Thursday, August 9, 2012

பலியாக இறந்து மற்றவரக்கு வாழ்வாக மாறுவோம்.

12.08.2012
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
 
வாழ்வுதரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். என்னை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர் என்கிறார் இன்றைய நற்செய்தியில் இயேசு. வாழ்வு தரும் உணவாக வருகின்ற இயேசு தம்மையே பலியாக்குகிறார். அவர் பலியாக இறப்பதுதான் நமக்கு வாழ்வாக மாறுகிறது. இறைமகன் இயேசு இவ்வுலகிற்கு வந்தபின்புதான்,முடிவில்லாத வாழ்வு ஒன்று உண்டு, அவ்வாழ்வைப் பெற்றுக்கொள்வதற்கு வழியும், ஊற்றும் இயேசுவே என வெளிப்பட்டது.  தந்தையாம் இறைவன் தமது ஒரே மகனை இவ்வுலகிற்கு அனுப்பியதன் நோக்கம் நாம் நிலைவாழ்வு பெறுவதற்காகத்தான் என்று நற்செய்தியாளர் புனித யோவான் கூறுகிறார்.

இன்றைய நவீன உலகின் பெரும் பகுதி கடவுளைவிட்டுத் தூரமாகச் செல்வது போன்றும் விசுவாசம் கடந்த காலத்தின் ஒரு பொருளாக நோக்கப்படுவது போல் தெரிந்தாலும் வாழ்வுதரும் உணவான இயேசுவை உட்கொள்ள ஏங்குவோரையும் காண முடிகின்றது. எனவே புதிய, முடிவற்றவாழ்வைப் பற்றி இறைவன் அளித்துள்ள வாக்குறுதியை நாம், உலக இன்பங்கள் அனைத்திற்கும் மேலானதாக கொள்ளவேண்டும். இவ்வுலகத் தேவைகளில் அதிகக் கவனம் செலுத்துவதை விடுத்து, அதையும் தாண்டி நாம் செல்வதற்கு உதவ இயேசு விரும்புகிறார். வாழ்வுக்கு முழு அர்த்தத்தையும் நம்பிக்கையையும் வழங்கும் நம் இருப்பின் மையம் இயேசு கிறிஸ்துவில் நாம் கொள்ளும் விசுவாசமே. புனித யோவான் நற்செய்தியில் காணப்படும் வாழ்வின் அப்பம் குறித்த உரையாடலை நோக்கினால் , வாழ்வுதரும் உணவு நானே. என்னிடம் வருபருக்கு பசியே இராது. என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது என்ற இயேசுவின் வார்த்தைகளை நாம் இவ்வுலகத் தேவைகளைத் தாண்டிச் செல்லவேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார் என்பது தெளிவாகும். இஸ்ராயேலர்களுக்கு வானிலிருந்து வழங்கப்பட்ட மன்னாவைக்காட்டிலும் மேலான ஒன்றால் விசுவாசிகள் ஊட்டம் பெற்றுள்ளார்கள், அதுவே இயேசு, ஏனெனில் அவர் ஏதாவது ஒன்றை வழங்குபவராக மட்டுமல்ல, தன்னையே பலியாக்கி வழங்குபவராக வருகின்றார். நாம் இயேசுவில் விசுவாசம்கொண்டு, அவர் வாக்குறுதிகளில் நம்பிக்கை கொள்ளும்போது வாழ்வை நிறைவாகப் பெறுவோம்.

நாம் பிறருக்கு வாழ்வு தர வேண்டும் என்றால் நாமும் நம்மைப் பலியாக அர்ப்பணிக்க வேண்டும். நம் உயிரை இழக்கும்போதுதான் நாம் பிறருக்கு வாழ்வு அளிக்க இயலும். இயேசு அவ்வாறே செய்தார். சிலுவையில் அவர் தம் உயிரை நமக்காகப் பலியாக ஒப்புக்கொடுத்து நமக்கு நிலைவாழ்வை அவர் வழங்கினார். இயேசுவின் சீடராக வாழ விரும்புவோரும் இயேசுவைப் பின்பற்றித் தம் உயிரையே காணிக்கையாக்கும்போதுதான் பிறருக்கு அவர்கள் வாழ்வு தரும் ஊற்றாக அமைந்திட இயலும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் அதிகம் முக்கியத்துவம் பெறாத இன்னொரு அந்த செய்தியைப் பற்றி சற்று நோக்குவோம். தாமே உயிர் தரும் உணவு என்று இயேசு கூறியதால், யூதர்கள் அவருக்கு எதிராக முணுமுணுத்தார்கள். இயேசுவும் அவர்களைப் பார்த்து உங்களிடையே முணுமுணுக்க வேண்டாம் என்று கூறுகிறார். முணுமுணுப்பு என்பது என்ன? ஒரு செய்தியை, ஒரு நபரை ஏற்றுக்கொள்ள முடியலவில்லை. அதே வேளையில் அந்த செய்தியை, அந்த நபரைத் தள்ளவும் முடியாது என்ற இக்கட்டன நிலையில் சில மனிதர்கள் செய்வதுதான் முணுமுணுப்பு. இவர்களுக்கு உண்மையை உரக்க பேச தையிரியமில்லை. காரணம், தாங்கள் உண்மையின் பக்கம் இல்லை என்பது இவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. அதே வேளையில், உண்மையை ஏற்றுக்கொள்கிற நேர்மையும், மனத் துணிவும் இவர்களுக்கு இல்லை. எனவே, ஒரே வழி மனம் புழுங்கி முணுமுணுப்பது. இது ஒருவகையான உளவியல் நோய்தான். யூதர்களுக்கு இயேசுவுடன் வாதிட்டு வெல்லவும் முடியவில்லை. அவர் சொல்லும் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. எனவேதான் முணுமுணுத்தனர்.
 
நம்முடைய வாழ்விலும் பல நேரங்களில் நம் இல்லத்தில், பணியிடத்தில், பயண நேரங்களில் உண்மையை உரத்தப் பேசவும் முடியாமல், அநீதியைத் துணிவுடன் தட்டிக்கேட்கவும் முடியாமல் நாம் செய்வதெல்லாம் மெல்ல முணுமுணுப்பதுதான். இன்று இயேசு நம்மிடம் சொல்கிறார்; எங்களிடையே முணுமுணுக்க வேண்டாம். எனவே முணுமுணுப்பதை விடுத்து உண்மையின் வறுமையிலிருந்து மக்களை விடுவிக்கும் உண்மையின் ஒளிக்கு அவர்களை அழைத்து வரும்  பணிக்கு தயாரவோம். கடவுள்தாமே கற்றுத் தருவார். கடவுள்தாமே அனைவருக்கும் கற்றுத் தருவார் என்னும் இறைவாக்கை இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு மேற்கோள் காட்டுவதைக் காண்கின்றோம். நாம் நடக்க வேண்டிய பாதையைக் கடவுளே நமக்குக் காட்டுவார். நாம் பேச வேண்டிய சொற்களைக் கடவுளே நமக்குச் சொல்லித் தருவார். நாம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய மதிப்பீடுகளைக் கடவுளே நமக்குக் கற்றுத் தருவார். இதுவே நமது நம்பிக்கையாகட்டும். இதுவே நமது பட்டறிவாகட்டும். எனவே, கடவுளைச் சார்ந்தே வாழ்வோம். அவரே நம்மை வழிநடத்துவார்.

No comments:

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff