Wednesday, October 31, 2012

அயலானை இனம் காண்போம் அன்பு செயல்கள் ஆற்றுவோம்.

04.11.2012 
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்


அறிவை வளர்க்கும் கேள்வி-பதில் பரிமாற்றத்தை விட, நீயா,நானா, யார் பெரியவன் என்ற பரிதாபமான பெருமை நம்மிடையே தலைதூக்குகின்றமையை நாம் பல தடவைகள் உணர்ந்திருக்கிறோம்.

இயேசுவுக்கும் இதுபோன்ற ஒரு சூழல் உருவாகியிருப்பதை இன்றைய நற்செய்தியில் பார்க்கிறோம். இயேசுவிடம் தவறான, குதர்க்கமான எண்ணங்களுடன் மறைநூல் அறிஞருள் ஒருவரிடமிருந்து கேள்வி கேட்கப்பட்டாலும், அந்தக் கேள்வி மிக அழகான, ஆழமான ஒரு கேள்வி என்பதை இயேசு உணர்ந்து, அதற்கு என்ன அருமையான ஒரு பதில் சொல்கிறார். இயேசு தந்த பதில், காலத்தால் அழியாத ஒரு பதிலாகின்றது. மனித குலத்தின் அடிப்படை உண்மையாய், உயிர்த்துடிப்பாய் இருபது நூற்றாண்டுகள் கடந்தும் நம் அனைவருக்கும் சவாலாக அமைந்துள்ள ஒரு பதிலை இயேசு தருகிறார்.

அனைத்திலும் முதன்மையான கட்டளை எது? என்று கேட்டவரிடம் இயேசு, உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு மனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்புகூர்வாயாக என்பது முதன்மையான கட்டளை. உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக என்பது இரண்டாவது கட்டளை. 

கத்தோலிக்க சமயம் இரண்டு முக்கிய விடயங்களை கத்தோலிக்கர்களாகிய நமக்கு வலியுறுத்துகிறது. முதலாவது முழு இருதயத்தோடு இறைவனை அன்பு செய்வது. இரண்டாவது நம்மை நாம் நேசிப்பது போல நம் அயலானை நேசிப்பது. அதற்கு இந்த இரண்டு விடயங்களும் வழிவகுக்கின்றன. இறைவனை நேசிப்பது என்பது எல்லோராலும் மேற்கொள்ளப்படும் விடயம்தான். எனினும் நாம் நம் அயலானை நேசிப்பதென்பது அதுவும் நம்மை நாம் நேசிப்பது போன்றே அயலானையும் நேசிப்பது என்பது நடைமுறையில் இல்லாத ஒன்று. இங்கு முதலில் நமக்குள் நாமே எழுப்பிக்கொள்ளும் கேள்வி:  நம் அயலான் என்பவன் யார்? என்பதுதான்.

இயேசுவின் காலத்திலிருந்து இன்றுவரையிலும் உள்ள பெரிய பிரச்சனையே அயலான் அல்லது அடுத்திருப்பவர் யார் என்ற தெளிவு இல்லாததுதான். அருகில் இருப்பவன் எல்லாம் அயலான் அல்ல. ஆடை அணிகலன்களோடு விருந்து விழாக்களில் கூடி வருபவன் எல்லாம் அயலான் அல்ல. சட்டத்தையும் சம்பிரதாயத்தையும் கடைபிடிப்பதால் அயலானின் அன்பன் ஆகிவிட முடியாது. மனிதாபிமானம் இல்;லாத மதமும் சாரமற்ற வழிபாடும் அயலானின் அன்பன் ஆக்க உதவாது. அடித்தள மனிதனின் ஆதங்கத்தை உணராமல் ஆகாயத்தில் சிறகடிக்கும் மனிதனால் அயலானைக் காண கண் பார்வை போதாது.

எனவே என் அயலவர், அடுத்திருப்பவர் யார்? இன்றும் இந்தக் கேள்விக்குப் பதில் தேடி வருகிறோம். உலகில் 680 கோடிக்கும் அதிகமாய் மக்கள் இருந்தும்;, நமது அயலவரை, அடுத்தவரை இன்னும் தேடிக் கொண்டுதானே இருக்கிறோம். 'இந்த உலகத்தைத் தாண்டி, விண்வெளியைக் கடந்து வெண்ணிலவில் காலடி வைத்து விட்டுத் திரும்பி விட்டோம். ஆனால், நம் வீட்டுக்கு அடுத்த வீட்டில் இன்னும் காலடி வைக்கத் தயங்குகிறோம்." என்று நாம் வாழும் இந்தப் புதிரான காலத்தைப் பற்றி புநழசபந ஊயசடin என்னும் அறிஞர் கூறியுள்ளார்.

'என் அயலவர், அடுத்தவர் யார்?" என்று சட்ட அறிஞர் கேட்டது குதர்க்கமான கேள்வியாக இருக்கலாம். ஆனால், இதே கேள்வியைத் தானே இன்றும் நம்மில் பலர் கேட்டு வருகிறோம். எப்போது இதற்கு விடை கண்டு பிடிப்போம்?

தேவையில் இருப்பவன் அயலான். சமூகம், பொருளாதாரத்தால் தாக்குண்டு தவிக்கும் மனிதன் ஒரு அயலான். கொள்னை கொலை வன்முறையால் பாதிக்கப்பட்டவன் அயலான். அநீதியாலும் சாதீயத்தாலும் நசுக்கப்பட்ட மனிதன் ஒரு அயலான். தனிமையில் வாடுவோர், அனாதைகள், ஆதரவற்றோர் அனைவரும் அயலானே.

மேலும் அயலான் என்பவன் யார் என்பதை இயேசு நல்ல சமாரியன் உவமை மூலம் நமக்கு தெரியப்படுத்துகிறார். எதிரியாக இருந்தாலும் ஆபத்தில் உதவுபவன் உதவிக்காக காத்திருப்பவன் அயலான். இயேசு குறிப்பிடுகின்ற அயலானாக நாம் இருக்கின்றோமா? அடுத்தவர் அன்பைப் பற்றி சமய உலகம் மட்டுமல்லாமல், கடவுள் நம்பிக்கையற்றவர்களும் இன்று பேசி வருகின்றனர். அயலானை இனம் காண்போம் அன்பு செயல்கள் ஆற்றுவோம்.

No comments:

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff