13.01.2013
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
இன்று இயேசுவின் திருமுழுக்குப் பெருவிழா. மக்களை பாவ இருளில் இருந்து விடுவித்து அவர்களை ஒளியின் பாதையில் நடத்தி, புதுவாழ்வை அவர்களில் தொடங்கிவைக்கவும், கிறிஸ்துவுக்கு சொந்தமானவர்கள் எனும் முத்திரையை அவர்களுக்கு கொடுக்கவும் திருச்சபை வழங்கும் ஓர் அடையாளமே திருமுழுக்கு. இதனை இயேசு தனது 30 வயதில் யோர்தான் நதியில் பெற்றுக்கொண்டார். அப்போது கடவுளின் குரல் வானிலிருந்து வந்து இயேசு தம் அன்புமிக்க மகன்; தாம் அவரைக் குறித்து மகிழ்ச்சியடைகின்றோம் என்ற பேருண்மையை வெளிப்படுத்தியது. இத்திருமுழுக்கு இயேசுவின் வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்து. அவரது வாழ்வை புரட்டிப்போட்டது.
17 ஆண்டுகளுக்கு முன் புத்தாண்டுகாலை நடந்த ஒரு சம்பவத்தை சற்று பகிர்வது இங்கு நல்லது: சென்னையில் நள்ளிரவு, காலைத் திருப்பலிகளை முடித்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்த இயேசு சபையைச் சார்ந்த ஒரு குருவானவர் அன்று காலை சாலை விபத்தில் இறந்து விட்டார். அவரது உடலை வெற்றுவர இரு இயேசு சபையைச் சார்ந்த குருக்கள் புத்தாண்டு தினத்தன்று சென்னை அரசு மருத்துவ மனைக்குச் சென்றனர். பிரேத அறையில் பல உடல்கள், பலவாறாக சிதைக்கப்பட்ட நிலையில் இருந்தன. அத்தனை உடல்களின்; மத்தியில் தங்கள் குருவை அடையாளம் காட்டி எடுத்தனா.; அங்கு அடைந்த அதிர்ச்சி: வாழ்க்கை இவ்வளவு தானா? என்ற ஒரு கேள்வியை எழுப்பத் தெடங்கியது என்றும் வாழ்வைப் பற்றிய ஏதோ ஒரு தெளிவு கிடைத்ததை தான் உணர்ந்தேன் என்றும் அவர்களில் ஒரு குரு தெரிவித்தார். அந்த புத்தாண்டு அனுபவம் தமக்குக் கிடைத்த மற்றொரு திருமுழுக்கு என்கின்றார் அவர். அந்த அனுபவம் தன் வாழ்க்கை புரட்டிப் போட்டது என்கின்றார் அவர்.
இப்படி எத்தனையோ பேருடைய வாழ்வைப் புரட்டிப் போட்ட சம்பவங்களை நாம் பார்க்கலாம். தங்களுடன் இரவு உணவருந்தி விட்டு தங்களுக்கு முன்பு மோட்டார் வண்டியில் சென்றுகொண்டிருந்த யாழ்மறைமாவட்ட இளங்குரு லக்;ஸ்மன் அண்மையில் சட்டென்று வீதியேலே விழுந்து இறந்தபோது இரத்தத்தில் தோய்ந்த அவரது தலையை முதலாவதாக தூக்கிய அனுபவம் தன் வாழ்;வை புரட்டிப்போட்டது என்கின்றார் மிருசுவில் பங்குத்தந்தை பத்திநாதர்.
பூனைத்தொடுவாயில் தம்மை மோட்டார் வண்டியில் தள்ளிவந்து பங்குமனையில் வீட்டுவிடு 'வரும் ஞாயிறு எங்கள் ஆலயத்திற்கு வருவீர்கள் தானே" என்று கேட்டு சென்ற சிறுவன் செற்பநேரத்தில் கிபிர் தாக்குதலில் தலை துண்டிக்கப்பட்டு தன் சிறிய சகோதரியுடன் இறந்து இரத்த வெள்ளத்தில் மிதத்தபோது அதை பார்த்த தற்போதைய பாசையூர் பங்குத்தத்தை றோய்பேடினன் வாழ்வு இவ்வளவு தானா? என்ற அனுபவம் தன் வாழ்வை புரட்டிப்போட்டது என்கின்றார்.
இன்னும் பிணி, முதுமை, சாவு இவற்றைப் பார்த்த புத்தரின் அகக்கண்கள் திறக்கப்பட்டன. அது அவரது வாழ்க்கை புரட்டிப் போட்டது.
கொலை வெறியோடு கிறிஸ்தவர்களைக் கைது செய்து எருசலேமுக்குக் கொண்டுவர தமஸ்கு நகர்நோக்கிச் சென்ற சவுலைப் பார்வை இழக்கச் செய்து, பின்னர் மறுபார்வை கொடுத்த இறைவனின் செயல் சவுலின் வாழ்வைப் புரட்டிப் போட்டது.
தென்னாப்பிரிக்காவில், புகைவண்டியிலிருந்து பலவந்தமாய் வெளியேற்றப்பட்ட ராஜ் மோகனின் அந்த பயணம், அவரது வாழ்வைப் புரட்டிப் போட்டது. அவரை மகாத்மாவாக்கியது
கொல்கத்தாவின் சாக்கடைகளும், சேரிகளும் அன்னை தெரசாவின் வாழ்வைப் புரட்டிபோட்டன. ஒரு கண்ணோட்டத்தில் பார்த்தால், இவர்களுக்குக் கிடைத்த இந்த அனுபவங்கள் எல்லாம் இவர்களுக்குக் கிடைத்த ஒரு திருமுழுக்கு அனுபவமெனலாம். இறைமகன் இயேசுவின் வாழ்வைப் புரட்டிப் போட்ட அவரது திருமுழுக்கை நாம் சிந்தித்து அது நமக்கு தரும் செய்தியின் ஒளியில் தம்மை புடமிடுவோம்.
இரு நண்பர்களில் ஒருவர்: நான் கடவுளைப் பார்த்தால், கடவுளே, இன்று இவ்வுலகில் இவ்வளவு அநியாயம் நடக்குறதைப் பார்க்கின்றாயே. ஒன்றும் செய்ய மாட்டியோ? என்று ஒரே ஒரு கேள்வியை கேட்பேன். என்றார். மற்றவர் நல்ல கேள்வி. கேட்கவேண்டியது தானே? அதே கேள்வியை கடவுள் என்னிடம் திருப்பி கேட்டால்?...சிரிப்புகள் பலநேரங்களில் சிந்தனைகளைத் தூண்டிவிடும் சீனவெடிகள் ஆகுகின்றன இல்லையா?
இந்தக் கேள்வியைப் பலகோடி மக்கள் இதுவரை கேட்டிருப்பர். இனியும் கேட்பார்கள். பலர் இந்தக் கேள்வியைக் கேட்க நினைத்ததுண்டு. கேட்டதில்லை. இந்தக் கேள்வியை விண்ணை நோக்கி மிசையிலாக ஏவி விட்டால், அது மீண்டும் ஒரு மின்னலாக, இடியாக, எதிரொலியாக தம்மை தாக்குமோ என்ற பயம்.
சாதாரண மனித கண்ணோட்டத்தில் பார்த்தால், இயேசுவுக்கும் இந்தக் கேள்வி கட்டாயம் உள்ளத்தில் எழுந்திருக்கும். 30 ஆண்டுகள் அமைதியாக, நாசரேத்தூரில், தன் பெற்றோரோடு வாழ்ந்து பழகி விட்டாலும், அவ்வப்போது இயேசுவைச் சுற்றி நடந்த பல அநியாயங்கள் அவர் மனதில் பூகம்பங்களாய் வெடித்திருக்கும். இந்த அநியாயங்களுக்கு விடை தேடி தன் நண்பர்கள், தெரிந்தவர்கள் பலரும் புரட்சிக் குழுக்களை உருவாக்கியதையும், அந்தக் குழுக்களில் சேர்ந்ததையும் இயேசு கட்டாயம் அறிந்திருந்தார். குழப்ப புரட்சிகளும் தீவிரவாதமும், வன்முறையும் தான் தீர்வுகளா? வேறு வழிகள் என்ன? என்று இயேசு கட்டாயம் சிந்தித்திருப்பார். இந்த சிந்தனைகளின் விடையாக அவர் எடுத்த முதல் முடிவு மக்களோடு மக்களாகத் தன்னைக் கரைத்துக் கொள்ள வேண்டும். அந்த முடிவோடு, அந்த முனைப்போடு யோர்தான் நதியில் இயேசு இறங்கினார்.
இயேசுவைக் கண்டு, அவருக்குத் திருமுழுக்கு அளிக்க இருந்த யோவான் திகைத்திருப்பார். அவரை இயேசு அமைதிபடுத்தி, திருமுழுக்கு பெறுகிறார். இயேசுவின் இந்த பணிவு, மக்களோடு மக்களாய் கரைந்து விட அவர் கொண்ட ஆர்வம் ஆகியவை விண்ணகத் தந்தையை மிகவும் மகிழ்விக்கிறது. மக்களோடு மக்களாகத் தன்னை முழுவதும் இணைத்துக் கொண்ட இயேசுவைக் கண்டு ஆனந்த கண்ணீர் பொங்க தந்தை சொன்ன வார்த்தைகள்: 'என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்."
உள்ள பூரிப்புடன், உன்னத இறைவன் இந்த வார்த்தைகளை நம் ஒவ்வொருவருக்கும் சொல்லக் காத்திருக்கிறார். நம்மையும் வாரி அணைத்து உச்சி முகந்து இந்த அன்பு மொழிகளை அவர் சொல்லக் காத்திருக்கின்றார். தீவிரவாதமும், வன்முறையும் கொலைகளும் களவுகளும் கற்பளிப்புக்களும் கருவறுப்புக்களும் தானா இன்றைய தீர்வுகள்? வேறு வழிகள் என்ன? என என்ணுவோம். 'வேறு வழி என்ன" என்று என்ணி இயேசு யோர்தான் நதிக்கு சென்று திருமுழுக்கு பெற்றார். தந்தையின் பணியை தொடர்ந்தார். இயேசு திருமுழுக்கு பெற்றபோது தந்தையாம் கடவுளின் பணியில் வாழ வாக்குறுதி எடுத்தார். சாத்தான் அவரை சோதித்தபோதும் சற்றும் சறுக்காமல் மக்களை நல்வழியில் நடத்தி தன் இலக்கை அடைந்தார். கத்தோலிர்கராகிய நாமும் ஆண்டு தோறும் கிறிஸ்து உயிர்ப்பு திருவிழிப்பு பூசையில் எம் திருமுழுக்கை புதுப்பிக்கின்றோம்: சாத்தானையும் அதன் மாயதீய செயல்களை எல்லாம் விட்டுவிடுகின்றோம் என வாக்குறிதி எடுக்கின்றோம். எனவே நம் திருமுழுக்கு வாழ்வு எம்மை இறைவனின் பால் புரட்டிப் போட்டு நம்முடன் வாழ்பவர்கள்; நல்வழியில் நடந்து நானிலமெங்கும் நல்லமைதியை உருக்கும் கருவிகளாக்கட்டும்.
No comments:
Post a Comment