்கான பதிலைத் தரமுடியும். இக்கேள்வி எமக்கு சங்கடங்களை உருவாக்கலாம். 'என்ன இது. என்ன சொல்வது என புரியவில்லை என் உணர்ந்தால், இது ஒரு நல்ல ஆரம்பம். இயேசுவின் இந்தக் கேள்வி வெறும் கேள்வி அல்ல. ஓர் அழைப்பு. 'என்னைப்பற்றிப் புரிந்து கொள் என்னைப் பற்றிக்கொள். என்னைப் பின்பற்றி வா" என்று பலவழிகளில் இயேசு விடுக்கும் அழைப்பு.
இயேசுவை பற்றி வெறும் புத்தக அறிவு போதாது. அப்படி நாம் தெரிந்துகொள்ளும் கடவுளைக் கோவிலில் வைத்துப் பூட்டிவிடுவோம். விவிலியத்தில் வைத்து மூடிவிடுவோம். அனால்,இயேசுவை அனுபவத்தில் சந்தித்தால், வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும். பல சவால்களைச் சந்திக்க வேண்டும். நம் மனதைக் கவர்ந்த ஒருவரை, கருத்தளவில் புரிந்துகொள்வதோ, அவரைப் புகழ்வதோ எளிது. அவரைப் போல வாழ்வதோ, நம்பிக்கையோடு அவரைத் தொடர்வதோ எளிதல்ல.
இயேசுவைப்பற்றி தெரிந்துகொள்ள, அவரைக் கண்டு பிரமித்துப் போக, அவரை இரசிக்க கேள்வி அறிவு, புத்தக அறிவு போதும். அந்த பிரமிப்பில் நாம் இருக்கும்போது, இயேசு நம்மிடம் "நான் யார் என்று மக்கள் சொல்கிறார்கள்?" என்று கேட்டால், நம் பதில்கள் ஆர்வமாய் ஒலிக்கும். ஆனால், அந்த பிரமிப்பு, இரசிப்பு இவற்றோடு மட்டும் நாம் இயேசுவை உலகறிய பறைசாற்றக் கிளம்பினால், புனித பவுல் சொல்வது போல், 'ஒலிக்கும் வெண்கலமும், ஓசையிடும் தாளமும் போலாவோம்." எனவே, இயேசு நம்மை அடுத்த நிலைக்கு வருவதற்கு கொடுக்கும் அழைப்பு தான் "நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?" என்ற கேள்வியாக எழுகிறது. இது சாதாரண அழைப்பு அல்ல. அவரை நம்பி அவரோடு நடக்க, அவரைப்போல் நடக்க, இரவானாலும், புயலானாலும் துணிந்து நடக்க அவர் தரும் ஓர் அழைப்பு. வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்த கொடுக்கப்படும் இந்த அழைப்பிற்கு, மனதின் ஆழத்திலிருந்து; நம் பதில்களை வரவழைப்போம்.
இயேசுவின் இந்த அழைப்பைப் புரிந்தும் புரியாமலும், சீமோன்: ' நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்" என்று பதிலளித்தார். இயேசுவுடன் தட்டுத் தடுமாறி நடைபயின்ற பேதுரு, இயேசுவைத் தம் சொந்த அனுபவத்தில் சந்தித்தபின், இறுதி மூச்சு வரை உறுதியாய் இருந்ததுபோல், நாமும், சொந்த அனுபவத்தில் இயேசுவை உணர்ந்து, அவருக்காக எதையும் இழக்கும் துணிவு பெறவோம்
No comments:
Post a Comment