Sunday, October 21, 2012

நாற்காலி, சிலுவை, இரண்டுமே அரியணைகள்தாம். நாற்காலியா, சிலுவையா? தேர்ந்து கொள்ளுவோம்.

21.10.2012
 ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்


செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் இயேசுவை  அணுகிச் சென்று அவரிடம், நீர் அரியணையில் இருக்கும் போது எங்களுள் ஒருவர் உமது வலப்புறமும் இன்னொருவர் உமது இடப்புறமும் அமர்ந்து கொள்ள எங்களுக்கு அருளும் என்று வேண்டினர்.

அரியணை பற்றி இன்று சிந்திப்போமானால்  நாற்காலி, சிலுவை என்னும் இரண்டும் அரியனைகள் ஞாபகத்திற்கு வரலாம.; நாற்காலி அரியணைக்காக உயிரைத் தந்தவர்களும், எடுத்தவர்களும் உண்டு. சிலுவையில் உயிரைத் தந்தவர்களும், எடுத்தவர்களும் உண்டு.

ஒரு முறை, அன்னை திரேசாவுடன் ஒரு நாள் முழுவதும் செலவிட்ட ஒரு பத்திரிக்கையாளர், அந்த நாள் இறுதியில் அன்னையிடம்: எனக்கு யாராவது பத்தாயிரம் டொலர்கள் தருகிறேன் என்றால் கூட இது போன்ற வேலைகளை நான் செய்ய மாட்டேன்." என்றாராம். அதற்கு அன்னை தெரசா அவரிடம்: நானும் அப்படித்தான். பத்தாயிரம் டொலருக்காக இந்த வேலைகளைச் செய்ய மாட்டேன்." என்று பதில் சொன்னாராம். இப்படி பணி செய்த அன்னை திரேசாவைப் போல், எத்தனையோ தன்னலமற்ற பணியாளர்கள் மக்கள் மனதில் அரியணை கொண்டிருக்கிறார்கள். ஆனால், அரியணை ஏறுவதற்காக, மக்களைப் படிகற்களாகப் பயன்படுத்திய பலரை வரலாறு மறந்து விட்டது. மக்களும் மறந்து விட்டனர். அன்னையை அல்ல

உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும். இயேசுவின் இந்த வார்த்தைகள் நமக்கு ஒரு பெரும் சவாலாக அமைகிறது. பணியாளர் தலைமைத்துவம் என்பது அண்மையில் பலராலும்  பேசப்படும் ஒரு கருத்து. பணியாளர் தலைமைத்துவம் பற்றி விக்கிபீடியாவில் தேடிய போது வரலாற்றில் பலர் சொன்ன கருத்துக்களோடு, இயேசு இன்றைய நற்செய்தியில் சொன்ன கருத்துக்களும் உள்ளன. இயேசு என்ற தலைவர் அவருடைய சீடர்களின் பாதங்களைக் கழுவிய செயலும் பணியாளர் தலைமைத்துவத்திற்கு ஒரு எடுத்துக் காட்டாக அங்கு சொல்லப் பட்டுள்ளது. இந்த பணியாளர் தலைமைத்துவத்தில் பல அம்சங்கள் உள்ளன: பரிவோடு குறை கேட்பது, மற்றவரை உற்சாகப்படுத்துவது, மற்றவரின் திறமைகளை வெளிக் கொணர்வது... என இப்படிபல பேசப்படுகின்றன.

11வயதில் ஒரு சிறுவன் பங்கு சந்தையில் ஈடுபட்டான். 14 வயதில் அந்த சிறு கம்பெனியை ஆரம்பித்தான். இன்று தனது 79 வது வயதில், 63 பெரும் நிறுவனங்களுக்கு அதிபராக இருந்து உலகின் பெரும் செல்வந்தர்களில் இரண்டாம் இடம் பிடித்திருக்கும் அவர் - வாரன் பபெட். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே எளிய வீட்டில் வாழ்கிறார். அது அரண்மனை அல்ல. தன் காரைத் தானே ஓட்டுகிறார். அவர் ஒரு விமான கம்பெனியை நடத்தினாலும், சொந்த விமானம் இல்லை. ஒரு செல்போன், ஒரு கணனி இல்லாத அந்த மனிதர் - பல தலைவர்களுக்குப் பாடம்.

நான் கேள்விப்பட்ட ஒரு சம்பவம்: இந்தியாவில் சீக்கியரான ஒரு மாவட்ட ஆட்சியர், தமிழ் நாட்டில் ஒரு முக்கிய நகருக்கு நியமனம் ஆனார். பல அதிரடி மாற்றங்கள். நேர்மையாய் உழைக்கும் அதிகாரிகள், முதல்வர்களை வைத்து வந்த ஒரு சில திரைப்படங்கள் இவரைப் பின்னணியாக வைத்து எடுக்கப்பட்டனவோ என்று பலரும் எண்ணியதுண்டு. அப்படி நேர்மையாக, சிறப்பாக செயல் பட்டவர்.

ஒரு நாள் அதிகாலையில் இவர் வழக்கம் போல் உடற்பயிற்சிக்காக நடந்து சென்றபோது, ஒரு இடத்தில் சாக்கடை அடைத்துக் கொண்டு தண்ணீர் வெளியேற சிரமமாக இருந்தது. ஒரே நாற்றம். நகராட்சி ஊழியர் அதைச் சுற்றி நின்று பேசிக்கொண்டிருந்தனர். அந்த மாவட்ட ஆட்சியர் அங்கே போனதும், கேட்டார்: என்ன பிரச்சனை? சாக்கடை அடைச்சிருக்கு. அது தெரியுது. சுத்தம் செய்யிறதுதானே. ஒரே நார்த்தமாக இருக்கு, எப்படி இறங்குறதுன்னு தெரியவில்லை. அவர்கள் சொல்லி முடிக்கும் முன்பு, அவர் சாக்கடையில் இறங்கி, அங்கிருந்த கருவிகளை வைத்து, அந்த அடைப்பை எடுத்து விட்டார். பிறகு மேலே வந்து, இப்படித்தான் செய்யவேண்டும் என்று சொல்லி அவர் வழி போனார்.

வாழ்க்கையின் பெரும் பகுதியை ஏழைகளுக்காகவும், சமுதாயத்தால் விலக்கப்பட்டவர்களுக்காகவும் செலவழித்த அன்னை திரேசா கோடான கோடி மக்கள் மனதில் அரியணை கொண்டிருக்கும் தலைவர். வாரன் பபெட் பணத்தையே வாழ்க்கையில் தெய்வமாக வழிபடும் பல நிறுவன முதலைகளுக்குப் பாடம் சொல்லித் தருகின்ற ஒரு பெரிய செல்வந்தர்.

அரசு அதிகாரிகளும் நேர்மையாக, திறமையாக உழைக்க முடியும். அது வெறும் சினிமா கதை அல்ல என்பதற்கு ஒரு எடுத்துகாட்டு சீக்கியரான அந்த மாவட்ட ஆட்சியர். பணியாளர் தலைமைத்துவத்திற்கு இவர்களெல்லாம் உதாரணங்கள. உலகின் பெரிய, பெரிய வியாபார நிறுவனங்களெல்லாம் பணியாளர் தலைமைத்துவத்தைப் பற்றி சிந்திக்கவும், செயல் படவும் ஆரம்பித்துவிட்டனர். இவர்களை இந்தப் பாதையில் சிந்திக்கத் தூண்டிய இயேசுவின் வார்த்தைகள் நம்மையும் நல் வழி படுத்த வேண்டுவோம்.
நாற்காலி, சிலுவை, இரண்டுமே அரியணைகள்தாம். நாற்காலியா, சிலுவையா... தேர்ந்து கொள்ளுவோம்.

No comments:

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff