Saturday, February 16, 2013

'எம் சோதனைகளுக்கு எம் பதில் என்ன"

17.02. 2013
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

 
இயேசு தூயஆவியால் ஆட்கொள்ளப்பட்டு யூதேயாவின் பாலைவனத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்னும் பைபிள்; பகுதி இன்று எமக்கு தரப்படுகின்றது. யூதேயாவின் பாலைவனம் மயில்கணக்ளில் விரிந்திருக்குமிடம். அது பிரியேசனமற்ற மணல் குன்றுகள், பாறைகள்,ஒடுங்கிய கூரிய பள்ளத்தாக்குகள் நிறைந்த நீரற்ற இடம். மக்கள் யாருமற்ற வேடிக்கைகளின் சத்தகள் அற்ற கிரம நகர் புறங்களில் இருந்த வெகு தொலைவில் உள்ள ஒரு தனிமையான இடம்.

'இவரே என் அன்பார்ந்த மகன்" என தந்தையால் அறிவிக்கப்பட்ட உடனே ஏன் பரிசுத்த ஆவி இயேசுவை இப்டிப்பட்ட ஒரு இடத்திற்கு அழைத்து செல்லவேண்டும். இங்கு குடும்ப உறவினர்களின் தொடர்புகள் கூட இல்லை. இயேசு மட்டுமே அங்கு நாற்பது நாள் தனிமையாக செபம்,உண்ண நோன்பில் இருந்தார். கடவுள் மோசே, எலியா இருவரையும் தெரிந்தெடுத்தபோது உருவாக்கி கொடுத்த அதே படிமுறையை இயேசுவும் பின்பற்றினார் என்பதை நிருபிக்வே அவ்வாறு அழைத்து செல்லப்படுகின்றார் என்றும் கூறப்படுகின்றது. மோசே, எலியா இறைவனை சந்திப்பதற்கும் மக்களை பரிசுத்த வழியில் வழிநடத்துவதற்கு, திடம் பெறுவதற்கும் நாற்பது நாள் செபமும், உண்ண நோன்பும் சீனாய் பாலைவனத்தில் மேற்கொண்டனர் என்பது எமக்கு நன்கு தெரியும்.

இயேசு பாலைவனத்தில் மூன்று சோதனைகளை சந்திக்கின்றார். சாத்தான் முதல் சோதனையை ஆரம்பித்த விதமே அழகானது.'நீர் இறைமகன் என்றால், இந்தக் கற்கள் அப்பமாகும்படி கட்டளையிடும்" இயேசுவிடம் இப்படி ஒரு சவாலை முன் வைக்கிறது சாத்தான். 'நீர் இறை மகன் என்றால்" என்று சாத்தான் சொல்வதைக் கேட்கும்போது, மற்றொரு ஆழமான எண்ணமும் எழுகிறது. இறைமகன் எப்படிப்பட்டவராய் இருக்க வேண்டும் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது சாத்தான். இறைமகனுக்கு சாத்தான் இலக்கணம் எழுதுகிறது. இந்த இலக்கணத்தின்படி, இறைமகன் புதுமைகள் நிகழ்த்த வேண்டும், அதுவும் தன்னுடைய சுயத்தேவைகளை நிறைவு செய்ய, தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள புதுமை செய்ய வேண்டும். தன் சுயதேவைகளுக்கு, சுய விளம்பரத்திற்குப் புதுமைகள் செய்வது புதுமைகள் செய்யும் சக்தியை அழுக்காக்கும், அர்த்தமில்லாததாய் ஆக்கும்.

இயேசு சாத்தானுக்குச் சொன்ன பதிலில் பாடங்கள் பல உண்டு. இயேசு தன் உடல் பசியை விட, ஆன்ம பசி தீர்க்கும் இறைவார்த்தை என்ற உணவைப் பற்றி பேசினார். மனிதர் அப்பத்தினால் மட்டும் வாழ்வதில்லை. தன் சொந்த பசியைத் தீர்த்துக் கொள்ள மறுத்த இயேசு, பல்லாயிரம் பேரின் பசியைத் தீர்க்க தன் சக்தியைப் பயன்படுத்தினார் என்பது நமக்குத் தெரியும். நமக்கு இறைவன் கொடுத்துள்ள சக்திகளை, திறமைகளை எதற்காகப் பயன்படுத்துகிறோம்?சுயத்தேவைகளை நிறைவு செய்வதற்காகவா? சிந்திக்கலாம். இயேசுவிடம் பாடம் கற்றுக் கொள்ளலாம்.

இரண்டாவது சோதனையில் ஒரு கூடுதல் சிந்தனை உண்டு. இறை வார்த்தையைப் பயன்படுத்தி அலகை ஆலோசனை வழங்குகிறது. இன்று வேதங்கள், வேதநூல்கள் உட்பட நல்லவைகள் பலவும் பொல்லாத இடங்களில், பொல்லாத காரணங்களுக்குப் பயன்படுத்தப்படுவது வேதனைக்குரிய ஓர் உண்மை.
மூன்றாவது சோதனையில் உலகமனைத்தையும் இயேசுவிடம் ஒப்படைக்க விரும்புவதாக அலகை சொல்கிறது. உலகத்தைத் தன் வசமாக்கத்தானே இயேசு மனு உருவானார்? இப்படி ஒரு சந்தர்ப்பம் வரும்போது, ஏற்றுக் கொள்ள வேண்டியது தானே. அப்படி இயேசு உலகை தன் மயமாக்க வேண்டுமானால், சாத்தானிடம் சரணடைய வேண்டும். இயேசு அதை திட்டவட்டமாக மறுத்தார்.

இறுதி 3 மணி நேரங்கள் சிலுவையின் கொடூரச் சித்ரவதை. இது எதுவும் இயேசுவுக்குத் தேவையில்லை. ஒரு சில நிமிடங்கள் போதும். எருசலேம் தேவாலய சாகசம் ஒன்று போதும். உலகம் இயேசுவின் காலடியில் கிடந்திருக்கும். சுருக்கமான வழி. எளிதான முயற்சி. எக்கச்சக்கமான வெற்றி. கிடைத்திருக்கம். சாத்தான் முன் சரணடைந்திருந்தால் குறுக்கவழிகளை மறுத்த இயேசு, சிலுவையில் தொங்கியபோது, தந்தையே, உமது கைகளில் என் ஆன்மாவை ஒப்படைக்கிறேன் என்று இறைவனிடம் சரணடைந்தார். உலகைத் தன் வசமாக்கினார். தவறான வழிகள், தவறான சக்திகளுடன் எத்தனை முறை சமரசம் செய்திருக்கிறோம்? எத்தனை முறை இவைகள் முன் சரணடைந்திருக்கிறோம்? நல்லது ஒன்று நடக்க வேண்டுமென்று தீமைகளைச் சகித்துக் கொள்வதும், தீமைகள் நடக்கும் போது கண்களை மூடிக் கொள்வதும். இப்படி நடப்பதற்குக் காரணம், ஊரோடு ஒத்து வாழ்தல் என்று உபதேசம் செய்வதும். நாம் வாழ்க்கையில் அடிக்கடி, பார்த்து, பழகி வந்துள்ள எதார்த்தங்கள். இப்படி சமரசம் செய்வதே நம் வாழ்க்கையாகி விட்டதா என்று சிந்திப்பது நல்லது.


சோதனைகள் சக்தி வாய்ந்தவைதான். நம் ஆழ் மனதில் உள்ள தீய நாட்டங்கள், சக்தி மிகுந்தவைதான். ஆனால், அவற்றை எதிர்த்து நிற்கவும், அவைகளோடு போராடி வெற்றி பெறவும் நம்முள் நல்ல எண்ணங்களும், உறுதியான மனமும் உள்ளன. நமது சொந்த சக்திக்கு மீறியதாய்த் தோன்றும் சோதனைகள் வரும்போது, இறைவனின் சக்தி நமக்குத் துணை வரும் என்ற நம்பிக்கையும் நம்மில் வளர வேண்டும். சின்ன வயதில் நமக்குச் சொல்லித் தந்த 'காவல் சம்மனசு' கதைகள் வெறும் கற்பனைக் கதைகளா? கட்டுக் கதைகளா? அல்லது நம்மைக் காப்பதற்கு இறைவன் எப்போதும் நம்முள் இருக்கிறார் என்பதை நினைவுபடுத்தும் அடையாளங்களா? சுயத்தேவைகளைப் பெருக்கிக் கொள்ளுதல், குறுக்கு வழிகளில் பலன் தேடுதல், சுயவிளம்பரத்திற்காக எதையும் செய்தல், உலகின் தீயச் சக்திகளோடு சமரசம் செய்தல் என்று நம்மை வந்தடையும் அழகான சோதனைகளுக்கு நம் பதில் என்ன? இயேசுவிடமிருந்து ஏதாவது பாடங்களை நாம் கற்றுக் கொள்ள முடியுமா? கற்றுக் கொண்டதை செயலாக்க விருப்பமா? பரிசுத்த ஆவி இத்தவக்கலத்தின் நாற்பது நாளும் எமக்கு விசேட வழி காட்ட வேண்டுமா? இந்தக் கேள்விகளுக்குப் பதில் தேட இத்தவக்காலம் நல்லதொரு நேரம்.

No comments:

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff