Friday, July 27, 2012

பகிர்வின் புதுமையை பாரெங்கும் படைப்போம்.

29.07.2012
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

ஆயிரக்கணக்கான மக்களுக்கு அற்புதமான விதத்தில் இயேசு உணவளித்தார் என்னும் அருஞ்செயல் யோவான் உட்பட நான்கு நற்செய்தியாளர்களாலும் தவறாமல் தமது புத்தகங்களில் தருகின்றனர்;. அப்பங்களை பலுகசெய்த புதுமையை  இன்று நற்செய்தியாக யோவான் நற்செய்தியிலிருந்து பார்க்கின்றோம். இக்கட்டான சூழ்நிலைகளில், எதிர்பாராத இடங்களில் இருந்து புதுமைகள் நிகழத்தான் செய்கின்றன என்பது நற்செய்தி காட்டும் உண்மை. இந்த பாலை நிலத்தில் இத்தனை ஆயிரம் பேருக்கு எப்படி உணவளிப்பது என்று கவலையில், கலக்கத்தில் மூழ்கியிருந்த சீடர்களுக்கு இயேசு உணவளித்து கவலை, கலக்கம் தீர்க்கின்றார். ஐந்து அப்பம், இரண்டு மீன், இயேசுவின் ஆசீர். ஐந்தாயிரம் பேர் வயிறார உண்டனர். மீதியும் பன்னிரண்டு கூடைகளில்இருந்தது. இயேசு தனி ஒருவராய் உணவைப் பலுகச் செய்தது ஒரு புதுமைதான். நற்செய்தியின்படி இது ஒரு பார்வை.
சில விவிலிய அராய்ச்சியாளர்கள் இன்னும் ஒரு பார்வையை முன்வைக்கின்றார்கள்: யூதர்கள் அடிமை வாழ்வு வாழ்ந்ததால் உணவுக்கு அதிகம் கஷ்டப்பட்ட ஒரு மக்கள் இனம். எனவே, அவர்கள் வீட்டை விட்டு வெளியேறும் போது தங்கள் பொதியில்; கொஞ்சம் உணவு எடுத்து செல்வது வழக்கம். அன்றும், இயேசுவின் போதனைகளைக் கேட்க வந்திருந்த போது, அவர்கள் உணவு கெண்டு வந்திருந்தார்கள். மாலை ஆனதும் பசி வயிற்றைக் கிள்ள ஆரம்பித்தது. உணவு பொட்டலங்களை யார் முதலில் பிரிப்பது? பிரித்தால் பகிர வேண்டுமே என்பது அவர்கள் ஏக்கம்

இயேசுவின் போதனைகளில் பகிர்வைப் பற்றி பேசினார். ஆனால் எப்படி இத்தனை பேருக்கு பகிர முடியும்? இந்த கேள்விகளில் அவர்கள் முழ்கி இருந்தார்கள். இயேசுவின் சீடர்களுக்கும் இதே சிந்தனைதான். யார் ஆரம்பிப்பது? அப்போதுதான் அந்த புதுமை நிகழ்ந்தது. ஒரு சிறுவன் தான் கெண்டு வந்திருந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் யேசுவிடம் கொடுத்தான். அங்கே ஆரம்பமானது ஒரு அற்புத விருந்து. ஒரு சிறுவன் ஆரம்பித்த பகிர்வு, ஒரு பெரிய விருந்தை ஆரம்பித்து வைத்தது. அந்த மகிழ்விலேயே அங்கு இருந்தவர்களுக்கு வயிறு நிறைந்திருக்க வேண்டும். எனவே தான் அவர்கள் உண்டது போக மீதி 12 கூடைகளில் நிறைத்ததாக யோவான் நற்செய்தி கூறுகிறது. இயேசு அன்று நிகழ்த்தியது ஒரு பகிர்வின் புதுமை.

நாம் வாழும் இன்றைய சூழலில் இந்த புதுமை அதிகம் தேவைப் படுகிறது. இத்தனை வளங்களும் நவீன வசதிகளும் நிறைந்த இன்றைய உலகில் இன்னும் ஆயிரமாயிரம் மக்கள் பசியிலும் பட்டினியிலும் மடிகின்றார்கள். இதில் என்ன கொடுமை என்றால், பெரும்பாலோனோர் குழந்தைகள். இந்த மரணங்கள் தேவை அற்றவை. இந்த தேவையற்ற மரணங்கள் நிறுத்தப்பட வேண்டுமானால், இயேசு அன்று ஆற்றிய பகிர்வுப் புதுமை மீண்டும் உலகமெல்லாம் நடக்க வேண்டும். இயேசு இன்று நம்மிடையே வந்தால் உணவை இன்னும் பலுக செய்வதைவிட இருக்கும் உணவைப் பகிர்ந்து கொள்ளும் புதுமையைச் செய்வார். தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் உலகத்தை அழிப்போம் என்று கோபத்தில் அன்று சொன்னார் பாரதி. உலகத்தை அழிப்பது எளிது. உலகத்தை வாழ வைக்க, வளப்படுத்த பகிர்ந்துண்ணும் மனதை நமக்கு தர வேண்டும் என இறைமகனிடம் வேண்டுவோம். முன்னேற்றத்தின் பெயரால் உலகத்தையும் இயற்கையையும் அழிப்பதை நிறுத்திவிட்டு, உலகை வளப்படுத்தும் அறிவை, மனதை தரவேண்டும் என இறைவனிடம் வேண்டுவோம்.

பிரச்சினைகளுக்குத் தீர்வு பணத்தால் கிடைத்துவிடாது. அல்லது அறிவுத் திறமையால் சாதித்துவிடுவதும் அல்ல. பல சந்தர்ப்பங்களில் நாம் இப்படித்தான் பணத்தை வைத்து தீர்க்கப் பார்க்கிறோம். பத்துப்பேரை வைத்து சாதிக்கலாம் என நினைக்கிறோம். ஆண்கள் மட்டும் ஏறக்குரைய 5000 பேர், பெண்கள் குழந்தைள் வேறு. இவ்வளவு பெரிய கூட்டத்திற்கு, அந்த  இடத்தில் உணவு கொடுக்க வேண்டும். இது பெரிய பிரச்சினை. பணத்தால் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முற்பட்டால், திருத்தூதர் பிலிப்பு சொன்னதுபோல இரு நூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறு துண்டும் கிடைக்காது. பணத்தை வைத்து செய்யும் முயற்சிகள் எல்லாம் பிரச்சினைகளுக்குத் தீர்வு தருவதல்ல. பிரச்சினைகளைப் பின் விழைவுகளோடு பெரிதாக்குபவை.
ஆகவே இன்றைய நற்செய்தியின்படி திருத்தூதர் அந்திரேயா காட்டிய வழியே சரியானது. “இங்கே ஒரு சிறுவன் இருக்கிறான். அவனிடம் ஐந்து வார்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன” என அடையாளம் காட்டி, அனைவரின் பங்களிப்புக்கும் அடித்தளமிடுகிறார். கடவுளுக்கு நன்றி செலுத்தியதன் வழியாக ஆன்மீகத்தை கூட்டத்துள் ஏற்படுத்தி, அனைவரையும் தங்களிடம் இருப்பதைப் பகிர்ந்துகொள்ளும் பண்பாளர்களாக்குகிறார். பசிப்பிரச்சனை பறந்தோடுகிறது. ஆகவே ஆன்மீகத்தை அனைத்துப் பிரச்சினையினுள்ளும் அனுமதிப்போம். பிரச்சினைகளுக்கு நல்தீர்வுகாண்போம். இயேசுவோடு இனிது வாழ்வோம்.

No comments:

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff