Wednesday, October 24, 2012

'உமக்கு நான் என்ன செய்ய வேண்டும்?" என எவராவது கேட்கமாட்டார்களா என்று ஏங்குவோருக்கு எங்கள் பதில் என்ன?

 28.10.2012 
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

பார்க்கும் திறன் இருந்தால் மட்டும் போதாது. பார்வை பெற வேண்டும். சரியான பார்வை பெற வேண்டும்.  இதனை விளக்க ஒரு சிறு கதை: கணவனும், மனைவியும் ஒரு வீட்டுக்கு குடி வருகிறார்கள். தினமும் கண்ணாடி ஜன்னல் வழியே அடுத்த வீட்டுத்தலைவி, துணிகளைக் காய வைப்பதைப் பார்ப்பார். பின்பு கணவனிடம் அந்தபெண்ணுக்கு சரியா துணி துவைக்கத் தெரியவில்லை துவைச்ச பின்பு பாருங்கோ எவ்வளவு அழுக்கா இருக்கு என முறையிடுகிறார். முறையீடுகள் மூன்று நாட்கள் தொடர்ந்தன. நான்காம் நாள் காலையில் மனைவிக்கு ஒரே ஆச்சரியம். கணவன் வந்ததும் மனைவி சொன்னார்: 'அங்கே பாருங்கோ. நான் மூன்று நாளாக சொல்லிகிட்டிருந்தது அவளுக்கு காதுல கேட்டிருக்கு என நினைக்கிறேன். இன்று அந்தத் துணியெல்லாம் சுத்தமா துவைக்கப்பட்டிருக்கு." என்று வியந்து பாராட்டினார். கணவன் அமைதியாக 'அடுத்த வீட்டுலே ஒன்றும் குறையேயில்ல. இன்று எம்முடைய ஜன்னல் கண்ணாடியை நான் காலையில எழுந்து சுத்தமாகினேன்" என்று சொன்னாராம்.


இன்று நற்செய்தியில் கதாநாயகன் பார்வையற்ற மனிதன் பர்த்திமேயு. அவர் இயேசுவிடம் ஒரே ஒரு கோரிக்கையை முன்வைக்கிறார்: 'ரபூணி, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்". அழுக்கில்லாத, களங்கமில்லாத பார்வை பெற வேண்டும். தெளிவான, சரியான பார்வை பெற வேண்டும். பார்வையற்றவராக இருந்தபோதிலும் அவர் இயேசுவை உண்மையிலேயே 'பார்க்கின்றார்". எரிக்கோ நகரத்து நடை பாதையை மாளிகையாக்கி அதன் வழியே வருவோர் போவோர் கொடுத்த உணவையும் பணத்தையும் நம்பிவாழும் அவனிடம் கண் பார்வை இருண்டிருந்தது. ஆனாலும் வாழ்கைப் பாதை இருண்டிட அவன் அனுமதிக்கவில்லை. கிடைத்த இந்த வாழ்விலும் நிறைவடைந்து வாழ்ந்தான். பெற்றுள்ள பிற புலன்களைப் பயன்படுத்தி நிறைவைத் தேடினான். எனவே நாமும் பார்வை பெற வேண்டும். அடுத்தவரைச் சரியான உண்மையான கண்ணோட்டத்தில் காண இறைவன் நம் உள்ளத்தைத் தூய்மையாக்க வேண்டுவோம்.

பெரிய மனிதன் செல்வமும் செல்வாக்கும் பெருகப் பெருக எல்லோரும் தனக்கு பணிவடை செய்ய வேண்டும் என்று விரும்புகிறார். ஆனால் இறைவன் இயேசு ஒரு செல்வாக்கு மிகுந்த பெரிய மனிதர் இருந்தும் 'உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?"என்று பாதையோரம்; படுத்திருந்த பார்வையற்ற மனிதனிடம் கேட்கிறார். பாதை ஓரத்தில், வாழ்க்கையின் ஓரத்தில், பார்வையற்று, வாழ வழியற்றுப் படுத்திருக்கும் மனிதனுக்கு 'உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?" என்று கேட்டது அவனை வாழ்வின் மையத்திற்கு கொண்டு சென்றிருக்கும் அல்லவா? இன்று இதே போல் எத்தனை பேர் வாழ்வின் ஓரத்தில், விழி இழந்து, வழி இழந்து விழிநீருடன் எங்களின் ஒரு வார்த்தைக்காகக் காத்திருக்கிறார்கள். 'உமக்கு நான் என்ன செய்ய வேண்டும்?" என யாராவது கேட்கமாட்டார்களா எனக் காத்திருப்பவர்களுக்கு எங்கள் பதில் என்ன? இயேசுவின் இவ் வார்த்தையை நாமும் அடிக்கடி பயன்படுத்த முன்வருவோம். அப்போது நம்மிடம் இயேசு அதே வார்த்தை கேட்பார்.

 கத்தோலிக்க சமயம் வலியுறுத்தும் ஒரு பண்பு சீடத்துவம். ஆனால் இன்றைய நாட்களில் இச் சீடத்துவம் குறைந்து பக்தர்கள் கூட்டம் அதிகரித்துச் செல்வதைக் காண்கிறோம். பக்தர்கள் கூட்டத்தினால் இறையரசுப் பணியில் எந்தப் பங்களிப்பும் இல்லை என்றே கூறவேண்டும். இயேசு எருசலேமை நோக்கிப் போகிறார். தான் சாவைக் குறித்து கடைசியாக கூறி விட்டார். இவை எல்லாம் தெரிந்தும் அதே பாதையில் சிலுவையின் பாதையில் மரணத்தின் பாதையில் துணிவோடு நடக்கின்றான் பர்த்திமேயு என்ற மனிதன். இவன் இயேசு கூறிய பின்பற்றுதலின் இலக்கணமாகின்றான். 'ஒருவன் தன்னைத் தான் வெறுத்து தன் சிலுவையை எடுத்துக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும் " என்ற வாக்கு இம்மனிதனின் வாழ்வில் நியமாகிறது. இது தான் சீடத்துவம். சீடர்களை உருவாக்கும் திருப்பணியாளர்களாக மாறி நாமும் சீடர்களாக மாறுவோம்.

ஒரு குருடன் அல்லது அங்கவீனரான ஒருவன் இறைவனை நல்லவர் என்றோ, அவர் இரக்கமுள்ளவரென்றோ ஏற்றுக்கொள்ள மாட்டான். ஆனால் இவனோ இறைவனின் இரக்கத்தை வாஞ்சித்து கதறினான். அந்தக் கதறலைக் கேட்ட இயேசு அவனை அழைத்தார். இதில் நாம் கவனிக்க வேண்டியது, அவன் இயேசுவின் அழைப்பைக்கேட்டவுடன் தன்னுடைய மேலுடையை எறிந்துவிட்டு அவரிடம் வந்தான். சிலுவையின் பாதையில் மரணத்தின் பாதையில் துணிவோடு நடக்கின்றான் கண்பார்வையற்ற பர்த்திமேயு இயேசுவை அடையாளம் 'கண்டுகொண்டார்" நாமும் இயேசுவை அடையாளம் கண்டு, அவரில் நம்பிக்கை கொள்ள அழைக்கப்படுகிறோம். அப்போது புதிதாகப் பார்வைபெற்ற பர்த்திமேயுவைப் போன்று நாமும் புதுப் பார்வை பெற்ற மனிதர்களாக மாறுவோம்; பார்வைகளைச் சீர்படுத்தி வாழ்கைப் பாதையை வளப்படுத்துவோம். இயேசுவோடு 'வழி நடந்து செல்ல" முன்வருவோம்.

No comments:

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff