07.10.2012
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
கேள்விகள் பல விதம். சிலர் நேர்மையான உள்ளத்தோடு பிறருடைய கருத்தை அறியும் ஆவலோடு கேள்வி கேட்பார்கள். வேறு சிலர் பிறரிடம் குற்றம் காண்கின்ற நோக்கத்தோடு கேள்வி கேட்பார்கள். இயேசுவிடம் கேள்வி கேட்டவர்கள் பலர்;. சிலர் நேர்மையான உள்ளத்தோடு இயேசுவை அணுகியதுண்டு. வேறு சிலர் 'இயேசுவைச் சோதிக்கும் எண்ணத்துடன்; கேள்வி கேட்டார்கள்". பரிசேயர் அவரை அணுகி மண விலக்குப் பற்றி இயேசுவிடம் கேட்ட கேள்வி இந்த இரண்டாம் வகையைச் சேர்ந்தது. எனவேதான் இயேசு தம்மிடம் கேள்வி கேட்ட பரிசேயரிடம் ஒருமறு கேள்வியைக் கேட்கிறார்: 'மோசே உங்களுக்கு இட்ட கட்டளை என்ன?. கணவன் மணவிலக்குச் சான்று எழுதி தன் மனைவியை விலக்கிவிடலாம் என்று மோசே அனுமதி அளித்ததாக அவர்கள் பதில் சொல்லுகின்றார்கள். உண்மையில் மோசே மண விலக்குப் பற்றி கட்டளைகள் கொடுத்ததாக பெரிதாக வேதாகமத்தில் இல்லை ஆனால் மண விலக்குச் செய்யும் கணவன் மீண்டும் அதே பெண்ணை மணமுடித்தல் ஆகாது என்பதே அக்காலத்தில் சட்டமாக இருந்திருக்கின்றது. இவற்றை வைத்துப்பார்க்கும் போது அக்காலத்தில் திருமணஉறவு சீர்குலையத் தொடங்கியது என்பது தெரிகிறது.
இன்றைய உலகில் திருமண உறவு பல விதங்களில் முறிந்துவிடும் நிலையில் உள்ளது. மேற்குலக நாடுகளில் பத்தில் ஆறு திருமணங்கள் முறிந்துவிடுவதாக கணிப்பு. நம் நாட்டிலும் விவாகரத்து விரிந்து கொண்டிருப்பதாகச் செய்திகள் திதமும் வெளிவந்துகொண்டிருக்கின்றன. திருமணங்களின் முறிவு மனித வாழ்வின் சீரழிவின் அடையாளம். ஆணும் பெண்ணும் திருமணத்தில் இணைந்த பின் இறுதிவரை இணைந்து வாழும்போது மனித சமுதாயம் வாழும். திருமண முறிவு, விவாகரத்து தொடருமாயின், ஒரு தலைமுறையோடு தலைமுறை வாழ்ந்து அழியும். திருமணத்தில் இணைந்தவரைப்; பிரிக்கும் முயற்சி, தலைமுறையை அழிக்கும் முயற்சி.
அன்றிலிருந்து இன்று வரை மனிதருள் பலர் திருமண உறவை எப்படி பிரிப்பது? என்று சுயநலத்தோடு முயற்சி செய்துகொண்டே இருக்கின்றனர். அத்தகைய முயற்சிகளுள் ஒன்று இன்றைய நற்செய்திப்பகுதியில் காணலாம். தங்களின் சுயநல முயற்சிக்கு பக்க துணையாக வேதாகமத்திலிருந்து மோசேயை துணைக்கு காட்டுகின்றனர். ஆனால் இயேசுவோ தன்னுடைய பதிலின்மூலம் அவர்களுக்கு உண்மை நிலையை உறுதிப்படுத்துகிறார். திருமணங்கள் கடவுள் இணைக்கும் ஒரு அருங்கொடை. திருமணத்தில் இணையும் ஆணும் பெண்ணும் ஆண்டவன் செயல்பட உதவும் இன்றியமையாத கருவிகள். இந்தச் சமுதாயம் அவர்களுக்கு உதவும் கரங்கள். எனவே இதனை பிரிக்கும் அதிகாரம் மனிதர்கள் யாருக்கும் இல்லை. ஆகவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும் என்கின்றார் இயேசு.
அன்று தொடங்கிய இந்த திருமண முறிவு பிரச்சினை இன்றுவரை தொடர்ந்துகொண்டே வருகிறது. எத்தனை சட்டங்கள் இயற்றினாலும், சம்பிரதாயங்கள் கடைபிடித்தாலும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. எத்தனையோ விளக்கங்கள், வியாக்கியானங்கள் கொடுத்தும் நிறைவடைந்தபாடில்லை. இந்த கெடுபிடி தொடர்வதற்குக் காரணம், எல்லா மதமும் மனித கலாசாரமும் திருமணத்தை தெய்வீக அனுபவமாகப் பார்க்கின்றன. இத்தெய்வீகத்தன்மை திருமணத்தில் ஊடுருவிப் பரவி படர்ந்திருப்பதால், திருமண உறவு முறிவு ஏற்பட்டிருக்காது எனலாம். மனிதன் மனித பலவீனம், உலக ஆசைகள், நவீன பொருளாதாரம், நுகர்;வு கலாசாரம், பண்பற்ற பாலியல் அறிவு இவற்றால் பாதிக்கப்பட்டு, திருமணத்தோடு போராடிக்கொண்டிருக்கிறான். இந்நிலையில், ஒருவர் தம் மனைவியை எக்காரணத்தையாவது முன்னிட்டு விலக்கிவிடுவது முறையா?" என்று பரிசேயத்தனமாக சிந்திப்பதற்குப் பதிலாக வாழ வைப்பதற்கான வழியைச் சிந்திப்பது நல்லது.
சட்டத்திற்கு எப்போதுமே சில விதிவிலக்குகள் உண்டு. விதிவிலக்குகள் சட்டமாகிவிடக்கூடாது. கணவனும் மனைவியும் ஒரே உடலாய் இருப்பர். 'இனி அவர்கள் இருவர் அல்ல, ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்" இதுதான் சட்டம்.
ஒருவன் திருமணம் முடித்த பின் அவளது அருவருக்கத்தக்க செயலைக் கண்டு அவள்மேல் அவனுக்கு விருப்பமில்லாமற்போனால், அவன் முறிவுச் சீட்டு எழுதி, அவள் கையில் கொடுத்து, அவளைத் தன் வீட்டிலிருந்து அனுப்பிவிடுகிறான். இது மேசே காலத்து வளக்கமாக இருந்திருக்கிறது. இது விதிவிலக்கு. இந்த விதிவிலக்கும் கூட முறையானதல்ல என இயேசு கூறுகிறார். அவர்களது கடின உள்ளத்தின் பொருட்டே இந்த விதிவிலக்கு தரப்பட்து. அறிவு வளர்ச்சியின்றி, கல்வியும் கலாசாரமும் இல்லாது காட்டுமிராண்டியாக கடின உள்ளத்தோடு மிருகமாக வாழ்ந்த காலத்தில் இதுபோன்ற விதிவிலக்கு தேவைப்பட்டது. இயேசுவின் காலத்திலேயே அந்த விதிவிலக்கு கேள்விக்குறியாகிவிட்டது.
இன்று அறிவும் அறிவியலும், கல்வியும் கலாசாரமும், மனிதமும் மனிதாபிமானமும் வளர்ச்சியின் உச்ச கட்டத்தில் இருக்கும் காலத்தில் மணமுறிவு கேட்டு விண்ணப்பிப்பம் தேவைதானா. நம் அறிவு, மனிதாபிமானம், கலாசாரம், மனோதத்துவம், இறை நம்பிக்கை இவற்றை எல்லாம் கையாண்டு, கணவனையோ மனைவியையோ ஏற்றுக்கொண்டு இல்லறம் நடத்தினால்; வாழ்வில் எல்லாம் நிறைவாக இருக்கும்.
No comments:
Post a Comment