Thursday, May 31, 2012

இறைத் தன்மையுடன் மனிதத்தன்மை கலந்து மனிதர் மண்னில் முழுமையாக மலரவேண்டும்

03.06.2012
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
விழாக்களின் ஒரு சிகரமாக இன்று மூவொரு இறைவனின் திருவிழாவை நாம் கொண்டாடுகிறோம். மூவொரு கடவுளின் திருவிழா திருச்சபையில் மிக முக்கியமான ஒரு திருவிழா. இத்திருவிழா பாஸ்கா மறைபொருள்களிலுள்ள தந்தை, மகன், தூய ஆவி குறித்த கடவுளின் வெளிப்பாட்டை நினைவுபடுத்துகின்றது. இறைவனின் இந்த இயல்பு அதிபுனித திரித்துவம் எனப்படுகிறது. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த இறையியல் வல்லுனர் பெக்குலியனால் இந்த மூவொரு கடவுள் என்ற மறையுண்மை கொண்டுவரப்பட்டது. இத்திருவிழா 1334 ஆம் ஆண்டில் திருத்தந்தை 22 ஆம் யோவானால் தொடங்கப்பட்டது. நைசீயா-காண்ஸ்டாண்டி நோபிள் திருச்சங்கங்கத்தில் உறுதி செய்யப்பட்ட இந்த விழா திருச்சபையின் அடித்தளமாக உள்ளது. தமத்திரித்துவத்தின் மகத்துவம் கூறும்; ஒரே கடவுள்,மூன்று ஆட்களாய் இருக்கிறார் என்ற மறையுண்மைகளை மனித அறிவால், எண்ணத்தாலும் மொழியாலும் போதுமான அளவு விளக்க முடியாமல் இருந்த போதிலும்,திருச்சபைத் தந்தையர்,தங்களது வாழ்வு மற்றும் ஆழமான விசுவாசத்தின் வழியாக விளக்க முயற்சித்திருக்கிறார்கள் என்பது உண்மையே.

நாம் இன்று  நம் அறிவுக்குள் கடவுளை அடக்கிவிட முயலும்போதெல்லாம் 4ம் நூற்றாண்டில் வாழ்ந்த நுஎநபசரைள  (இவக்றியஸ); என்ற கிரேக்கத் துறவியின் வார்த்தைகளை நினைவில் கொள்வது நல்லது: 'கடவுளை நம் அறிவுக்குள் அடக்கிவிட முடியாது. அப்படி அடக்க முடிந்தால், அவர் கடவுளாக இருக்க முடியாது.' என்பதாகும். ஒருமுறை புகழ் பெற்ற அறிவியலார் டாக்டர் ஹென்றி மோரிஸ் கூறுகிறார்– உலகம் பருப்பொருள், இடம், காலம் ஆகியவற்றால் ஆனது. இவை மூன்றும் இல்லையேல், ஏதேனும் ஒன்றுகூட இல்லாதிருந்தாலும் இந்த உலகு இல்லை. அதே போல மூவொரு கடவுளும் இருப்பது அவசியமாகிறது என்கிறார் அவர். இவை ஒவ்வொன்றுமே மூன்றில் ஒன்றாக இருக்கின்றன.

'இந்த உலகில் மிக அழகான, ஆழமான அனுபவங்கள் எல்லாமே நாம் முற்றிலும் புரிந்துகொள்ள முடியாத மறையுண்மைகள். இந்த ஆழமான அனுபவங்களை இதுவரை தங்கள் வாழ்வில் பெறாதவர்களை இறந்தவர்கள் என்று சொல்லலாம். அல்லது, குறைந்தபட்சம் பார்வை இழந்தவர்கள் என்றாகிலும் சொல்லலாம்.' என்று அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் சொல்லிச் சென்றார். நாம் காணும் இந்த உலகின் பல உண்மைகளுக்கு அறிவியல் விளக்கங்களைக் கண்டு பிடித்த அந்த மாமேதையே வெகு ஆழமான உண்மைகளைச் சந்தித்தபோது மௌனம் காத்தார். ' '

புனித அகுஸ்தின் தன் வாழ்வின் ஆழத்தில் உய்த்துணர வேண்டிய ஓர் உண்மையை தன் அறிவுத்திறன் கொண்டு அறிந்து, தெரிந்து, புரிந்து கொள்ள முயன்றார். எப்படி மூன்று ஆட்கள் ஒரே கடவுளாய் இருக்க முடியும் என்ற கேள்வியை அவர் தனக்குள் எழுப்பி, விடைகள் தேட முயன்றார்.
புனித அகுஸ்தின் 'எப்படி' என்ற கேள்விக்குப் பதில் 'ஏன்' என்ற கேள்வியை எழுப்பியிருந்தால், ஆழமான, வித்தியாசமான, வாழ்க்கைக்குத் தேவையான உண்மைகளைப் கண்டறிந்தருக்கலாம். நம் இறைவன் எப்படி மூவொரு கடவுளாய் இருக்கிறார்? என்ற கேள்விக்கு பக்கம் பக்கமாக இறையியல் விளக்கங்கள் சொல்லலாம். அந்த விளக்கங்கள் எல்லாமே நம் அறிவுப்பசிக்கு உணவூட்டி, நம் மனதைத் தொடாமலேயே சென்றுவிடும். எப்படி என்பதற்குப் பதில் ஏன் என்ற கேள்வியை எழுப்புவோம்: நம் இறைவன் ஏன் மூவொரு கடவுளாய் இருக்கிறார்? 'அவரைப் பற்றி ஒரு சில அழகான உண்மைகளை, வாழ்க்கைக்குத் தேவையான உண்மைகளை நமக்குச் சொல்லித் தர நம் இறைவன் மூவொரு கடவுளாய் இருக்கிறார்'.
நம் இறைவன் மூவொரு கடவுள் என்பதையே நமக்கு அறிமுகம் செய்தவர் இயேசு. இயேசு இவ்விதம் கூறியது, பலரை வியப்பில் ஆழ்த்தியது. வேறு பலரை கோபத்தில் ஆழ்த்தியது. கடவுளை ஒரு கூட்டுக் குடும்பமாய் அறிமுகம் செய்தவர் இயேசு. இயேசு இவ்விதம் நமக்கு அறிமுகம் செய்து வைத்த மூவொரு இறைவனின் இலக்கணம் நமக்குச் சொல்லித் தரும் பாடம்: நாம் வழிபடும் இறைவன் உறவுகளின் ஊற்று என்றால், நாமும் உறவுகளுக்கு முக்கியமான, முதன்மையான இடம் தர அழைக்கப்பட்டுள்ளோம் என்பதுத அந்தப் பாடம்.உறவுகளுக்கு நம் வாழ்வில் எந்த இடத்தைத் தந்திருக்கிறோம். உறவுகளை வளர்ப்பதைக் காட்டிலும், மற்ற அம்சங்களுக்கு நாம் வாழ்வில் முதன்மை இடங்களைக் கொடுத்திருந்தால், மீண்டும் உறவுகளுக்கு முதலிடம் வழங்கும் வழிகளை மூவொரு இறைவன் நமக்குச் சொல்லித் தர வேண்டுவோம்;. 
அன்பைக் காண முடிந்தால், மூவொரு இறைவனையும் காண முடியும்' என்று புனித அகுஸ்தின் ஒருமுறை  சொன்னார்

நாம் வாழும் இன்றைய உலகில், நம் அன்பு உறவுகளே மிக அதிகமாகப் பழுதடைந்திருக்கிறது. பழுதடைந்துள்ள அந்த உறவை மீண்டும் சரிசெய்ய இன்று உறவாக வாழும், மூவொரு இறைவனின் திருநாள் அழைக்கின்றது. மூன்று ஆளாகிய கடவுளில் நிகழ்கின்ற அன்புப் பரிமாற்றம் கடவுள் அன்பு மயம் என்று நாம் கூறுவதற்கு அர்த்தம் தருகிறது. தமத்திரித்துவம் என்பதே ஒரு குழுமம். கடவுளே அன்பு என்று சொல்லும் போது மூன்று ஆட்களாகிய கடவுளுக்குள் நிகழ்கின்ற அர்த்தமுள்ள அன்பின் அனுபவத்தையே குறிக்கிறது.
இன்று குடும்பம் என்ற அமைப்பு சிதறுவதற்கு அன்புறவின் விரிசலே காரணம். இந்நிலை சுயநலத்தை ஆழமாக வளர்த்து விடுகின்றது. சமூகத்தோடு இணக்கம் கொள்ளாநிலை, ஊரோடு ஒத்துவாழும் நிலையை பண்பினை கேள்விக்கு உள்ளாக்குகிறது. இந்நிலையில் வளர்ந்தால் பல்வேறு மனநிலை பாதிப்புக்களை உள்ளாக்கிவிட்டு தன்னைத்தானே சமூகத்திலிருந்து பிரித்து விடுகின்ற போக்கை அதிகரித்துவிடும்.

ஓன்றிப்பின் அன்புறவில் வாழ வேண்டிய ஒரு மனிதரின் திருமண வாழக்கையைப் பற்றி நான் அறிந்த சப்பவம் இது. 'திருமணமான முதல் ஆண்டில் மனைவி பேசினாள் கணவர் கேட்டார். இரண்டாம் ஆண்டில் கணவர் பேசினர் மனைவி; கேட்டாள். மூன்றாம் ஆண்டில் இருவரும்; ஒரே நேரத்தில் பேசினர்; ஊரே கேட்டது' இறுதியில் கணவர் இன்நொரு பெண்னுடன் குடும்பம் நடத்த சென்றுவிட்டார். மனைவியும் பிள்ளைகுளும் தந்தையின் அன்புறவை இழந்தனர். இவ்வாறாக குடும்ப வாழ்வு நடத்துபவர்கள் ஏராளம். உறவுகள் முறிந்து சிதைந்து கொண்டிருக்கும் வாழ்க்கை நிலையை நம் சமுதாயத்தில் கண்கூடாகப் பார்க்கமுடியும். முரட்டு மனிதர்களையும் பாசத்தால் கட்டிப் போட முடியும் என்பது அன்றாட வாழக்கை நமக்கு உணர்த்தும் பாடம். அன்புக்காகவும் உறவுகளுக்காகவும் ஏங்கும் மனிதர்களை நாம் பார்க்க முடியும். கடவுளுக்குள் உறவின் ஒற்றுமையை நாம் தரிசிக்கின்றோம். 'என் மீது அன்பு கொண்டுள்ளவர் நாம் சொல்வதைக் கடைப்பிடிப்பார் என்பதை வாசிக்கின்றோம்.

இறைவன் தமக்குள் ஒன்றாய் இருப்பது போல் அவரில் நம்பிக்கை வைத்து குடும்பஉறவில் இணைவோரும் இருக்க வேண்டும் என்பது இக்கதை உணர்த்தும் உண்மை. இறைத் தன்மையுடன் மனிதத்தன்மை கலந்து மனிதர் முழுமையாக வேண்டும் என்பதை கடவுள் விரும்புகிறார். கடவுள் தம்மோடு கலந்திட நம்மை அழைப்பதற்கு ஆதாரமாய் நிற்பது மனிதர் மீது அவர் கொண்ட அளவற்ற அன்பு. மனிதரோடு உறவுகொள்ள இயேசுவும் தம்மையே தாழ்த்திக் கொண்டார். கடவுள் தன்மை கொண்ட மூன்று ஆட்கள் ஒரே கடவுளாக அன்புற்று வாழ்வது போன்று நாமும் நம் குடும்பங்களில் அன்புடன் வாழ வேண்டும். பாசமும் பரிவும் மன்னிக்கும் தன்மையும் மேலோங்கியிருக்கவேண்டும். அன்புற்று ஒன்று பட்டு ஓர் உயிரும் ஓர் உடலுமாக நாம் அனைவரும் வாழக் கற்றுக்கொள்ளவேண்டும். மூவொரு கடவுள் நம் குடும்ப வாழ்வின் ஒற்றுமைக்கு மாதிரி. நம் குடும்பத்திலும் மற்றனைவரோடும் நாம் பாசத்தோடு பழகி வாழ வேண்டும்

எனவே தம்மையே நமக்குத் தந்த திரித்துவ உறவுகளை வலுப்படுத்த உறவுகளின் ஆழம் மனித மனங்களை ஒன்றிணைக்கும். கடின உள்ளத்தாரையும் இளகிய உள்ளத்தினராக்கும். குடும்ப உறவுகளை சீராக்க மூவொரு இறைவன் அழைக்கின்றார். சகோதர பாசத்தை ஆழப்படுத்த அழைக்கின்றார். அயலாரோடான உறவை சரி செய்ய அழைக்கின்றார்.
'என் மனதிற்கு பிடித்தமானவை மூன்று அவை ஆண்டவன் முன்னும் மனிதர் முன்னும் அழகுள்ளவை: அவை உடன்பிறப்புக்களிடையே காணப்படும் ஒற்றுமை, அடுத்திருப்பவரோடு ஏற்படும் நட்பு, தங்களுக்குள் ஒன்றி வாழும் கணவன் மனைவியர்' எனக் கூறும் சீராக் ஆகமம் வார்த்தைகளை மனதில் நிறுத்தி கடவுள் முன்னும் மனிதர் முன்னும் அழகுடையவர் ஆகுவோம்.

Thursday, May 24, 2012

மனிதபணியில் மறுமலர்ச்சி மலர தூயஆவியின் செயல்களுக்கு எம் இதயங்களை திறப்போம்.

27.05.2012
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
 
உயிர்ப்பு விழாவுக்கு அடுத்த மிகப்பெரிய விழா தூய ஆவியின் பெருவிழாவாகும். இதனைப் பெந்தக்கோஸ்து என்றும் கூறுகின்றோம். உயிர்ப்புப் பெருவிழாவின் ஐம்பதாம் நாள் பெந்தக்கோஸ்து திருவிழா கொண்டாடப்படுகின்றது. தூய ஆவியின் வல்லமையால் திருச்சபை தோன்றிய நிகழ்வைத்தான் நாம் பெந்தக்கோஸ்து திருநாளில் நினைவு கூர்கின்றோம். உண்மையில் எருசலேம் மாடி அறையில் மரியாவும் திருத்தூதர்களும் கூடியிருந்த போது முதல் பெந்தக்கோஸ்து நடைபெற்றது. பெந்தக்கோஸ்து நிகழ்விலே மனிதர்களை நோக்கி ஒரு பாலத்தைக் கடவுள் தூயஆவியாரை அனுப்புவதன் மூலம் கட்டத் தீர்மானித்தார். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதன் கொடையே பெந்தக்கோஸ்து. பெந்தகோஸ்து புதுமை என்பது மனித குலம் இழந்து விட்டிருந்த ஒருவரையொருவர் புரிந்துகொள்ளல் எனும் கொடையை மீண்டும் பெற்றுக்கொள்வதாகும்.

தூய ஆவியின் அருள்பொழிவால் நாம் அனைவரும் உறுதியுடன் வாழ்ந்து வருகின்றோம். தூய ஆவி கடவுளின் புதிய மற்றும் வல்லமைமிக்க தொடர்பாளராய் இருந்து கடவுளின் பணியில் ஒன்றிப்பை ஏற்படுத்துகின்றார். உயிர்த்தெழுந்த இயேசுவைப் பறைசாற்றிட, புதிய மாற்றங்களை எற்படுத்திட திருத்தூதர்களுக்கு வல்லமை அளிக்கின்றார் தூய ஆவியார். தூய ஆவியார் ஏற்படுத்தும் மாற்றங்களுக்கு விசுவாசிகள் பயப்படத் தேவையில்லை. தூயஆவியரின் கொடைகளை நன்கறிந்து அதன்படி வாழ்ந்தவர்கள் பெருந்துன்பத்திற்குள்ளான வேளையில் அவர்களுக்குத் தூய ஆவியார் ஆறுதலாகவும் ஊக்கமாகவும் வல்லமையாகவும் இருந்தார். ஆனால் இன்று எம்மில் பலர் தூயஆவியனவரின் கொடைகளைப் பற்றி அறியதவர்களாய் தான் வாழ்கின்றோம். இந்;தவேளை ஒரு கதையை பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். “வயது முதிர்ந்த ஒரு பிச்சைக்காரர் சாகும் தருவாயில் கடைசி மகனை அழைத்து மகனே நான் உனக்குக் கொடுப்பதற்கு என்னிடம் ஏதும் இல்லை. ஆனால் இந்த கோப்பையை ஒரு பணக்காரப் பெண்மணி வீட்டுக்குப்பையலிருந்து எடுத்தேன் எனக் கூறிக் கொடுத்தார். தந்தை இறந்தபின் மகன் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தான். ஒரு தங்க ஆசாரி ஒருவர் அவனுடைய கோப்பையில் காசு ஒன்று போட்டபோது கேட்ட சத்தம் அவரை ஒரு நிமிடம் அந்தக் கோப்பையைச் சோதிக்கச் செய்தது. அந்தக்கோப்பை சுத்தத் தங்கத்தால் செய்யப்படிருந்தது தெரியவந்தது. இளைஞனே ஏன் உன் நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறாய். நீ ஒரு பணக்காரன் நீ வைத்திருக்கும் கோப்பை பல லட்சம்; மதிப்புள்ளது எனக்கூறினார் அந்த தங்க ஆசாரி. இதை அறியாது இன்றுவரையும் வாழ்கின்றேனே என பெருமூச்சு விட்டான் அந்த மகன். நாமும் அந்த பிச்சைக்காற தந்தை, மனனைபோல நம்மிடமிருக்கும் செல்வத்தைப் பற்றித் தெரியாது வாழ்கின்றோம். நம்முள் வாழும் தூய ஆவியானவரின் கொடைகள் பற்றித் தெரியாது இருக்கிறோம் அவர் தரும் அருள் விலை மதிப்பில்லாதது. உயிர்த்த இயேசு அளிக்கும் கொடைகளான சமாதானம் ,பாவமன்னிப்பு ஆகியவை ஆவியாரின் பிரசன்னத்தின் வெளிப்பாடுகள். பாவமன்னிப்புப் பெற்று சமாதான வாழ்வு வாழ இவ்விழா நம்மைத் தூண்டுகிறது.

கடவுள் அறியப்படாதவராக நோக்கப்பட்டு, இயேசு ஒரு வரலாற்று நாயகன் என்ற நிலையில் மட்டும் பார்க்கப்படும் போக்கு நிலவும் இக்கால அன்றாட வாழ்விலிருந்து கடவுளின் ஆவியை ஒதுக்கி வைத்தால் நம்முள் மனித மாண்பும் நீதியும் சுதந்திரமும் மலராது. அவரை ஒதுக்கி வாழும் போது அது இடர்களுக்கே இட்டுச்செல்லும். மனித மாண்பும் சுதந்திரமும் மலர்ந்தால்தான் ஒரு சமுதாயத்தை  நீதியில் உருவாக்க முடியும். ஆழமான இறையனுபவம் பெற்ற மனிதரின் வாழ்க்கையினால் மட்டுமே மக்கள் இயேசுவிடத்திலும் தூய ஆவியினிடத்திலும் ஈர்ப்பைப் பெறுவார்கள். அப்போதுதான் மனிதபணியில் மறுமலர்ச்சி மலரும். எனவே எம்முள் உறைந்திருக்கும் தூய ஆவியின் செயலாற்றல்களுக்கு எம் இதயங்களை முற்றிலுமாகத் திறப்போம். சான்றுபகர்வோம்.

பெந்தக்கோஸ்து திருவிழாவன்று நாம் தூயஆவியாரில் நமக்கிருக்கும் விசுவாசத்தை அறிக்கையிடுகின்றோம். ஆனால் அந்த விசுவாசத்திற்கேற்ற நடைமுறை நம்மிடம் உள்ளதா? நமது விசுவாசம் சில வழிபாட்டு முறைமைகளில் அடங்கிவிடுகிறதா? நம்மிடம் விசுவாசம் இருந்தால் விசுவாசத்திற்கேற்ற வாழ்வை நாம் வாழவேண்டும். தேர்ந்து கொள்ளப்பட்ட இறைமக்கள் இப்போது உறைந்துபோன இறைமக்களாகிவிட்டனர் என்று பேராயர் புல்டன்ன் ஒருமுறை சொன்னார். இன்று உறைந்து போன கிறிஸ்தவ வாழ்வு, சாரமற்ற உப்பாகிவிட்ட வாழ்வு, அரைகுறை கிறிஸ்தவ வாழ்வு, நற்செய்தி விழுமியங்களுக்கு சான்று பகராத வாழ்வு, நற்செய்தியை அறிவிக்கத் தயங்கும் வாழ்வு, உலகியல் மனப்பாங்கில் உழலும் வாழ்வு, துரிதகதியில் எதிலும் செயலாற்றி, இறையுண்மைகளை மறந்துவிடும் வாழ்வு ஆகியவையே நம்மிடம் உள்ளன.  இந்நிலையில் புதிய வாழ்வை நம்மில் தூண்டியெழுப்பிட தூய ஆவியானவர் நமக்கு உறுதிதருகின்றார். எனவே குறைகூறும், பொறாமைப்படும், பிறர் பெயரைக் கெடுக்கும் செயல்கள், சுயநலச்செயல்களை விட்டுவிடுவோம். எனவே நாம் அமைதி, சாந்தம் அன்புச் செயல்களுக்கு எற்ப வாழ தூயஆவியாரிடம் வேண்டுவோம். நாம் தூய ஆவியாரின் அருள்பெற்று மக்கள் பணியில் மறுமலர்ச்சி மலர வாழ்வோம்.

Wednesday, May 16, 2012

நம்பிக்கையில் நம்பிக்கை வைப்போம். நற்செய்தியில் நம் வாழ்வை உருமாற்றுவோம்.

