Sunday, August 17, 2014

மாயையான மதிப்புகளைத் தேடி அலையாமல் இயேசுவின்; மதிப்புள்ள வாழ்வை தேடுவோம்"

31.08.2014 '"  
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர் 

இன்று எமக்குதரப்படும் பைபிள் பகுதியை மத்தேயு நற்செய்தியாளர் கி.பி.80 - கி.பி.90ம் ஆண்டு காலப்பகுதியில் எழுதியிருக்க வேண்டும். அது கிறிஸ்தவர்கள் இயேசுவை மீட்பராக ஏற்றுக்கொண்டதால், துன்பத்தை அனுபவித்த காலம். துன்பப்படுகிற கிறிஸ்தவர்களுக்கு ஆறுதலையும், நம்பிக்கையையும் மத்தேயு தருகிறார். மத்தேயுவின் சிந்தனை, எண்ண ஓட்டங்கள் அனைத்துமே நடக்கிற நிகழ்வுகளின் அடிப்படையிலும், காலச்சூழ்நிலையின் அடிப்படையிலும் அமைகிறது என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மை. இயேசுவின் வார்த்தை எல்லாக்காலச் சூழ்நிலைகளுக்கும், எல்லா நிகழ்வுகளுக்கும் பொருந்துவதாகவும், அர்த்தம் தருவதாகவும் இருக்கிறது என்பது இதனுடைய வெளிப்பாடு.

இயேசுவைப் பின்பற்றுவதற்கு இரண்டு பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும் என்ற அழைப்பையும் விடுக்கிறார். முதல் பண்பு: தன்னலம் துறத்தல். வாழ்வு என்பது கடவுள் கொடுத்திருக்கிற மிகப்பெரிய கொடை. இந்த வாழ்வை தனக்காகவோ, தன்னுடைய உறவுகளுக்காகவோ வாழ்வது சாதாரண வாழ்க்கை. ஆனால், இயேசுவைப் பின்பற்றுகிற ஒவ்வொருவரும் மற்றவர்களுக்காக வாழ்வதற்கு அழைக்கப்படுகிறோம். 
இரண்டாவது பண்பு: சிலுவையைத்தூக்குதல், அதாவது துன்பத்தை ஏற்றுக்கொள்ளுதல். மற்றவர்களுக்காக வாழும்போது நமக்கு கிடைப்பது துன்பங்களும், துயரங்களும்தான். ஆனால், துன்பங்களைத் தாங்குவதற்கு பயப்படாமல், அதைத்தாங்குவதற்கு இறைவன் பலம் தருவார் என்ற நம்பிக்கை நமக்கு இருக்க வேண்டும். வாழ்வு என்பது இன்பமும், துன்பமும் நிறைந்தது. இரண்டுமே நிரந்தரமானது அல்ல. வாழ்வில் துன்பம் வருகிறபோது சோர்வடைவதும், மகிழ்ச்சி வரும்போது துள்ளிக்குதிப்பதும் மனித இயல்பு. சோகங்கள் வருகிறபோது சோர்ந்து போகாமல், கடவுள் மட்டில் நம்பிக்கை கொள்வோம். அவர் நமக்கு பலம் தருவார், அருள் பொழிவார்.

மானிட வாழ்வின் மிகப் பெரிய மறைபொருள்களில் ஒன்று இழப்பு. யாரும் எதையும் இழக்க விரும்புவதில்லை. ஆனால், சிலவற்றை சில நேரங்களில் இழக்கும்போது, அந்த இழப்புக்கு கைம்மாறாக நாம் பெறும் இன்பம் இழந்ததைவிட பன்மடங்கு மதிப்பு மிக்கது, மேலானது என்பதை அனுபவத்தின் மூலமாகத்தான் அறிய முடியும்.ஞானிகள், அறிஞர்கள், மாமனிதர்கள் இந்த மறைபொருளை, வாழ்வின் இரகசியத்தை அறிந்திருக்கின்றனர். எனவே, இழப்பதற்கு அஞ்சாமல் இழக்க முன் வந்தனர், சில வேளைகளில் தம் உயிரையும்கூட இழந்தனர் இயேசு இன்றைய நற்செய்தி வாசகத்தில் இந்த ஞானத்தை நமக்குக் கற்றுத் தருகிறார். தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர். மாறாக, என் பொருட்டு தம்மையே அழித்துக்கொள்கிற எவரும் வாழ்வடைவர் என்கிறார். இயேசுவின் பொருட்டுக் கடந்த பல நூற்றாண்டுகளாக ஆயிரக்கணக்கானவர்கள் தம் உயிரை இழக்க முன்வந்துள்ளனர். நிலைவாழ்வைப் பெற்றுக்கொண்டுள்ளனர். நாம் உயிரை இழக்க வேண்டாம். சிறிய இன்பங்களை, சிறிய ஆதாயங்களை, நேரத்தை, ஓய்வை, பொழுதுபோக்கை இழக்க முன்வருவோமா.

இயேசு மக்களுக்கு ஒரு புதுவாழ்வு வாக்களித்தார். தாயின் உதரத்தில் கருவாக உருவாகி, உலகில் தோன்றி நம் சாவோடு அழிந்துபோகின்ற உயிரைவிடவும் மேலானது இயேசு வாக்களித்த வாழ்வு. இந்த வாழ்வுக்கு முடிவே இராது. உயிரைத் தியாகம் செய்தாவது நாம் வாழ்வை அடைய வேண்டும் என்பது இயேசுவின் போதனை. சில சமயங்களில் உலகத்தையும்  ஆன்மாவையும் ஒன்றுக்கொன்று எதிரியாகக் காண்பித்து, ஆன்மாவைக் காத்துக்கொள்ள நாம் உலகத்தைக் கைவிட வேண்டும் என்று சிலர் வாதாடுவர். இது இயேசுவின் போதனைக்கு மாறானது. இயேசு வாக்களிக்கின்ற புதிய வாழ்வு ஆன்மாவைச் சார்ந்தது மட்டுமல்ல, அந்த வாழ்வு முழு மனிதரை உள்ளடக்குகின்ற வாழ்வு. இயேசு வாக்களித்த இறையாட்சியையும் முழுவாழ்வையும் பற்றிக்கொள்ள அனைத்தையுமே விட்டுக்கொடுக்க நாம் தயாராக இருக்க வேண்டும்.
இயேசு நாம் வாழ்வு பெற வேண்டும் என்பதற்காக இறந்தார். ஆனால் அவருடைய இறப்பின் வழியாக நாம் முடிவில்லா வாழ்வைப் பெற உரிமை பெறுகின்றோம். இத்தகைய உயரிய கொடையைப் பெற்றுள்ள நாம் அக்கொடையின் மதிப்பைச் சரியாக உணராததால் அதற்குப் பதிலாக மாயையான மதிப்புகளைத் தேடி அலைகின்றோம். இத்தேடல் பயனற்றதாகத்தான் முடியும். மாறாக, நம் சொந்த விருப்பு வெறுப்புகளின்படி நடக்காமல் இயேசுவின் போதனைக்கு ஏற்ப நாம் நடந்தால் நாம் விட்டுக்கொடுப்பதற்குப் பலகோடி மடங்கு மேலான மதிப்புள்ள 'வாழ்வை " பெற்றுக்கொள்வோம்.

No comments:

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff