Friday, August 31, 2012

உதட்டையும், உள்ளத்தையும் இணைத்தே இறைபுகழ் பாடுவோம்.


02.09.2012
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

நம்முடைய வழிபாடு,இறைப்பற்று பற்றிக் கொஞ்சம் ஆய்வு செய்ய இன்றைய ஞாயிறு அழைப்பு விடுக்கிறது. பலதடவைகள் நாம் இறைவனை மேலோட்டமாக வழிபட்டிருக்கின்றோம்;. இதுதான் உதட்டால் செய்யும் வழிபாடு. இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர். இவர்கள் உள்ளமோ என்னைவிட்டு வெகு தொலைவில் இருக்கிறது என்று எசாயா வழியாக இறைவன் முன் அறிவித்ததை இயேசு யூதர்களுக்கு மீண்டும் நினைவுபடுத்துவதை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு எடுத்துரைக்கிறது. தம் காலத்தில் வாழ்ந்த யூதர்களிடம் இருந்த வழிபாட்டு, ஆன்மீக முரண்பாடுகளை இயேசு இதன்மூலம் சுட்டிக்காட்டுகிறார்.

ஆன்மீகத்தைப் பல வழிகளில் வரையறை செய்யலாம். முரண்பாடற்ற வாழ்வு என்பது அவற்றுள் ஒன்று.யாரெல்லாம் தங்கள் வாழ்விலும், பேச்சிலும் முரண்பாடற்று வாழ்கிறார்களோ, அவர்களெல்லாம் சிறந்த வகையில் தங்கள் ஆன்மீகத்தை வாழ்கின்றனர் என்று சொல்லலாம். செபம், வழிபாடு, இறைவார்த்தை இவற்றில் அதிக ஆர்வம் காட்டிவிட்டு, அதே வேளையில் வாழ்வில் நேர்மையற்ற தன்மை, பணிகளில் குறைபாடு, உறவுகளில் போலித்தனம் கொண்டவர்களாக வாழ்ந்தால், எசாயா குறிப்பிடும் கூட்டத்தில் நாமும் சேர்ந்துவிடுவோம். 

ஒரு நிறுவனத்தில் புதிதாக வேலைக்குச் சேர்ந்த இளைஞனிடம் அதிகாரி சொன்னார்:“இங்கு இரண்டு முக்கியமான விதிகள் உள்ளன. முதலில் 2-வது விதியைச் சொல்கிறேன். தூய்மை என்பது இங்கு மிக முக்கியம்.” பிறகு அவனிடம் நீ இங்கு உள்ளே நுழையும்போது உன் கால்களை மிதியடியில் தேய்த்துத் துடைத்துக்கொண்டு வந்தாயா? என்று கேட்டார். அவன், “ஆம், நிச்சயமாக,” என்றான். “நல்லது”என்று சொன்ன அவர் தொடர்ந்தார்: “இங்குள்ள முதலாவது முக்கிய விதி உண்மை பேசுதலாகும்.” “ஆனால் இங்கே மிதியடியே கிடையாது” என்றார். வெளித் தூய்மையை மட்டுமே நாம் போற்றினால் நம்மிடம் அகத்தூய்மை இல்லாதுபோகும். அகத்தூய்மை இல்லாத தூய்மை, தூய்மையேயில்லை. அப்படியானால் நம்மிடம் உண்மையே இல்லை. அப்போது நம்முடைய வழிபாடு உதட்டினால் மட்டுமே கடவுளைப் போற்றுவதாக அமைந்துவிடும். சொற்களால் கடவுளைப் போற்றிவிட்டு, செயல்களால் அவரைப் பழித்தால் அதுவும் ஒரு பெரிய முரண்பாடாகிறது. நேர்மையான நடத்தை இல்லாத இடத்தில் வெளிவேடம்தான் மிஞ்சும். இயேசு வாழ்ந்த காலத்தில் பரிசேயர் யூதர்களின் வெளிவேடத்தை நாம் பலதடவை பார்த்திருக்கின்றோம். ஆனால் இயேசுவோடு மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்று அவரது அன்பை அருகிலிருந்து சுவைத்த யூதாஸ் இயேசு நம்பிக்கை வைப்பதை நிறுத்திய பின்னரும் அவரைத் தொடர்ந்து பின்செல்வதற்கு எடுத்த தீர்மானத்தில் வெளிப்படுவது வெளிவேடமே, நேர்மைக்குறைவே.இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களில் ஒருவரான யூதாஸின்  போலித்தனம் இங்கு வெளிவேடமாகிறது.

இயேசு விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே என்று தன்னை அறிவித்த போது, இதை ஏற்றுக் கொள்வது மிகக் கடினம் என்று சொல்லி அவரைப் பின்சென்றவர்களில் பலர் அவரை விட்டு விலகினர், அன்று முதல் அவர்கள் அவரோடு சேர்ந்து செல்லவில்லை. அப்போது இயேசு பன்னிரு சீடரிடம்,நீங்களும் போய்விட நினைக்கின்றீர்களா என்று கேட்டார். அதற்கு புனித பேதுரு, ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன என உண்மையாக தன் உள்ளக்கிடக்கையை உதட்டினால் உரைத்தார். ஆனால் யூதாஸ் விதிவிலக்காக இருந்தார், யூதாஸ் நேர்மையாளராய் இருந்திருந்தால், வெளிவேடமற்றவனாக இருந்திருந்தால், அவனும் இயேசுவை விட்டு விலகிச் சென்றிருக்க வேண்டும். ஆனால் அவர் இயேசுவோடு இருக்கவே முடிவு செய்தார், இது, யூதாஸ் இயேசு மீது கொண்டிருந்த பற்றுறுதியாலோ அல்லது அன்பாலோ அல்ல, மாறாக, தனது போதகர் மீதி பழிவாங்கும் இரகசிய ஆசையாலே இயேசுவோடு இருந்தார். இது வெளிவேடமே. இறுதியில் யூதாஸ் இயேசுவை விட்டு இறந்துபோனான். வெளிவேடம் எம்மை அழிவிக்கே இட்டுசெல்லும.; வெள்ளை உள்ளம் இறைவன்பால் எம்மை இட்டுச்செல்லும். யூதாஸ் உள்ளத்தல் உண்மையாகவே இறைபற்றற்றவனாக இருந்தான். புனித பேதுரு வெள்ளை உள்ளம் கொண்டிருந்தார். இயேசுவில் வாழ்வடைந்தார். எனவே புனித பேதுரு செய்தது போல நாமும் இயேசுவில் பற்றுறுதி கொண்டு உள்ளத்தில் வெளிவேடமற்று வாழ்வோம். இயேசுவோடும் அனைத்து மக்களோடும் எப்போதும் நேர்மையாய் வாழ உறுதிபூணுவோம்  

இன்று எம் தடுமாறும் வாழ்க்கையிலே தறிகெட்டலைந்து தடுக்கிவீழ்ந்தாலும் நாம் வெளிவேடத்துடன் வாழாது இறைவனே எம் வாழ்வினிலே ஆணி வேராய் ஆழப் பதிந்திருக்கிறார். எனவே நமது வாழ்வு இறைவனுக்கு ஏற்றதாக அமையவேண்டும். விழிப்பாய் இருப்போம். நம் உதடுகளும், நம் உள்ளமும் இணைந்தே இறைபுகழ் பாடட்டும். நம் வாழ்வும், வழிபாடும் முரணின்றி அமையட்டும் 

No comments:

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff