Sunday, February 24, 2013

இறைவனிடம் வருந்தி மன்னிப்பு கோருவோம். பிறரின் மனமாற்றத்தில் மகிழ்வோம்

10.03.2013
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

இன்று நமக்கு தரப்படும் பைபிள் பகுதி ஊதாரி மைந்தனின் உவமைக்கதையை சிந்திப்பதற்கு அழைக்கின்றது:“ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள். இளையவர் தந்தையை நோக்கி, சொத்தில் எனக்கு உரிய பங்கைத் தாரும் என பெற்று தொலை நாட்டிற்கு நெடும் பயணம் மேற்கொண்டார்;. அங்குத் ஊதாரித்தனமாக தாறுமாறாக வாழ்ந்து தம் சொத்தையும் பாழாக்கினார். எதுமின்றி பின்பு பன்றிகள் தின்னும் நெற்றுகளால் தம் வயிற்றை நிரப்ப விரும்பினார். ஆனால் அதைக்கூட அவருக்குக் கொடுப்பார் யாருமில்லை. கடவுளுக்கும் தந்தைக்கு எதிராக நான் பாவம் செய்தேன் என தவற்றை உணர்ந்து தந்தையிடம் திரும்பி வரும்போது தொலையில் வந்து கொண்டிருந்தபோதே அவர் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார். தன் தம்பி வந்திருக்கிறார் என்று தந்தை கொழுத்த கன்றை அடித்து விருந்து வைப்பதில் சினமுற்று உள்ளே போக விருப்பம் இல்லாதவராக மூத்த புதல்வர் வெளியே நிற்கிறார். தந்தை அவரை உள்ளே வருமாறு கெஞ்சிக் கேட்கிறார். அவர் மறுக்கிறார்." ஊதாரி மகன் எந்த அளவுக்குத் தன் சொத்துக்களை அழிப்பதில் ஊதாரியாக இருந்தானோ, அந்த அளவுக்கு அன்பு காட்டுவதிலும், இரக்கம் அளிப்பதிலும் ஊதாரியாக இருந்தார் தந்தை.

இந்த கதையில் வருகிற தந்தை, ஊதாரி மைந்தன், அவனது சகோதரன் மூன்று பேருமே மூன்று மனநிலைகளைச் சித்தரிக்கிறார்கள் என்பது எமக்கு நன்கு புலப்படுகின்றது: தந்தை அன்பின், பரிவின், நிபந்தனையற்ற மன்னிப்பின் மனநிலையைப் பிரதிபலிக்கிறார். ஊதாரி மைந்தன் வறுமையில் வாடி, தன்மானம் இழந்து, மீண்டும் தந்தையைத் தேடி வருவதைப் பார்க்கிறோம். அவன் நேர்மையான மனத்துயரைப் பிரதிபலிக்கிறான். அறிவுத் தெளிவு பெற்றதும் தந்தையிடம் திரும்பி வந்தான். அத்துடன், மகனாக அல்;ல, வேலையாளாகப் பணி செய்ய முன்வந்தான். அந்த மகன் தந்தைக்கு எதிராக திரும்பினாலும், தந்தை நிபந்தனையற்ற அன்பை தன் மகன் மேல் வைத்திருந்தார், அவர் தனது அன்பளிப்பாக தன்மகனுக்கு அளவற்ற அன்பை கொடுத்தார். மகனோ தனது தந்தைக்கு கொடுத்த அன்பளிப்பு என்னவென்றால், தந்தையின் அன்பை, திறந்த மனதோடு ஏற்று கொள்ள தயாராக வந்தது தான். மூத்த மகன் குறைகாணும் மனநிலையை, பொறாமையை, நன்மையை ஏற்றுக்கொள்ளாத மனதை, தீர்ப்பிடும் மனநிலையைப் பிரதிபலிக்கிறான்.

வறுமையும் பஞ்சமும் செலவோடு மிக நெருங்கிய தொடர்புடையது என்பதை இக்கதை காட்டுகின்றது  வீணாகச் செய்யும் ஒவ்வொரு செலவும் உலகில் கொடுமையான வறுமையையும் பஞ்சத்தையும் உண்டாக்குகிறது. மனிதன் விரயம் செய்யும் ஒவ்வொரு பொருளும் எங்கோ, யாருக்கோ, ஏதோ ஒரு விதத்தில் ஒருபஞ்சத்தையும் வெற்றிடத்தையும் உண்டாக்குவதை; பொருளாதாரம் மறுப்பததற்கில்லை. பகுத்தறிவாளரான நுகர்வோர் இதை நன்கறிவர்.

அந்த இளைய மகன் தந்தையின் அன்பு, பாசம், உறவு அனைத்தையும் அலட்சியப்படுத்தினான். வாரிச்சென்ற பொன், பொருளையும் தாறுமாறாக வாழ்ந்து அழித்தான். சொத்தையும் பணத்தையும் பயன்படுத்தி, உழைத்ததாகவோ, உழைத்து நட்டமடைந்ததாகவோ கதையில் சொல்லப்படவில்லை. மாறாக, நெடும் பயணம், தாறுமாறான வாழ்க்கை, பாழாக்கும் பழக்கம், கெட்டநட்பு, சூழல் இவற்றில் அனைத்தையும் செலவழித்துள்ளான். விழைவு, பஞ்சம். வறுமை. இழப்பு. தனிமை. மிருகங்களோடு வாழ்க்கை. அவனுக்கு மட்டுமா இந்த நிலைமை. அவன் வாழ்ந்த சூழ்நிலையும் பாதிக்கப்படுகிறது. பன்றிகள் தின்னும் நெற்றுக்குக்கூட அங்கு பஞ்சம். அந்த நாடு முழுவதும் வறட்சி, பஞ்சம். வீணாக்க வேண்டாம், விரயம் செய்ய வேண்டாம். பஞ்சத்திற்கு நாங்கள் ஒரு சிறிய காரணமாகவும் இருக்க வேண்டாம். ஆண்டவன் தந்த உறவையும் பாசத்தையும் பரவலாக்குவோம். பொன்னையும் பொருளையும் இல்லாரோடு பகிர்வோம்.

தந்தை தம் இளைய மகனுக்குத் தனிக்கவனம் செலுத்திவிட்டு, தன்னை மட்டும் ஒரு பொருட்டாக எண்ணவில்லையே என்னும் சிந்தனையில் புழுங்குகின்ற மூத்த மகனும் நம் கவனத்தை இன்று ஈர்க்கிறார். சினம் கொண்டு, விருந்தில் கலந்துகொள்ளாமல் வெளியேநின்கின்றான் மூத்த மகன். 'இளைய மகன் கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்"என்று ஒத்துக்கொள்கிறான். ஆனால், மூத்த மகனோ வெளிப்படையாக எந்தப் பாவமும் செய்யவில்லை. மாறாக, தந்தையின் பரிவைக் கண்டு சினமுற்று உள்ளே போகவிருப்பம் இல்லாது வெளியே நிற்கிறார். தந்தை வந்து உள்ளே வருமாறு கெஞ்சிக் கேட்டும் உள்ளே செல்லவில்லை. மாறாக, தந்தையின் மன்னிப்பில் குறைகாண்கிறார், குற்றம்சாட்டுகிறார். இந்தமூத்த மகன் தண்டிக்கப்பட்டதாகவோ, தந்தையால் கடிந்து கொள்ளப்பட்டதாகவோ உவமைக்கதையில் சொல்லப்படவில்லை. இருப்பினும், பொறாமை, சினம், தந்தைக்கு அவமதிப்பு, தம்பியின் மனமாற்றத்தில் மகிழாமை, தந்தையையே குறைகாணும் மனநிலை எனப் பல்வகைப் பாவங்கள் இவர் செய்துள்ளார் என்பது வெளிப்படை. நாமும் சில வேளைகளில் இறைவனின் இரக்கத்தில் எரிச்சல் கொள்கிறோம், மனமாற்றம் அடைவோரைக் கண்டு கேலி செய்து இறைவனையே அவமதிக்கிறோம். இங்கு கடவுளின் நிபந்தனையற்ற மன்னிப்பையும், அளவற்ற அன்பையும் ஏற்றுகொள்வதற்கு நாம் தகுதியானவர்களா? இத்தவக்கலத்தில்  இறைவனிடம் வருந்தி மன்னிப்பு கோருவோம். பிறரின் மனமாற்றத்தில் மகிழ்வோம்
 

No comments:

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff