08.07.2012
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
இயேசு தனது சொந்த ஊருக்கு வந்தபோது அவருக்குக் கிடைத்த அனுபவத்தை இன்றைய நற்செய்தி வாசகம் விளக்குகிறது. அவருடைய போதனையைக் கேட்ட சொந்த ஊர்மக்கள் அவரை நம்ப மறுத்து ஏற்றுக்கொள்ளத் தயங்கினார்கள். இந்த அனுபவம் அவருக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தையும், வேதனையையும் அளித்திருக்க வேண்டும்.
1960ஆம் ஆண்டு சுடான் நாட்டில் மதக்கலவரம் பயங்கரமாக பரவியபோது பாரிடே டபான் என்னும் கத்தோலிக்க இளைஞன் அங்கிருந்து அடுத்திருந்த உகாண்டா நாட்டுக்கு தப்பி சென்றுவிட்டார். உகாண்டாவில் குருவானவராக திருநிலைப்படுத்தப்பட்டார். சுடான் நாட்டில் நிலைமை சரியானதும் டபான் தம் நாட்டிற்குத் திரும்பினார். தம் நாட்டில் அவருக்கு ஒரு பங்குத்தளம் பணிசெய்வதற்கு அளிக்கப்பட்டது. ஆனால் அங்கிருந்த மக்கள் அவரைக் குருவானவர் என நம்ப மறுத்தார்கள்.
மக்கள் பாரிடே டபானை உற்று நோக்கிவிட்டு அவர் ஒரு கறுப்பு நிறத்தவர். அவர் ஒரு குருவானவர் என எப்படி அழைக்கமுடியும் எனக் கேட்டனர். ஏனெனில் அதுவரை அங்கு வெள்ளையர்களே குருவானவர்களாக இருந்து வந்தனர். வெள்ளை நிறத்து குருவானவர்கள் மக்களுக்கு உணவும் ஆடையும் கொடுத்து வந்தனர். டபானோ அந்நாட்டு மக்களினத்தைச் சேர்ந்தவர். அவரிடம் மக்களுக்குக் கொடுப்பதற்கு ஏதுமில்லை. மேலும் அக்கலகட்டத்தில் டபான் இரண்டாம் வத்திக்கான் சங்கம் கொண்டு வந்த மாற்றங்களை அமுலாக்க வேண்டியிருந்தது. ஆந்த மாற்றங்கள் மக்களுக்கு மிகச் சிரமமாக இருந்தன. இந்தக் கறுப்பு நிறக்குரு பீடத்தை திருப்பிவிட்டு மக்களை நோக்கி பலிபூசை நிகழ்த்துகிறார். நமது மொழியிலேயே பலி பூசையை நிகழ்த்துகிறார். இவர் உண்மையான குருவானவராக இருக்கமுடியாது. என அவரை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயங்கினார்கள். பல்வேறு சிரமங்களுக்குப் பிறகுதான் அம்மக்கள் டபானை குருவாக ஏற்றுக் கொண்டனர்.
இயேசு தம் சொந்த ஊராகிய நாசரேத்துக்குச் சென்றபோது வெறுத்து ஒதுக்கப்பட்டதன் நவீன கதைதான் குருவானவர் டபான் பட்ட சிரமங்கள் என்று கூறிவிடலாம். இயேசுவும் டபான் என்ற குருவும் மக்களால் ஏளனமாக வெறுத்து ஒதுக்கப்பட்ட இரு எடுத்துக்காட்டுக்கள். மக்கள் ஒருவர் மற்றவரிடம் ,இவர் தச்சர் அல்லவா. மரியாவின் மகன்தானே என இழிவாகப் பேசிக் கொண்டனர். அவர்கள் என்ன நினைத்தார்கள.; இவரும் நம்மைப்போல சாதாரண பணியாளர்தானே. நம்மைவிட கடவுளைப்பற்றி இவருக்கு எப்படி இன்னும் அதிகமாகத் தெரியமுடியும் என்று நினைத்தனர். தச்சன் மகனாகிய இயேசுவுக்கு கடவுள் பற்றிய மெய்யறிவு எப்படி வந்தது என்று நாசரேத்தூர் மக்கள் மட்டும் ஆச்சரியப்படவில்லை நாமும் தான் ஆச்சரியப்படுகின்றோம்.
இயேசுவும் டபான் என்ற குருவைப்போல் மக்களால் ஏளனமாக வெறுத்து ஒதுக்கப்பட்ட பலரை நாம் இங்கு எடுத்துக்காட்டுக்களாக பார்க்கலாம். அமெரிக்காவின் மாபெரும் பேச்சாளர் பேராயர் புல்டன் ஷீன் என்பவரை அவர் கல்லூரியின் மேடைப்பேச்சுக் கழகம் மிக மட்டரகமான பேச்சாளர் என ஒதுக்கி ஓரம் கட்டினர். நோபல் பரிசு பெற்ற நாவலாசிரியர் ஏர்னஸ்ட் ஹெமிங்வே என்பவர் எழுத்தத் தொடங்கியபோது,உமக்கும் எழுத்துப்பணிக்கும் வெகு தூரம். நீ அதை மறந்துவிடு என்றனர். புகழ்மிக்க ஆங்கில எழுத்தாளர்கள் ஆகத்தா கிறிஸ்டி , சார்லஸ் டிக்கன்ஸ் , ஜேன் ஆஸ்டின் , ஜோசப் காண்ரட் , சாமுவேல் பெக்கட் , ஆர்னல்ட் பென்னட் , மாக்ஸ் பீர்போம், என பெயர்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அவர்கள் காலங்கள் போற்றும் நூலாசிரியர்கள். ஆனால் இவர்கள் எல்லாரும் தொடக்க காலத்தில் தூக்கி குப்பையில் எறியப்பட்டவர்கள் .
இயேசுவையே அவரது காலத்தில் வெறுத்து ஒதுக்கினார்கள். இன்று நம்மோடு பணி செய்பவர்களே நமக்கு எதிரிகளாகச் செயல்படுவதைக் காண்கிறோம். லூனி டியூன்ஸ் என்ற கார்ட்டூன் படத்தில் வரும் ஒரு நாடக பாத்திரம் பேப்பே எல்லோரையும் கவர்ந்த ஒரு கதாபாத்திரம். அவர் மற்றவர்கள் அவரை வெறுத்தாலும் அன்பு காட்டத் தயங்கமாட்டார். இயேசுவும் அப்படித்தான். யாரையும் அவர் தள்ளிவிடுவதில்லை. இயேசுவை மற்றவர்கள் மறுதலித்தாலும் , வெறுத்தாலும் அவர் விடாது அன்பு காட்டுபவர் . நாமும் அவ்வாறே பிறர் நம்மை வெறுத்தாலும் தவறாது அன்பு காட்டுவோம். நாமும் இயேசுவையும், குரு டபானையும், கார்ட்டூன் பாத்திரம் பேப்பேயையும் நமக்கு மாதிரியாக எடுத்துக் கொள்வோம். நீங்கள் வெறுக்கப்படும்போது மகிழுங்கள். உங்களுக்கு வானகத்தில் மிகப்பெரிய கைம்மாறு காத்திருக்கிறது என்னும் இயேசுவின் வார்;த்தைகளை எமது சொத்துக்காளாக்குவோம்.
No comments:
Post a Comment