20.05.2012 
 ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்.
உயிர்ப்பின் மேன்மை உணர்ந்தவர்களாக நாம் இயேசுவின் விண்ணேற்புப் பெருவிழாவை இன்று கொண்டாடுகின்றோம். இயேசு விண்ணேற்பு அடைந்ததை கண்டவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டே இருந்தார்கள். நாயகன் மீண்டும் வருவார் என நம்பிக்கை தளாரமல் இருந்தனர். இங்கு நம்பிக்கை நனவானதைபற்றி நான்வாசித்த ஒருகதையை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்: “இரண்டாம் உலகப் போர் நடந்துகொண்டிருந்தபோது நாசி முகாம்களில் பல கைதிகளுக்கு சரிவர உணவோ உடையோ வழங்கப்படவில்லை. ஆனால் அவர்கள் அதிகக் கடுமையான வேலைகள் செய்யும்படி கட்டாயப்படுத்தப்பட்டார்கள். இக்கைதிகளில் நேர்மையாளரான விக்டர் பிராங் என்பவரும் ஒருவர். இந்தக் கொடூரமான நிலையில்; சோர்ந்து பலவீனத்தில் விழுகின்ற கைதிகளை நாசி வீரர்கள் இரக்கமில்லாமல் சுட்டுக்கொன்றார்கள். விக்டர் பிராங் தன்னைச் சுற்றியிருந்த கைதிகள் பலர் இவ்வாறு கொல்லப்படுவதை கண்கூடாகப் பார்த்தார். ஆனால் அவர் மனம் தளரவில்லை. என்றைக்காவது போர்முடிந்து தனக்கு விடுதலை கிடைக்கும். தனது குடும்பத்தை சந்திக்க முடியும் என்கிற நம்பிக்கையில் அவர் வாழ்ந்தார். எனவே அவர் அந்த நிலையிலும் உற்சாகத்தோடு காணப்படுவதற்காக உடைந்துபோன கண்ணாடித் துண்டுகளை வைத்து முகச்சவரம் செய்தார். கிழிந்துபோன உடைகளை துவைத்து சுத்தமாய் அணிந்து காணப்பட்டார். கடுமையான வேலைகள் கொடுக்கப்பட்டபோது முகமலர்ச்சியோடு செய்தார். அவர் நம்பிக்கை வீண்போகவில்லை. ஆயிரக்கணக்கான கைதிகள் இந்த முகாம்களில் இறந்து போனார்கள். ஆனால் விக்டர் பிராங் இறுதிவரை உயிரோடு இருந்து விடுதலையாகி தனது குடும்பத்தை சந்தித்தார்.”

இக்கதை உண்மைக்கு முடிவில்லை. நேர்மைக்கு அழிவில்லை நம்பிக்கைக்கு இறப்பில்லை. என எடுத்துகாட்டுகின்றது. இயேசு இவ்வுலகில் தனக்கு நேர்ந்த பல துன்பங்களை இறைசித்தத்தை நிறைவேற்ற பொறுமையோடு தாங்கினார். ஆண்டவர் மேல் அவர் வைத்த நம்பிக்கையே அவருக்கு ஆற்றல் கொடுத்தது. இதனால் இறைவன் இயேசுவை உயர்த்தினார். இயேசுவும்விண்ணேற்படைந்தார். இயேசுவின் விண்ணேற்பு ஆண்டவன் பார்வையில் நாமும் இயேசுவைப் போல் உண்மைக்காக நீதிக்காக அன்பிற்காக நம்பிக்கையுடன் வாழும்போது உயர்த்தப்படுவோம் என்ற நம்பிக்கையை அளிக்கின்றது. உண்மைக்கு சாட்சியம் பகிர்வதே எனது பணி என்று கூறிய இயேசு தான் உயிர்தெழுந்தபின் தான் உயிர்த்தெழுந்ததை உலகிற்கு அறிவிக்கவும் அதற்கு சாட்சியம் பகிரவும் அழைப்பு விடுக்கிறார். உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். உலகில் நற்செய்தியையும் மீட்பையும் அறிவிப்பதற்காக நாம் அனுப்பப்படுகின்றோம். நாம் சமுதாயத்தில் புளிக்காரமாகவும் ஒளியாகவும் இருந்து புத்துணர்ச்சியுடனும்; செயல்படவேண்டும். அப்போதுதான் சமுதாயம் கிறிஸ்தவ விழுமியங்களிலிருந்து உரம் பெற்று உறுதியுடன் உயிர்த்துடிப்புள்ள அங்கமாக கடவுளின்பக்கம்; தடம் பதிக்கும். 
இயேசு கொண்டுவந்த நற்செய்திதான் என்ன?:கடவுள் நம்மை அன்புசெய்கிறார்;. நாம் கடவுள் காட்டும் வழியில் நடந்து சென்று அவரிடத்தில் நிலையான அமைதியையும் மகிழ்ச்சியையும் கண்டுகொள்ள வேண்டும்;. கடவுள் உலகின்மீது கொண்ட எல்லையற்ற அன்பினால் தன் ஒரே மகனை நமக்கு மீட்பராக அளித்தார்;. அவரிடத்தில் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். உண்மைக்கு சாட்சியம் பகிர்ந்து இயேசு உயிர்தெழுந்ததை உலகிற்கு அறிவித்து அதற்கு சாட்சியம் பகிரவேண்டும் என்பதே இயேசு கொண்டுவந்த நற்செய்தியின் சுருக்கம்.  உலகில் வாழ்கின்ற அனைவருக்கும் இந்நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டும் என்பதே இயேசுவின் விருப்பம். இயேசு உலகில் ஆற்றிய அதே பணியைத் தொடர்ந்து ஆற்றுவதே எமக்கு தரப்பட்ட பொறுப்பு. 'உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்” இயேசுவின் சீடர்கள் ஆற்ற வேண்டிய முக்கிய பணி 'நற்செய்தி அறிவித்தலே.” இதை நாம் வெறும் வார்த்தைகளால் வடித்துவிடக்கூடாது. மாறாக, நற்செய்தி என்பது ஒரு வாழ்க்கை முறை. இயேசுவின் போதனையை உள்ளத்தில் ஏற்று, அதை வாழ்வில் சான்று பகிர்தலே நற்செய்தி அறிவிப்பின் முக்கிய அம்சம். இவ்வாறு நாம் நற்செய்திக்கு நம் வாழ்வின் வழியாகச் சான்று பகிர்ந்தால்அனைவரும் நற்செய்தியை அன்னியமாகப் பார்க்கமாட்டார்கள்.
சிலுவைப்பாடுகளின்; கொடூரமான நிலையிலும் தந்தை தன்னை காப்பாற்றி உயிர்த்தெழச் செய்வார் என உறுதியாக இயேசுநம்பினார். சிலுவைப் பாடுகளே இயேசுவின் மாட்சியின் வெளிப்பாடுகளாயின. அதுவே உன்னதமான மகிமைபெற வழிவகுத்தது. அதுவே இன்று நாம் கொண்டாடும் விண்ணேற்பு விழா. இயேசு மாட்சிமையடைதலின் முழுமை இன்றைய விண்ணேற்பு நிகழ்விலே நிறைவடைகின்றது. இயேசு அடைந்த மாட்சியிலும் மகிமையிலும் மதிமயங்கி இருக்க நாம் அழைக்கப்படவில்லை. மாறாக நமக்கு தரப்பட்ட பணியை நிறைவேற்றவே அழைக்கப்படுகின்றோம். இவ்வுலகை அன்பு நிலவும் ஓர் இடமாக, நீதி தவழ்கின்ற தளமாக நம்பிக்கை முளைத்திடும் திடலாக மாற்றியமைத்திட நாம் உழைக்கவேண்டும் என்பதே நற்செய்தி அறிவிப்பின் முக்கிய அம்சமாகும். நாம் தூயஆவியால் உந்தப்பட்டு நற்செய்தியின் தூதுவர்களாக மாறி நற்செய்திப் பணியில் முழுமையாக நம்மை ஈடுபடுத்தினால் இவ்வுலகில் கடவுளின் ஆட்சி இன்னும் தெளிவாகத் துலங்கும். நற்செய்தியால் நம் வாழ்வு உருமாற்றம் பெறும். இயேசுவின் விண்ணேற்புப் பெருவிழா எம்மில் அர்த்தம்பெறும்.

காயங்களை மணலிலும் நன்மைகளை கற்களிலும்; எழுதக் கற்றுக்கொள்வோம்.

13.05.2012

ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

இன்றைய நற்செய்தியில் இயேசு நம்மோடு நட்பாக, நண்பனாக இருக்க ஆசைப்படுவதைப் பார்க்கின்றோம். உலகில் உறவின் முக்கிய இடத்தைப் பிடித்திருப்பது நட்பு. நண்பர்கள்;தான் ஒவ்வொருடைய வாழ்க்கையையும் செதுக்கும் சிற்பிகள் என்பார்கள். நட்பின் சிறப்பை உணர்ந்த “இயேசு, தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை" என்றார். தன்னைக் காட்டிக்கொடுத்தவரையும் 'தோழா, எதற்காக வந்தாய்?” என்ற இயேசுவின்  உயிரை உறைய வைத்த அந்த வார்த்தைகள் பகைவனையும் பதற வைத்துவிட்டது. இவ்வாறு இயேசு, பகையைக்கூட நட்பாக மாற்றவேண்டும். இருக்கின்ற நட்பை, உயிரைக்கொடுத்தேனும்; வளர்க்க வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துகிறார்.

இன்று எங்கள் வாழ்க்கையை உடைத்து உருக்குலைப்பதும் நண்பர்களே என்பவர்களும் உண்டு. கவிஞன் ஒருவன்: இறiவா, என் பகைவனை நான் பார்த்துக்கொள்கிறேன். நண்பனிடமிருந்து என்னை நீ காப்பாற்று என்று கதறியதையும் கேட்டிருக்கின்றோம். உயிரை வாங்குகின்ற நட்பு பல வடிவங்களில் மாறுவேடங்களில் அலைவதைப் பார்க்கின்றோம். சுயநலம் என்ற போர்வையில், பணம் பதவி ஆசையில் காட்டிக் கொடுக்கும் துரோகங்கள் நட்பில் நடத்தேறுகின்றன. அத்துடன் நயவஞ்சகம் காட்டி நண்பனை கொலைசெய்வோரையம் நாம் இன்று காண்கின்றோம்.

இந்த இடத்தில் ஒருமுறை நான் நட்பு  பற்றி வசித்த ஒரு கதையை சொல்லித்தான் ஆகவேண்டும்:  இரண்டு நண்பர்கள் பலைவனத்திற்கூடாக பயணித்துக் கொண்டிருந்தனர். பாதிவழியில் இருவருக்கு மிடையில் வாக்குவாதம் பலமாகிசெல்ல திடிரென ஒருவர் மற்றவரது கன்னத்தில் பளாரென அறைந்தார். அப்பொழுது தாக்கப்பட்டவர்: “இன்று எனது உற்ர நண்பன்  எனது கன்னத்தில் அறைந்துவிட்டான்” என்று மணலில் எழுதினார். பின்னர் இருவரும் பலைவனத்தில் நீர் பகுதியை காணும் வரை தொடந்து நடந்து கொண்டே சென்றனர். இறுதியில் நீர் பகுதிக்குள்  இறங்கி குழித்துக் கொண்டிருக்கும்போது அடிவேண்டியவர் சேத்துக்குள் திடிரென மூழ்கத்தொடங்கினார். உடனே அறைந்தவர் அவரை மிகுந்த கஸ்ரத்துடன் இழுத்தெடுத்து காப்பாற்றினார். அப்போது “இன்று எனது உற்ர நண்பன்  எனது உயிரை காப்பாற்றினார் என்று எழுதினார். இதையும் கண்ணுற்ற அறைந்த நண்பன் “நான் உன்னை காயப்படுத்தியபோது மணலில் எழுதினாய். இப்போழுது  கற்பறையில் எழுதினாய். இது ஏன் என வினாவினார்”. அதற்கு மறுமொழியாக மற்றவர்கள் எம்மை காயப்படுத்தும் போது நாம் மணலில் எழுதவேண்டும். அதனை மன்னிப்பு என்னும் காற்று அங்கே தடயமில்லாது அழ்த்துவிடும். ஆனால் மற்றவர்கள் எமக்கு நன்மை செய்யும் போது கற்பாறையில் செதிக்கிவிடவேண்டும் அதனை எந்த புயல்காற்றும் அழித்துவிடாது என்று பதில்கூறினார். மன்னித்து ஏற்கும் பண்பும் நட்பின் அடையாளம்தானே. நாம் இயேசுவை காயக்படுத்தும்போதெல்லாம்  அரவணைத்திட முன்வந்தார். நம்மைத் தேடி வந்துகொண்டே இருக்கிறார். தேடி வரும் கடவுளை நாம் நாடிச் செல்லும்போது அங்கே நட்பும் அன்பும் உருவாகும். பாசக் கயிற்றினால் நாம் பிணைக்கப்படுவோம். காயங்களை மணலிலும் நன்மைகளை கற்களிலும்; எழுதப்பழகுவோம்.

இன்றைய நற்செய்தி இயேசுவோடு ஒருவர் கொண்டுள்ள உறவை இரண்டு வடிவங்களில் காட்டுகின்றது எனலாம். “பணியாளர்”; - “நண்பன்”. எம் விசுவாசப்பயணத்தில் இந்த வடிவத்தில் ஏதாவது ஒன்று முன்னிலைபெறும் என்பது உண்மையே. அது தலைவன் - பணியாளர் உறவு அல்லது நண்பன் - நண்பன் உறவாகும். இயேசு நம்மோடு நண்பனாக இருக்கவே ஆசைப்படுவதை நற்செய்தியில் பார்க்கின்றோம்: “இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்ல மாட்டேன். ஏனெனில் தம் தலைவர் செய்வது இன்னது என்று பணியாளருக்குத் தெரியாது. உங்களை நான் நண்பர்கள் என்றேன்”. நட்பை வளர்ப்போம். உயிரைக்கொடுத்தும் நண்பனைக் காப்போம்.

தலைவன் - பணியாளர் உறவை முன்னிலைப்படுத்துவோர் நாம் இயேசுவின் முன்பு தகுதியற்றவர்கள் என்று கூறுகின்றனர். இதற்குத் தான் இயேசு “நீங்கள் என்னைத் தேர்ந்துகொள்ளவில்லை. நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன்” என்கின்றார். நமது கிறித்தவ வாழ்வும், நமது பணியும், நமக்கு இறைவன் தந்திருக்கிற தனிப்பட்ட அழைப்பு அனைத்தும் இறைவனின் கொடை. எனவே, இறைவனுக்கு நன்றியுள்ளவர்களாய் வாழக் கடமைப்பட்டிருக்கிறோம். அத்துடன், இறுதியாக எதற்காக இறைவன் நம்மை அழைத்திருக்கிறார் என்பதையும் நாம் சிந்திக்கவும் இன்றைய வாசகம் அழைக்கிறது. “நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன்”. இறைவன் நம்மைத் தேர்ந்துகொண்டதன் நோக்கம். நாம் பிறருக்குப் பயனுள்ள வகையில் கனி தரவேண்டும் என்பதற்காகவே. எனவே நேர்மையோடு, பிறருக்குப் பயன்தரும் வகையில் நாம் வாழ்வோம். பகைவரைகூட நட்பனாக மாற்றவோம்.

இணைந்திருந்து இயேசுவோடு நிலைத்து வாழ்வோம்

06.05.2012

ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

கடவுளும், சமயமும் தேவையில்லை என்ற நிலை வளர்ந்துவரும் இன்றைய உலகில் இயேசுவும் அவரது போதனைகளும் எம் வாழ்வைவும் ஒரு மாற்று சாட்சியாக விளங்கவைக்க வேண்டும் என்று எமக்கு கற்பிக்கின்றன. திராட்சைச் செடியாம் இயேசு தம்மோடு இணைந்த கொடிகளாக நாம் இருந்து, பலன் தருமாறு எம்மை அழைக்கும் பகுதியை இன்று நற்செய்தியில் காண்கின்றோம். நாம்  இயேசுவினுள்ளும் அவரது வார்த்தைகள் எங்களுள்ளும் நிலைத்திருந்தால் நாங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும். இயேசுவே நமது வாழ்வின் மையம் என்பதை இது உறுதியாக காட்டுகின்றது. இயேசுவே உண்மையான திராட்சைச் செடி. திராட்சைச் செடியோடு இணைந்து செழிக்கும் கொடிகளைப் போல, இயேசுவோடு இணைந்திருந்து பலன்தர நாம் அழைக்கப்படுகிறோம். இயேசுவில் நம்பிக்கை கொண்டிருக்கும் நாம் அனைவரும் நற்செய்தியின் தூதுவர்களாக திகழ்வதே, கடவுள் எதிர்பார்க்கும் பலன் தரும் வாழ்வாகும்.

“நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது” இறைவனைத் தேடும் இந்த தாகம் ஒவ்வொரு மனித உள்ளத்திலும் இருக்கவேண்டும். “எங்களை உமக்காக உருவாக்கினீர் இறைவா, எனவே உம்மில் நாங்கள் ஒய்வு கொள்ளும்வரை எங்கள் இதயம் ஓய்வதில்லை" என்று புனித அகஸ்தின் கூறிய வார்த்தைகளை மேற்கோள் கொண்டு நாம் இயேசுவில் இணைந்து பலன் தர ஓயாமல் உழைப்போம்.

தற்போதைய உலகில் அற்புதமான பல அறிவியல் முன்னேற்றங்கள் காணப்பட்டாலும், அவற்றில் திருப்தி அடையாமல், மனித மனம் இன்னும் ஆழ்ந்த தேடலில் ஈடுபட்டிருப்பதைக் காண முடிகிறது. திராட்சைச் செடியாம் இயேசுவோடு இணைந்து செல்ல முடியாது என்பது போன்ற ஓர் எண்ணத்தை இன்றைய அறிவியல் உலகம் உருவாக்கிகுகின்றது. ஆயினும் இணைந்து செல்லும்போது இன்னும் பல ஆழமான உண்மைகளை உணர முடியும் என்பதற்கு  நானே திராட்சைக் செடி நீங்கள் அதன் கொடிகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது என்னும் பகுதிகள்  சான்றாகும்.
 
இயேசுவின் சீடர்கள் கனி தர வேண்டும், அதுவும் மிகுந்த கனிதர வேண்டும் என்பது இயேசுவின் எதிர்பார்ப்பு. நல்ல நிலத்தில் விழுந்த விதைகள் முப்பது, அறுபது, நூறு மடங்கு எனப் பலன் தந்தன என்னும் விதைப்பவன் உவமையையும் ஆண்டவரே மொழிந்துள்ளார். எனவே, மிகுந்த கனி தருபவர்களாகப் பணியாற்றுவோம்.

மண்ணில் மனித வாழ்க்கை என்பது நமக்குள் நிறைவையும் நிம்மதியையும் தந்து மிகுந்த கனி நிறைந்த வாழ்வாக இருக்க வேண்டும் என்பதே அனைவரதும் ஆவல். ஒவ்வொருவருடைய வாழ்க்கையும், பலருக்குப் பயன் உள்ளதாக, ஆற்றல் தருவதாக அமையவேண்டும். பிறருக்கு பயன் தந்து இறைவனுக்கு மகிமை சேர்ப்பதே ஒருவன் வாழ்ந்ததன் பயன் எனலாம். நமது வாழ்வும், பயனும் யாரையுமே தொடவில்லையென்றால் என்னே ஒரு பரிதாபம். எனவே, கனி தரும் சொற்களைப் பேசுவோம், மிகுந்த கனிதருமாறு வாழ்வோம். இத்தகைய கனி தரும் வாழ்க்கையை வாழ, ஒருவன் இறைவனோடு இணைந்திருக்க வேண்டும். இக்கருத்தை இயேசு இன்றைய நற்செய்திப்பகுதியில் பலமுறை உணர்த்துகிறார். 'இணைந்திருத்தல்”, 'நிலைத்திருத்தல்” என்னும் வார்த்தைகளை இங்கு பலமுறை பயன்படுத்துகிறார். “இணைந்து இருந்தாலன்றித் தானாக கனிதர இயலாது". “இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார்". "என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது". “நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும்." இத்த வார்த்தைகள் இதற்குச் சான்றுகள்.

இயேசுவோடு இணைந்திருப்பதன் நெருக்கம் பல பலன்களைக் கொடுக்கவல்லது. இயேசுவை விட்டுக் கொஞ்சம் விலகினாலும் அந்த இழப்பு, கொஞ்சம் அல்ல. மிக மிகப் பெரிது. “என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது" கொஞ்சம்தானே இயேசுவை விட்டு விலகியிருக்கறோம். ஆகவே கொஞ்சம்தானே நட்டம் என்ற கணக்கு, ஆன்மீகத்தில் தப்புக்கணக்கு. இயேசுவை விட்டு கொஞ்சம் விலகினாலே நாம் எல்லாவற்றிலும்  நட்டமடைந்துவிடுவோம்.

அதே வேளையில், நாம் இயேசுவோடு இருந்தால், “விரும்பிக் கேட்டதெல்லாம் கிடைக்கும்". இயேசுவோடு நெருக்கமாக இருந்துகொள்வோம். செடியும் கிளையுமாக, கிளையும் கொடியுமாக. இணை பிரியாத இந்த நெருக்கம் மிகுந்த பலனைத் தரும். கனி கொடுக்கும். எம்மை பிரிக்கும் சக்திகள் காத்துக்கொண்டே இருக்கின்றன. அவைகள் எமக்கு உள்ளேயும் இருக்கும் வெளியேயும் இருக்கும். எனவே அவைகளை அடையாளம் கண்டு அழிப்போம். இயேசுவோடு இணைந்த கிளைகளாக வாழ்வோம். வெற்றி நம் கையில்.

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff