Sunday, October 21, 2012

எம்மை ஏழைகளுக்குக் கொடுப்போம்

14.10.2012 
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

செல்வந்தர்கள் வாழ்க்கை இன்று எப்படிப்பட்டதாக இருக்கிறது. செல்வந்தர்களாக தங்களைக் காட்டிக் கொள்ள விரும்புவோர் எண்ணிக்கையே அதிகமாகிறது. இதனால் கடன்பட்டு வாழ்க்கையை தொலைத்தவர்கள் அதிகம். சமூகத்தில் தங்களை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்ற மனநிலையில் இன்று மனஉளைச்சலுக்கு ஆளானவர்களே இன்னும் அதிகம். இந்த நிலையில் உள்ளதையெல்லாம் விற்று, கொடுத்துவிட்டு வந்து என்னை பின் செல்லுங்கள் என்ற இறைவார்த்தை அர்த்தத்தை இழக்கிறதோ என எண்ணத் தோன்டுகிறது. இயேசு சொன்னதைக் கேட்டதும் இயேசுவைத் தேடி வந்த இந்த மனிதர்; முகம் வாடி வருத்தத்தோடு சென்றுவிட்டார்.

எத்தனை இளைஞர்கள் இன்று முக வாட்டத்தோடு அலைகிறார்கள். போதை, மது, கேளிக்கை இவற்றால் நிம்மதி இழந்து தவிக்கும் இளைஞர்கள் எத்தனைபேர் நம்மிடையே இருக்கிறார்கள். இளைஞர்கள் பலர் பணத்தையும் உடலையும் உள்ளத்தையும் இறுதியில் வாழ்க்கையையும் இழந்து தவிப்பதை நாம் பார்த்திருக்கிறோம். இப்படிப்பட்ட நிலையில்தான் அந்த இளைஞன் இயேசுவிடம் வந்தான்.  இயேசு அவனிடம், 'நீ நல்லவன். ஆனால் உன்னிடம் உள்ள பணம், சொத்து உன்னை மயக்கிவிட்டது. அதை தவறாகப் பயன்படுத்தி நீ உன் வாழ்வை அழித்துக்கொண்டாய். நீ தவறு செய்யவில்லை. ஆனால் நல்லது செய்ய தவறிவிட்டாய். அதுதான் நீ சந்தோஷமில்லாமல் இருப்பதற்குக் காரணம். ஆகவே இன்றிலிருந்து சில நல்லவற்றைச் செய்யத் தொடங்கு மீட்படைவாய்" என்கிறார்.

நாற்செய்தியின் படி மீட்படைந்தோர் யார் என்னும் ஒரு ஆய்வை செய்தால் பல விடைகளை காணலாம். இயேசுவை, இறையரசை, இயேசுவின் நற்செய்தியை ஏற்றுக் கொண்டோர் அனைவரும் மீட்படைந்தனர் என்று எளிதாக கூறிவிடலாம். இன்னும் கொஞ்சம் ஆழமாக பாத்தால்: கூரைப்பிரிப்பில் விசுவாசம் வெளிப்பட்டது. திமிர் வாதக்காரன் மீட்படைந்தான். பார்க்க வேண்டும் என்ற ஆசையில் அத்திமரத்தில் ஏறியதில் விசுவாசம் வெளிப்பட்டது. சக்கேயு மீட்படைந்தான். தொட்டால் போதும் என்பதில் இறையரசு இருந்தது. கனானேயப் பெண் மீட்படைந்தாள். என்னையும் மன்னிப்பார் என் தந்தை என்ற நினைவு இருந்தது. ஊதாரி மகன் மீட்படைந்தான். என்னை நினைத்தால் போதும் என்ற ஆசை இருந்தது. சிலுவையிலேயே கள்ளன் மீட்படைந்தான்.

மீட்படையக் கேட்டவர்கள் யார் என் நோக்கினால்: ஒரு சட்ட வல்லுநர் மீட்படைய என்ன செய்ய வேண்டும். 'சட்டங்களை விட, சாதி சம்பிரதாயங்களை விட, அயலானை நேசிப்பதே மீட்படைய வழி என்பது பதிலானது" ஒரு செல்வர் - மீட்படைய என்ன செய்ய வேண்டும்? 'பணத்தை வைத்துப், பரிமாறிக் கொள்வது, பகிர்ந்து கொள்வது மேலானது என்பது பதிலானது". செபதேயுவின் மக்கள் யோவான்-யாகப்பர் வந்தனர். இடுக்கான வாயில் வழியே நுழையுங்கள் என்றதன் மூலம் சிலுவை வழியே மீட்பு உண்டு என்பது அறிவிக்கப்பட்டது.

'நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?" என்னும் கேள்வி நம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் எழுகின்ற கேள்வியே. இம்மண்ணக வாழ்வோடு மனிதரின் இலட்சியங்கள் மடிந்துவிடுவதில்லை. சாவுக்குப் பின் வாழ்வுண்டு என்னும் உறுதிப்பாடு மனித உள்ளத்தில் ஆழப் பதிந்த ஒன்று. எனவே, 'நிலைவாழ்வை"அடைய வேண்டும் என்னும் உள்ளார்வத்தால் நாம் உந்தப்பட்டு, நிறைவடைய முனைகின்ற வேளையில் அக்குறிக்கோளை எட்டுவதற்கான வழியைத் தேடுவது இயல்பே. இயேசு அவ்வழியை நமக்குக் காட்டுகிறார். அவரை முழு மனத்தோடும் விருப்போடும் பின்செல்வோர் அவர் வாக்களிக்கின்ற நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்வர்.

நாம் வாழ்க்கையில் நிறைவையும் நிம்மதியையும் காண விரும்புகிறோம். வாழ்க்கையில் எப்போதும் வசந்தம் வீச வேண்டும் என்று விரும்புகிறோம். எனவே  இன்று ஆண்டவர் சொல்லுவதைக் கேட்போம் அந்த பணக்கார இளைஞரிடம் நிறைய நல்ல மனது இருந்தது. நியாயமாக நிம்மதியாக வாழ வேண்டும் என்ற நல்ல எண்ணம் இருந்தது. தன் வாழ்வில் கடவுளின் கட்டளைகளையும் அன்றாடக் கடமைகளையும் தவறாது கடைபிடித்து வாழ்ந்துள்ளான். ஆனாலும் இவற்றில் தான் எதிர்பார்த்த நிறை வாழ்வையும் நிம்மதி வாழ்வையும் அவன் காணவில்லை. ஆகவேதான் இயேசுவிடம் வந்துள்ளான் எனலாம். இயேசுவோடு; வாழ்வின்; ஆழத்துக்குள் செல்லுவோம். எங்கள் குடும்பத்தின் ஆழத்துள் அவரை அழைத்து செல்லுவோம். எங்கள் வாழ்வின் பிரச்சினைகளின் ஆழத்துள் இயேசுவை கூட்டிச் செல்லுவோம். அவர் அந்த பணக்கார இளைஞனை கூர்ந்து நோக்கியது போல எங்கள் உள்ளத்தையும் குடும்பத்தையும் பிரச்சனைக்குரிய இடங்களையும் கூர்ந்து நோக்கட்டும். நோயின் ஆழத்திற்குச் செல்லட்டும். நிறைவாழ்வு தேடிய பணக்கார இளைஞனின் வாழ்வின் ஆழத்துள் சென்று, கூர்ந்து நோக்கிய இயேசு, அவனது நோயின் காரணம் அறிந்து அதற்கு மாற்று மருந்து கொடுத்தார். 'நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும்". எங்கள் வாழ்வைக் கூர்ந்து நோக்கும் இயேசு எங்கள் நல்வாழ்வுக்கும் நல் விருந்தும் மருந்தும் தருவார். மகிழ்வோடு ஏற்று வாழுவோம். நிறை வாழ்வைக் காண்போம்.

No comments:

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff